எபிரெயர் 4:9-12
எபிரெயர் 4:9-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஆகவே, இறைவனுடைய மக்களுக்கான ஓய்வு இனி வரவேண்டியதாயிருக்கிறது. ஏனெனில், இறைவனுடைய இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் ஒருவன், இறைவன் ஓய்ந்திருந்தது போலவே, தனது வேலையிலிருந்து ஓய்ந்திருக்கிறான். ஆகையால், அந்த இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும்படி, நாம் ஊக்கத்துடன் முயற்சிசெய்வோம். முன்னோர்களுடைய கீழ்ப்படியாமையைப் பின்பற்றி, நாம் ஒருவரும் விழுந்துபோகக் கூடாது. ஏனெனில், இறைவனுடைய வார்த்தை உயிருள்ளதும் செயலாற்றல் உடையதுமாய் இருக்கிறது. அது இருபக்கமும் கூர்மையுள்ள வாளைவிடக் கூர்மையானது. அது ஆத்துமாவையும், ஆவியையும், எலும்பின் மூட்டுக்களையும், மஜ்ஜையையும் பிரிக்கத்தக்கதாய் துளைத்துச் செல்கிறது; அது இருதயத்தின் சிந்தனைகளையும் உள்நோக்கங்களையும் நிதானித்துத் தீர்ப்பிடுகிறது.
எபிரெயர் 4:9-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
எனவே, தேவனுடைய மக்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாக இருக்கிறது. ஏனென்றால், அவருடைய இளைப்பாறுதலில் நுழைந்தவன், தேவன் தம்முடைய செயல்களை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் செயல்களை முடித்து ஓய்ந்திருப்பான். எனவே, இந்த மாதிரியின்படி ஒருவனும் கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாமல் இருக்க, நாம் இந்த இளைப்பாறுதலில் நுழைய கவனமாக இருப்போம். தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாகவும், இரண்டு பக்கமும் கூர்மையான எல்லாப் பட்டயத்தையும்விட கூர்மையானதாகவும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்க உருவக் குத்துகிறதாகவும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் பகுத்தறிகிறதாகவும் இருக்கிறது.
எபிரெயர் 4:9-12 பரிசுத்த பைபிள் (TAERV)
தேவனுடைய பிள்ளைகளுக்கு இளைப்பாறுதலுக்குரிய நாள் வர இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. தேவன் தனது வேலைகளை முடித்த பிறகு ஓய்வெடுத்தார். தேவனைப் போன்று தம் பணிகளை முடித்தவர்களே தேவனுடைய இளைப்பாறுதலுக்குள் நுழைந்து ஓய்வெடுக்க முடியும். எனவே தேவனுக்குக் கீழ்ப்படியாததற்காகப் பாலைவனத்தில் விழுந்து இறந்த உதாரணங்களைப் பின்பற்றி நம்மில் யாரும் விழுந்து விடாதபடி நாம் தேவனுடைய இளைப்பாறுதலுக்குள் நுழையக் கடினமாக முயற்சிப்போம். தேவனுடைய வார்த்தையானது எப்பொழுதும் உயிரோடு இருப்பதும், செயல்படுவதுமாகும். அது இரு புறமும் கூரான வாளைவிட மிகவும் கூர்மையானது. அது ஆன்மாவையும், ஆவியையும், எலும்புகளையும், கணுக்களையும் வெட்டிப் பிரிக்கிறது. அது நம் உள்ளான மனதின் எண்ணங்களையும், நம் இதயம் கொண்டுள்ள கருத்துக்களையும் நியாயம் தீர்க்கிறது.
எபிரெயர் 4:9-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஆகையால், தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாயிருக்கிறது. ஏனெனில், அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான். ஆகையால், அந்தத் திருஷ்டாந்தத்தின்படி, ஒருவனாகிலும் கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாதபடிக்கு, நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம். தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.