எபிரெயர் 6:1-6

எபிரெயர் 6:1-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆகவே, நாம் கிறிஸ்துவைப்பற்றிய ஆரம்ப போதனைகளைவிட்டு, இவைகளை அஸ்திபாரமாக மறுபடியும் போடாமல், முதிர்ச்சியடையும்படி செத்தச் செயல்களிலிருந்து மனந்திரும்புதல், இறைவன்மேல் வைக்கும் விசுவாசம், திருமுழுக்கைப் பற்றிய உபதேசம், கைகளை வைத்தல், இறந்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவற்றின் ஆரம்ப பாடங்களை விட்டு பூரணத்திற்கு முன்னேறிச் செல்வோம். இறைவன் அனுமதிப்பாராயின், நாம் இப்படியே செய்வோம். ஏனெனில் ஒருகாலத்தில் ஒளியைப் பெற்றவர்களாயும், பரலோகத்தின் கொடைகளை ருசிபார்த்தவர்களாயும், பரிசுத்த ஆவியானவரில் பங்குபெற்றவர்களாயும், இறைவனுடைய வார்த்தையின் நன்மையையும், வரப்போகும் யுகத்தின் வல்லமைகளையும் ருசிபார்த்தவர்கள், வழிவிலகிப் போவார்களானால், அவர்களை மறுபடியும் மனந்திரும்புதலுக்குள் வழிநடத்துவது இயலாத காரியமே. அவர்கள் இறைவனின் மகனைத் திரும்பவுமாய் சிலுவையில் அறைந்து, அவருக்கு பகிரங்க அவமானத்தை ஏற்படுத்துகிறார்கள்.

எபிரெயர் 6:1-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆகவே, கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய அடிப்படை உபதேசவசனங்களை நாம்விட்டுவிட்டு, செத்த செய்கைகளைவிட்டு மனம்திரும்புதல், தேவன்மேல் வைக்கும் விசுவாசம், ஞானஸ்நான உபதேசம், கரங்களை வைத்தல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்ற உபதேசங்களாகிய அஸ்திபாரத்தை மீண்டும் போடாமல், தேறினவர்களாகும்படி கடந்துபோவோம். தேவனுக்கு விருப்பமானால் இப்படியே செய்வோம். ஏனென்றால், ஒருமுறை பிரகாசிக்கப்பட்டும், பரலோக பரிசை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியானவரைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மீண்டும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறதினால், மனந்திரும்புவதற்காக அவர்களை மீண்டும் புதுப்பிக்கிறது முடியாதகாரியம்.

எபிரெயர் 6:1-6 பரிசுத்த பைபிள் (TAERV)

ஆகையால் நாம் கிறிஸ்துவைப் பற்றிய அடிப்படைப் போதனைகளிலிருந்து முன்னேறிச்சென்று பூரணமடைய வேண்டும். செத்த செயல்களிலிருந்து விலகுதல் பற்றியும், தேவனில் விசுவாசம் வைப்பது பற்றியும் உள்ள அடிப்படை போதனைகளையே மீண்டும், மீண்டும் நாம் போதிக்க வேண்டாம். ஞானஸ்நானம் பற்றியும், கைகளைத் தலை மேல் வைப்பதுபற்றியும், மரணத்திலிருந்து உயிர்த்தெழுதல் பற்றியும், என்றென்றைக்குமான நியாயத்தீர்ப்பு பற்றியும் ஏற்கெனவே நமக்கு கற்பிக்கப்பட்டுள்ளது. இப்போது, இதற்கு மேலும் தெரிந்துகொள்ளும் ஆர்வம்கொண்டவர்களாக நாம் முன்னேற வேண்டும். தேவன் விரும்பினால் நாம் இதைச் செய்வோம். கிறிஸ்துவின் வழியிலிருந்து விலகிய மக்களை மீண்டும் அவ்வாழ்க்கைக்குக் கொண்டுவர முடியுமா? உண்மையைக் கற்றுக்கொண்டவர்களைப் பற்றி நான் பேசுகிறேன். அவர்கள் தேவனுடைய நன்மைகளைப் பெற்றுக்கொண்டனர். பரிசுத்த ஆவியானவரில் பங்குபெற்று தேவனுடைய செய்தியையும் வர இருக்கிற காலத்தின் வல்லமையையும் அவர்கள் ருசித்திருக்கிறார்கள். மேலும் அவை மிக நல்லவை என அவர்கள் தமக்குத்தாமே கண்டுகொண்டனர். ஆனால் பிறகு அவர்கள் கிறிஸ்துவின் வழியை விட்டு விலகினார்கள். மீண்டும் அவர்கள் கிறிஸ்துவுக்குள் வருவது கடினம். ஏனென்றால் அவர்கள் கிறிஸ்துவை மீண்டும் ஒருமுறை சிலுவையில் அறைந்து விட்டனர். அவர்கள் கிறிஸ்துவுக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டனர்.

எபிரெயர் 6:1-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேசவசனங்களை நாம்விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்து போவோமாக. தேவனுக்குச் சித்தமானால் இப்படியே செய்வோம். ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.