ஓசியா 9:3-17

ஓசியா 9:3-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவர்கள் யெகோவாவின் நாட்டில் குடியிருக்கமாட்டார்கள்; ஆனால் எப்பிராயீம் எகிப்திற்குத் திரும்பிப் போகும், அசீரியாவில் அசுத்தமான உணவைச் சாப்பிடும். அவர்கள் யெகோவாவுக்கு திராட்சை இரசக் காணிக்கைகளைச் செலுத்தமாட்டார்கள்; அவர்களுடைய பலிகள் அவரை மகிழ்விக்காது. அப்படிப்பட்ட பலிகள், அவர்களுக்கு துக்க வீட்டு உணவைப் போன்றவை; அவற்றைச் சாப்பிடுகிறவர்கள் எல்லோரும் அசுத்தமாயிருப்பார்கள். ஏனெனில், இந்த உணவு அவர்களுக்கானதாக மட்டுமே இருக்கும்; அது யெகோவாவின் ஆலயத்திற்குள் வருவதில்லை. யெகோவாவின் பண்டிகை நாட்களிலும், நியமிக்கப்பட்ட உங்கள் கொண்டாட்ட நாட்களிலும் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? உங்களில் சிலர் அழிவிலிருந்து தப்பி ஓடினாலுங்கூட, எகிப்து அவர்களை அழிவுக்கு ஒன்றுசேர்க்கும்; மெம்பிஸ் அவர்களை அடக்கம்பண்ணும். அவர்களுடைய வெள்ளியினாலான திரவியங்களை நெரிஞ்சில்கள் மூடும்; அவர்களுடைய கூடாரத்தையும் முட்செடிகள் மூடும். தண்டனையின் நாட்கள் சமீபமாயிருக்கின்றன; கணக்குக் கேட்கும் நாட்களும் நெருங்கிவிட்டன. இதை இஸ்ரயேல் தெரிந்துகொள்ளட்டும். உனது பாவங்கள் அநேகமாயிருக்கிறதினாலும், உனது பகைமையுணர்வு அதிகமாயிருக்கிறதினாலும் இறைவாக்கினன் மூடனாக எண்ணப்படுகிறான். இறைவனால் தூண்டுதல் பெற்றவன் பைத்தியக்காரனாய் எண்ணப்படுகிறான். என் இறைவனோடு இறைவாக்கினனே எப்பிராயீமுக்குக் காவலாளியாய் இருக்கிறேன். ஆயினும் அவனுடைய வழிகளிலெல்லாம் கண்ணிகள் காத்திருக்கின்றன; அவனுடைய இறைவனின் ஆலயத்தில் பகைமை காத்திருக்கிறது. கிபியாவின் நாட்களில் இருந்ததுபோல், அவர்கள் சீர்கேட்டில் மூழ்கியிருக்கிறார்கள். யெகோவா அவர்களின் கொடுமையை நினைவிற்கொண்டு, அவர்களுடைய பாவங்களுக்காக அவர்களைத் தண்டிப்பார். நான் இஸ்ரயேலை முதன்முதல் கண்டபோது, அது பாலைவனத்தில் திராட்சைப் பழங்களைக் கண்டுபிடித்ததுபோல் எனக்கு இருந்தது; நான் உனது முற்பிதாக்களைக் கண்டபோது, அது அத்திமரத்தில் அதன் பருவகாலத்தின் முதல் பழங்களைப் பார்ப்பதுபோல் இருந்தது. ஆனால், அவர்கள் பாகால் பேயோரிடத்திற்கு வந்தபோது, வெட்கக்கேடான பாகால் விக்கிரகத்திற்கு தங்களை அர்ப்பணித்து, தாங்கள் நேசித்த அந்த விக்கிரகத்தைப் போலவே, கேவலமானவர்களானார்கள். எப்பிராயீமின் மகிமை ஒரு பறவையைப்போல் பறந்தோடிவிடும்; அவர்களுக்குள் பிறப்போ, கருவில் சுமப்பதோ அல்லது கருத்தரிப்பதோ இல்லை. அவர்கள் பிள்ளைகளைப் பெற்று வளர்த்தாலுங்கூட, அவர்களுடைய பிள்ளைகள் ஒவ்வொருவரையும் அவர்கள் இழக்கும்படி நான் செய்வேன். நான் அவர்களைவிட்டு விலகும்போது, அவர்களுக்கு ஐயோ கேடு! இன்பமான இடத்தில் அமைந்திருக்கும் தீரு நாட்டைப்போல், நான் எப்பிராயீமை கண்டேன். ஆனால், எப்பிராயீம் தன் பிள்ளைகளைக் கொலைக்குக் கொடுக்கும்படி பகைவனைக் கூட்டிவருவான். யெகோவாவே, அவர்களுக்கு எதைக் கொடுப்பீர்? கருச்சிதைவு உண்டாகும் கர்ப்பப்பைகளையும், பால் சுரக்க முடியாத மார்பகங்களையும் அவர்களுக்குக் கொடும். “கில்காலிலே அவர்கள் செய்த கொடுமைக்காக அங்கே நான் அவர்களை வெறுத்தேன். அவர்களுடைய பாவச் செயல்களின் நிமித்தம், நான் எனது நாட்டிலிருந்து அவர்களைத் துரத்துவேன். நான் இனிமேலும் அவர்களில் அன்பாயிருக்கமாட்டேன், அவர்களுடைய தலைவர்கள் எல்லோரும் கலகக்காரர்கள். எப்பிராயீம் மக்கள் வெட்டுண்டு வீழ்ந்தார்கள், அவர்களின் வேர் உலர்ந்துபோயிற்று; இனிமேல் அவர்கள் கனி கொடுப்பதில்லை. அவர்கள் பிள்ளைகளைப் பெற்றாலும், அவர்களுடைய அருமையான சந்ததிகளை நான் நீக்கிப்போடுவேன்.” என் இறைவன் அவர்களைத் தள்ளிவிடுவார், ஏனெனில் அவர்கள் அவருக்குக் கீழ்ப்படியவில்லை; அவர்கள் பிற நாடுகளுக்குள்ளே அலைந்து திரிகிறவர்களாயிருப்பார்கள்.

ஓசியா 9:3-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவர்கள் யெகோவாவுடைய தேசத்தில் குடியிருப்பதில்லை; எப்பிராயீமர்கள் மீண்டும் எகிப்திற்குப் போவார்கள்; அசீரியாவில் தீட்டுள்ளதைச் சாப்பிடுவார்கள். அவர்கள் யெகோவாவுக்குத் திராட்சைரசத்தின் பானபலியை ஊற்றுவதுமில்லை, அவருக்கு அங்கிகரிப்பாக இருப்பதுமில்லை; அவர்களுடைய பலிகள் அவர்களுக்குத் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைபோல இருக்கும்; அதைச் சாப்பிடுகிற அனைவரும் தீட்டுப்படுவார்கள்; அவர்களுடைய அப்பம் அவர்களுக்கே உரியது, அது யெகோவாவுடைய ஆலயத்தில் வருவதில்லை. ஆசரிப்பு நாளிலும், யெகோவாவுடைய பண்டிகைநாளிலும் என்ன செய்வீர்கள்? இதோ, அவர்கள் அழிவிற்குத் தப்பும்படி போய்விட்டார்கள்; எகிப்து அவர்களைச் சேர்த்துக்கொள்ளும், மோப் பட்டணம் அவர்களை அடக்கம் செய்யும்; அவர்களுடைய வெள்ளியிருந்த விருப்பமான இடங்கள் நெருஞ்சிமுட்செடிகளுக்குச் சொந்தமாகும்; அவர்களுடைய குடியிருப்புகளில் முட்செடிகள் முளைக்கும். விசாரிப்பின் நாட்கள் வரும், நீதி