எபிரெயர் 3:1-19

எபிரெயர் 3:1-19 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆகையால் பரலோக அழைப்பில் பங்குகொள்கிறவர்களான பரிசுத்த சகோதரர்களே, நாம் அறிக்கையிடுகிற நமது அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாகிய இயேசுவைப்பற்றி சிந்தியுங்கள். இறைவனுடைய வீட்டில் அனைத்திலும் மோசே உண்மையுள்ளவனாய் இருந்ததுபோல, இயேசுவும் தம்மை நியமித்தவருக்கு உண்மையுள்ளவராகவே இருந்தார். ஒரு வீட்டைக் கட்டுகிறவன், அந்த வீட்டைப்பார்க்கிலும் அதிக மதிப்புக்குரியவனாய் இருப்பதுபோலவே, இயேசுவும் மோசேயைப்பார்க்கிலும், அதிக மதிப்புக்குரியவராய் இருக்கிறார்; ஏனெனில் ஒவ்வொரு வீடும் யாரோ ஒருவனாலே கட்டப்படுகிறது. அதுபோல, எல்லாவற்றையும் கட்டுகிறவரோ இறைவனே. மோசே இறைவனுடைய வீட்டின் எல்லாவற்றிலும் ஒரு உண்மையுள்ள வேலைக்காரனாய் இருந்து, இனிவரப்போகும் காலத்தில் வெளிப்படப் போகிறவற்றிற்கு சாட்சிகொடுக்கிறவனாகவே இருந்தான். ஆனால் கிறிஸ்துவோ, இறைவனுடைய வீட்டில் உண்மையுள்ள மகனாய் இருக்கிறார். அப்படியிருக்கும்படியே, நாம் நமது மனத்தைரியத்தையும் நாம் பெருமிதங்கொள்ளும் எதிர்பார்ப்பையும் உறுதியாய்ப் பற்றிக்கொண்டால், நாமே இறைவனுடைய வீடாயிருப்போம். ஆகையால், பரிசுத்த ஆவியானவர் சொல்கிறபடி: “இன்று நீங்கள் இறைவனுடைய குரலைக் கேட்பீர்களானால், நீங்கள் உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்த வேண்டாம். பாலைவனத்தில் இஸ்ரயேலர் சோதிக்கப்பட்ட காலத்தில் கலகம் செய்ததுபோல் நடந்துகொள்ள வேண்டாம். அங்கே உங்கள் முன்னோர்கள் நான் செய்தவைகளைக் கண்டிருந்தும், நாற்பது ஆண்டுகளாக என் பொறுமையைச் சோதித்தார்கள். அதனாலேயே நான் நாற்பது வருடங்களாக அந்தச் சந்ததியோடு கோபமாயிருந்தேன்; அவர்களைக்குறித்து, ‘இவர்கள் எப்பொழுதும் தங்கள் இருதயங்களில் வழிவிலகிப் போகிறார்கள், இவர்கள் என்னுடைய வழிகளை அறியாதவர்கள்’ ஆகவே, என்னுடைய கோபத்திலே, ‘என்னுடைய இளைப்பாறுதலுக்குள் அவர்கள் ஒருபோதும் பிரவேசிப்பதில்லை’ என்றும் ஆணையிட்டு அறிவித்தேன்.” ஆகையால் பிரியமானவர்களே, உங்களில் ஒருவரும் ஜீவனுள்ள இறைவனிடமிருந்து வழிவிலகச் செய்கிறதான, விசுவாசமற்ற, பாவ இருதயம் உள்ளவனாய் இராதபடி பார்த்துக்கொள்ளுங்கள். “இன்று” என்று தற்காலத்தையே குறிப்பிட்டிருப்பதால், இக்காலம் நீடிக்குமளவும் ஒவ்வொரு நாளும் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துங்கள். அப்பொழுதே பாவத்தின் ஏமாற்றத்தினால், நீங்கள் ஒருவரும் மனக்கடினம் அடையாது இருப்பீர்கள். நாம் ஆரம்பத்தில் கொண்டிருந்த விசுவாசத்தை முடிவுவரை பற்றிக்கொண்டால்தான், நாம் கிறிஸ்துவின் பங்காளிகளாயிருப்போம். “இன்று நீங்கள் இறைவனுடைய குரலைக் கேட்பீர்களானால், நீங்கள் கலகம் செய்தபோது நடந்துகொண்டதைப்போல் உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்த வேண்டாம்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. இறைவனுடைய குரலைக் கேட்டும், அவருக்கு விரோதமாகக் கலகம் செய்தவர்கள் யார்? அவர்கள் எல்லோரும், எகிப்திலிருந்து மோசேயினால் வழிநடத்திக் கொண்டுவரப்பட்டவர்கள் அல்லவா? இறைவன் நாற்பது வருடங்களாக யார்மேல் கோபமாயிருந்தார்? பாவம் செய்தவர்கள்மேல் அல்லவா? அவர்களுடைய உடல்களும் பாலைவனத்தில் விழுந்து கிடந்தனவே? இவர்கள் என்னுடைய இளைப்பாறுதலுக்குள் ஒருபோதும் செல்லமாட்டார்கள் என்று அவர் யாரைக்குறித்து ஆணையிட்டார்? கீழ்ப்படியாமல் போனவர்களைக் குறித்தல்லவா? ஆகவே அவர்களுடைய அவிசுவாசத்தின் காரணமாகவே அவர்களால் பிரவேசிக்க முடியாமல் போயிற்று என்று நாம் காண்கிறோம்.

