ஓசியா 10:3-15

ஓசியா 10:3-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது அவர்கள், “நாங்கள் யெகோவாவிடம் பயபக்தியாயிருக்காதபடியால், எங்களுக்கு அரசன் இல்லை; அரசன் இருந்தாலுங்கூட, அவனால் எங்களுக்காக என்ன செய்யமுடியும்?” எனச் சொல்வார்கள். அவர்கள் அநேக வாக்குத்தத்தங்களைக் கொடுக்கிறார்கள், பொய் சத்தியங்களையும் ஒப்பந்தங்களையும் செய்கிறார்கள்; எனவே உழுத வயலில் உள்ள நச்சுப் பயிரைப்போல் வழக்குகள் தோன்றுகின்றன. சமாரியாவில் வாழ்கிற மக்கள் பெத்தாவேனில் இருக்கிற கன்றுக்குட்டி விக்கிரகத்திற்குப் பயப்படுகிறார்கள். அது அவர்களிடமிருந்து எடுக்கப்பட்டு, நாடுகடத்தப்படும். அதன் மக்கள் அதற்காகத் துக்கங்கொண்டாடுவார்கள்; அதன் மகிமையில் மகிழ்ச்சிகொண்ட விக்கிரக பூசாரிகளும் துக்கங்கொண்டாடுவார்கள். அது அசீரியாவின் பேரரசனுக்குக் கப்பமாக அங்கு கொண்டுபோகப்படும். அதைக்குறித்து எப்பிராயீம் அவமானமடையும். இஸ்ரயேல் தன் சொந்த ஆலோசனையினால் வெட்கமடையும். சமாரியாவும் அதன் அரசனும் தண்ணீரில் மிதக்கும் குச்சியைப்போல் அள்ளுண்டு போவார்கள். இஸ்ரயேலின் வேறு தெய்வங்களுக்குப் பலியிட்ட மேடைகள் அழிக்கப்படும்; இதுவே இஸ்ரயேலின் பாவம். முட்செடிகளும் நெருஞ்சில்களும் வளர்ந்து அதன் மேடைகளை மூடும். அப்பொழுது அவர்கள் மலைகளைப் பார்த்து, “எங்களை மூடுங்கள்!” என்றும், குன்றுகளைப் பார்த்து, “எங்கள்மேல் விழுங்கள்!” என்றும் சொல்வார்கள். இஸ்ரயேலே, கிபியாவின் நாட்கள் தொடங்கி நீ பாவம் செய்தாய்; அதிலேயே நீ இன்னும் நிலைகொண்டிருக்கிறாய். கிபியாவிலே தீமை செய்தவர்கள்மேல் யுத்தம் வரவில்லையோ? ஆகவே நான் விரும்புகின்றபோது உன்னைத் தண்டிப்பேன்; உங்கள் இரட்டிப்பான பாவங்களுக்காக உங்களை விலங்கிடுவதற்கென, பிறநாடுகள் உங்களுக்கு விரோதமாய் ஒன்றுகூடும். எப்பிராயீம் சூடு அடிக்க விரும்புகின்ற பயிற்றுவிக்கப்பட்ட கன்னிப்பசு. நான் அதன் கழுத்தின்மேல் பாரத்தை வைக்கவில்லை. ஆனால் இப்பொழுது நான் அதன் அழகான கழுத்தின்மேல் ஒரு நுகத்தை வைப்பேன். நான் எப்பிராயீமை கடுமையான வேலைக்கு நடத்துவேன்; யூதாவும் நிலத்தை உழவேண்டும், யாக்கோபின் எல்லா மக்களும் நிலத்தின் மண் கட்டிகளை உடைக்கவேண்டும். உங்கள் இருதயங்கள் உழப்படாத வயல்போல் கடினமாயிருக்கிறதே; ஆகவே உங்களுக்கென நீதியை விதையுங்கள், அன்பின் பலனை அறுவடை செய்யுங்கள். உழப்படாத உங்கள் நிலங்களைக் கொத்துங்கள், ஏனெனில் யெகோவா வந்து உங்கள்மேல் நியாயத்தை பொழியும் வரைக்கும் இது யெகோவாவைத் தேடும் காலமாயிருக்கிறது. ஆனால் நீங்கள் கொடுமையை உழுதீர்கள், தீமையை அறுவடை செய்தீர்கள், வஞ்சனையின் பலனை சாப்பிட்டீர்கள். ஏனெனில், நீங்கள் உங்கள் சொந்த பெலத்திலும், உங்கள் அநேக போர் வீரர்களிலும் நம்பிக்கையாயிருந்தீர்கள். அதனால் உங்கள் மக்களுக்கு எதிராக யுத்தம் எழும்பும், உங்கள் கோட்டைகளெல்லாம் அழிக்கப்படும். யுத்தநாளில் பெத்தார்பேலை சல்மான் அழித்தபோது, தாய்மார் தங்கள் பிள்ளைகளுடன் தரையில் மோதி அடிக்கப்பட்டதுபோல இதுவும் இருக்கும். பெத்தேலே, உனது கொடுமை பெரிதாயிருப்பதனால் உனக்கு இப்படி நடக்கும். அந்த நாள் வருகிறபோது, இஸ்ரயேலின் அரசன் முற்றிலும் அழிக்கப்படுவான்.

