எபிரெயர் 4:1-12

எபிரெயர் 4:1-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்குப் பயந்திருக்கக்கடவோம். ஏனெனில், சுவிசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது; கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை. விசுவாசித்தவர்களாகிய நாமோ அந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்கிறோம்; அவருடைய கிரியைகள் உலகத்தோற்றமுதல் முடிந்திருந்தும்: இவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார். மேலும், தேவன் தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்து ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார் என்று ஏழாம்நாளைக்குறித்து ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார். அன்றியும், அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லை என்றும் அந்த இடத்திலேதானே சொல்லியிருக்கிறார். ஆகையால், சிலர் அதில் பிரவேசிப்பது இன்னும் வரப்போகிற காரியமாயிருக்கிறபடியினாலும், சுவிசேஷத்தை முதலாவது கேட்டவர்கள் கீழ்ப்படியாமையினாலே அதில் பிரவேசியாமற் போனபடியினாலும், இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று வெகுகாலத்திற்குப்பின்பு தாவீதின் சங்கீதத்திலே சொல்லியிருக்கிறபடி, இன்று என்று சொல்வதினாலே பின்னும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார். யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குட்படுத்தியிருந்தால், பின்பு அவர் வேறொரு நாளைக்குறித்துச் சொல்லியிருக்கமாட்டாரே. ஆகையால், தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாயிருக்கிறது. ஏனெனில், அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான். ஆகையால், அந்தத் திருஷ்டாந்தத்தின்படி, ஒருவனாகிலும் கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாதபடிக்கு, நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம். தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.

எபிரெயர் 4:1-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆகவே, இறைவனுடைய இளைப்பாறுதலுக்குள் செல்வதைக் குறித்த வாக்குத்தத்தம் இன்னும் நமக்கு செல்லுபடியானதாகவே இருக்கிறது. அதனால் உங்களில் ஒருவரும் அதை இழந்துபோகாதபடிக்கு, நாம் எல்லோரும் எச்சரிக்கையாய் இருப்போமாக. இஸ்ரயேலர்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டது போலவே, நமக்கும் அறிவிக்கப்பட்டது; ஆனால் அவர்கள் கேட்ட செய்தியோ அவர்களுக்கு எவ்வித பயனையும் அளிக்கவில்லை. ஏனெனில் அதைக் கேட்டவர்களோ, விசுவாசத்தில் பங்குபெறாமல் போனார்கள். ஆனால் விசுவாசம் உள்ளவர்களாகிய நாமோ, உண்மையாகவே இப்பொழுது அந்த இளைப்பாறுதலுக்குள் நுழைவோம். இறைவன் விசுவாசிக்காதவர்களைக் குறித்து சொன்னதாவது: “அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலுக்குள் ஒருபோதும் பிரவேசிப்பதில்லை என்று, என்னுடைய கோபத்திலே நான் ஆணையிட்டு அறிவித்தேன்.” அப்படியிருந்தும் அவருடைய கிரியைகள், உலகம் படைக்கப்பட்டதிலிருந்தே நிறைவாக்கப்பட்டு இருக்கிறது. ஏனெனில் ஏழாம்நாளைக் குறித்து ஓரிடத்தில்: “இறைவன் தான் செய்துகொண்டிருந்த வேலையை முடித்து, ஏழாம்நாளில் எல்லா வேலையிலிருந்தும் ஓய்ந்திருந்தார்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் மேற்கூறிய வசனத்தைத் தொடர்ந்து, “அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலுக்குள் ஒருபோதும் பிரவேசிப்பதில்லை” என்றும் இறைவன் சொல்லியிருக்கிறார். முற்காலத்தில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதைக் கேட்டவர்கள் தங்களுடைய கீழ்ப்படியாமையினால் அதற்குள் பிரவேசிக்காதிருந்தார்கள். எனினும் சிலர் இன்னும் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள் என்பது நிச்சயம். ஆகையால் இறைவன், அதற்கென வேறொரு நாளை நியமித்தார். அதையே, “இன்று” எனக் குறிப்பிடுகிறார். அதனால்தான் நீண்டகாலத்திற்குப் பின்பு இறைவன், தாவீதின்மூலம் பேசியபோது, முன்பு கூறப்பட்டபடியே: “இன்று நீங்கள் இறைவனுடைய குரலைக் கேட்பீர்களானால், நீங்கள் உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்த வேண்டாம்” என்றார். யோசுவா அவர்களுக்கு அந்த இளைப்பாறுதலைக் கொடுத்திருந்தால், இறைவன் பிற்காலத்தில் இன்னொரு நாளைக்குறித்து அப்படிச் சொல்லியிருக்கமாட்டார். ஆகவே, இறைவனுடைய மக்களுக்கான ஓய்வு இனி வரவேண்டியதாயிருக்கிறது. ஏனெனில், இறைவனுடைய இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் ஒருவன், இறைவன் ஓய்ந்திருந்தது போலவே, தனது வேலையிலிருந்து ஓய்ந்திருக்கிறான். ஆகையால், அந்த இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும்படி, நாம் ஊக்கத்துடன் முயற்சிசெய்வோம். முன்னோர்களுடைய கீழ்ப்படியாமையைப் பின்பற்றி, நாம் ஒருவரும் விழுந்துபோகக் கூடாது. ஏனெனில், இறைவனுடைய வார்த்தை உயிருள்ளதும் செயலாற்றல் உடையதுமாய் இருக்கிறது. அது இருபக்கமும் கூர்மையுள்ள வாளைவிடக் கூர்மையானது. அது ஆத்துமாவையும், ஆவியையும், எலும்பின் மூட்டுக்களையும், மஜ்ஜையையும் பிரிக்கத்தக்கதாய் துளைத்துச் செல்கிறது; அது இருதயத்தின் சிந்தனைகளையும் உள்நோக்கங்களையும் நிதானித்துத் தீர்ப்பிடுகிறது.

