ஓசியா 12:1-14

ஓசியா 12:1-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

எப்பிராயீம் காற்றை மேய்ந்து, கொண்டற்காற்றைப் பின்தொடருகிறான்; அவன் நாள்தோறும் பொய்யையும் கேட்டையும் வர்த்திக்கப்பண்ணி, அசீரியரோடே உடன்படிக்கைபண்ணுகிறான்; எகிப்துக்கு எண்ணெய் கொண்டுபோகப்படுகிறது. யூதாவோடும் கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; அவர் யாக்கோபை அவன் வழிகளுக்குத்தக்கதாக விசாரிக்கப்போகிறார்; அவன் கிரியைகளுக்குத்தக்கதாக அவனுக்கு நீதியைச் சரிக்கட்டுவார். அவன் தாயின் கர்ப்பத்திலே தன் சகோதரனுடைய குதிகாலைப் பிடித்தான்; தன் பெலத்தினால் தேவனோடே போராடினான். அவன் தூதனானவரோடே போராடி மேற்கொண்டான், அழுது அவரை நோக்கிக் கெஞ்சினான்; பெத்தேலிலே அவர் அவனைக் கண்டு சந்தித்து, அவ்விடத்திலும் நம்மோடே பேசினார். கர்த்தராகிய அவர் சேனைகளின் தேவன்; யேகோவா என்பது அவருடைய நாமசங்கீர்த்தனம். இப்போதும் நீ உன் தேவனிடத்தில் திரும்பு; தயவையும் நியாயத்தையும் கைக்கொண்டு, இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு. அவன் வியாபாரி, கள்ளத்தராசு அவன் கையில் இருக்கிறது; அநியாயஞ்செய்ய விரும்புகிறான். எப்பிராயீம்: நான் ஐசுவரியவானானேன்; நான் பொருளைச் சம்பாதித்தேன்; நான் பிரயாசப்பட்டுத் தேடின எல்லாவற்றிலும் பாவமாகிய அக்கிரமம் என்னிடத்தில் கண்டுபிடிக்கப்படுவதில்லையென்று சொல்லுகிறான். உன்னை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவந்தது முதற்கொண்டு உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான், பண்டிகை நாட்களில் செய்யப்படுகிறதுபோல், திரும்பவும் உன்னைக் கூடாரங்களில் தாபரிக்கப்பண்ணுவேன். அப்படியே தீர்க்கதரிசிகளோடே சொன்னேன்; நான் அநேகம் தரிசனங்களை அருளினேன்; தீர்க்கதரிசிகளைக் கொண்டு உவமைகளால் பேசினேன். கீலேயாத் அக்கிரம ஸ்தலமோ? ஆம், அவர்கள் அபத்தரானார்கள்; கில்காலிலே காளைகளைப் பலியிடுகிறார்கள்; அவர்களுடைய பீடங்கள் வயல்வரப்புகளில் இருக்கிற கற்குவியல்களைப்போல் இருக்கிறது. யாக்கோபு சீரியா தேசத்துக்கு ஓடிப்போய், இஸ்ரவேல் ஒரு பெண்ணுக்காக ஊழியஞ்செய்து, ஒரு பெண்ணுக்காக ஆடு மேய்த்தான். கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியைக் கொண்டு இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; தீர்க்கதரிசியினால் காக்கப்பட்டான். எப்பிராயீமோ அவரை மிகவும் கோபப்படுத்தினான்; ஆகையால் அவனுடைய ஆண்டவர் அவனுடைய இரத்தப்பழிகளை அவன்மேல் சுமத்தி, அவன் செய்த நிந்தையை அவன்மேல் திருப்புவார்.

