எபிரெயர் 3:7-14

எபிரெயர் 3:7-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆகையால், பரிசுத்த ஆவியானவர் சொல்கிறபடி: “இன்று நீங்கள் இறைவனுடைய குரலைக் கேட்பீர்களானால், நீங்கள் உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்த வேண்டாம். பாலைவனத்தில் இஸ்ரயேலர் சோதிக்கப்பட்ட காலத்தில் கலகம் செய்ததுபோல் நடந்துகொள்ள வேண்டாம். அங்கே உங்கள் முன்னோர்கள் நான் செய்தவைகளைக் கண்டிருந்தும், நாற்பது ஆண்டுகளாக என் பொறுமையைச் சோதித்தார்கள். அதனாலேயே நான் நாற்பது வருடங்களாக அந்தச் சந்ததியோடு கோபமாயிருந்தேன்; அவர்களைக்குறித்து, ‘இவர்கள் எப்பொழுதும் தங்கள் இருதயங்களில் வழிவிலகிப் போகிறார்கள், இவர்கள் என்னுடைய வழிகளை அறியாதவர்கள்’ ஆகவே, என்னுடைய கோபத்திலே, ‘என்னுடைய இளைப்பாறுதலுக்குள் அவர்கள் ஒருபோதும் பிரவேசிப்பதில்லை’ என்றும் ஆணையிட்டு அறிவித்தேன்.” ஆகையால் பிரியமானவர்களே, உங்களில் ஒருவரும் ஜீவனுள்ள இறைவனிடமிருந்து வழிவிலகச் செய்கிறதான, விசுவாசமற்ற, பாவ இருதயம் உள்ளவனாய் இராதபடி பார்த்துக்கொள்ளுங்கள். “இன்று” என்று தற்காலத்தையே குறிப்பிட்டிருப்பதால், இக்காலம் நீடிக்குமளவும் ஒவ்வொரு நாளும் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துங்கள். அப்பொழுதே பாவத்தின் ஏமாற்றத்தினால், நீங்கள் ஒருவரும் மனக்கடினம் அடையாது இருப்பீர்கள். நாம் ஆரம்பத்தில் கொண்டிருந்த விசுவாசத்தை முடிவுவரை பற்றிக்கொண்டால்தான், நாம் கிறிஸ்துவின் பங்காளிகளாயிருப்போம்.

எபிரெயர் 3:7-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எனவே, பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடி: இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களானால், வனாந்திரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்தாமல் இருங்கள். அங்கே உங்களுடைய முற்பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சைபார்த்து, நாற்பது வருடகாலங்கள் என் செய்கைகளைப் பார்த்தார்கள். எனவே, நான் அந்த வம்சத்தாரை வெறுத்து, அவர்கள் எப்பொழுதும் வழுவிப்போகிற இருதயமுள்ள மக்களென்றும், என்னுடைய வழிகளைத் தெரியாதவர்களென்றும் சொல்லி; என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிக்கமாட்டார்கள் என்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார். சகோதரர்களே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் யாருக்கும் இல்லாதபடி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். உங்களில் ஒருவரும் பாவத்தின் ஏமாற்றுதலினாலே கடினப்பட்டுப்போகாமல் இருக்க, இன்று என்று சொல்லப்படும் நாள்வரை ஒவ்வொருநாளும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள். நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுவரைக்கும் உறுதியாகப் பிடித்துக்கொண்டிருப்போமானால், கிறிஸ்துவிடம் பங்குள்ளவர்களாக இருப்போம்.

எபிரெயர் 3:7-14 பரிசுத்த பைபிள் (TAERV)

பரிசுத்த ஆவியானவர் சொல்வது போல், “இன்று நீங்கள் தேவனுடைய சத்தத்தைக் கேட்டால், வனாந்திரத்தில் நீங்கள் தேவனைச் சோதித்தபோது, தேவனுக்கு எதிராக நீங்கள் கலகம் செய்த கடந்த காலத்தைப் போல உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்கள். நாற்பது வருடங்களாக வனாந்திரத்தில் நான் செய்ததை உங்கள் மக்கள் பார்த்தார்கள். ஆனால் அவர்கள் என்னையும் என் பொறுமையையும் சோதித்தனர். எனவே நான் அவர்களிடம் கோபம் கொண்டேன். ‘அம்மக்களின் சிந்தனைகள் எப்போதும் தவறாகவே இருக்கின்றன. அம்மக்கள் என் வழிகளை எப்போதும் புரிந்துகொண்டதில்லை’ என்று நான் சொன்னேன். எனவே நான் கோபத்தோடு, ‘அவர்கள் ஒருபோதும் எனது இளைப்பாறுதலுக்குள் நுழைய முடியாது’ என்று ஆணையிட்டேன்.” எனவே சகோதர சகோதரிகளே! பாவம் நிறைந்தவராகவும், ஜீவனுள்ள தேவனிடமிருந்து விலகுகிற நம்பிக்கையற்ற இருதயமுள்ளோராகவும் உங்களில் யாரும் இல்லாதபடி கவனமாயிருங்கள். ஆனால் ஒவ்வொரு நாளும் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். “இன்று” எனப்படும் நிலை இருக்கிறபோதே இதைச் செய்யுங்கள். உங்களில் யாரும் பாவத்தால் முட்டாளாக்கப்படாதிருக்கவும் உறுதியாக இருக்கவும் இதைச் செய்யுங்கள். இது எதற்காக? தொடக்கத்தில் நாம் கொண்டிருந்த நம்பிக்கையைத் தொடர்ந்து உறுதியாய் பற்றிக்கொண்டிருப்போமானால் நாம் அனைவரும் கிறிஸ்துவுடன் பங்கு உள்ளவர்களாக முடியும்.

எபிரெயர் 3:7-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆகையால், பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடியே: இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள். அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சைபார்த்து, நாற்பது வருஷகாலம் என் கிரியைகளைக் கண்டார்கள். ஆதலால், நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் எப்பொழுதும் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி; என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார். சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள். உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள். நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்.