ஓசியா 10:3-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நாம் யெகோவாவுக்குப் பயப்படாமற்போனதினால் நமக்கு ராஜா இல்லை; ராஜா இருந்தாலும் நமக்காக என்ன செய்வான் என்று இனிச் சொல்லுவார்கள். பொய்யாகச் சத்தியம் செய்கிற வார்த்தைகளைச் சொல்லி, உடன்படிக்கை செய்துகொண்டார்கள்; ஆகையால் வயல்வெளியின் உழவுசால்களில் விஷச் செடிகளைப்போல நியாயத்தீர்ப்பு முளைக்கும். சமாரியாவின் குடிமக்கள் பெத்தாவேனிலுள்ள கன்றுக்குட்டியினிமித்தம் பயம் அடைவார்கள்; அதற்காகக் களிகூர்ந்த அதின் மக்களும், அதின் பூசாரிகளும் அதின் மகிமை அதைவிட்டு நீங்கிப்போயிற்றென்று அதற்காகத் துக்கம்கொண்டாடுவார்கள். அதுவும் அசீரியாவிலே யாரேப் ராஜாவிற்குக் காணிக்கையாகக் கொண்டுபோகப்படும்; எப்பிராயீம் அவமானமடைவான்; இஸ்ரவேல் தன் மர விக்கிரங்களினால்வெட்கப்படுவான். சமாரியாவின் ராஜா தண்ணீரின்மேல் இருக்கிற நுரையைப்போல் அழிந்துபோவான். இஸ்ரவேலுடைய பாவமாகிய ஆபேனின் மேடைகள் அழிக்கப்படும்; முட்செடிகளும் முட்பூண்டுகளும் அவர்கள் பலிபீடங்களின்மேல் முளைக்கும்; மலைகளைப்பார்த்து எங்களை மூடுங்கள் என்றும், குன்றுகளைப்பார்த்து எங்கள்மேல் விழுங்கள் என்றும் சொல்வார்கள். இஸ்ரவேலே, நீ கிபியாவின் நாட்களிலிருந்து பாவம்செய்துவந்தாய்; கிபியாவிலே அக்கிமக்காரர்கள்மேல் வந்த போர் தங்களைக் நெருங்குவதில்லையென்று அந்த நிலையிலே நிற்கிறார்கள். நான் அவர்களை தண்டிக்க விரும்புகிறேன்; அவர்கள் செய்த இரண்டுவித பாவங்களினாலே கட்டப்படும்போது, மக்கள் அவர்களுக்கு விரோதமாகக் கூடுவார்கள். எப்பிராயீம் நன்றாகப் பழக்கப்பட்டுப் போரடிக்க விரும்புகிற இளம்கன்றாக இருக்கிறான்; ஆனாலும் நான் அவனுடைய அழகான கழுத்தின்மேல் பாரத்தை வைப்பேன்; எப்பிராயீமை ஏர் பூட்டி ஓட்டுவேன்; யூதா உழுவான், யாக்கோபு அவனுக்கு வயலை சமப்படுத்துவான். நீங்கள் நீதிக்கென்று விதைவிதையுங்கள்; தயவுக்கு ஏற்றபடி அறுப்பு அறுங்கள்; உங்களுடைய தரிசுநிலத்தைப் பண்படுத்துங்கள்; யெகோவா வந்து உங்கள்மேல் நீதியைப் பொழியச்செய்யும்வரை, அவரைத் தேடக் காலமாயிருக்கிறது. அநியாயத்தை உழுதீர்கள், அநீதியை அறுத்தீர்கள்; பொய்யின் கனிகளைச் சாப்பிட்டீர்கள்; உங்கள் வழியையும் உங்கள் திறமைசாலிகளின் கூட்டத்தையும் நம்பினீர்கள். ஆகையால் உங்கள் மக்களுக்குள் குழப்பம் எழும்பும்; பிள்ளைகளின்மேல் தாய் மோதியடிக்கப்பட்ட யுத்தநாளிலே பெத்தார்பேலைச் சல்மான் அழித்ததுபோல, உங்கள் எல்லா பாதுகாப்புகளும் அழிக்கப்படும். உங்கள் கொடிய பொல்லாப்பினால் பெத்தேல் இப்படிப்பட்டதை உங்களுக்குச் செய்யும்; அதிகாலமே இஸ்ரவேலின் ராஜா முற்றிலும் அழிக்கப்படுவான்.