சரிக்கட்டும் நாட்கள் வரும் என்பதை இஸ்ரவேலர்கள் அறிந்துகொள்வார்கள்; உன் மிகுதியான அக்கிரமத்தினாலேயும், மிகுதியான பகையினாலேயும் தீர்க்கதரிசிகள் மூடர்களும், ஆவியைப் பெற்ற மனிதர்கள் பைத்தியம் பிடித்தவர்களுமாக இருக்கிறார்கள். எப்பிராயீமின் காவற்காரர்கள் என் தேவனோடு எதிர்த்து நிற்கிறார்கள்; தீர்க்கதரிசி தன் வழிகளிலெல்லாம் குருவிபிடிக்கிறவனுடைய கண்ணியாகவும், தன் தேவனுடைய ஆலயத்திலே பகையாளியாகவும் இருக்கிறான். கிபியாவின் நாட்களில் நடந்தது போல, அவர்கள் தங்களை மிகவும் கெடுத்துக்கொண்டார்கள்; அவர்களுடைய அக்கிரமத்தை அவர் நினைப்பார், அவர்களுடைய பாவங்களை விசாரிப்பார். வனாந்திரத்தில் திராட்சைக்குலைகளைக் கண்டுபிடிப்பதுபோல இஸ்ரவேலைக் கண்டுபிடித்தேன்; அத்திமரத்தில் முதல்முறை பழுத்த பழங்களைப்போல உங்கள் முற்பிதாக்களைக் கண்டுபிடித்தேன்; ஆனாலும் அவர்கள் பாகால்பேயோரிடம் போய், இழிவானதற்குத் தங்களை ஒப்புவித்து, தாங்கள் நேசித்தவைகளைப்போலத் தாங்களும் அருவருப்புள்ளவர்களானார்கள். எப்பிராயீமின் மகிமை ஒரு பறவையைப்போல் பறந்துபோகும்; அது பிறப்பதுமில்லை, வயிற்றிலிருப்பதும் இல்லை, கர்ப்பமடைவதும் இல்லை. அவர்கள் தங்கள் பிள்ளைகளை வளர்த்தாலும், அவர்களுக்கு மனிதர்கள் இல்லாதபடிக்கு அவர்களைப் பிள்ளைகள் இல்லாதவர்களாக்குவேன்; நான் அவர்களை விட்டுப்போகும்போது அவர்களுக்கு ஐயோ, நான் எப்பிராயீமைத் தீருவின் திசைவரை இருக்கிறதைப் பார்க்கிறபோது, அது நல்ல வசதியான இடத்திலே நாட்டப்பட்டிருக்கிறது; ஆனாலும் எப்பிராயீமர்கள் தங்கள் மகன்களைக் கொலை செய்கிறவனிடத்தில் வெளியே கொண்டுபோய்விடுவார்கள். யெகோவாவே, நீர் அவர்களுக்குக் கொடுப்பதைக் கொடும்; அவர்களுக்கு விழுந்துபோகிற கர்ப்பத்தையும் பால் இல்லாத முலைகளையும் கொடும். அவர்களுடைய பொல்லாப்பெல்லாம் கில்காலிலே நடக்கும்; அங்கே நான் அவர்களை வெறுத்தேன்; அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களை நான் என் சமுகத்தைவிட்டுத் துரத்துவேன்; இனி அவர்களை நேசிக்கமாட்டேன்; அவர்களுடைய அதிபதிகள் எல்லோரும் துரோகிகள். எப்பிராயீமர்கள் வெட்டுண்டுபோனார்கள்; அவர்கள் வேர் உலர்ந்துபோயிற்று, கனிகொடுக்கமாட்டார்கள்; அவர்கள் பிள்ளைகளைப் பெற்றாலும், அவர்களுடைய கர்ப்பத்தின் பிரியமான கனிகளை அழிப்பேன். அவர்கள் அவருக்குச் செவிகொடாமற்போனதினால் என் தேவன் அவர்களை வெறுத்துவிடுவார்; அவர்கள் அந்நிய மக்களுக்குள்ளே அலைந்து திரிவார்கள்.