ஓசியா 12:1-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எப்பிராயீம் காற்றை மேய்கிறான், நாள்முழுவதும் கொண்டற்காற்றைப் பின்தொடர்ந்து செல்கிறான். பொய்களையும், வன்செயல்களையும் பெருகப்பண்ணுகிறான். அவன் அசீரியாவோடு ஒப்பந்தம் செய்கிறான்; எகிப்திற்கு ஒலிவ எண்ணெய் அனுப்புகிறான். யூதாவுக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டு யெகோவாவிடம் இருக்கிறது. யாக்கோபின் மக்களை அவர்களுடைய வழிகளுக்குத்தக்கதாக அவர் தண்டிப்பார்; அவர்களுடைய செயல்களுக்கேற்றபடி அவர்களுக்குப் பிரதிபலன் செய்வார். யாக்கோபு தாயின் கர்ப்பத்திலேயே, தனது சகோதரனின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டான்; மனிதனானபோது இறைவனோடு போராடினான். அவன் தூதனுடனும் போராடி வெற்றிகொண்டான்; அவன் அவருடைய தயவுக்காக அழுது மன்றாடினான். இறைவன் அவனைப் பெத்தேலில் கண்டு, அங்கே நம்முடன் பேசினார். சேனைகளின் இறைவனாகிய யெகோவா அவரே; யெகோவா என்பது அவரது புகழ்வாய்ந்த பெயர். யாக்கோபின் மக்களே, நீங்கள் எல்லோரும் இறைவனிடம் திரும்பிவாருங்கள். அன்பையும் நீதியையும் கடைபிடியுங்கள்; எப்பொழுதும் உங்கள் இறைவனுக்காகக் காத்திருங்கள். ஆனால் இப்பொழுது நீங்கள் கள்ளத்தராசுகளைப் பயன்படுத்துகிற வியாபாரிபோல் இருக்கிறீர்கள்; அவன் ஏமாற்றுவதையே விரும்புகிறான். அத்துடன் எப்பிராயீமோ, “நான் மிகவும் பணக்காரன்; நான் செல்வந்தனாகிவிட்டேன். என் செல்வத்தினிமித்தம் அவர்கள் என்னில் அநியாயத்தையோ, பாவத்தையோ கண்டுபிடிக்க முடியாது என்று பெருமைப்படுகிறான்.” “உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த உங்கள் இறைவனாகிய யெகோவா நானே. நான் உங்களது நியமிக்கப்பட்ட பண்டிகையின் நாட்களில் இருப்பதுபோல, நான் திரும்பவும் உங்களைக் கூடாரங்களில் குடியிருக்கப்பண்ணுவேன். அத்துடன் நான் இறைவாக்கினருடன் பேசி, அவர்களுக்கு அநேக தரிசனங்களைக் கொடுத்தேன்; அவர்களைக்கொண்டு உவமைகளினால் பேசினேன்.” கீலேயாத் கொடுமையானதா? அதன் மக்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள்; கில்காலில் காளைகளைப் பலியிடுகிறார்களா? அவர்களுடைய பலிபீடங்கள் உழுத வயலிலுள்ள கற்குவியலைப்போல் ஆகும். யாக்கோபு ஆராமுக்கு ஓடிப்போனான்; இஸ்ரயேல் தனக்கு மனைவியைப் பெறுவதற்காக வேலைசெய்தான்; அவளுக்கான பணத்தைக் கொடுப்பதற்கு செம்மறியாடுகளை மேய்த்தான். யெகோவா இறைவாக்கினன் ஒருவனை அனுப்பி, இஸ்ரயேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார்; இறைவாக்கினன் மூலம் இஸ்ரயேலரை பராமரித்தார். ஆயினும் எப்பிராயீம் யெகோவாவுக்குக் கசப்பாகக் கோபமூட்டியிருக்கிறான்; எனவே அவனுடைய யெகோவா, அவனுடைய இரத்தப்பழியை அவன் மேலேயே சுமத்துவார். அவன் காட்டிய அவமதிப்புக்குத்தக்கதாய் அவனுக்குப் பதில் செய்வார்.

