ஓசியா 14:1-4
ஓசியா 14:1-4 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இஸ்ரவேலே, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு; நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய். வார்த்தைகளைக்கொண்டு கர்த்தரிடத்தில் திரும்புங்கள்; அவரை நோக்கி: தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாய் அங்கீகரித்தருளும்; அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் காளைகளைச் செலுத்துவோம். அசீரியா எங்களை இரட்சிப்பதில்லை; நாங்கள் குதிரைகளின்மேல் ஏறமாட்டோம்; எங்கள் கைகளின் கிரியையைப்பார்த்து: நீங்கள் எங்கள் தேவர்கள் என்று இனிச் சொல்லமாட்டோம்; திக்கற்றவன் உம்மிடத்தில் இரக்கம்பெறுகிறான் என்று சொல்லுங்கள். நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்; அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்; என் கோபம் அவர்களை விட்டு நீங்கிற்று.
ஓசியா 14:1-4 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இஸ்ரயேலே, உன் இறைவனாகிய யெகோவாவிடம் திரும்பு; உன் பாவங்களே நீ விழுந்துபோவதற்குக் காரணமாய் அமைந்தன. நீங்கள் உங்கள் வேண்டுதல்களுடன் யெகோவாவிடம் திரும்புங்கள்; நீங்கள் அவரிடம், “எங்கள் பாவங்களையெல்லாம் மன்னியும், எங்களை கிருபையாய் ஏற்றுக்கொள்ளும்; அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் துதியை காளைகளின் பலியாய் செலுத்துவோம் என்று சொல்லுங்கள். அசீரியா நாடு எங்களைக் காப்பாற்றமாட்டாது; நாங்கள் போர்க் குதிரைகளில் ஏறமாட்டோம். எங்கள் கைகளினால் நாங்கள் செய்த விக்கிரகங்களை ‘எங்கள் தெய்வம்’ என இனி ஒருபோதும் சொல்லமாட்டோம்; ஏனெனில் உம்மிடமே திக்கற்றவர்கள் கருணை பெறுகிறார்கள் என்று கூறுங்கள்.” “நான் அவர்களுடைய பின்மாற்றத்தைக் குணமாக்குவேன், நான் அவர்களில் அதிகமாய் அன்பு செலுத்துவேன், எனது கோபம் அவர்களைவிட்டு நீங்கிற்று.
ஓசியா 14:1-4 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இஸ்ரவேலே, உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் திரும்பு; நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய். வார்த்தைகளைக்கொண்டு யெகோவாவிடத்தில் திரும்புங்கள்; அவரை நோக்கி: தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாக அங்கீகரித்தருளும்; அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் பலிகளைச் செலுத்துவோம். அசீரியா எங்களைக் காப்பாற்றுவதில்லை; நாங்கள் குதிரைகளின்மேல் ஏறமாட்டோம்; எங்கள் கைகளின் செயலைப்பார்த்து: நீங்கள் எங்களுடைய தேவர்கள் என்று இனிச் சொல்லமாட்டோம்; திக்கற்றவன் உம்மிடத்தில் இரக்கம்பெறுகிறான் என்று சொல்லுங்கள். நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்; அவர்களை மனப்பூர்வமாகச் சிநேகிப்பேன்; என் கோபம் அவர்களை விட்டு நீங்கினது.
ஓசியா 14:1-4 பரிசுத்த பைபிள் (TAERV)
இஸ்ரவேலே, நீ விழுந்தாய், தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தாய். எனவே உனது தேவனாகிய கர்த்தரிடம் திரும்பி வா. நீ சொல்லப் போவதைப் பற்றி நினைத்துப் பார். கர்த்தரிடம் திரும்பி வா. அவரிடம், “எங்கள் பாவங்களை எடுத்துவிடும். நாங்கள் செய்யும் நன்மைகளை ஏற்றுக்கொள்ளும். நாங்கள் எங்கள் உதடுகளிலிருந்து துதிகளை செலுத்துகிறோம். அசீரியா எங்களைக் காப்பாற்றாது. நாங்கள் போர்க் குதிரைகளில் சவாரி செய்யமாட்டோம். நாங்கள் மீண்டும் ஒருபோதும் ‘எங்கள் தேவன்’ என்று எங்கள் கைகளால் செய்யப்பட்டப் பொருட்களைக் கூறமாட்டோம். ஏனென்றால் நீர் ஒருவர் தான் அனாதைகள் மீது இரக்கங்காட்டுகிறவர்.” கர்த்தர் கூறுகிறார்: “என்னைவிட்டு அவர்கள் விலகியதை நான் மன்னிப்பேன். நான் அவர்களைத் தடையின்றி நேசிப்பேன். ஏனெனில் அவர்களுடன் கோபங்கொண்டதை நிறுத்திவிட்டேன்.