எபிரெயர் 2:1-10

எபிரெயர் 2:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆகையால், நாம் கேட்டவைகளை விட்டு விலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்கவேண்டும். ஏனெனில், தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு விரோதமான எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்க, முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும், அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம். இனிவரும் உலகத்தைக்குறித்துப் பேசுகிறோமே, அதை அவர் தூதர்களுக்குக் கீழ்ப்படுத்தவில்லை. ஒரு இடத்திலே ஒருவன் சாட்சியாக: மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷனுடைய குமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்? அவனை தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனுக்கு முடிசூட்டி, உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் அவனை அதிகாரியாக வைத்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர் என்று சொன்னான். சகலத்தையும் அவனுக்குக் கீழ்ப்படுத்தினார் என்கிற விஷயத்தில், அவர் அவனுக்குக் கீழ்ப்படுத்தாத பொருள் ஒன்றுமில்லை; அப்படியிருந்தும், இன்னும் அவனுக்குச் சகலமும் கீழ்ப்பட்டிருக்கக் காணோம். என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம். ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது.

எபிரெயர் 2:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எனவே நாம் கேட்டறிந்த உண்மைகளை அதிக கவனமாய் பற்றிக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான், நாம் அவைகளிலிருந்து விலகிப்போகாமல் இருப்போம். இறைவனின் தூதர்கள் மூலமாய் பேசப்பட்டசெய்தி உறுதிப்படுத்தியபடியால், அதை மீறியதற்கும், கீழ்ப்படியாததற்கும் நீதியான தண்டனை கொடுக்கப்பட்டது. அப்படியானால், இப்படிப்பட்ட பெரிதான இரட்சிப்பை நாம் அலட்சியம் செய்தால், நாம் எப்படித் தப்பமுடியும்? இந்த இரட்சிப்போ முதலாவது கர்த்தராகிய இயேசுவினாலேயே அறிவிக்கப்பட்டது. அவர் சொன்னதைக் கேட்டவர்கள் அதை நமக்கு உறுதிப்படுத்தினார்கள். இறைவனும் அடையாளங்களினாலும், அதிசயங்களினாலும், பலவித அற்புதங்களினாலும், தம்முடைய திட்டத்தின்படியே, பரிசுத்த ஆவியானவருடைய வரங்களையும் பகிர்ந்துகொடுத்து, அதற்குச் சாட்சி அளித்தார். வரப்போகும் உலகத்தைக்குறித்து நாம் பேசுகிறோமே, அதை இறைவன் தமது தூதர்களுக்குக் கீழ்ப்படுத்தவில்லை. ஒரு இடத்திலே ஒருவர் சாட்சியாய் சொல்லுகையில், “இறைவனே, மனிதனில் நீர் கரிசனை கொள்வதற்கும், மானிடமகனில் நீர் அக்கறை கொள்வதற்கும் அவன் எம்மாத்திரம்? நீர் அவர்களைத் தேவதூதர்களைப்பார்க்கிலும் சற்றுச் சிறியவர்களாகப் படைத்து, அவர்களை மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டினீர். எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.” இதில் இறைவன் எல்லாவற்றையும் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தினார் என்பதிலிருந்து, அவர் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தாமல் எதையுமே விட்டுவிடவில்லை என்பது தெளிவாகிறது. இருந்தபோதும் எல்லாம் அவர்களுக்கு இன்னும் அடிபணியவில்லை. ஆனாலும் சிறிது காலத்திற்கு இறைத்தூதர்களிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்ட இயேசுவோ, மரண வேதனையடைந்தவராய் இறைவனுடைய கிருபையினாலே, ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசிப்பார்த்தபடியால் இப்பொழுது மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம். அநேக பிள்ளைகளை மகிமைக்குள் கொண்டுவரும் பொருட்டு, அவர்களது இரட்சிப்பின் மூலகாரணரான கிறிஸ்துவை, வேதனை அனுபவிப்பதன் மூலமாக, முழுநிறைவுள்ள மூலகாரணராய் இறைவன் ஆக்கியது அவருக்கேற்ற செயலே. இறைவனுக்காகவும், இறைவனின் மூலமாகவுமே எல்லாம் இருக்கின்றன.