ஓசியா 12:1-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எப்பிராயீம் காற்றை மேய்ந்து, கொண்டற்காற்றைப் பின்தொடருகிறான்; அவன் நாள்தோறும் பொய்யையும் கேட்டையும் பெருக்கச்செய்து, அசீரியருடன் உடன்படிக்கை செய்கிறான்; எகிப்திற்கு எண்ணெய் கொண்டுபோகப்படுகிறது. யூதாவோடும் யெகோவாவுக்கு வழக்கு இருக்கிறது; அவர் யாக்கோபை அவன் வழிகளுக்கு ஏற்றபடி விசாரிக்கப்போகிறார்; அவன் செயல்களுக்குத்தக்கதாக அவனுக்கு நீதியைச் சரிக்கட்டுவார். அவன் தாயின் கர்ப்பத்தில் தன் சகோதரனுடைய குதிகாலைப் பிடித்தான்; தன் பெலத்தினால் தேவனோடே போராடினான். அவன் தூதனுடன் போராடி மேற்கொண்டான், அழுது அவரை நோக்கிக் கெஞ்சினான்; பெத்தேலிலே அவர் அவனைக் கண்டு சந்தித்து, அவ்விடத்திலும் நம்மோடே பேசினார். கர்த்தராகிய அவர் சேனைகளின் தேவன்; யேகோவா என்பது அவருடைய நிலையான நாமம். இப்போதும் நீ உன் தேவனிடத்தில் திரும்பு; தயவையும் நியாயத்தையும் கைக்கொண்டு, இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு. அவன் வியாபாரி, கள்ளத்தராசு அவன் கையில் இருக்கிறது; அநியாயம்செய்ய விரும்புகிறான். எப்பிராயீம்: நான் செல்வந்தனானேன்; நான் பொருளைச் சம்பாதித்தேன்; நான் முயற்சிசெய்து தேடின எல்லாவற்றிலும் பாவமாகிய அக்கிரமம் என்னிடத்தில் கண்டுபிடிக்கப்படுவதில்லையென்று சொல்லுகிறான். உன்னை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவந்தது முதல் உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான், பண்டிகை நாட்களில் செய்யப்படுகிறதுபோல், மீண்டும் உன்னைக் கூடாரங்களில் தங்கியிருக்கச்செய்வேன். அப்படியே தீர்க்கதரிசிகளுடன் சொன்னேன்; நான் அநேகம் தரிசனங்களை கொடுத்தேன்; தீர்க்கதரிசிகளைக் கொண்டு உவமைகளால் பேசினேன். கீலேயாத் அக்கிரமத்தின் இடமோ? ஆம், அவர்கள் பொய்யரானார்கள்; கில்காலிலே காளைகளைப் பலியிடுகிறார்கள்; அவர்களுடைய பீடங்கள் வயல்வரப்புகளில் இருக்கிற கற்குவியல்களைப்போல் இருக்கிறது. யாக்கோபு சீரியா தேசத்திற்கு ஓடிப்போய், இஸ்ரவேல் ஒரு பெண்ணுக்காக வேலைசெய்து, ஒரு பெண்ணுக்காக ஆடு மேய்த்தான். யெகோவா ஒரு தீர்க்கதரிசியைக் கொண்டு இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்; தீர்க்கதரிசியினால் காக்கப்பட்டான். எப்பிராயீமோ அவரை மிகவும் கோபப்படுத்தினான்; ஆகையால் அவனுடைய ஆண்டவர் அவனுடைய இரத்தப்பழிகளை அவன்மேல் சுமத்தி, அவன் செய்த இகழ்ச்சியை அவன்மேல் திருப்புவார்.