எபிரெயர் 3:1-19 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இப்படியிருக்க, பரலோக அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரர்களே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலர்களும் பிரதான ஆசாரியருமாக இருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்; மோசே தேவனுடைய வீட்டில் எல்லாவற்றிலும் உண்மையுள்ளவனாக இருந்ததுபோல இவரும் தம்மை நியமித்தவருக்கு உண்மையுள்ளவராக இருந்தார். வீட்டைக் கட்டுகிறவன் வீட்டைவிட அதிக கனத்திற்குரியவனாக இருக்கிறான்; அதுபோல மோசேயைவிட இவர் அதிக மகிமைக்குத் தகுதியானவராக இருக்கிறார். ஏனென்றால், எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன். சொல்லப்படப்போகிற காரியங்களுக்குச் சாட்சியாக, மோசே பணிவிடைக்காரனாக, தேவனுடைய வீட்டில் எல்லாவற்றிலும் உண்மையுள்ளவனாக இருந்தான். கிறிஸ்துவோ தேவனுடைய வீட்டில் அதிகாரமுள்ள மகனாக உண்மையுள்ளவராக இருக்கிறார்; நம்பிக்கையினாலே உண்டாகும் தைரியத்தையும் மேன்மைபாராட்டலையும் முடிவுவரைக்கும் உறுதியாகப் பற்றிக்கொண்டிருப்போம் என்றால், நாமே அவருடைய வீடாக இருப்போம். எனவே, பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடி: இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களானால், வனாந்திரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்தாமல் இருங்கள். அங்கே உங்களுடைய முற்பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சைபார்த்து, நாற்பது வருடகாலங்கள் என் செய்கைகளைப் பார்த்தார்கள். எனவே, நான் அந்த வம்சத்தாரை வெறுத்து, அவர்கள் எப்பொழுதும் வழுவிப்போகிற இருதயமுள்ள மக்களென்றும், என்னுடைய வழிகளைத் தெரியாதவர்களென்றும் சொல்லி; என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிக்கமாட்டார்கள் என்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார். சகோதரர்களே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் யாருக்கும் இல்லாதபடி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். உங்களில் ஒருவரும் பாவத்தின் ஏமாற்றுதலினாலே கடினப்பட்டுப்போகாமல் இருக்க, இன்று என்று சொல்லப்படும் நாள்வரை ஒவ்வொருநாளும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள். நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுவரைக்கும் உறுதியாகப் பிடித்துக்கொண்டிருப்போமானால், கிறிஸ்துவிடம் பங்குள்ளவர்களாக இருப்போம். இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களானால், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்தாமல் இருங்கள் என்று சொல்லியிருக்கிறதே. கேட்டவர்களில் கோபமூட்டினவர்கள் யார்? மோசேயினால் எகிப்திலிருந்து புறப்பட்ட எல்லோரும் அப்படிச் செய்தார்களல்லவா? மேலும், அவர் நாற்பது வருடங்களாக யாரை வெறுத்தார்? பாவம் செய்தவர்களைத்தானே? அவர்களுடைய மரித்த சடலங்கள் வனாந்திரத்தில் விழுந்துபோனதே. பின்னும், என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிக்கமாட்டார்கள் என்று அவர் யாரைப்பற்றி ஆணையிட்டார்? கீழ்ப்படியாதவர்களைப்பற்றித்தானே? எனவே, அவிசுவாசத்தினாலே அவர்கள் அதில் பிரவேசிக்கமுடியாமல் போனார்கள் என்று பார்க்கிறோம்.

