ஓசியா 1:1-7

ஓசியா 1:1-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

யூதாதேசத்து ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களிலும், யோவாசின் குமாரனாகிய யெஸ்ரயேலின் ராஜாவாகிய யெரொபெயாம் என்பவனின் நாட்களிலும், பெயேரியின் குமாரனாகிய ஓசியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம். கர்த்தர் ஓசியாவைக்கொண்டு உரைக்கத்தொடங்கினபோது, கர்த்தர் ஓசியாவை நோக்கி: நீ போய், ஒரு சோரஸ்திரீயையும் சோரப்பிள்ளைகளையும் உன்னிடமாகச் சேர்த்துக்கொள்; தேசம் கர்த்தரை விட்டு விலகிச் சோரம்போயிற்று என்றார். அவன் போய், திப்லாயிமின் குமாரத்தியாகிய கோமேரைச் சேர்த்துக்கொண்டான்; அவள் கர்ப்பந்தரித்து, அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: இவனுக்கு யெஸ்ரயேல் என்னும் பேரிடு; ஏனெனில் இன்னும் கொஞ்சகாலத்திலே நான் ஏகூவின் வம்சத்தாரிடத்திலே யெஸ்ரயேலின் இரத்தப்பழியை விசாரித்து, இஸ்ரவேல் வம்சத்தாரின் ராஜ்யபாரத்தை ஒழியப்பண்ணுவேன். அந்நாளில் யெஸ்ரயேலின் பள்ளத்தாக்கிலே இஸ்ரவேலின் வில்லை முறிப்பேன் என்றார். அவள் திரும்பக் கர்ப்பந்தரித்து, ஒரு குமாரத்தியைப் பெற்றாள்; அப்பொழுது அவர் அவனை நோக்கி: இவளுக்கு லோருகாமா என்னும் பேரிடு; ஏனெனில், நான் இனி இஸ்ரவேல் வம்சத்தாருக்கு இரக்கஞ்செய்வதில்லை, நான் அவர்களை முழுவதும் அகற்றிவிடுவேன். யூதாவின் வம்சத்தாருக்கோ நான் இரக்கஞ்செய்வேன்; வில்லினாலும், பட்டயத்தினாலும், யுத்தத்தினாலும், குதிரைகளினாலும், குதிரைவீரரினாலும் நான் அவர்களை இரட்சியாமல், அவர்களுடைய தேவனாகிய கர்த்தராலே அவர்களை இரட்சிப்பேன் என்றார்.

ஓசியா 1:1-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யூதாவில் உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா ஆகிய அரசர்கள் ஆட்சி செய்த காலங்களில், பெயேரியின் மகன் ஓசியாவிற்கு யெகோவாவின் வார்த்தை வந்தது. அக்காலத்தில் இஸ்ரயேலில் யோவாசின் மகன் யெரொபெயாம் அரசன் ஆட்சிசெய்தான். ஓசியாவின்மூலம் யெகோவா பேசத் தொடங்கியபோது, யெகோவா அவனிடம், “நீ போய் ஒரு வேசியை மனைவியாகக்கொண்டு, வேசிப் பிள்ளைகளையும் பெற்றுக்கொள். ஏனெனில் நாடு யெகோவாவுக்கு விரோதமாக, மிகக் கேவலமான விபசாரக் குற்றத்தைச் செய்திருக்கிறது என்றார்.” அவ்வாறே அவன் போய் திப்லாயிமின் மகள் கோமேர் என்பவளைத் திருமணம் செய்துகொண்டான். அவள் கர்ப்பந்தரித்து, அவனுக்கு ஒரு மகனைப் பெற்றாள். யெகோவா ஓசியாவிடம், “இவனுக்கு யெஸ்ரயேல் என்று பெயரிடு. ஏனெனில் நான் வெகு சீக்கிரமாய் யெஸ்ரயேலில் நடந்த படுகொலைக்காக, யெகூவின் குடும்பத்தைத் தண்டிப்பேன். இஸ்ரயேல் அரசுக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவேன். அந்த நாளில், யெஸ்ரயேல் பள்ளத்தாக்கில் இஸ்ரயேலின் வில்லை முறிப்பேன் என்றார்.” மீண்டும் கோமேர் கருவுற்று பெண் குழந்தையொன்றைப் பெற்றாள். அப்பொழுது இறைவன் ஓசியாவிடம், “இவளுக்கு, லோருகாமா எனப் பெயரிடு. ஏனெனில் நான் திரும்பவும் ஒருபோதும் இஸ்ரயேல் குடும்பத்தை மன்னிக்கும்படி அவர்களுக்கு அன்புகாட்டமாட்டேன். ஆனால் யூதா குடும்பத்திற்கு நான் அன்புகாட்டுவேன்; நான் அவர்களைக் காப்பாற்றுவேன். ஆயினும், வில்லினாலோ, வாளினாலோ, யுத்தத்தினாலோ, குதிரைகளினாலோ, குதிரைவீரர்களினாலோ அல்ல. அவர்களுடைய இறைவனாகிய யெகோவாவினாலேயே அவர்களைக் காப்பாற்றுவேன் என்றார்.”

