எபிரெயர் 11:20-31

எபிரெயர் 11:20-31 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

விசுவாசத்தினாலேயே ஈசாக்கு, யாக்கோபு மற்றும் ஏசாவின் எதிர்காலத்தைக் குறித்து ஆசீர்வதித்தான். யாக்கோபு தான் சாகும் வேளையில் விசுவாசத்தினாலேயே யோசேப்பினுடைய மகன்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்தான். பின்பு தனது கோலின் மேற்புறத்தில் சாய்ந்துகொண்டு வழிபட்டான். விசுவாசத்தினாலேயே யோசேப்பு தனது முடிவுகாலம் நெருங்கியபோது, இஸ்ரயேலர் எகிப்திலிருந்து புறப்பட்டுப் போவார்கள் என்பதைக் குறித்துப்பேசி, தனது எலும்புகளைக்குறித்துக் கட்டளை கொடுத்தான். மோசேயின் பெற்றோர் அவன் பிறந்தபோது, விசுவாசத்தினாலேயே அவனை மூன்று மாதத்திற்கு ஒளித்துவைத்தார்கள். அவன் ஒரு சாதாரண குழந்தையல்ல என்பதை உணர்ந்துகொண்டதால், அவர்கள் அரச கட்டளைக்குப் பயப்படவில்லை. விசுவாசத்தினாலேயே மோசே வளர்ந்து பெரியவனானபோது, தான் பார்வோனுடைய மகளின் மகன் என்று சொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள மறுத்தான். மோசே விரைவில் கடந்துபோகும் பாவச் சிற்றின்பங்களை அனுபவிப்பதைப் பார்க்கிலும், இறைவனுடைய மக்களுடன் சேர்ந்து கஷ்டங்களை அனுபவிப்பதையே தெரிந்துகொண்டான். கிறிஸ்துவுக்காக அவமானப்படுவது எகிப்தின் செல்வங்களைப் பார்க்கிலும் மேலான மதிப்புடையது என்றே கருதினான். ஏனெனில், அவன் வரப்போகின்ற வெகுமதிக்காகவே எதிர்பார்த்துக் காத்திருந்தான். விசுவாசத்தினாலேயே மோசே அரசனின் கோபத்திற்கும் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் புறப்பட்டுப் போனான். ஏனெனில், அவன் கண்ணுக்குக் காணப்படாத இறைவனைக் கண்டவனாய் மனவுறுதியுடன் இருந்தான். தலைப்பிள்ளைகளை அழிக்கும் இறைத்தூதன், இஸ்ரயேலரின் தலைப்பிள்ளைகளை தொடாதபடி விசுவாசத்தினாலேயே மோசே பஸ்காவையும், கதவு நிலைகளில் இரத்தத்தைத் தெளிப்பதையும் கைக்கொண்டான். விசுவாசத்தினாலேயே இஸ்ரயேல் மக்கள் உலர்ந்த தரையில் நடப்பதுபோல், செங்கடலைக் கடந்து சென்றார்கள். ஆனால், அவ்வாறு எகிப்தியர் செய்ய முற்பட்டபோது, அவர்கள் கடலில் மூழ்கிப்போனார்கள். விசுவாசத்தினாலேயே இஸ்ரயேல் மக்கள் எரிகோ பட்டணத்தைச்சுற்றி ஏழு நாட்கள் அணிவகுத்து நடந்தபோது, எரிகோவின் மதில்கள் இடிந்து விழுந்தன. விசுவாசத்தினாலேயே ராகாப் என்ற விலைமகள், இஸ்ரயேல் ஒற்றர்களை வரவேற்று, இறைவனுக்குக் கீழ்ப்படியாதவர்களுடனேகூட கொல்லப்படாமல் தப்பினாள்.