ஓசியா 9:3-17 பரிசுத்த பைபிள் (TAERV)

இஸ்ரவேலர்கள் கர்த்தருடைய நாட்டில் தங்கமாட்டார்கள். எப்ராயீம் எகிப்திற்குத் திரும்புவான். அசீரியாவில் அவர்கள் உண்ணக்கூடாத உணவை உண்பார்கள். இஸ்ரவேலர்கள் கர்த்தருக்குத் திராட்சைரசத்தைப் பானங்களின் காணிக்கையாக அளிப்பதில்லை. அவருக்கு அவர்கள் பலிகள் கொடுப்பதுமில்லை. அவர்கள் கொடுக்கிற பலிகள் மரித்தவர் வீட்டில் கொடுக்கிற உணவைப்போலிருக்கும். அதைச் சாப்பிடுகிறவர்கள் அசுத்தமடைவார்கள். அவர்கள் அப்பம் கர்த்தருடைய ஆலயத்திற்குள் போகாது. அவர்களே அதை உண்ண வேண்டியதிருக்கும். அவர்கள் (இஸ்ரவேலர்கள்) கர்த்தருடைய ஓய்வு நாட்கள் அல்லது பண்டிகைகளைக் கொண்டாட முடியாதவர்களாக இருப்பார்கள். இஸ்ரவேலர்கள் போய்விட்டார்கள். ஏனெனில் அவர்களுடைய விரோதி அவர்களுக்குண்டான எல்லாவற்றையும் தானாகவே எடுத்துச் சென்றுவிட்டான். ஆனால் எகிப்து அவர்களுடைய ஜனங்களை எடுத்துக்கொள்ளும். மெம்பிஸில் அவர்களைப் புதைப்பார்கள். அவர்களின் வெள்ளிப் பொக்கிஷங்கள் மேல் களைகள் வளரும். அவர்கள் வாழ்ந்த இடங்களில் முட்செடிகள் முளைக்கும். தீர்க்கதரிசி, “இஸ்ரவேலே, இவற்றைக் கற்றுக்கொள். தண்டனைக் காலம் வந்துவிட்டது. நீ செய்த பாவங்களுக்கு விலை செலுத்தவேண்டிய காலம் வந்திருக்கிறது” என்கிறார். ஆனால் இஸ்ரவேல் ஜனங்களோ, “தீர்க்கதரிசி ஒரு முட்டாள். தேவனுடைய ஆவியோடு இருக்கிற இம்மனிதன் பைத்தியக்காரன்” என்று கூறுகிறார்கள். தீர்க்கதரிசி, “நீ உனது கொடிய பாவங்களுக்காகத் தண்டிக்கப்படுவாய். நீ உனது வெறுப்பிற்காகத் தண்டிக்கப்படுவாய்” என்று சொல்கிறார். தேவனும் தீர்க்கதரிசியும் எப்பிராயீமை காவல் காக்கிற காவலர்களைப் போன்றவர்கள். ஆனால் வழியெங்கும் பல கண்ணிகள் உள்ளன. ஜனங்கள் தீர்க்கதரிசியை தேவனுடைய வீட்டில் கூட வெறுக்கின்றனர். இஸ்ரவேலர்கள் கிபியாவின் நாட்களைப் போன்று அழிவின் ஆழத்திற்குச் சென்றுவிட்டார்கள். கர்த்தர் இஸ்ரவேலர்களின் பாவங்களை நினைவுகொள்வார். அவர் அவர்களது பாவங்களைத் தண்டிப்பார். நான் இஸ்ரவேலரைக் கண்டுக்கொண்டபோது, அவர்கள் வனாந்திரத்தில் இருக்கும் புதிய திராட்சைப்பழத்தைப்போன்று இருந்தார்கள். அத்திமரத்தில் பருவகாலத்தில் முதல் முதலாகப் பழுத்தப் பழங்களைப் போன்று இருந்தார்கள். ஆனால் அவர்கள் அதன்பிறகு பாகால்பேயேருக்கு வந்தார்கள். அவர்கள் மாறினார்கள். நான் அவர்களை அழுகிப்போன பழங்களை வெட்டுவதைப் போன்று, (அழிப்பதுபோன்று) வெட்ட வேண்டியதாயிருந்தது. அவர்கள் அவர்களால் நேசிக்கப்படுகிற பயங்கரமான பொருட்களை (அந்நிய தெய்வங்கள்) போன்று ஆனார்கள். ஒரு