எபிரெயர் 3:1-19 பரிசுத்த பைபிள் (TAERV)

எனவே, நீங்கள் அனைவரும் இயேசுவைப் பற்றி சிந்தனை செய்ய வேண்டும். தேவன் இயேசுவை நம்மிடம் அனுப்பினார். அவர் நம் விசுவாசத்தின் பிரதானஆசாரியர் ஆவார். எனது பரிசுத்தமான சகோதர சகோதரிகளே! நான் இதை உங்களுக்காகக் கூறுகிறேன். நீங்கள் தேவனால் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். தேவன் இயேசுவை நம்மிடம் அனுப்பி நமது பிரதான ஆசாரியர் ஆக்கினார். மோசே போன்று உண்மையுள்ளவராய் முழுக்குடும்பத்தின் பொறுப்பும் இயேசுவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஒருவன் ஒரு வீட்டைக் கட்டும்போது மக்கள் அந்த வீட்டை விட மனிதனையே பெரிதும் மதிப்பர். இதேபோல, மோசேயைவிட அதிக மரியாதைக்கு இயேசு தகுதியானவராக இருக்கிறார். தேவன் எல்லாவற்றையும் படைக்கிறார் எனினும் ஒவ்வொரு வீடும் யாரோ ஒருவனால் கட்டப்படுகிறது. மோசே தேவனுடைய வீட்டில் ஒரு பணியாளைப் போன்று உண்மையுள்ளவனாயிருந்தான். எதிர்காலத்தில் சொல்வதைப் பற்றி அவன் சொன்னான். ஆனால் ஒரு குமாரனைப் போல தேவனுடைய குடும்பத்தை ஆள்வதில் இயேசு உண்மையுள்ளவராயிருக்கிறார். நம்மிடமுள்ள மாபெரும் நம்பிக்கையினைத் தொடர்ந்து உறுதிப்படுத்தி மேன்மையாக எண்ணினால், விசுவாசிகளாகிய நாம் தேவனுடைய குடும்பத்தவர்களாயிருப்போம். பரிசுத்த ஆவியானவர் சொல்வது போல், “இன்று நீங்கள் தேவனுடைய சத்தத்தைக் கேட்டால், வனாந்திரத்தில் நீங்கள் தேவனைச் சோதித்தபோது, தேவனுக்கு எதிராக நீங்கள் கலகம் செய்த கடந்த காலத்தைப் போல உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்கள். நாற்பது வருடங்களாக வனாந்திரத்தில் நான் செய்ததை உங்கள் மக்கள் பார்த்தார்கள். ஆனால் அவர்கள் என்னையும் என் பொறுமையையும் சோதித்தனர். எனவே நான் அவர்களிடம் கோபம் கொண்டேன். ‘அம்மக்களின் சிந்தனைகள் எப்போதும் தவறாகவே இருக்கின்றன. அம்மக்கள் என் வழிகளை எப்போதும் புரிந்துகொண்டதில்லை’ என்று நான் சொன்னேன். எனவே நான் கோபத்தோடு, ‘அவர்கள் ஒருபோதும் எனது இளைப்பாறுதலுக்குள் நுழைய முடியாது’ என்று ஆணையிட்டேன்.” எனவே சகோதர சகோதரிகளே! பாவம் நிறைந்தவராகவும், ஜீவனுள்ள தேவனிடமிருந்து விலகுகிற நம்பிக்கையற்ற இருதயமுள்ளோராகவும் உங்களில் யாரும் இல்லாதபடி கவனமாயிருங்கள். ஆனால் ஒவ்வொரு நாளும் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். “இன்று” எனப்படும் நிலை இருக்கிறபோதே இதைச் செய்யுங்கள். உங்களில் யாரும் பாவத்தால் முட்டாளாக்கப்படாதிருக்கவும் உறுதியாக இருக்கவும் இதைச் செய்யுங்கள். இது எதற்காக? தொடக்கத்தில் நாம் கொண்டிருந்த நம்பிக்கையைத் தொடர்ந்து உறுதியாய் பற்றிக்கொண்டிருப்போமானால் நாம் அனைவரும் கிறிஸ்துவுடன் பங்கு உள்ளவர்களாக முடியும். இதைத் தான், “இன்று நீங்கள் தேவனுடைய சத்தத்தைக கேட்டால், தேவனுக்கு எதிராக நீங்கள் கலகம் செய்த கடந்த காலத்தைப் போல உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்கள்” என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டிருக்கிறது. யார் தேவனுடைய செய்தியைக் கேட்டு அவருக்கு எதிராக