எபிரெயர் 6:16-20

எபிரெயர் 6:16-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மனிதர்கள் தங்களைப்பார்க்கிலும், பெரியவர் ஒருவரின் பெயரைக்கொண்டே ஆணையிடுவது வழக்கம். பேசப்பட்ட எல்லாவற்றையும் உறுதிசெய்து, எல்லா வாக்குவாதங்களுக்கும் முடிவைக் கொண்டுவருவது இந்த ஆணையே. இறைவன் தம்முடைய வாக்குத்தத்தத்தை உரிமையாகப் பெற்றுக்கொள்ளப் போகிறவர்களுக்கு, தமது நோக்கத்தின் மாறாத தன்மையை வெகுதெளிவாய்க் காண்பிக்க விரும்பினார். இதனாலேயே அவர் இதை ஒரு ஆணையினாலேயும் உறுதிப்படுத்தினார். எனவே இறைவன் இரண்டு மாறாத காரியங்களான வாக்குத்தத்தத்தினாலும், ஆணையினாலும் இப்படிச் செய்தார். அவற்றைக்குறித்து, இறைவன் பொய் சொல்லுவார் என்பதோ முடியாத காரியம். எனவே நமக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த எதிர்பார்ப்பை பற்றிக்கொள்ள எல்லாவற்றையும் விட்டு ஓடிவந்த நாம், வெகுவாய் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தார். இந்த எதிர்பார்ப்பு நம்முடைய ஆத்துமாவுக்கு ஆலயத்தின் திரைச்சீலைகளுக்குப் பின்னால் உள்ள மகா பரிசுத்த இடம்வரைக்கும் உள்ளே செல்லுகிற ஒரு நங்கூரம்போல் உறுதியும் பாதுகாப்பானதுமாயும் இருக்கிறது. அங்கு நமக்கு முன்பாக கடந்துபோயிருக்கிற இயேசுவும் நமது சார்பாக அதற்குள் சென்றிருக்கிறார். அவர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் பிரதான ஆசாரியராயிருக்கிறார்.

எபிரெயர் 6:16-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மனிதர்கள் தங்களைவிட பெரியவர்கள் பெயரில் ஆணையிடுவார்கள்; எல்லா விவாதங்களிலும் உறுதிப்படுத்துவதற்கு ஆணையிடுதலே முடிவு. அப்படியே, தேவனும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களுக்குத் தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப் பரிபூரணமாகக் காண்பிக்க விருப்பம் உள்ளவராக, ஒரு ஆணையினாலே அதை உறுதிப்படுத்தினார். நமக்கு முன்பாக வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்வதற்கு அடைக்கலமாக ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதல் உண்டாவதற்கு, கொஞ்சம்கூட பொய் சொல்லாத தேவன் அப்படிச் செய்தார். அந்த நம்பிக்கை நமக்கு நிலையானதும், ஆத்துமாக்களுக்கு உறுதியான நங்கூரமாகவும், திரைக்குப் பின்னே மகா பரிசுத்த இடத்திற்குள் பிரவேசிக்கிறதாகவும் இருக்கிறது. நமக்கு முன்னோடியானவராகிய இயேசுகிறிஸ்து, மெல்கிசேதேக்கின் முறைமையில் நித்திய பிரதான ஆசாரியராக நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார்.

எபிரெயர் 6:16-20 பரிசுத்த பைபிள் (TAERV)

மக்கள் தங்களைவிடப் பெரியவர்கள் பேரில் ஆணையிடுவார்கள். அவர்கள் சொல்வது உண்மை என்பதை இந்த ஆணை நிரூபித்து, மேலும் விவாதத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறது. தேவன் தன் வாக்குறுதியை உண்மையென்று நிரூபிக்க விரும்பினார். தன் ஆணையால் அதனை உறுதிப்படுத்தினார். தனது நோக்கம் மாறாதது என்று காண்பிக்க தேவன் விரும்பினார். அதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினார். அந்த இரண்டும் எப்பொழுதும் மாறாதவை. தேவன் பொய் சொல்லமாட்டார். ஆணையிட்ட பிறகு அது பொய்க்காது. அது நமக்கு ஆறுதலாய் இருக்கும். நமது நம்பிக்கையைப் பலப்படுத்தும். நமக்கு இந்த நம்பிக்கை இருக்கிறது. இது நங்கூரம் போன்றது. அது உறுதியும் வலிமையும் உடையது. அது நமது ஆன்மாவைக் காப்பாற்றும். மிகவும் பரிசுத்தமான இடங்களுக்கு அது போகிறது. பரலோகத்து ஆலயத்தின் திரைக்குப் பின்னாலும் போகிறது. இயேசு ஏற்கெனவே அங்கே நுழைந்திருக்கிறார். நமக்காக அங்கே வழியைத் திறந்திருக்கிறார். இயேசு பிரதான ஆசாரியராகி மெல்கிசேதேக்கைப்போல் நிலைத்திருக்கிறார்.

எபிரெயர் 6:16-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மனுஷர் தங்களிலும் பெரியவர்பேரில் ஆணையிடுவார்கள்; உறுதிபண்ணும்படிக்கு ஆணையிடுதலே சகல விவாதத்திற்கும் முடிவு. அந்தப்படி, தேவனும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களுக்குத் தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப் பரிபூரணமாய்க் காண்பிக்கும்படி சித்தமுள்ளவராய், ஓர் ஆணையினாலே அதை ஸ்திரப்படுத்தினார். நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப்பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார். அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப்போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது. நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார்.