பறவையைப் போன்று, எப்பிராயீமின் மகிமை பறந்துபோகும். இனிமேல் கர்ப்பமுறுதல் இல்லாமல் போகும். பிறப்புகளும் பிள்ளைகளும் இல்லாமல் போகும். ஆனால் இஸ்ரவேலர்கள் தம் பிள்ளைகளை வளர்த்தாலும் அது அவர்களுக்கு உதவாது. நான் அவர்களிடமிருந்து அவர்களது பிள்ளைகளை எடுத்துக்கொள்வேன். நான் அவர்களை விட்டுவிடுவேன். அவர்களுக்குத் தொல்லைகளைத் தவிர வேறு எதுவும் இருக்காது. எப்பிராயீம் தன் குழந்தைகைளைக் கண்ணிகளுக்கு வழிநடத்திச் செல்வதை நான் பார்க்க முடிகிறது. எப்பிராயீம் தன் பிள்ளைகளை கொலைக்காரர்களிடம் அழைத்து வருகிறான். கர்த்தாவே, நீர் அவர்களுக்குக் கொடுப்பதைக் கொடும். நீர் அவர்களுக்குக் குழந்தைகளை இழக்கிற கர்ப்பத்தையும் பால்கொடுக்க முடியாத முலைகளையும் கொடும். அவர்கள் பொல்லாப்பு கில்காலில் இருக்கிறது. நான் அங்கே அவர்களை வெறுக்கத் தொடங்கினேன். நான் அவர்களை என் வீட்டை விட்டுப் போகும்படி வற்புறுத்துவேன். ஏனென்றால் அவர்கள் பொல்லாப்புகளைச் செய்துள்ளார்கள். நான் இனிமேல் அவர்களை நேசிக்கமாட்டேன். அவர்கள் தலைவர்கள் கலகக்காரர்கள். அவர்கள் எனக்கு எதிராகத் திரும்பியிருக்கின்றார்கள். எப்பிராயீம் தண்டிக்கப்படுவான். அவர்கள் வேர் செத்துக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கு இனிமேல் குழந்தைகள் இருக்காது. அவர்கள் குழந்தைகள் பெறலாம். ஆனால் நான் அவர்களது உடலிலிருந்து வருகிற குழந்தைகளைக் கொல்வேன். அந்த ஜனங்கள் என்னுடைய தேவன் சொல்வதைக் கேட்கமாட்டார்கள். எனவே அவர் அவர்கள் சொல்வதைக் கேட்க மறுப்பார். அவர்கள் வீடு இல்லாமல் தேசங்கள் முழுவதும் அலைந்து திரிவார்கள்.

ஓசியா 9:3-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர்கள் கர்த்தருடைய தேசத்தில் குடியிருப்பதில்லை; எப்பிராயீமர் திரும்ப எகிப்துக்குப் போவார்கள்; அசீரியாவில் தீட்டுள்ளதைப் புசிப்பார்கள். அவர்கள் கர்த்தருக்குத் திராட்சரசத்தின் பானபலியை வார்ப்பதுமில்லை, அவருக்கு அங்கிகரிப்பாயிருப்பதுமில்லை; அவர்களுடைய பலிகள் அவர்களுக்குத் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைபோல இருக்கும்; அதைப் புசிக்கிற யாவரும் தீட்டுப்படுவார்கள்; அவர்களுடைய அப்பம் அவர்களுக்கேயாகும், அது கர்த்தருடைய ஆலயத்தில் வருவதில்லை. ஆசரிப்பு நாளிலும், கர்த்தருடைய பண்டிகைநாளிலும் என்ன செய்வீர்கள்? இதோ, அவர்கள் பாழ்க்கடிப்புக்குத் தப்பும்படி போய்விட்டார்கள்; எகிப்து அவர்களைச் சேர்த்துக்கொள்ளும், மோப் பட்டணம் அவர்களை அடக்கம்பண்ணும்; அவர்களுடைய வெள்ளியிருந்த விருப்பமான