எபிரெயர் 2:7-10

எபிரெயர் 2:7-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவனை தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனுக்கு முடிசூட்டி, உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் அவனை அதிகாரியாக வைத்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர் என்று சொன்னான். சகலத்தையும் அவனுக்குக் கீழ்ப்படுத்தினார் என்கிற விஷயத்தில், அவர் அவனுக்குக் கீழ்ப்படுத்தாத பொருள் ஒன்றுமில்லை; அப்படியிருந்தும், இன்னும் அவனுக்குச் சகலமும் கீழ்ப்பட்டிருக்கக் காணோம். என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம். ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது.

எபிரெயர் 2:7-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நீர் அவர்களைத் தேவதூதர்களைப்பார்க்கிலும் சற்றுச் சிறியவர்களாகப் படைத்து, அவர்களை மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டினீர். எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.” இதில் இறைவன் எல்லாவற்றையும் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தினார் என்பதிலிருந்து, அவர் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தாமல் எதையுமே விட்டுவிடவில்லை என்பது தெளிவாகிறது. இருந்தபோதும் எல்லாம் அவர்களுக்கு இன்னும் அடிபணியவில்லை. ஆனாலும் சிறிது காலத்திற்கு இறைத்தூதர்களிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்ட இயேசுவோ, மரண வேதனையடைந்தவராய் இறைவனுடைய கிருபையினாலே, ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசிப்பார்த்தபடியால் இப்பொழுது மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம். அநேக பிள்ளைகளை மகிமைக்குள் கொண்டுவரும் பொருட்டு, அவர்களது இரட்சிப்பின் மூலகாரணரான கிறிஸ்துவை, வேதனை அனுபவிப்பதன் மூலமாக, முழுநிறைவுள்ள மூலகாரணராய் இறைவன் ஆக்கியது அவருக்கேற்ற செயலே. இறைவனுக்காகவும், இறைவனின் மூலமாகவுமே எல்லாம் இருக்கின்றன.

எபிரெயர் 2:7-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவனை தேவதூதர்களைவிட கொஞ்சம் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனுக்கு முடிசூட்டி, உம்முடைய கைகளின் செயல்களின்மீது அவனை அதிகாரியாக வைத்து, எல்லாவற்றையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர் என்று சொன்னான். எல்லாவற்றையும் அவனுக்குக் கீழ்ப்படுத்தினார் என்கிற காரியத்தில், அவர் அவனுக்குக் கீழ்ப்படுத்தாத பொருள் ஒன்றும் இல்லை; ஆனால், இன்னும் எல்லாம் அவனுக்கு கீழ்ப்பட்டிருப்பதைக் காணமுடியவில்லை. என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்க தேவதூதர்களைவிட கொஞ்சம் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைப் பார்க்கிறோம். ஏனென்றால், தமக்காகவும் தம்மூலமாகவும் எல்லாவற்றையும் உண்டாக்கினவர், அநேக பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கும்போது அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துவது அவருக்கு ஏற்றதாக இருந்தது.

எபிரெயர் 2:7-10 பரிசுத்த பைபிள் (TAERV)

கொஞ்ச நேரத்திற்கு தேவ தூதர்களைவிட அவரைச் சிறியவர் ஆக்கிவிட்டீர். அவரை மகிமையாலும் கனத்தாலும் முடிசூட்டினீர். நீர் எல்லாவற்றையும் அவரது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தீர்” என்று எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு அனைத்தையும் அவரது கட்டுப்பாட்டுக்குள் தேவன் கொண்டு வந்துவிட்டதால் அவருக்குக் கட்டுப்படாதது எதுவுமில்லை எனலாம். ஆனால் அவர் அனைத்தையும் ஆள்வதை நாம் இன்னும் பார்க்கவில்லை. சிறிது காலத்திற்கு இயேசு தேவதூதர்களுக்கும் தாழ்ந்தவராக்கப்பட்டிருந்தார். ஆனால் இப்போது துன்பப்பட்டு மரித்ததால் மகிமையாலும், கனத்தாலும் முடிசூடிக்கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். தேவனுடைய கிருபையினால் ஒவ்வொரு மனிதனுக்காகவும் இயேசு மரித்தார். தேவனே அனைத்தையும் படைத்தவர். அனைத்தும் அவரது மகிமைக்காகவே உள்ளன. தன் மகிமையைப் பகிர்ந்துகொள்ள ஏராளமான மக்களை அவர் விரும்பினார். எனவே, தமக்குத் தேவையானவற்றை அவர் செய்தார். மக்களை இரட்சிப்புக்கு வழி நடத்திச் செல்ல பூரணமானவராக தேவன் இயேசுவை ஏற்படுத்தினார். இயேசு தன் துன்பத்தால் ஒரு பூரண இரட்சகரானார்.