ஓசியா 2:14-20
ஓசியா 2:14-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“நான் அவளை வசப்படுத்தப் போகிறேன்; நான் அவளை பாலைவனத்திற்கு அழைத்துச்சென்று, அங்கே அவளோடு அன்பாகப் பேசுவேன். அங்கே அவளுடைய திராட்சைத் தோட்டங்களை நான் அவளுக்குத் திரும்பக் கொடுப்பேன்; நான் ஆகோர் என்னும் கஷ்டத்தின் பள்ளத்தாக்கை, எதிர்பார்ப்பின் கதவாக ஆக்குவேன். அவள் தன் வாலிப நாட்களில் தான் எகிப்திலிருந்து வந்தபோது, பாடியதுபோல் அங்கே பாடுவாள். “அந்த நாளிலே, நீ என்னை ‘என் பாகாலே’ என்று அழைக்காமல், ‘என் கணவனே’ என்று அழைப்பாய்” என்று யெகோவா அறிவிக்கிறார். “நான் அவளுடைய உதடுகளிலிருந்து பாகால்களின் பெயர்களை அகற்றிவிடுவேன்; அவற்றின் பெயர்கள் இனி ஒருபோதும் சொல்லி வணங்கப்படமாட்டாது. அந்நாளிலே நான் அவர்களுக்காக வெளியின் மிருகங்களோடும், ஆகாயத்துப் பறவைகளோடும், தரையில் ஊரும் பிராணிகளோடும் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்துவேன். நான் வில்லையும் வாளையும் யுத்தத்தையும் நாட்டில் இராதபடி செய்வேன்; அதனால் அவர்கள் எல்லோரும் படுக்கும்போது பாதுகாப்பாய் இருப்பார்கள். நான் உன்னை என்றென்றைக்கும் எனக்கென்று நிச்சயித்துக்கொள்வேன்; நான் உன்னை நீதியுடனும், நியாயத்துடனும், அன்புடனும், கருணையுடனும் நிச்சயித்துக்கொள்வேன். நான் உண்மையோடு உன்னை எனக்காக நிச்சயித்துக்கொள்வேன்; நீயும் யெகோவாவை ஏற்றுக்கொள்வாய்.
ஓசியா 2:14-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
ஆனாலும், இதோ, நான் அவளுக்கு ஆசைகாட்டி, அவளை வனாந்திரத்திற்கு அழைத்துக்கொண்டுபோய், அவளுடன் ஆதரவாகப் பேசி, அவ்விடத்திலிருந்து அவளுக்கு அவளுடைய திராட்சைத் தோட்டங்களையும், நம்பிக்கையின் வாசலாக ஆகோர் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்; அப்பொழுது அவள் அங்கே, தன் இளவயதின் நாட்களிலும் தான் எகிப்துதேசத்திலிருந்து வந்த நாளிலும் பாடினதுபோல் பாடுவாள். அக்காலத்தில் நீ என்னை இனி பாகாலி என்று சொல்லாமல், ஈஷி என்று சொல்லுவாய் என்று யெகோவா உரைக்கிறார். பாகால்களுடைய பெயர்களை அவள் வாயிலிருந்து அகற்றிப்போடுவேன்; இனி அவைகளின் பெயரைச் சொல்லி, அவைகளை நினைக்கிற நினைவும் இல்லாமற்போகும். அக்காலத்தில் நான் அவர்களுக்காகக் காட்டு மிருகங்களுடனும், ஆகாயத்துப் பறவைகளுடனும், பூமியிலே ஊரும் பிராணிகளுடனும், ஒரு உடன்படிக்கைசெய்து, வில்லையும் பட்டயத்தையும் போரையும் தேசத்திலே இராதபடிக்கு முறித்து, அவர்களைச் சுகமாகப் படுத்துக்கொண்டிருக்கச்செய்வேன். நித்திய திருமணத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்கமும் இரக்கமுமாக உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன். உண்மையாகவே உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீ யெகோவாவை அறிந்துகொள்வாய்.