இடங்கள் காஞ்சொறிகளுக்குச் சுதந்தரமாகும்; அவர்களுடைய வாசஸ்தலங்களில் முட்செடிகள் முளைக்கும். விசாரிப்பின் நாட்கள் வரும், நீதி சரிக்கட்டும் நாட்கள் வரும் என்பதை இஸ்ரவேலர் அறிந்துகொள்வார்கள்; உன் மிகுதியான அக்கிரமத்தினாலேயும், மிகுதியான பகையினாலேயும் தீர்க்கதரிசிகள் மூடரும், ஆவியைப் பெற்ற மனுஷர்கள் பித்தங்கொண்டவர்களுமாயிருக்கிறார்கள். எப்பிராயீமின் காவற்காரர் என் தேவனோடு எதிர்த்து நிற்கிறார்கள்; தீர்க்கதரிசி தன் வழிகளிலெல்லாம் குருவிபிடிக்கிறவனுடைய கண்ணியாகவும், தன் தேவனுடைய ஆலயத்திலே பகையாளியாகவும் இருக்கிறான். கிபியாவின் நாட்களில் நடந்தது போல, அவர்கள் தங்களை மிகவும் கெடுத்துக்கொண்டார்கள்; அவர்களுடைய அக்கிரமத்தை அவர் நினைப்பார், அவர்களுடைய பாவங்களை விசாரிப்பார். வனாந்தரத்தில் திராட்சக்குலைகளைக் கண்டுபிடிப்பதுபோல இஸ்ரவேலைக் கண்டுபிடித்தேன்; அத்திமரத்தில் முதல் தரம் பழுத்த கனிகளைப்போல உங்கள் பிதாக்களைக் கண்டுபிடித்தேன்; ஆனாலும் அவர்கள் பாகால்பேயோர் அண்டைக்குப்போய், இலச்சையானதற்குத் தங்களை ஒப்புவித்து, தாங்கள் நேசித்தவைகளைப்போலத் தாங்களும் அருவருப்புள்ளவர்களானார்கள். எப்பிராயீமின் மகிமை ஒரு பறவையைப்போல் பறந்துபோகும்; அது பிறப்பதுமில்லை, வயிற்றிலிருப்பதுமில்லை, கர்ப்பந்தரிப்பதுமில்லை. அவர்கள் தங்கள் பிள்ளைகளை வளர்த்தாலும், அவர்களுக்கு மனுஷர் இராதபடிக்கு அவர்களைப் பிள்ளைகள் அற்றவர்களாக்குவேன்; நான் அவர்களை விட்டுப்போகையில் அவர்களுக்கு ஐயோ! நான் எப்பிராயீமைத் தீருவின் திசைமட்டும் இருக்கிறதைப் பார்க்கிறபோது, அது நல்ல வசதியான ஸ்தலத்திலே நாட்டப்பட்டிருக்கிறது; ஆனாலும் எப்பிராயீமர் தங்கள் குமாரரைக் கொலை செய்கிறவனிடத்தில் வெளியே கொண்டுபோய்விடுவார்கள். கர்த்தாவே, நீர் அவர்களுக்குக் கொடுப்பதைக் கொடும்; அவர்களுக்கு விழுந்துபோகிற கர்ப்பத்தையும் பாலற்ற முலைகளையும் கொடும். அவர்களுடைய பொல்லாப்பெல்லாம் கில்காலிலே நடக்கும்; அங்கே நான் அவர்களை வெறுத்தேன்; அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களை நான் என் சமுகத்தைவிட்டுத் துரத்துவேன்; இனி அவர்களை நேசிக்கமாட்டேன்; அவர்களுடைய அதிபதிகள் எல்லாரும் துரோகிகள். எப்பிராயீமர் வெட்டுண்டுபோனார்கள்; அவர்கள் வேர் உலர்ந்துபோயிற்று, கனிகொடுக்கமாட்டார்கள்; அவர்கள் பிள்ளைகளைப் பெற்றாலும், அவர்களுடைய கர்ப்பத்தின் பிரியமான கனிகளை அதம் பண்ணுவேன். அவர்கள் அவருக்குச் செவிகொடாமற்போனபடியால் என் தேவன் அவர்களை வெறுத்துவிடுவார்; அவர்கள் அந்நிய ஜாதிகளுக்குள்ளே அலைந்து திரிவார்கள்.