எபிரெயர் 13:11-16

எபிரெயர் 13:11-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஏனென்றால், எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களினிமித்தமாகப் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் பாளயத்துக்குப் புறம்பே சுட்டெரிக்கப்படும். அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார். ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம். நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே நாடித்தேடுகிறோம். ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம். அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம் பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்.

எபிரெயர் 13:11-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பிரதான ஆசாரியன் மிருகங்களின் இரத்தத்தை, மகா பரிசுத்த இடத்திற்கு பாவநிவாரண காணிக்கையாகக் கொண்டுபோகிறான். ஆனால் மிருகங்களின் உடல்களோ முகாமுக்கு வெளியே எரிக்கப்படுகின்றன. இவ்விதமே இயேசுவும்கூட, நகர வாசலுக்கு வெளியே வேதனைகளை அனுபவித்து, தமது சொந்த இரத்தத்தின் மூலமாக மக்களைப் பரிசுத்தமாக்கினார். ஆகையால், அவர் சுமந்த அவமானத்தை நாமும் சுமந்து, முகாமுக்கு வெளியே அவரிடம் போவோம். ஏனெனில், நித்தியமான நகரம் நமக்கு இங்கு இல்லை. வரப்போகின்ற ஒரு நகரத்திற்காகவே நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். ஆகவே இயேசுவின் மூலமாய் இறைவனுடைய பெயரை அறிக்கையிடுகிற உதடுகளின் கனியை, துதியின் காணிக்கையாக இறைவனுக்கு இடைவிடாது செலுத்துவோமாக. நன்மைசெய்ய மறக்கவேண்டாம், உங்களிடம் இருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் மறந்துவிடவேண்டாம். இப்படியான பலிகளிலேயே இறைவன் பிரியப்படுகிறார்.

எபிரெயர் 13:11-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஏனென்றால், எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களுக்காகப் பரிசுத்த இடத்திற்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் முகாமிற்கு வெளியே சுட்டெரிக்கப்படும். அப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே மக்களைப் பரிசுத்தம் பண்ணுவதற்காக நகர வாசலுக்கு வெளியே பாடுகள்பட்டார். ஆகவே, நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, முகாமிற்கு வெளியே அவரிடம் புறப்பட்டுப் போவோம். நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே விரும்பித்தேடுகிறோம். ஆகவே, அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர் மூலமாக எப்போதும் தேவனுக்குச் செலுத்துவோம். அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம் பண்ணவும் மறக்காமல் இருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாக இருக்கிறார்.

எபிரெயர் 13:11-16 பரிசுத்த பைபிள் (TAERV)

பிரதான ஆசாரியர் மிருக இரத்தத்தை எடுத்துக்கொண்டு மிகப் பரிசுத்தமான இடத்திற்குள் செல்லுகிறார். அவர் பாவங்களுக்காக அதனைச் செலுத்துகிறார். ஆனால் அந்த மிருகங்களின் சரீரம் வெளியே எரிக்கப்படுகிறது. எனவே, இயேசுவும் நகரத்திற்கு வெளியே துன்பப்பட்டார். அவர் தன் இரத்தத்தைப் பாவத்துக்காகவே சிந்தினார். தன் மக்களைப் பரிசுத்தப்படுத்துவதற்காக இரத்தம் சிந்தி மரித்தார். எனவே, நாம் கூடாரத்துக்கு வெளியே சென்று அவருடைய அவமானத்தில் பகிர்ந்துகொள்வோம். இயேசுவுக்கு நேர்ந்த அதே அவமானத்தை நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த உலகத்தில் என்றென்றும் நிலைத்திருக்கிற ஒரு நகரம் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் வரப்போகிற என்றென்றைக்கும் நிலைத்திருக்கிற நகரத்திற்காகக் காத்திருக்கிறோம். எனவே, அவர் மூலமாக நம் தினசரி துதி காணிக்கையை நாம் தேவனுக்கு வழங்குவோம். அது அவர் பெயரைத் துதிக்கும் உதடுகளின் கனியாகும். மற்றவர்களுக்கு நன்மை செய்யவும், பகிர்ந்துகொள்ளவும் மறக்காதீர்கள். இவையே தேவன் விரும்பும் பலியாகும்.