ஓசியா 2:14-20 பரிசுத்த பைபிள் (TAERV)
“எனவே, நான் (கர்த்தர்) அவளிடத்தில் இனிமையான வார்த்தைகளால் பேசுவேன். நான் அவளை வனாந்தரத்திற்கு அழைத்துப் போவேன். நான் அவளிடம் நயமாகப் பேசுவேன். அங்கே நான் அவளுக்குத் திராட்சைத் தோட்டங்களைக் கொடுப்பேன். நான் அவளுக்கு நம்பிக்கையின் வாசலைப் போன்ற ஆகோர் பள்ளத்தாக்கைக் கொடுப்பேன். பிறகு அவள் எகிப்து தேசத்திலிருந்து வந்த சமயத்திலும் தன் வாலிப நாட்களிலும் என்னோடு பேசினதுபோல் பதிலைத் தருவாள்.” கர்த்தர் இதனைச் சொல்கிறார். “அந்த நேரத்தில் நீங்கள் என்னை, ‘என் கணவனே’ என்று அழைப்பீர்கள். நீங்கள் என்னை ‘என் பாகாலே’ என்று அழைக்கமாட்டீர்கள். நான் அவளது வாயிலிருந்து பாகால்களின் பெயர்களை எடுத்துவிடுவேன். பிறகு ஜனங்கள் மீண்டும் பாகால்களின் பெயர்களை பயன்படுத்தமாட்டார்கள். “அப்போது நான் இஸ்ரவேலர்களுக்காகக் காட்டுமிருகங்களோடும் வானத்துப் பறவைகளோடும், தரையில் ஊரும் உயிர்களோடும், ஒரு உடன்படிக்கைச் செய்துகொள்வேன். நான் போருக்குரியவில், வாள், ஆயுதம் போன்றவற்றை உடைப்பேன். தேசத்தில் எந்த ஆயுதமும் இல்லாதபடிச் செய்வேன். நான் தேசத்தைப் பாதுகாப்பாக இருக்கும்படிச் செய்வேன். எனவே இஸ்ரவேல் ஜனங்களை சமாதானமாகப் படுக்கச் செய்வேன். நான் (கர்த்தர்) உன்னை என்றைக்குமான எனது மணப் பெண்ணாக்குவேன். நான் உன்னை நன்மை, நீதி, அன்பு, இரக்கம், ஆகிய குணங்கள் உள்ள என்னுடைய மணமகளாக்குவேன். நான் உன்னை எனது உண்மைக்குரிய மணமகளாக்குவேன். பிறகு நீ கர்த்தரை உண்மையாகவே அறிந்துகொள்வாய்.
ஓசியா 2:14-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஆயினும், இதோ, நான் அவளுக்கு நயங்காட்டி, அவளை வனாந்தரத்தில் அழைத்துக்கொண்டுபோய், அவளோடே பட்சமாய்ப் பேசி, அவ்விடத்திலிருந்து அவளுக்கு அவளுடைய திராட்சத்தோட்டங்களையும், நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்; அப்பொழுது அவள் அங்கே, தன் இளவயதின் நாட்களிலும் தான் எகிப்துதேசத்திலிருந்து வந்த நாளிலும் பாடினதுபோல் பாடுவாள். அக்காலத்தில் நீ என்னை இனி பாகாலி என்று சொல்லாமல், ஈஷி என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார். பாகால்களுடைய நாமங்களை அவள் வாயிலிருந்து அற்றுப்போகப்பண்ணுவேன்; இனி அவைகளின் பேரைச் சொல்லி, அவைகளை நினைக்கிற நினைப்பும் இல்லாமற்போகும். அக்காலத்தில் நான் அவர்களுக்காகக் காட்டு மிருகங்களோடும், ஆகாயத்துப் பறவைகளோடும், பூமியிலே ஊரும் பிராணிகளோடும், ஒரு உடன்படிக்கைபண்ணி, வில்லையும் பட்டயத்தையும் யுத்தத்தையும் தேசத்திலே இராதபடிக்கு முறித்து, அவர்களைச் சுகமாய்ப் படுத்துக்கொண்டிருக்கப்பண்ணுவேன். நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன். உண்மையாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீ கர்த்தரை அறிந்துகொள்ளுவாய்.