ஓசியா 12:1-14 பரிசுத்த பைபிள் (TAERV)

எப்பிராயீம் தனது காலத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறான். இஸ்ரவேல் நாள் முழுவதும் “காற்றைத் துரத்திக்கொண்டிருக்கிறான்.” ஜனங்கள் மேலும், மேலும் பொய்களைச் சொல்கிறார்கள். அவர்கள் மேலும், மேலும் களவு செய்கிறார்கள். அவர்கள் அசீரியாவோடு ஒப்பந்தங்களைச் செய்துகொண்டார்கள். அவர்கள் தங்கள் ஒலிவ எண்ணெயை எகிப்துக்கு எடுத்துச் சென்றுக்கொண்டிருக்கிறார்கள். கர்த்தர் கூறுகிறார், “என்னிடம் இஸ்ரவேலுக்கு எதிராக ஒரு வாக்குவாதம் உண்டு. யாக்கோபு தான் செய்த செயலுக்காக தண்டிக்கப்படவேண்டும். அவன் செய்த தீயவற்றுக்காக அவன் தண்டிக்கப்படவேண்டும். யாக்போபு இன்னும் தன் தாயின் வயிற்றில் இருக்கும்போதே தன் சகோதரனோடு தந்திரம் செய்யத் தொடங்கினான். யாக்கோபு ஒரு பலமான இளைஞனாக இருந்தான். அந்தக் காலத்தில் அவன் தேவனோடு போராடினான். யாக்கோபு தேவனுடைய தூதனோடு போராடி வென்றான். அவன் உதவி கேட்டுக் கதறினான். அது பெத்தேலில் நடந்தது. அந்த இடத்தில் அவன் நம்மோடு பேசினான். ஆம், யேகோவா படைகளின் தேவன். அவரது பெயர் யேகோவா (கர்த்தர்). எனவே, உனது தேவனிடம் திரும்பி வா. அவருக்கு விசுவாசமாக இரு. நல்லவற்றைச் செய்! நீ எப்பொழுதும் உன் தேவனிடம் நம்பிக்கையாய் இரு! “யாக்கோபு ஓர் உண்மையான வியாபாரி. அவன் தன் நண்பனைக்கூட ஏமாற்றுகிறான். அவனது தராசும் கள்ளத்தராசு. எப்பிராயீம் சொன்னான் ‘நான் செல்வந்தன்! நான் உண்மையான செல்வத்தைக் கண்டுபிடித்துள்ளேன்! எனது குற்றங்களை யாரும் கண்டுகொள்ள முடியாது. யாரும் எனது பாவங்களைத் தெரிந்து கொள்ளமாட்டான்.’ “ஆனால் நீ எகிப்து தேசத்திலிருந்த நாள் முதல், நான் உன் தேவனாகிய கர்த்தராயிருந்திருக்கிறேன், நான் உன்னைப் பண்டிகை நாட்களைப் போன்று (ஆசாரிப்பு கூடார நாட்களைப் போல்) கூடாரங்களில் தங்கச் செய்வேன். நான் தீர்க்கதரிசிகளோடு பேசினேன். நான் அவர்களுக்குப் பல தரிசனங்களைக் கொடுத்தேன். எனது பாடங்களை உனக்குக் கற்பிக்கப் பல வழிகளைத் தீர்க்கதரிசிகளுக்குக் கொடுத்தேன். ஆனால் கீலேயாத் ஜனங்கள் பாவம் செய்தார்கள். அந்த இடத்தில் ஏராளமான பயங்கர விக்கிரகங்கள் இருக்கின்றன. ஜனங்கள் கில்காலில் காளைகளுக்குப் பலிகளைக் கொடுக்கிறார்கள். அந்த ஜனங்களுக்கு ஏராளமான பலிபீடங்கள் இருக்கின்றன. வயல் வரப்புகளில் உள்ள கல் குவியல்களைப் போன்று வரிசை வரிசையாகப் பலிபீடங்கள் இருக்கின்றன. “யாக்கோபு ஆராம் நாட்டுக்கு ஓடிப்போனான். அந்த இடத்தில் இஸ்ரவேல் ஒரு மனைவிக்காக வேலை செய்தான். இன்னொரு மனைவிக்காக அவன் ஆடு மேய்த்தான். ஆனால் கர்த்தர் தீர்க்கதரிசியை உபயோகித்து இஸ்ரவேலை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தார். கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியைப் பயன்படுத்தி இஸ்ரவேலைப் பத்திரமாகப் பாதுகாத்தார். ஆனால் எப்பிராயீம் கர்த்தருடைய மிகுந்த கோபத்துக்குக் காரணமாக இருந்தான். எப்பிராயீம் பலரைக் கொன்றான். எனவே அவன் தன் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்படுவான். அவனது ஆண்டவர் (கர்த்தர்) அவன் அவமானம் அடையும்படிச் செய்வார்.”