ஓசியா 10:3-15 பரிசுத்த பைபிள் (TAERV)

இப்போது இஸ்ரவேலர்கள் கூறுகிறார்கள்: “நமக்கு ராஜா இல்லை நாம் கர்த்தரை கௌரவிப்பதில்லை. அவருடைய ராஜா நம்மை ஒன்றும் செய்யமுடியாது!” அவர்கள் வாக்குறுதிகளைச் செய்கின்றனர். ஆனால் அவர்கள் பொய்களை மட்டுமே சொல்கின்றனர். அவர்கள் தமது வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில்லை. அவர்கள் மற்ற நாடுகளோடு உடன்படிக்கை செய்து கொள்கின்றார்கள். தேவன் அந்த உடன்படிக்கையை விரும்பவில்லை. நீதிபதிகள் உழுத வயல்களில் முளைத்திருக்கும் விஷத் தன்மையுள்ள களைகள் போன்று உள்ளார்கள். சமாரிய ஜனங்கள் பெத்தாவேனிலுள்ள கன்றுக் குட்டியை ஆராதிக்கிறார்கள். அந்த ஜனங்கள் உண்மையில் அழுவார்கள். அந்த ஆசாரியர்கள் உண்மையில் அழுவார்கள். ஏனென்றால் அவர்களது அழகான விக்கிரகம் போய்விட்டது. அது தூக்கிச் செல்லப்பட்டது. அசீரியாவின் பேரரசனுக்கு அன்பளிப்பாக அவ்விக்கிரகம் கொண்டுப்போகப்பட்டது. அவன் எப்பிராயீமின் அவமானகரமான விக்கிரகத்தை வைத்துக்கொள்வான். இஸ்ரவேல் அதன் விக்கிரகத்தினிமித்தம் அவமானம் அடையும். சமாரியாவின் அந்நிய தெய்வம் அழிக்கப்படும். இது நீர்ப்பரப்பின் மேலே மிதக்கும் மரத்துண்டைப் போன்று இருக்கும். இஸ்ரவேல் பாவம் செய்தது. பல உயர் மேடைகளைக் கட்டியது. ஆபேனின் மேடைகள் அழிக்கப்படும். அவர்கள் பலிபீடங்களில் முட்செடிகளும், களைகளும் வளரும். பிறகு அவர்கள் மலைகளிடம், “எங்களை மூடுங்கள்!” என்றும் குன்றுகளிடம் “எங்கள் மேல் விழுங்கள்” என்றும் கூறுவார்கள். இஸ்ரவேலே நீ கிபியாவின் காலத்திலிருந்து பாவம் செய்தாய். (அந்த ஜனங்கள் அங்கே தொடந்து பாவம் செய்துக்கெண்டிருக்கிறார்கள்.) கிபியாவில் அப்பொல்லாத ஜனங்களை யுத்தம் உண்மையாகவே கைப்பற்றும். நான் அவர்களைத் தண்டிக்க வருவேன். படைகள் அவர்களுக்கு எதிராகச் சேர்ந்துவரும். அவர்கள் இஸ்ரவேலர்களை அவர்களது இரண்டு பாவங்களுக்காகத் தண்டிப்பார்கள். எப்பிராயீம் நன்றாகப் பழக்கப்படுத்தப்பட்ட போரடிக்கும் களத்திலுள்ள தானியங்களின் மேல் நடக்க விரும்பும், இளம் காளையைப் போன்றவன். அவன் கழுத்தில் நான் ஒரு நல்ல நுகத்தடியை மாட்டுவேன். நான் எப்பிராயீமை கயிற்றால் கட்டுவேன். பிறகு யூதா உழவுசெய்யத் தொடங்குவான். யாக்கோபு தானாகவே பரம்படிப்பான். நீ நன்மையை நட்டால் உண்மையான அன்பை அறுவடை செய்வாய். உன் நிலத்தை உழு. கர்த்தரோடு நீ அறுவடை செய்வாய். அவர் வருவார். அவர் உன் மீது நன்மையை மழைப்போன்று பொழியச் செய்வார். ஆனால் நீ தீமையை நட்டாய். நீ துன்பத்தை அறுவடை செய்தாய். நீ உன் பொய்களின் கனியை உண்டாய். ஏனென்றால் நீ உன் அதிகாரத்தையும் உன் வீரர்களையும் நம்பியிருந்தாய். எனவே உனது படைகள் யுத்தத்தின் பேரொலியைக் கேட்கும். உனது எல்லா அரண்களும் அழிக்கப்படும். இது பெத்தார்பேலைச் சல்மான் அழித்ததுபோல் இருக்கும். அப்போர்க்காலத்தில் தாய்மார்கள் தம் குழந்தைகளோடு கொல்லப்பட்டார்கள். உனக்கு அது பெத்தேலில் ஏற்படும். ஏனென்றால் நீ ஏராளமான பாவங்களைச் செய்தாய். அந்த நாள் தொடங்கும்போது இஸ்ரவேலின் ராஜா முழுமையாக அழிக்கப்படுவான்.