ஓசியா 1:1-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யூதா தேசத்து ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களிலும், யோவாசின் மகனாகிய யெஸ்ரயேலின் ராஜாவாகிய யெரொபெயாம் என்பவனின் நாட்களிலும், பெயேரியின் மகனாகிய ஓசியாவிற்கு கிடைத்த யெகோவாவுடைய வசனம். யெகோவா ஓசியாவைக்கொண்டு சொல்லத் தொடங்கினபோது, யெகோவா ஓசியாவை நோக்கி: நீ போய், ஒரு விபச்சாரியையும் அவளுடைய பிள்ளைகளையும் உன்னிடமாகச் சேர்த்துக்கொள்; தேசம் யெகோவாவைவிட்டு விலகி கெட்டுப்போனது என்றார். அவன் போய், திப்லாயிமின் மகளாகிய கோமேரைச் சேர்த்துக்கொண்டான்; அவள் கர்ப்பமடைந்து, அவனுக்கு ஒரு மகனைப் பெற்றாள். அப்பொழுது யெகோவா அவனை நோக்கி: இவனுக்கு யெஸ்ரயேல் என்னும் பெயரிடு; ஏனெனில் இன்னும் கொஞ்சகாலத்திலே நான் யெகூவின் வம்சத்தாரிடத்திலே யெஸ்ரயேலின் இரத்தப்பழியை விசாரித்து, இஸ்ரவேல் வம்சத்தாரின் ஆட்சியை முடிவிற்குக் கொண்டுவருவேன். அந்நாளில் யெஸ்ரயேலின் பள்ளத்தாக்கிலே இஸ்ரவேலின் வில்லை முறிப்பேன் என்றார். அவள் மறுபடியும் கர்ப்பமடைந்து, ஒரு மகளைப் பெற்றாள்; அப்பொழுது அவர் அவனை நோக்கி: இவளுக்கு லோருகாமா என்னும் பெயரிடு; ஏனெனில், நான் இனி இஸ்ரவேல் வம்சத்தாருக்கு இரக்கம் செய்வதில்லை, நான் அவர்களை முழுவதும் அகற்றிவிடுவேன். யூதாவின் வம்சத்தாருக்கோ நான் இரக்கம் செய்வேன்; வில்லினாலும், பட்டயத்தினாலும், போரினாலும், குதிரைகளினாலும், குதிரைவீரர்களினாலும் நான் அவர்களை காப்பாற்றாமல், அவர்களுடைய தேவனாகிய கர்த்தராலே அவர்களை காப்பாற்றுவேன் என்றார்.

ஓசியா 1:1-7 பரிசுத்த பைபிள் (TAERV)

பெயேரியின் குமாரனாகிய ஓசியாவுக்கு வந்த கர்த்தருடைய செய்தி இதுதான். இந்த வார்த்தை யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா ஆகியோர் இருந்தபோது வந்தது. இது, இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசின் குமாரனான யெரொபெயாம் என்பவனின் காலத்தில் நடந்தது. இது கர்த்தருடைய முதல் செய்தியாக ஓசியாவிற்கு வந்தது. கர்த்தர், “நீ போய் தன் வேசித்தனத்தினால் குழந்தைகளைப் பெற்றெடுத்த ஒரு வேசியை மணந்துகொள். ஏனென்றால் இந்த நாட்டிலுள்ள ஜனங்கள் எல்லோரும் வேசியைப் போன்று நடந்துக்கொள்கிறார்கள். அவர்கள் கர்த்தருக்கு விசுவாசமற்றவர்ளாக இருந்திருக்கிறார்கள்” என்றார். எனவே ஓசியா திப்லாயிமின் குமாரத்தியான கோமேரைத் திருமணம் செய்தான். கோமேர் கர்ப்பமடைந்து ஓசியாவிற்கு ஒரு ஆண்மகனைப் பெற்றாள். கர்த்தர் ஓசியாவிடம் “அவனுக்கு யெஸ்ரயேல். என்று பெயரிடு. ஏனென்றால் இன்னும் கொஞ்சக்காலததில் நான் ஏகூவின் வம்சத்தாரை அவன் யெஸ்ரயேல் பள்ளத்தாக்கில் சிந்திய இரத்தத்திற்காகத் தண்டிப்பேன். பிறகு இஸ்ரவேலின் இராஜ்யத்தை முடிவுக்குக் கொண்டுவருவேன். அந்த நேரத்தில் நான் இஸ்ரவேலின் வில்லை யெஸ்ரயேலின் பள்ளத்தாக்கிலே முறிப்பேன்” என்றார். பின்னர் கோமேர் மீண்டும் கர்ப்பமடைந்து ஒரு பெண்குழந்தையைப் பெற்றாள். கர்த்தர் ஓசியாவிடம், “அவளுக்கு லோருகாமா என்று பெயரிடு. ஏனென்றால் நான் இனி இஸ்ரவேல் வம்சத்தாருக்கு இரக்கம் காட்டமாட்டேன். நான் அவர்களை மன்னிக்கமாட்டேன். ஆனால் நான் யூதா நாட்டின் மீது இரக்கம் காட்டுவேன். நான் யூதா நாட்டைக் காப்பாற்றுவேன். நான் அவர்களைக் காப்பாற்ற எனது வில்லையோ வாளையோ பயன்படுத்தமாட்டேன். நான் அவர்களைக் காப்பாற்ற போர் குதிரைகளையோ, வீரர்களையோ பயன்படுத்தமாட்டேன். நான் அவர்களை எனது சொந்த பலத்தால் காப்பாற்றுவேன்” என்றார்.