எபிரெயர் 4:13-15

எபிரெயர் 4:13-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய, கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும். வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம். நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.

எபிரெயர் 4:13-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

படைப்பு எல்லாவற்றிலும் எதுவும் இறைவனின் பார்வையிலிருந்து மறைவாய் இருப்பதில்லை. எல்லாம் அவருடைய கண்களுக்கு முன்பாக மறைக்கப்படாமலும், வெளியரங்கமாக்கப்பட்டும் இருக்கின்றன. அவருக்கே நாம் செய்த எல்லாவற்றிற்கும் கணக்குக் கொடுக்கவேண்டும். ஆதலால், பரலோகத்திற்குள் சென்றிருக்கிற ஒரு பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறார். அவர் இறைவனுடைய மகனான இயேசுவே; ஆகவே நாம், அவரில் அறிக்கையிடுகிற விசுவாசத்தை உறுதியாய் பற்றிக்கொள்வோமாக. ஏனெனில் நமக்கிருக்கிற இந்த பிரதான ஆசாரியர், நம்முடைய பலவீனங்களைக்குறித்து அனுதாபப்பட முடியாதவர் அல்ல. அவரோ நம்மைப்போலவே, எல்லாவிதத்திலும் சோதனைகளின் மூலமாகச் சென்றவர். ஆனால், அவர் பாவம் செய்யவில்லை.

எபிரெயர் 4:13-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவருடைய பார்வைக்கு மறைவான படைப்பு ஒன்றும் இல்லை; எல்லாம் அவருடைய கண்களுக்குமுன்பாக மறைக்கப்படாததாகவும், வெளிப்படையாகவும் இருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும். வானங்களின்வழியாகப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறதினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாகப் பற்றிக்கொண்டிருப்போம். நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதாபப்படமுடியாத பிரதான ஆசாரியர் நமக்கு இல்லாமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல சோதிக்கப்பட்டும், பாவம் இல்லாதவராக இருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கு இருக்கிறார்.

எபிரெயர் 4:13-15 பரிசுத்த பைபிள் (TAERV)

தேவனிடமிருந்து எதுவும் மறைக்கப்படவில்லை. அனைத்தையும் அவரால் தெளிவாகக் காணமுடியும். அவருக்கு முன் எல்லாமே திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. நாம் வாழ்ந்த முறையை அவரிடம் விவரிக்க வேண்டும். நமக்கென்று ஒரு பெரிய பிரதான ஆசாரியர் உண்டு. அவர் பரலோகத்தில் தேவனோடு இருக்கப் போயிருக்கிறார். அவரே தேவனுடைய குமாரனாகிய இயேசு. எனவே நாம் நமது விசுவாசத்தில் உறுதியுடையவர்களாய் இருப்போமாக. பிரதான ஆசாரியராகிய இயேசுவால் நமது பலவீனங்களைப் புரிந்துகொள்ள முடியும். பூமியில் வாழ்ந்தபோது அனைத்து வகைகளிலும், நம்மைப் போலவே அவரும் சோதிக்கப்பட்டார். ஆனால் அவர் பாவமே செய்யவில்லை.