ஓசியா 10:3-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நாம் கர்த்தருக்குப் பயப்படாமற் போனபடியினால் நமக்கு ராஜா இல்லை; ராஜா இருந்தாலும் நமக்காக என்ன செய்வான் என்று இனிச் சொல்லுவார்கள். பொய்யாணையிடுகிற வார்த்தைகளைச் சொல்லி, உடன்படிக்கைபண்ணிக்கொண்டார்கள்; ஆகையால் வயல்வெளியின் படைச்சால்களில் விஷப்பூண்டுகளைப்போல நியாயத்தீர்ப்பு முளைக்கும். சமாரியாவின் குடிகள் பெத்தாவேனிலுள்ள கன்றுக்குட்டியினிமித்தம் பயம் அடைவார்கள்; அதற்காகக் களிகூர்ந்த அதின் ஜனமும், அதின் பூசாசாரிகளும் அதின் மகிமை அதைவிட்டு நீங்கிப்போயிற்றென்று அதற்காகத் துக்கங்கொண்டாடுவார்கள். அதுவும் அசீரியாவிலே யாரேப் ராஜாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுபோகப்படும்; எப்பிராயீம் இலச்சையடைவான்; இஸ்ரவேல் தன் ஆலோசனையினாலே வெட்கப்படுவான். சமாரியாவின் ராஜா தண்ணீரின்மேல் இருக்கிற நுரையைப்போல் அழிந்துபோவான். இஸ்ரவேலுடைய பாவமாகிய ஆபேனின் மேடைகள் அழிக்கப்படும்; முட்செடிகளும் முட்பூண்டுகளும் அவர்கள் பலிபீடங்களின்மேல் முளைக்கும்; பர்வதங்களைப்பார்த்து எங்களை மூடுங்கள் என்றும், குன்றுகளைப்பார்த்து எங்கள்மேல் விழுங்கள் என்றும் சொல்லுவார்கள். இஸ்ரவேலே, நீ கிபியாவின் நாட்கள் முதல் பாவஞ்செய்துவந்தாய்; கிபியாவிலே அக்கிரமக்காரர்மேல் வந்த யுத்தம் தங்களைக் கிட்டுவதில்லையென்று அந்த நிலையிலே நிற்கிறார்கள். நான் அவர்களைத் தண்டிக்க விரும்புகிறேன்; அவர்கள் செய்த இரண்டுவித பாவங்களினிமித்தம் கட்டப்படும்போது, ஜனங்கள் அவர்களுக்கு விரோதமாய்க் கூடுவார்கள். எப்பிராயீம் நன்றாய்ப் பழக்கப்பட்டுப் போரடிக்க விரும்புகிற கடாரியாயிருக்கிறான்; ஆனாலும் நான் அவன் அழகான கழுத்தின்மேல் நுகத்தடியை வைப்பேன்; எப்பிராயீமை ஏர் பூட்டி ஓட்டுவேன்; யூதா உழுவான், யாக்கோபு அவனுக்குப் பரம்படிப்பான். நீங்கள் நீதிக்கென்று விதைவிதையுங்கள்; தயவுக்கொத்ததாய் அறுப்பு அறுங்கள்; உங்கள் தரிசுநிலத்தைப் பண்படுத்துங்கள்; கர்த்தர் வந்து உங்கள்மேல் நீதியை வருஷிக்கப்பண்ணுமட்டும், அவரைத் தேடக் காலமாயிருக்கிறது. அநியாயத்தை உழுதீர்கள், தீவினையை அறுத்தீர்கள்; பொய்யின் கனிகளைப் புசித்தீர்கள்; உங்கள் வழியையும் உங்கள் பராக்கிரமசாலிகளின் திரளையும் நம்பினீர்கள். ஆகையால் உங்கள் ஜனங்களுக்குள் அமளி எழும்பும்; பிள்ளைகளின்மேல் தாய் மோதியடிக்கப்பட்ட யுத்தநாளிலே பெத்தார்பேலைச் சல்மான் அழித்ததுபோல, உங்கள் எல்லா அரண்களும் அழிக்கப்படும். உங்கள் கொடிய பொல்லாப்பினால் பெத்தேல் இப்படிப்பட்டதை உங்களுக்குச் செய்யும்; அதிகாலமே இஸ்ரவேலின் ராஜா முற்றிலும் சங்கரிக்கப்படுவான்.