எபிரெயர் 9:1-14

எபிரெயர் 9:1-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அன்றியும், முதலாம் உடன்படிக்கையானது ஆராதனைக்கேற்ற முறைமைகளும் பூமிக்குரிய பரிசுத்த ஸ்தலமும் உடையதாயிருந்தது. எப்படியெனில், ஒரு கூடாரம் உண்டாக்கப்பட்டிருந்தது; அதின் முந்தின பாகத்தில் குத்துவிளக்கும், மேஜையும், தேவசமுகத்தப்பங்களும் இருந்தன; அது பரிசுத்த ஸ்தலமென்னப்படும். இரண்டாந்திரைக்குள்ளே மகா பரிசுத்த ஸ்தலமென்னப்பட்ட கூடாரம் இருந்தது. அதிலே பொன்னாற்செய்த தூபகலசமும், முழுவதும் பொற்றகடு பொதிந்திருக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியும் இருந்தன; அந்தப் பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரமும், ஆரோனுடைய தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன. அதற்கு மேலே மகிமையுள்ள கேருபீன்கள் வைக்கப்பட்டுக் கிருபாசனத்தை நிழலிட்டிருந்தன; இவைகளைக்குறித்து விவரமாய்ப்பேச இப்பொழுது சமயமில்லை. இவைகள் இவ்விதமாய் ஆயத்தமாக்கப்பட்டிருக்க, ஆசாரியர்கள் ஆராதனை முறைமைகளை நிறைவேற்றும்படிக்கு முதலாங்கூடாரத்திலே நித்தமும் பிரவேசிப்பார்கள். இரண்டாங்கூடாரத்திலே பிரதான ஆசாரியன்மாத்திரம் வருஷத்திற்கு ஒரு தரம் இரத்தத்தோடே பிரவேசித்து, அந்த இரத்தத்தைத் தனக்காகவும் ஜனங்களுடைய தப்பிதங்களுக்காகவும் செலுத்துவான். அதினாலே, முதலாங்கூடாரம் நிற்குமளவும் பரிசுத்த ஸ்தலத்திற்குப்போகிற மார்க்கம் இன்னும் வெளிப்படவில்லையென்று பரிசுத்த ஆவியானவர் தெரியப்படுத்தியிருக்கிறார். அந்தக் கூடாரம் இக்காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாயிருக்கிறது; அதற்கேற்றபடியே செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப்படுத்தக்கூடாதவைகளாம். இவைகள் சீர்திருத்தல் உண்டாகும் காலம்வரைக்கும் நடந்தேறும்படி கட்டளையிடப்பட்ட போஜனபானங்களும், பலவித ஸ்நானங்களும், சரீரத்திற்கேற்ற சடங்குகளுமேயல்லாமல் வேறல்ல. கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமுமான கூடாரத்தின் வழியாகவும், வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீரசுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால், நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!

எபிரெயர் 9:1-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