எபிரெயர் 11:20-31 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

விசுவாசத்தினாலே ஈசாக்கு வருகின்ற காரியங்களைக்குறித்து யாக்கோபையும் ஏசாவையும் ஆசீர்வதித்தான். விசுவாசத்தினாலே யாக்கோபு தன் மரணகாலத்தில் யோசேப்பினுடைய குமாரர்கள் இருவரையும் ஆசீர்வதித்து, தன் கோலின் முனையிலே சாய்ந்து தொழுதுகொண்டான். விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்கள் என்பதைப்பற்றித் தன்னுடைய கடைசிகாலத்தில் பேசி, தன் எலும்புகளைத் தங்களோடு எடுத்துக்கொண்டுபோகக் கட்டளைக் கொடுத்தான். மோசே பிறந்தபோது அவனுடைய பெற்றோர் அவனை அழகான குழந்தையென்று கண்டு, விசுவாசத்தினாலே, ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படாமல் அவனை மூன்று மாதங்கள் ஒளித்து வைத்தார்கள். விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்று சொல்லப்படுவதை வெறுத்து, நிலையில்லாத பாவசந்தோஷங்களை அனுபவிப்பதைவிட தேவனுடைய மக்களோடு துன்பத்தை அனுபவிப்பதையே தெரிந்துகொண்டு, இனிவரும் பலன்மேல் நோக்கமாக இருந்து, எகிப்தில் உள்ள பொக்கிஷங்களைவிட கிறிஸ்துவுக்காக வரும் நிந்தையை அதிக பாக்கியம் என்று நினைத்தான். விசுவாசத்தினாலே அவன் கண்ணுக்குத் தெரியாதவரைக் காண்கிறதுபோல உறுதியாக இருந்து, ராஜாவின் கோபத்திற்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான். விசுவாசத்தினாலே, தலைப்பிள்ளைகளைக் கொல்லுகிறவன் இஸ்ரவேலரைத் தொடாமல் இருக்க, அவன் பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான். விசுவாசத்தினாலே அவர்கள் செங்கடலை உலர்ந்த தரையைக் கடந்துபோவதைப்போலக் கடந்துபோனார்கள்; எகிப்தியரும் அப்படிக்கடந்துபோகத் துணிந்து மூழ்கிப்போனார்கள். விசுவாசத்தினாலே எரிகோ பட்டணத்தின் மதில்கள் ஏழுநாட்கள் சுற்றிவரப்பட்டு விழுந்தது. விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரர்களைச் சமாதானத்தோடு ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடு சேர்ந்து அழிந்துபோகாமல் இருந்தாள்.

எபிரெயர் 11:20-31 பரிசுத்த பைபிள் (TAERV)

