எபிரெயர் 2:11-15
எபிரெயர் 2:11-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பரிசுத்தமாக்குகிற அவரும், பரிசுத்தமாக்கப்படுகிறவர்களும் ஒரே குடும்பத்தினரே. அதனாலேயே இயேசு அவர்களைச் சகோதரர் என்று அழைப்பதற்கு வெட்கப்படாதிருக்கிறார். இயேசு அவர்களைக்குறித்து சொல்லுகிறதாவது, “நான் உம்முடைய பெயரை, எனது சகோதரர்களுக்கு அறிவிப்பேன்; திருச்சபையின் முன்னிலையில் உம்முடைய துதிகளைப் பாடுவேன்.” மேலும், “நான் அவரில் என் நம்பிக்கையை வைப்பேன், இதோ நானும் இறைவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் இங்கே இருக்கிறோம்” என்றும் கூறியுள்ளார். பிள்ளைகள் இரத்தமும், மாம்சமும் உடையவர்களாய் இருக்கிறபடியால், அவர்களுடைய மனித இயல்பில் இயேசுவும் பங்குகொண்டார். அவருடைய மரணத்தினால், மரணத்தின் அதிகாரத்தைத் தன்னிடம் வைத்துக்கொண்டிருந்த பிசாசை அழிக்கும்படிக்கும், தங்களுடைய வாழ்நாள் எல்லாம் சாவைக்குறித்த பயத்தினாலே, அடிமைகளாய் இருந்தவர்களை விடுதலை செய்யும்படிக்கும் அவர் மனித இயல்பில் பங்குகொண்டார்.
எபிரெயர் 2:11-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
எப்படியென்றால், பரிசுத்தம் பண்ணுகிறவரும் பரிசுத்தம் பண்ணப்பட்டவர்களுமாகிய எல்லோரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள்; இதினால் அவர்களைச் சகோதரர்கள் என்று சொல்ல அவர் வெட்கப்படாமல்: உம்முடைய நாமத்தை என் சகோதரர்களுக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப்பாடுவேன் என்றும்; நான் அவரிடம் நம்பிக்கையாக இருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார். எனவே, பிள்ளைகள் சரீரத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாக இருக்க, அவரும் அவர்களைப்போல சரீரத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்திற்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிப்பதற்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்தில் வாழ்ந்தவர்கள் எல்லோரையும் விடுதலைபண்ணுவதற்கும் அப்படியானார்.
எபிரெயர் 2:11-15 பரிசுத்த பைபிள் (TAERV)
மக்களைப் பரிசுத்தமாக்குகிறவரும் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். எனவே அவர்களைத் தம் சகோதரர்களாகவும் சகோதரிகளாகவும் அழைக்க இயேசு வெட்கம் கொள்ளவில்லை. “தேவனே உம்மைப்பற்றி நான் என் சகோதர சகோதரிகளிடம் கூறுவேன். உம்முடைய மக்கள் கூட்டத்தின் நடுவில் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்” என்று அவர் கூறுகிறார். “தேவன் மீது என் நம்பிக்கையை வைப்பேன்” என்றும் அவர் சொல்கிறார். “தேவன் எனக்களித்த பிள்ளைகளோடு நான் இங்கே இருக்கிறேன்” என்று அவர் சொல்கிறார். மாம்சீகமான உடலைக்கொண்ட மக்களே அந்தப் பிள்ளைகள். ஆகவே இயேசுவும், அவர்களைப் போன்றே மாறி அவர்களைப் போன்றே அனுபவத்தையும் பெற்றார். மரண அதிகாரத்தைத் தன்னோடு வைத்திருக்கிற பிசாசை தனது மரணத்தின் மூலம் அழிக்கும்பொருட்டு இயேசு இப்படிச் செய்தார். அவர்களை விடுதலை செய்யும் பொருட்டே இயேசு தம் பிள்ளைகளைப் போலாகி மரித்தார். மரண பயத்தின் காரணமாக தம் வாழ்க்கை முழுக்க அவர்கள் அடிமையாக இருந்தார்கள்.
எபிரெயர் 2:11-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
எப்படியெனில், பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள்; இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்; உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப்பாடுவேன் என்றும்; நான் அவரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார். ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.