முதலாம் உடன்படிக்கைக்கென வழிபாட்டு முறைமைகளும் இவ்வுலகிற்குரிய ஒரு பரிசுத்த இடமும் இருந்தன. அதற்குள் ஒரு கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் முன்பகுதி பரிசுத்த இடம் என்று அழைக்கப்பட்டது. அதினுள்ளேயே குத்துவிளக்கும், மேஜையும், அதன்மீது படைக்கப்பட்ட அப்பங்களும் இருந்தன. அந்த இரண்டாவது திரைக்குப் பின்னால் மகா பரிசுத்த இடம் என்று அழைக்கப்பட்ட ஒரு இடம் இருந்தது. அங்கே தங்கத்தால் செய்யப்பட்ட தூபபீடமும், தங்கத்தால் மூடப்பட்ட உடன்படிக்கைப் பெட்டகமும் இருந்தன; இந்தப் பெட்டகத்தினுள்ளே, மன்னா உணவு வைக்கப்பட்ட தங்கச் சாடியும், ஆரோனின் தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் வைக்கப்பட்டிருந்தன. அந்த பெட்டகத்தின் மேலாக மகிமையின் கேரூபீன்கள் கிருபாசனத்தை நிழலிட்டுக் கொண்டிருந்தன. ஆனால் இவை எல்லாவற்றையும், விரிவாய் சொல்ல இப்பொழுது இயலாது. இவ்விதமாக அங்குள்ள பொருட்கள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தபோது, ஆசாரியர்கள் தங்களுடைய ஊழியத்தை செய்வதற்காக, அந்த வெளியறைக்குள் வழக்கமாக நுழைவார்கள். ஆனால் பிரதான ஆசாரியன் மட்டுமே, அதுவும் வருடத்திற்கு ஒருமுறை மட்டும், இரத்தமில்லாமல் அல்ல; இரத்தத்துடனேயே மகா பரிசுத்த இடமான உள்ளறைக்குள் சென்று தனக்காகவும், மக்கள் அறியாமல் செய்த பாவங்களுக்காகவும் பலியைச் செலுத்துவான். முதலாவது இறைசமுகக் கூடாரம் இருக்கும்வரைக்கும், மகா பரிசுத்த இடத்திற்கான வழி இன்னும் திறக்கப்படவில்லை என்பதை பரிசுத்த ஆவியானவர் இதன்மூலம் காண்பிக்கிறார். இந்தக் கூடாரம் தற்காலத்தைக் குறிப்பிட்டுக் காண்பிக்கின்ற ஒரு மாதிரியே. செலுத்தப்பட்ட காணிக்கைகளும் பலிகளும் வழிபடுகிறவர்களின் மனசாட்சியை தூய்மையடையச் செய்ய இயலாதவை என்பதையே இவை தெளிவுபடுத்துகின்றன. இவை உண்பது பற்றியும், குடிப்பது பற்றியும், பல்வேறுபட்ட பாரம்பரிய சுத்திகரிப்புகள் பற்றியும் கொடுக்கப்பட்ட வெளியான சடங்கு விதிமுறைகளே. புதிய முறை ஏற்படுத்தப்படும் காலம்வரைக்குமே இவை செல்லுபடியானதாய் இருந்தன. நமக்கு வரவிருக்கிற நன்மைகளைக் கொடுக்கிற பிரதான ஆசாரியராய் கிறிஸ்து வந்தபோது, அவர் மேலானதும், நிறைவானதும், மனிதனால் செய்யப்படாததும், அதாவது இவ்வுலகப் படைப்பின் ஒரு பகுதியாக இல்லாத இறைசமுகக் கூடாரத்தின் வழியாகவே சென்றார். அவர் மகா பரிசுத்த இடத்திற்குள் வெள்ளாடுகள், இளங்காளைகள் ஆகியவற்றின் இரத்தத்தோடு செல்லாமல், தமது இரத்தத்துடனேயே ஒரேதரமாக அதற்குள் சென்று, நித்திய மீட்பை நமக்காகப் பெற்றுக்கொடுத்தார். வெள்ளாடுகள், இளங்காளைகள் ஆகியவற்றின் இரத்தம் சடங்கு முறைப்படி அசுத்தமாயிருந்தவர்கள்மேல் தெளிக்கப்பட்டது. எரிக்கப்பட்ட கிடாரி பசுவின் சாம்பலும் அவர்கள்மேல் தூவப்பட்டது. இது அவர்களை வெளி அசுத்தத்திலிருந்து சுத்திகரித்தது. அப்படியானால், தம்மைத்தாமே நித்திய ஆவியானவர் மூலமாக, இறைவனுக்கு மாசற்றவராய் ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவின் இரத்தம் எவ்வளவு அதிகமாக நம்முடைய மனசாட்சிகளை மரண செயல்களிலிருந்து தூய்மைப்படுத்தி, நம்மை ஜீவனுள்ள இறைவனுக்கு ஊழியம் செய்யக்கூடியவர்களாக்கும்.

