எபிரெயர் 13:1-7

எபிரெயர் 13:1-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஒருவரிலொருவர், சகோதர அன்பில் தொடர்ந்து நிலைத்திருங்கள். அந்நியரை உபசரிக்க மறந்துவிடாதீர்கள். ஏனெனில் அவ்விதம் செய்ததினால், சிலர் அறியாமல் இறைத்தூதர்களையும் உபசரித்திருக்கிறார்கள். சிறையில் இருப்பவர்களை, நீங்களும் அவர்களோடு சிறையில் இருப்பதுபோலவும், துன்பப்படுகிறவர்களை, நீங்களும் அவர்களோடு துன்பப்படுவதைப்போலவும் எண்ணிக்கொண்டு ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். திருமணம் எல்லோராலும் மதிக்கப்பட வேண்டும். திருமணப்படுக்கை தூய்மையாக காக்கப்படவேண்டும். விபசாரத்திலும், முறைகேடான பாலுறவிலும் ஈடுபடுகிறவர்களை இறைவன் நியாயந்தீர்ப்பார். பண ஆசையிலிருந்து விலகி, உங்களிடம் இருப்பதைக்கொண்டு மனத்திருப்தியுடன் வாழுங்கள். ஏனெனில் இறைவன், “நான் உன்னைவிட்டு ஒருபோதும் விலகமாட்டேன்; நான் உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்” என்று சொல்லியிருக்கிறாரே. எனவே நாமும் மனத்தைரியத்துடன், “கர்த்தர் எனக்கு உதவியாளர்; நான் பயப்படமாட்டேன். மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்?” என்று சொல்வோம். உங்களுக்கு இறைவனுடைய வார்த்தையைக் கற்றுக்கொடுத்த தலைவர்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அவர்களுடைய வாழ்க்கை முறையின் பிரதிபலனை யோசித்துப் பார்த்து, அவர்களுடைய விசுவாசத்தையே நீங்களும் பின்பற்றுங்கள்.

எபிரெயர் 13:1-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சகோதர அன்பு நிலைத்திருக்கட்டும். அந்நியர்களை உபசரிக்க மறக்காதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதர்களையும் உபசரித்ததுண்டு. சிறைச்சாலையில் இருக்கிறவர்களோடு நீங்களும் சிறைச்சாலையிலே இருக்கிறவர்களைப்போல அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்; அவர்களுடைய சரீரங்களைப்போல உங்களுடைய சரீரங்களும் தீங்கு அனுபவித்ததாக நினைத்து, தீங்கு அனுபவிக்கிறவர்களை நினைத்துக்கொள்ளுங்கள். திருமணம் எல்லோருக்குள்ளும் கனமுள்ளதாகவும், பரிசுத்தமாகவும் இருப்பதாக; வேசிக்கள்ளர்களையும் விபசாரக்காரர்களையும் தேவன் நியாயந்தீர்ப்பார். நீங்கள் பணஆசை இல்லாதவர்களாக நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகளே போதும் என்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதும் இல்லை, உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. அதினாலே நாம் தைரியத்தோடு: கர்த்தர் எனக்கு உதவிசெய்கிறவர், நான் பயப்படமாட்டேன், மனிதன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே. தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாகச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.

எபிரெயர் 13:1-7 பரிசுத்த பைபிள் (TAERV)

கிறிஸ்துவுக்குள் நீங்கள் சகோதர சகோதரிகளாவீர்கள். தொடர்ந்து ஒருவரை ஒருவர் நேசியுங்கள். மக்களை உங்கள் வீட்டில் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு எப்பொழுதும் உதவி செய்யுங்கள். இதனால் சிலர் அறியாமலேயே தேவ தூதர்களையும் உபசரிப்பதுண்டு. நீங்களும் அவர்களோடு சிறையில் இருப்பதுபோல் சிறையிலுள்ள மக்களை நினைத்துக்கொள்ளுங்கள். நீங்களே துன்பமுறுவதைப்போல், துன்பமுற்றுக் கொண்டிருப்பவர்களையும் நினைத்துக்கொள்ளுங்கள். திருமணம் என்பது அனைவராலும் மதிக்கத்தக்கது. இது இரண்டு பேருக்கு இடையில் மிகப் பரிசுத்தமாகக் கருதப்படுகிறது. விபசாரம், சோரம் போன்ற பாலியல் குற்றங்களைச் செய்கின்றவர்களை தேவன் கடுமையாகத் தண்டிப்பார். பண ஆசையில் இருந்து உனது வாழ்வை விலக்கிவை. உன்னிடம் இருப்பதைக்கொண்டு திருப்தி அடைந்துகொள். தேவன், “நான் உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன். நான் உன்னை விட்டு விலகமாட்டேன்” என்று கூறியிருக்கிறார். எனவே, “கர்த்தர் எனக்கு உதவுபவர். நான் அச்சப்படத் தேவையில்லை. எவரும் எனக்கு எதுவும் செய்ய முடியாது” என்று உறுதியாக நீங்கள் சொல்லலாம். உங்கள் தலைவர்களை நினைத்துப்பாருங்கள். அவர்கள் தேவனுடைய செய்தியைக் கற்றுத்தந்தார்கள். அவர்கள் எவ்வாறு வாழ்ந்து மடிந்தார்கள் என எண்ணுங்கள். அவர்களின் விசுவாசத்தைக் கடைப்பிடியுங்கள்.

எபிரெயர் 13:1-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது. அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு. கட்டப்பட்டிருக்கிறவர்களோடே நீங்களும் கட்டப்பட்டவர்கள்போல அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்களும் சரீரத்தோடிருக்கிறவர்களென்று அறிந்து, தீங்கனுபவிக்கிறவர்களை நினைத்துக்கொள்ளுங்கள். விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார். நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே. தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.