எபிரெயர் 4:1-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆகவே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்குத் தகுந்த வாக்குத்தத்தம் நமக்கு உண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாக இல்லாமலிருக்கக் கவனமாக இருப்போம். ஏனென்றால், நற்செய்தி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது; கேட்டவர்கள் விசுவாசம் இல்லாமல் கேட்டதினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கவில்லை. விசுவாசித்த நாமோ அந்த இளைப்பாறுதலில் நுழைகிறோம்; விசுவாசியாதவர்களைக் குறித்து தேவன்‌: இவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் நுழையமாட்டார்கள் என்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார். அவருடைய செயல்கள் உலகம் தோன்றிய காலத்திலேயே முடிந்திருந்தும் இப்படிச் சொன்னார். ஏனென்றால், தேவன் தம்முடைய செயல்களையெல்லாம் முடித்து ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார் என்று ஏழாம்நாளைக்குறித்து ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார். அன்றியும், அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் நுழையமாட்டார்கள் என்றும் அந்த இடத்திலேதானே சொல்லியிருக்கிறார். எனவே, சிலர் அதில் பிரவேசிப்பது இன்னும் வரப்போகிற காரியமாக இருக்கிறதினாலும், நற்செய்தியை முதலாவது கேட்டவர்கள் கீழ்ப்படியாததினாலே அதில் நுழையாமல்போனதினாலும், இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களானால் உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்தாமல் இருங்கள் என்று நீண்டகாலத்திற்குப்பின்பு தாவீதின் சங்கீதத்திலே சொல்லியிருக்கிறபடி, இன்று என்று சொல்வதினாலே பின்னும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார். யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குள் நடத்தியிருந்தால், பின்பு அவர் மற்றொரு நாளைக்குறித்துச் சொல்லியிருக்கமாட்டாரே. எனவே, தேவனுடைய மக்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாக இருக்கிறது. ஏனென்றால், அவருடைய இளைப்பாறுதலில் நுழைந்தவன், தேவன் தம்முடைய செயல்களை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் செயல்களை முடித்து ஓய்ந்திருப்பான். எனவே, இந்த மாதிரியின்படி ஒருவனும் கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாமல் இருக்க, நாம் இந்த இளைப்பாறுதலில் நுழைய கவனமாக இருப்போம். தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாகவும், இரண்டு பக்கமும் கூர்மையான எல்லாப் பட்டயத்தையும்விட கூர்மையானதாகவும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்க உருவக் குத்துகிறதாகவும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் பகுத்தறிகிறதாகவும் இருக்கிறது.