எபிரெயர் 9:1-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அன்றியும், முதலாம் உடன்படிக்கையானது ஆராதனைக்குரிய முறைமைகளும் பூமிக்குரிய பரிசுத்த இடமும் உடையதாக இருந்தது. எப்படியென்றால், ஒரு கூடாரம் உண்டாக்கப்பட்டிருந்தது; அதின் முந்தின பாகத்தில் குத்துவிளக்கும், மேஜையும், தேவ சமுகத்து அப்பங்களும் இருந்தன; அது பரிசுத்த இடம் எனப்படும். இரண்டாம் திரைக்கு உள்ளே மகா பரிசுத்த இடம் என்று சொல்லப்பட்ட கூடாரம் இருந்தது. அதிலே தங்கத்தால் செய்த தூபகலசமும், முழுவதும் தங்கத்தகடு பதிக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியும் இருந்தன; அந்தப் பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட தங்கப்பாத்திரமும், ஆரோனுடைய துளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன. அதற்கு மேலே மகிமையுள்ள கேருபீன்கள் வைக்கப்பட்டுக் கிருபாசனத்தை நிழலிட்டிருந்தன; இவைகளைப்பற்றி விளக்கிச்சொல்ல இப்பொழுது நேரமில்லை. இவைகள் இவ்விதமாக ஆயத்தமாக்கப்பட்டிருக்க, ஆசாரியர்கள் ஆராதனை முறைமைகளை நிறைவேற்ற முதலாம் கூடாரத்திற்குள் எப்பொழுதும் பிரவேசிப்பார்கள். இரண்டாம் கூடாரத்திற்குள் பிரதான ஆசாரியன்மட்டும் வருடத்திற்கு ஒருமுறை இரத்தத்தை எடுத்துக்கொண்டு உள்ளே பிரவேசித்து, அந்த இரத்தத்தைத் தனக்காகவும் மக்களுடைய தவறுகளுக்காகவும் செலுத்துவான். அதினாலே, முதலாம் கூடாரம் நிற்கும்வரைக்கும் மகா பரிசுத்த இடத்திற்குப் போகிற வழி இன்னும் வெளிப்படவில்லை என்று பரிசுத்த ஆவியானவர் தெரியப்படுத்தியிருக்கிறார். அந்தக் கூடாரம் இந்தக் காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாக இருக்கிறது; அதற்கேற்றபடி செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப்படுத்தமுடியாதவைகள். உண்பதும், குடிப்பது, பலவிதமான குளியல்களும், சரீரத்திற்குரிய சடங்குகளேதவிர வேறோன்றும் இல்லை. இவைகள் சீர்திருத்தல் உண்டாகும் காலம்வரைக்கும் செய்வதற்கு கட்டளையிடப்பட்டது. கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராக வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தப் படைப்பு சம்பந்தமான கூடாரத்தின்வழியாக அல்ல, பெரிதும் உத்தமுமான கூடாரத்தின்வழியாகவும், வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேமுறை மகா பரிசுத்த இடத்திற்குள் நுழைந்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். அது எப்படியென்றால், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீரசுத்தம் உண்டாகப் பரிசுத்தப்படுத்துமென்றால், நித்திய ஆவியானவராலே தம்மைத்தாமே பழுதில்லாத பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு உங்களுடைய மனச்சாட்சியைச் செத்த செயல்கள் இல்லாமல் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!

எபிரெயர் 9:1-14 பரிசுத்த பைபிள் (TAERV)