மாறினார்கள்? எகிப்திலிருந்து மோசேயால் வழிநடத்தப்பட்டவர்கள் அனைவரும் அப்படியே இருந்தார்கள். மேலும் நாற்பது வருடங்களாக தேவன் யார் மீது கோபம் கொண்டார்? பாவம் செய்தவர்கள் மீது அல்லவா? அவர்களனைவரும் வனாந்திரத்திலேயே மடிந்து போனார்கள். எனது இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க முடியாது என்று யாரிடம் தேவன் கூறினார்? அவருக்குக் கீழ்ப்படியாத மக்களிடம் மட்டும் தானே கூறினார். எனவே, அந்த மக்கள் தேவனுடைய இளைப்பாறுதலுக்குள் நுழைய முடியாது என்றார். ஏன்? அவர்கள் விசுவாசம் உடையவர்களாக இருக்கவில்லை.

எபிரெயர் 3:1-19 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இப்படியிருக்க, பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள். மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்ததுபோல, இவரும் தம்மை ஏற்படுத்தினவருக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார். வீட்டை உண்டுபண்ணினவன் வீட்டைப்பார்க்கிலும் அதிக கனத்திற்குரியவனாயிருக்கிறான்; அதுபோல மோசேயைப்பார்க்கிலும் இவர் அதிக மகிமைக்குப் பாத்திரராயிருக்கிறார். ஏனெனில், எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன். சொல்லப்படப்போகிற காரியங்களுக்குச் சாட்சியாக, மோசே பணிவிடைக்காரனாய், அவருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தான். கிறிஸ்துவோ அவருடைய வீட்டிற்கு மேற்பட்டவரான குமாரனாக உண்மையுள்ளவராயிருக்கிறார்; நம்பிக்கையினாலே உண்டாகும் தைரியத்தையும் மேன்மைபாராட்டலையும் முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், நாமே அவருடைய வீடாயிருப்போம். ஆகையால், பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடியே: இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள். அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சைபார்த்து, நாற்பது வருஷகாலம் என் கிரியைகளைக் கண்டார்கள். ஆதலால், நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் எப்பொழுதும் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி; என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார். சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள். உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள். நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம். இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று சொல்லியிருக்கிறதே. கேட்டவர்களில் கோபமூட்டினவர்கள் யார்? மோசேயினால் எகிப்திலிருந்து புறப்பட்ட யாவரும் அப்படிச் செய்தார்களல்லவா? மேலும், அவர் நாற்பது வருஷமாய் யாரை அரோசித்தார்? பாவஞ்செய்தவர்களையல்லவா? அவர்களுடைய சவங்கள் வனாந்தரத்தில் விழுந்துபோயிற்றே. பின்னும், என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று அவர் யாரைக்குறித்து ஆணையிட்டார்? கீழ்ப்படியாதவர்களைக்குறித்தல்லவா? ஆதலால், அவிசுவாசத்தினாலே அவர்கள் அதில் பிரவேசிக்கக்கூடாமற் போனார்களென்று பார்க்கிறோம்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்