எபிரெயர் 4:1-12 பரிசுத்த பைபிள் (TAERV)

தேவன் அந்த மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி இன்றும் நம்மிடம் உள்ளது. தேவனுடைய இளைப்பாறுதலில் நாம் பிரவேசிக்க முடியும் என்பதே அந்த வாக்குறுதி. ஆகையால் உங்களில் யாரும் இவ்வாக்குறுதியைப் பெறுவதில் தவறக் கூடாது என்பதில் எச்சரிக்கையாய் இருங்கள். இரட்சிக்கப்படும் வழி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது போலவே நமக்கும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் கேட்ட செய்தி அவர்களுக்குப் பயன்படாமல் போயிற்று. ஏன்? ஏனென்றால் அவர்கள் அதனை விசுவாசமில்லாமல் கேட்டனர். விசுவாசித்த நம்மால் தேவனுடைய இளைப்பாறுதலில் நுழைய முடியும். தேவன் சொன்னதுபோல, “எனவே நான் கோபத்தோடு, ‘அவர்கள் ஒருபோதும் எனது இளைப்பாறுதலுக்குள் நுழைய முடியாது’ என்று ஆணையிட்டேன்” தேவன் இதைச் சொன்னார். ஆனால் இவ்வுலகத்தை உருவாக்கின நேரமுதல் தம் வேலையை தேவன் முடித்தார். வாரத்தின் ஏழாவது நாளைப் பற்றி தேவன் பேசினார் என்று எழுதப்பட்டிருக்கிறது, “ஏழாவது நாளில் தேவன் அனைத்து வேலைகளில் இருந்தும் ஓய்வு எடுத்தார்.” மேலும் அதே பகுதியில், மீண்டும், “அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் நுழைய முடியாது” என்றும் தேவன் கூறியிருக்கிறார். சிலர் தேவனுடைய இளைப்பாறுதலில் நுழையப் போகிறார்கள் என்பது உண்மை. ஆனால் முதலில் நற்செய்தியைக் கேட்டவர்கள் தேவனுடைய இளைப்பாறுதலில் நுழையவில்லை. அவர்கள் கீழ்ப்படியவில்லை என்பது தான் காரணம். எனவே தேவன் இன்னொரு நாளைத் திட்டமிட்டார். அது “இன்று” என அழைக்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாளைக் குறித்து தாவீதின் மூலமாக ஏற்கெனவே மேற்கோள் காட்டிய பகுதியில் தேவன் பேசுகிறார், “இன்று நீங்கள் தேவனுடைய சத்தத்தைக் கேட்டால், தேவனுக்கு எதிராக நீங்கள் கலகம் செய்த கடந்த காலத்தைப் போல உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்கள்.” தேவனுடைய வாக்குறுதிப்படி அவரது இளைப்பாறுதலுக்குள் யோசுவா மக்களை வழி நடத்தவில்லை என்பது தெரியும். ஏனென்றால் பின்னர் இளைப்பாறுதலுக்கு தேவன் “இன்று” என இன்னொரு நாளைப் பற்றிக் கூறியிருக்கிறாரே. தேவனுடைய பிள்ளைகளுக்கு இளைப்பாறுதலுக்குரிய நாள் வர இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. தேவன் தனது வேலைகளை முடித்த பிறகு ஓய்வெடுத்தார். தேவனைப் போன்று தம் பணிகளை முடித்தவர்களே தேவனுடைய இளைப்பாறுதலுக்குள் நுழைந்து ஓய்வெடுக்க முடியும். எனவே தேவனுக்குக் கீழ்ப்படியாததற்காகப் பாலைவனத்தில் விழுந்து இறந்த உதாரணங்களைப் பின்பற்றி நம்மில் யாரும் விழுந்து விடாதபடி நாம் தேவனுடைய இளைப்பாறுதலுக்குள் நுழையக் கடினமாக முயற்சிப்போம். தேவனுடைய வார்த்தையானது எப்பொழுதும் உயிரோடு இருப்பதும், செயல்படுவதுமாகும். அது இரு புறமும் கூரான வாளைவிட மிகவும் கூர்மையானது. அது ஆன்மாவையும், ஆவியையும், எலும்புகளையும், கணுக்களையும் வெட்டிப் பிரிக்கிறது. அது நம் உள்ளான மனதின் எண்ணங்களையும், நம் இதயம் கொண்டுள்ள கருத்துக்களையும் நியாயம் தீர்க்கிறது.