யாக்கோபையும் ஏசாவையும் ஈசாக்கு ஆசீர்வதித்தான். ஈசாக்கு இதனை விசுவாசத்தின் அடிப்டையில் செய்தான். யாக்கோபு யோசேப்பின் குமாரர்களில் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்தான். யாக்கோபு தான் இறந்துகொண்டிருக்கும்போது இதனைச் செய்தான். அவன் தனது கோலின் முனையில் சாய்ந்துகொண்டு தொழுதான். யாக்கோபு இப்படிச் செய்ததற்கும் அவனது விசுவாசமே காரணமாகும். யோசேப்பு இறந்துகொண்டிருந்த நேரத்தில் இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டுப் போவதைப் பற்றி பேசினான். அவன் இதனை விசுவாசத்தால் சொன்னான். தனது சரீரத்தை என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் மக்களிடம் சொன்னான். மோசே பிறந்த பிறகு, அவன் அழகாக இருந்ததை அவன் பெற்றோர்கள் கண்டு மூன்று மாத காலத்திற்கு மறைத்து வைத்தார்கள். விசுவாசத்தின் அடிப்படையிலேயே இதைச் செய்தனர். அரச கட்டளைக்குப் பயப்படாமல் இதை செய்தனர். மோசே வளர்ந்து பெரியவன் ஆனான். பார்வோனுடைய குமாரத்தியின் குமாரன் என அழைக்கப்படுவதை மறுத்தான். பாவத்துக்குரிய தற்காலிக சந்தோஷத்தை அனுபவிப்பதைவிட தேவனுடய மக்களோடு துன்பத்தை அனுபவிப்பதையே அவன் தேர்ந்தெடுத்தான். எகிப்தின் கருவூலத்தைவிட கிறிஸ்துவுக்காகத் தாங்கிக்கொண்ட பாடுகளை மதிப்புமிக்கதாக அவன் நினைத்தான். ஏனெனில் வர இருக்கிற பலனுக்காக அவன் பார்த்திருந்தான். மோசே எகிப்திலிருந்து வெளியேறினான். தன் விசுவாசத்தின் அடிப்படையில் அப்படிச் செய்தான். அவன் ராஜாவின் கோபத்துக்கும் அஞ்சவில்லை. அவன் தொடர்ந்து உறுதியாக இருந்தான். ஒருவராலும் பார்க்க இயலாத தேவனை அவனால் பார்க்க முடிந்தது. அவன் பஸ்காவைத் தயார் செய்தான். கதவின் மீது இரத்தத்தைப் பூசினான். யூதமக்களின் முதல் ஆண் குழந்தையை மரண தூதன் கொல்லாதபடிக்கு இதைச் செய்தான். மோசே இதனை விசுவாசத்தோடு செய்தான். மோசே தன் மக்களை அழைத்துக்கொண்டு போனான். அப்போது செங்கடல் காய்ந்த தரையைப் போலாயிற்று. அவர்களின் விசுவாசமே இதற்குக் காரணமாகும். எகிப்தியர்களும் அவ்வாறே கடலைக் கடக்க முனைந்து அமிழ்ந்துபோனார்கள். எரிகோவின் சுவர்கள், தேவனது மக்களின் விசுவாசத்தினால் விழுந்துபோனது. அவர்கள் ஏழு நாட்கள் அந்தச் சுவர்களைச் சுற்றி வந்தனர். அப்புறம் அச்சுவர்கள் விழுந்தன. ராகாப் என்னும் விலைமாதும் இஸ்ரவேல் ஒற்றர்களை நண்பர்களைப்போல வரவேற்றாள். அவளது விசுவாசத்தின் காரணமாகக் கீழ்ப்படியாதவர்கள் கொல்லப்பட்டபோது அவள் தன் வீட்டாருடன் சேதமடையாமல் தப்பினாள்.

எபிரெயர் 11:20-31 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

விசுவாசத்தினாலே ஈசாக்கு வருங்காரியங்களைக்குறித்து யாக்கோபையும் ஏசாவையும் ஆசீர்வதித்தான். விசுவாசத்தினாலே யாக்கோபு தன் மரணகாலத்தில் யோசேப்பினுடைய குமாரர் இருவரையும் ஆசீர்வதித்து, தன் கோலின் முனையிலே சாய்ந்து தொழுதுகொண்டான். விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்களென்பதைப்பற்றித் தன் அந்தியகாலத்தில் பேசி, தன் எலும்புகளைக்குறித்துக் கட்டளைகொடுத்தான். மோசே பிறந்தபோது அவனுடைய தாய்தகப்பன்மார் அவனை அழகுள்ள பிள்ளையென்று கண்டு, விசுவாசத்தினாலே, ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படாமல் அவனை மூன்றுமாதம் ஒளித்துவைத்தார்கள். விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு, இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான். விசுவாசத்தினாலே அவன் அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்து, ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான். விசுவாசத்தினாலே, முதற்பேறானவைகளைச் சங்கரிக்கிறவன் இஸ்ரவேலரைத் தொடாதபடிக்கு, அவன் பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான். விசுவாசத்தினாலே அவர்கள் சிவந்த சமுத்திரத்தை உலர்ந்த தரையைக் கடந்துபோவதுபோலக் கடந்து போனார்கள்; எகிப்தியர் அப்படிச் செய்யத்துணிந்து அமிழ்ந்துபோனார்கள். விசுவாசத்தினாலே எரிகோ பட்டணத்தின் மதில்கள் ஏழுநாள் சுற்றிவரப்பட்டு விழுந்தது. விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடேகூடச் சேதமாகாதிருந்தாள்.