எபிரெயர் 11:35-38

எபிரெயர் 11:35-38 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

விசுவாசத்தினாலேயே பெண்கள் தங்கள் இறந்தவர்களை மீண்டும் உயிரோடப் பெற்றுக்கொண்டார்கள். ஆனால் வேறுசிலரோ துன்புறுத்தப்பட்டும், ஒரு மேன்மையான உயிர்த்தெழுதலைப் பெற்றுக்கொள்வதற்காகவே விடுதலை பெற்றுக்கொள்ள மறுத்தார்கள். இன்னும் சிலர் ஏளனத்துக்குள்ளாகி, சவுக்கால் அடிக்கப்பட்டார்கள். வேறுசிலர் விலங்கிடப்பட்டவர்களாய், சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்கள் கல்லெறியப்பட்டார்கள், இரண்டாக அறுக்கப்பட்டார்கள், வாளினால் கொலைசெய்யப்பட்டார்கள். அவர்கள் செம்மறியாட்டுத் தோல்களையும், வெள்ளாட்டுத் தோல்களையும் உடுத்திக்கொண்டு திரிந்தார்கள். குறைவையும், உபத்திரவத்தையும், துன்பத்தையும் அநுபவித்தார்கள். இந்த உலகமோ அவர்களுக்குத் தகுதியற்றதாயிருந்தது. அவர்கள் பாலைவனங்களிலும், மலைகளிலும் அலைந்து, குகைகளிலும், நிலத்திலுள்ள கிடங்குகளிலும் வாழ்ந்தார்கள்.

எபிரெயர் 11:35-38 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பெண்கள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடு எழுந்திருக்கப் பெற்றார்கள்; வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடைவதற்கு, விடுதலைபெறச் சம்மதிக்காமல், வாதிக்கப்பட்டார்கள்; வேறுசிலர் நிந்தைகளையும், அடிகளையும், கட்டுகளையும், சிறைக்காவலையும் அனுபவித்தார்கள்; கல்லெறியப்பட்டார்கள், வாளால் அறுக்கப்பட்டார்கள், பரீட்சைப் பார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும், உபத்திரவத்தையும், துன்பத்தையும் அனுபவித்தார்கள்; உலகம் அவர்களுக்குத் தகுதியாக இருக்கவில்லை; அவர்கள் வனாந்திரங்களிலும், மலைகளிலும், குகைகளிலும், பூமியின் வெடிப்புகளிலும், சிதறி அலைந்தார்கள்.

எபிரெயர் 11:35-38 பரிசுத்த பைபிள் (TAERV)

இறந்துபோன தங்களுடையவர்களை பெண்கள் மீண்டும் அடைந்தார்கள். மற்றவர்கள் வாதைக்குள்ளானபோதும் விடுபட மறுத்தார்கள். மரணத்திலிருந்து ஒரு சிறந்த வாழ்விற்கென உயிரோடு எழுப்பப்படுவதற்காக இதனைச் செய்தார்கள். வேறு சிலர் கேலிசெய்யப்பட்டனர்; அடிக்கப்பட்டனர்; கட்டப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர். சிலர் கல்லால் எறியப்பட்டார்கள்; வாள்களினால் இரண்டு துண்டாகக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். சிலர் செம்மறியாட்டுத் தோலையும், வெள்ளாட்டுத் தோலையும் போர்த்துக்கொண்டு திரிந்து ஏழ்மையையும், துன்பத்தையும், கசப்புகளையும் அனுபவித்தனர். உலகம் அந்த உத்தமர்களுக்கு உகந்ததாக இல்லை. அவர்கள் மலைகளிலும் பாலைவனங்களிலும் அலைந்து திரிந்தனர். மலைக் குகைகளிலும் பூமியில் உள்ள பொந்துகளிலும் வாழ்ந்தார்கள்.

எபிரெயர் 11:35-38 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஸ்திரீகள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப் பெற்றார்கள்; வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்படிக்கு, விடுதலைபெறச் சம்மதியாமல், வாதிக்கப்பட்டார்கள்; வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்; கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்; உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை; அவர்கள் வனாந்தரங்களிலேயும் மலைகளிலேயும் குகைகளிலேயும் பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள்.