முதலாம் உடன்படிக்கையானது வழிபாட்டிற்கான விதிகளை உடையது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட வழிபாட்டிற்கான இடத்தை உடையது. இந்த இடம் ஒரு கூடாரத்துக்கு உள்ளே இருந்தது. கூடாரத்திற்குள் முன் பகுதி உள்ள இடம் பரிசுத்தமான இடம் என அழைக்கப்பட்டது. அந்தப் பரிசுத்தமான இடத்தில் ஒரு குத்துவிளக்கும், ஒரு மேஜையும், தேவனுக்குப் படைக்கப்பட்ட சிறப்பான அப்பங்களும் இருந்தன. இரண்டாம் திரைக்குப் பின்னே மிகப் பரிசுத்தமானது என அழைக்கப்படும் இடம் இருந்தது. அதில் பொன்னால் செய்த தூபகலசமும் பழைய உடன்படிக்கை வைக்கப்பட்ட பரிசுத்தமான பெட்டியும் இருந்தன. அப்பெட்டி தங்கத் தகட்டால் மூடி வைக்கப்பட்டிருந்தது. அப்பெட்டிக்குள் மன்னா வைக்கப்பட்டிருந்த தங்கப் பாத்திரமும் துளிர்த்த இலைகளையுடைய ஆரோனின் கைத்தடியும் இருந்தன. மேலும் பத்துக் கட்டளைகள் பொறித்த உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன. அப்பெட்டியின் மேல் கிருபையாகிய இருக்கையை மறைத்தபடி தேவனுடைய விசேஷ தூதர்கள் இருந்தார்கள். (இப்பொழுது இவற்றைப் பற்றிய உண்மையான விபரங்களைச் சொல்லக் காலம் போதாது.) இவ்விதத்தில் எல்லாப் பொருள்களும் ஆயத்தப்படுத்தப்பட்ட பிறகு, ஆராதனை சேவையை செய்யும் பொருட்டு ஆசாரியர்கள் முதலாம் பரிசுத்தக் கூடாரத்தில் நித்தமும் செல்லத் தொடங்குவார்கள். ஆனால் பிரதான ஆசாரியர் மட்டுமே மிகப் பரிசுத்தமான இரண்டாம் அறைக்குள் பலியின் இரத்தத்தைச் சிந்தி நுழைய முடியும். அவர் முதலில் தான் செய்த பாவங்களுக்காகக் காணிக்கை செலுத்த வேண்டும். அதற்குப் பிறகு தவறு செய்துகொண்டிருக்கிறோம் என்று தெரியாமலேயே அறியாமையால் மக்கள் செய்த பாவங்களுக்காக அவர் காணிக்கைகளை வழங்கவேண்டும். முதலாம் கூடாரம் நிற்கும் வரையிலும் மிகப் பரிசுத்தமான இடத்திற்குப் போகும் வழியானது மூடப்பட்டிருக்கிறது என்பதைப் புலப்படுத்தவே பரிசுத்த ஆவியானவர் இவ்விரண்டு அறைகளையும் பயன்படுத்துகிறார். எல்லாமே நிகழ் காலத்தின் ஒரு அடையாளமானது. தாம் செலுத்தும் காணிக்கையாலும், பலிகளாலும் வழிபடுகிறவனின் மனசாட்சியானது முழுமைப்படுத்தப்படுவதில்லை. ஏனெனில் உண்ணுதல், பருகுதல், சடங்குக் குளியல்கள் ஆகிய புற விஷயங்களைப் பற்றிய காணிக்கைகளும் பலிகளுமாகவே இருக்கின்றன. இவ்விஷயங்கள் தேவனுடைய புதிய வழி உண்டாகும் வரைக்கும் பயன்படுகின்றன. மேலும் இப்போது வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியனாகக் கிறிஸ்து வந்திருக்கிறார். (சாதாரண கூடாரத்தின் வழியே அவர் வரவில்லை). மனிதக் கைகளால் உருவாக்கப்படாத உயர்ந்ததும், பரிசுத்தமானதுமான கூடாரத்தின் வழியே வந்தார். அக்கூடாரமானது தேவன் உருவாக்கிய இவ்வுலகத்தின் பகுதியல்ல. மேலும் மிகப் பரிசுத்தமான கூடாரத்திற்குள் இயேசு நுழைந்தபோது, வெள்ளாட்டுக்கடாக்கள் மற்றும் காளைகளின் இரத்தத்தை அவர் பயன்படுத்தவில்லை. மிகப் பரிசுத்தமான கூடாரத்திற்குள் நுழைய அவர் தன் சொந்த இரத்தத்தையே பயன்படுத்தினார். எல்லா காலத்திற்கும் போதுமென்கிற அளவிற்கு ஒரே ஒருமுறை தான் அவர் அதற்குள் சென்றார். இவ்வழியில் நமக்கு அவர் நித்திய விடுதலையைப் பெற்றுத்தந்தார். வெள்ளாட்டுக்கடா காளை ஆகியவற்றின் இரத்தமும் தீட்டுப்பட்ட மக்கள் மீது தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும் அவர்களைப் பரிசுத்தமாக்கிப் புறப்பரிசுத்தம் உடையவர்களாக்க முடியும். இது உண்மை எனில், கிறிஸ்துவின் இரத்தம் இதிலும் மிக்க வல்லமை உள்ளது என்பதை எண்ணிப் பாருங்கள். பரிசுத்த ஆவியானவர் மூலமாக தேவனுக்கு இயேசு தன்னைத் தானே ஒரு முழுமையான பலியாக வழங்கினார். ஆகவே நமக்கு ஆன்மீக மரணத்தைக் கொண்டுவருகிற தீய செயல்களில் இருந்து அவர் இரத்தமானது நம் இதயத்தை சுத்தமாக்கும். ஜீவனுள்ள தேவனை வழிபடும் வண்ணம் நாம் சுத்தமாக்கப்படுகிறோம்.