எபிரெயர் 2:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எனவே, நாம் கேட்டவைகளைவிட்டு விலகாமல் இருக்க, அவைகளை அதிக கவனமாகக் கவனிக்கவேண்டும். ஏனென்றால், தேவதூதர்கள் மூலமாகச் சொல்லப்பட்ட வசனத்திற்கு எதிரான எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. முதலாவது கர்த்தர் மூலமாக அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடம் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும், அற்புதங்களினாலும், அதிசயங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய விருப்பத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன்தாமே சாட்சி கொடுத்ததுமாக இருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலை இல்லாமல் இருப்போம் என்றால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம். இனிவரும் உலகத்தைப்பற்றிப் பேசுகிறோமே, அதை அவர் தூதர்களுக்குக் கீழ்ப்படுத்தவில்லை. ஒரு இடத்திலே ஒருவன் சாட்சியாக: மனிதனை நீர் நினைக்கிறதற்கும், மனிதனுடைய குமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்? அவனை தேவதூதர்களைவிட கொஞ்சம் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனுக்கு முடிசூட்டி, உம்முடைய கைகளின் செயல்களின்மீது அவனை அதிகாரியாக வைத்து, எல்லாவற்றையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர் என்று சொன்னான். எல்லாவற்றையும் அவனுக்குக் கீழ்ப்படுத்தினார் என்கிற காரியத்தில், அவர் அவனுக்குக் கீழ்ப்படுத்தாத பொருள் ஒன்றும் இல்லை; ஆனால், இன்னும் எல்லாம் அவனுக்கு கீழ்ப்பட்டிருப்பதைக் காணமுடியவில்லை. என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்க தேவதூதர்களைவிட கொஞ்சம் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைப் பார்க்கிறோம். ஏனென்றால், தமக்காகவும் தம்மூலமாகவும் எல்லாவற்றையும் உண்டாக்கினவர், அநேக பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கும்போது அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துவது அவருக்கு ஏற்றதாக இருந்தது.

எபிரெயர் 2:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)

ஆகையால், நமக்குச் சொல்லித்தரப்பட்ட விஷயங்களைப் பின்பற்றுவதில் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். அவ்வாறு இருந்தால் உண்மை வழியில் இருந்து விலகாமல் இருப்போம். தேவ தூதர்கள் மூலமாக தேவனால் சொல்லப்பட்ட அப்போதனைக்கு எதிராக யூதர்கள் செயல்பட்டபோதும், அதற்கு கீழ்ப்படியாமல் போனபோதும், ஒவ்வொரு முறையும் அதற்காக தண்டிக்கப்பட்டனர். நமக்கு அளிக்கப்பட்ட இரட்சிப்பு மிக உயர்ந்தது. எனவே நாம் இந்த இரட்சிப்பை முக்கியமானதாகக் கருதாமல் வாழும் பட்சத்தில் நாமும் தண்டிக்கப்படுவோம். இந்த இரட்சிப்பு கர்த்தராலேயே முதன் முதலாக அறிவிக்கப்பட்டது. இந்த இரட்சிப்பு உண்மையானது என்பதை அவரிடத்தில் கேட்டவர்கள் நிரூபித்துள்ளனர். அதிசயங்கள், பெரிய அடையாளங்கள், பலவகையான அற்புதங்கள் மூலம் தேவனும் கூட அதை நிரூபித்துள்ளார். பரிசுத்த ஆவியானவரிடமிருந்து மக்களுக்கு வரங்களைக் கொடுப்பதன் மூலமும் நிரூபித்துள்ளார். அவர் விரும்பிய விதத்திலேயே அந்த வரங்களை அவர் கொடுத்தார். வரப்போகிற புதிய உலகத்தை ஆள்பவர்களாக தேவன் தேவதூதர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. நாம் பேசிக்கொண்டிருக்கிற உலகம் அதுதான். சில இடத்தில் “தேவனே! நீர் ஏன் மனிதரைப் பற்றி அக்கறை கொள்கிறீர்? மனிதகுமாரனைப் பற்றியும் ஏன் அக்கறை கொள்கிறீர்? அவர் அவ்வளவு முக்கியமானவரா? கொஞ்ச நேரத்திற்கு தேவ தூதர்களைவிட அவரைச் சிறியவர் ஆக்கிவிட்டீர். அவரை மகிமையாலும் கனத்தாலும் முடிசூட்டினீர். நீர் எல்லாவற்றையும் அவரது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தீர்” என்று எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு அனைத்தையும் அவரது கட்டுப்பாட்டுக்குள் தேவன் கொண்டு வந்துவிட்டதால் அவருக்குக் கட்டுப்படாதது எதுவுமில்லை எனலாம். ஆனால் அவர் அனைத்தையும் ஆள்வதை நாம் இன்னும் பார்க்கவில்லை. சிறிது காலத்திற்கு இயேசு தேவதூதர்களுக்கும் தாழ்ந்தவராக்கப்பட்டிருந்தார். ஆனால் இப்போது துன்பப்பட்டு மரித்ததால் மகிமையாலும், கனத்தாலும் முடிசூடிக்கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். தேவனுடைய கிருபையினால் ஒவ்வொரு மனிதனுக்காகவும் இயேசு மரித்தார். தேவனே அனைத்தையும் படைத்தவர். அனைத்தும் அவரது மகிமைக்காகவே உள்ளன. தன் மகிமையைப் பகிர்ந்துகொள்ள ஏராளமான மக்களை அவர் விரும்பினார். எனவே, தமக்குத் தேவையானவற்றை அவர் செய்தார். மக்களை இரட்சிப்புக்கு வழி நடத்திச் செல்ல பூரணமானவராக தேவன் இயேசுவை ஏற்படுத்தினார். இயேசு தன் துன்பத்தால் ஒரு பூரண இரட்சகரானார்.