எபிரெயர் 5:11-14
எபிரெயர் 5:11-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இந்த மெல்கிசேதேக்கைப்பற்றி நாம் விஸ்தாரமாய்ப் பேசலாம்; நீங்கள் கேள்வியில் மந்தமுள்ளவர்களானபடியால், அதை விளங்கப்பண்ணுகிறது அரிதாயிருக்கும். காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்கு தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள். பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான். பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்.
எபிரெயர் 5:11-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இதைக்குறித்து சொல்ல நமக்கு அதிகம் உண்டு. ஆனால் நீங்கள் கற்றுக்கொள்வதில் மந்தமாய் இருப்பதனால், இதை விளங்கப்படுத்துவது கடினமாயிருக்கிறது. உண்மையிலேயே இக்காலத்திற்குள் நீங்கள் வேத ஆசிரியர்களாய் இருந்திருக்க வேண்டும். ஆனால் இறைவனுடைய வார்த்தைகளின் ஆரம்ப பாடங்களையே மீண்டும் ஒருவர் உங்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய நிலையிலேயே நீங்கள் இருக்கிறீர்கள். உங்களுக்குத் தேவையானது பால்தான், திடமான உணவு அல்ல. பாலைக் குடிக்கிறவன் இன்னும் குழந்தையாகவே இருக்கிறான். இதனால் அவன் நீதியைப் பற்றின படிப்பினையில் தேர்ச்சி பெறாதவனாய் இருக்கிறான். முதிர்ச்சியடைந்தவர்களுக்கே திடமான உணவு தகுதியானது. அவர்களே தொடர்ச்சியான பயிற்சியினால், தீமையிலிருந்து நன்மையை வித்தியாசம் காணக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.
எபிரெயர் 5:11-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இந்த மெல்கிசேதேக்கைப்பற்றி நாம் அதிகமாகப் பேசலாம்; நீங்கள் கேட்பதில் மந்தமாக இருப்பதினால், அதை உங்களுக்கு விளக்கிச் சொல்லுகிறது எனக்குக் கடினமாக இருக்கும். காலத்தைப் பார்த்தால், போதகர்களாக இருக்கவேண்டிய உங்களுக்கு தேவனுடைய வார்த்தைகளின் அடிப்படை உபதேசங்களை மீண்டும் உபதேசிக்கவேண்டியதாக இருக்கிறது; நீங்கள் திடமான உணவைச் சாப்பிடுகிறவர்களாக இல்லை, பாலைக் குடிக்கிறவர்களானீர்கள். பாலைக் குடிக்கிறவன் குழந்தையாக இருக்கிறதினாலே நீதியின் வசனத்தில் அனுபவம் இல்லாதவனாக இருக்கிறான். திடமான உணவானது, நன்மை எது? தீமை எது? என்று புரிந்துகொள்ளும் பயிற்சியினால் சரியானது என்ன? தவறானது என்ன? என்று பகுத்தறியும் அனுபவம் உள்ளவர்களாகிய தேறினவர்களுக்கே உரியது.
எபிரெயர் 5:11-14 பரிசுத்த பைபிள் (TAERV)
இதுபற்றிச் சொல்ல எங்களிடம் நிறைய காரியங்கள் இருக்கின்றன. ஆனால் அவை அனைத்தையும் உங்களுக்கு விளக்கிச் சொல்வது கடினம். ஏனெனில் புரிந்துகொள்ள முயல்வதையே நீங்கள் நிறுத்திவிட்டிருக்கிறீர்கள். இப்போதைக்கு, நீங்கள் போதகராக ஆகி இருக்க வேண்டும். ஆனால் இன்னும் தேவனுடைய போதனைகள் என்னும் அடிப்படைப் பாடங்களை உங்களுக்கே யாராவது போதிக்கத் தேவையாய் இருக்கிறது. இன்னும் உங்களுக்குப் பால் உணவே தேவைப்படுகிறது. திட உணவுக்கு நீங்கள் தயாராயில்லை. (அதாவது இன்னும் கடினமான போதனைகள் அல்ல, எளிய போதனைகளே உங்களுக்குத் தேவைப்படுகிறது). இன்னும் பால் தேவையாய் இருக்கிற குழந்தையைப்போல் அடிப்படைப் போதனை தேவையாய் இருக்கிற ஒருவன் சரியாக வாழ்வது பற்றிய சிரமமான போதனைகளைப் புரிந்துகொள்ள முடியாது. ஏனெனில் அவன் இன்னும் ஒரு குழந்தையே! திட உணவானது குழந்தைப் பருவத்தைத் தாண்டியவர்களுக்கு உரியது. நன்மை மற்றும் தீமை இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை அனுபவத்தின் வாயிலாக அடையாளம் கண்டுகொள்ள அவர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டிருக்கிறது.