எபிரெயர் 11:1-31

எபிரெயர் 11:1-31 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

விசுவாசம் என்பது, நாம் எதிர்பார்த்திருக்கும் காரியங்களைக்குறித்த நிச்சயமும், நம்மால் காண முடியாதவற்றைக் குறித்த உறுதியுமாயிருக்கிறது. இப்படிப்பட்ட விசுவாசத்தினாலேயே நமது முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள். விசுவாசத்தினாலேயே நாம் உலகங்கள் அனைத்தும் இறைவன் தனது வார்த்தையினால் கட்டளையிட உருவாக்கப்பட்டன என்று விளங்கிக்கொள்கிறோம். ஆகவே காணப்படுகிறவைகள், காணப்படாதவற்றிலிருந்து உண்டாயிற்று. விசுவாசத்தினாலேயே ஆபேல், காயீன் செலுத்திய பலியைப் பார்க்கிலும் மேன்மையான பலியை இறைவனுக்குச் செலுத்தினான். இறைவனே அவனுடைய காணிக்கையைக்குறித்து நன்றாகப் பேசியபோது, விசுவாசத்தினாலேயே அவன், நீதிமான் என நற்சாட்சி பெற்றான். விசுவாசத்தினாலேயே ஆபேல் இறந்து போனபோதும், இன்னும் பேசிக்கொண்டே இருக்கிறான். விசுவாசத்தினாலேயே ஏனோக்கு மரணத்தை அனுபவிக்காமல், இவ்வாழ்க்கையிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டான். இறைவன் அவனை எடுத்துக்கொண்டதனால், அவன் காணாமல் போய்விட்டான். அவன் இறைவனால் எடுத்துக்கொள்ளப்படும் முன்பு, அவன் இறைவனுக்குப் பிரியமானவன் என்று நற்சாட்சி பெற்றிருந்தான். விசுவாசம் இல்லாமல் இறைவனை ஒருபோதும் பிரியப்படுத்தமுடியாது. ஏனெனில் இறைவனிடம் வருகிறவர்கள், அவர் இருக்கிறார் என்றும், அவர் தம்மை முழுமனதோடு தேடுகிறவர்களுக்கு வெகுமதியைக் கொடுக்கிறவர் என்றும் விசுவாசிக்க வேண்டும். விசுவாசத்தினாலேயே நோவா, இன்னும் காணப்படாத காரியங்களைக்குறித்து எச்சரிக்கப்பட்டபோது, தனது குடும்பத்தை இரட்சிக்கும்படி, இறைபயத்துடனே ஒரு பேழையைச் செய்தான். அவன் தன்னுடைய விசுவாசத்தினாலேயே உலகத்தை நியாயந்தீர்த்து, விசுவாசத்தினால் வரும் நீதிக்கு உரிமையாளன் ஆனான். விசுவாசத்தினாலேயே ஆபிரகாம் தான் உரிமைச்சொத்தாகப் பெறவிருந்த இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, தான் எங்கே போகிறேன் என்றுகூட அவன் அறியாதிருந்ததும் கீழ்ப்படிந்து புறப்பட்டான். விசுவாசத்தினாலேயே ஆபிரகாம் பிறநாட்டில் இருக்கும் ஒரு அந்நியனைப்போல் வாக்குக்கொடுத்த நாட்டில் தனது குடியிருப்பை அமைத்தான். அவன் கூடாரங்களிலேயே குடியிருந்தான். அதே வாக்குத்தத்தத்திற்கு உரிமையாளர்களான ஈசாக்கும், யாக்கோபும் கூடாரங்களிலேயே குடியிருந்தார்கள். ஏனெனில், இறைவனே சிற்பியாக கட்டுபவராக அஸ்திபாரமிட்ட நகரத்தை ஆபிரகாம் எதிர்பார்த்துக் காத்திருந்தான். சாராள் வயது சென்றவளும், மலடியுமாயிருந்தபோதும் பிள்ளைபெறும் ஆற்றலைப் பெற்றாள். ஏனெனில் தனக்கு வாக்குத்தத்தத்தைக் கொடுத்த இறைவன் வாக்குமாறாதவர் என்று அவள் நம்பினாள். ஆபிரகாமின் உடல் வல்லமையிழந்து, உயிரற்றதுபோல் இருந்தபோதும், வானத்திலுள்ள நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரையிலுள்ள மணலைப்போலவும் எண்ணற்ற மக்கள் அவனுக்கு பிறந்தனர். விசுவாசத்துடன் வாழ்ந்த இந்த மக்கள் எல்லோரும் இறக்கும்போதும், அந்த விசுவாசத்திலே இறந்தார்கள். ஏனெனில் அவர்களோ, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை அப்பொழுது பெற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் தூரத்திலிருந்து அதைக்கண்டு, வரவேற்று மகிழ்ச்சி கொண்டவர்களாக மட்டுமே இருந்தார்கள். தாங்கள் பூமியிலே அந்நியர் என்பதையும், தற்காலிக குடிகள் என்பதையும் ஏற்றுக்கொண்டார்கள். இப்படி அறிக்கையிடுகின்ற மக்கள், தாங்கள் தங்களுக்குச் சொந்தமான ஒரு நாட்டையே தேடுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. தாங்கள் தேடுகிற நாடு தாங்கள் விட்டுப் புறப்பட்டு வந்த நாடே என அவர்கள் நினைத்திருந்தால், அவர்கள் அங்கு திரும்பிப் போகக்கூடிய தருணம் அவர்களுக்குக் கிடைத்திருக்கும். ஆனால் அவர்களோ அதிலும் மேன்மையான நாட்டை, ஒரு பரலோக நாட்டையேத் தேடினார்கள். அதை அடையவே ஆசைப்பட்டார்கள். ஆகவே இறைவன், “அவர்களுடைய இறைவன்” என்று தான் அழைக்கப்படுவதை வெட்கமாக எண்ணவில்லை. ஏனெனில் இறைவன், அவர்களுக்கென்று ஒரு நகரத்தை ஆயத்தம் பண்ணியிருக்கிறார். விசுவாசத்தினாலேயே ஆபிரகாம் இறைவன் அவனைச் சோதித்தபோது, ஈசாக்கைப் பலியாகச் செலுத்தினான். வாக்குத்தத்தங்களைப் பெற்றுக்கொண்டவன் தனது ஒரேயொரு மகனைப் பலியாகக் கொடுக்கவும் ஆயத்தமாயிருந்தான். “ஈசாக்கின் மூலமே உனக்கு சந்ததி உண்டாகும்” என்று இறைவன் அவனுக்குச் சொல்லியிருந்தும்கூட, அவன் இப்படிச் செய்தான். இறந்தவர்களையும் உயிரோடு எழுப்ப இறைவனால் முடியும் என்று ஆபிரகாம் உணர்ந்திருந்தான். ஒரு வகையில் அவன் ஈசாக்கை மரணத்திலிருந்தே மீண்டும் பெற்றுக்கொண்டான் என்று சொல்லலாம். விசுவாசத்தினாலேயே ஈசாக்கு, யாக்கோபு மற்றும் ஏசாவின் எதிர்காலத்தைக் குறித்து ஆசீர்வதித்தான். யாக்கோபு தான் சாகும் வேளையில் விசுவாசத்தினாலேயே யோசேப்பினுடைய மகன்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்தான். பின்பு தனது கோலின் மேற்புறத்தில் சாய்ந்துகொண்டு வழிபட்டான். விசுவாசத்தினாலேயே யோசேப்பு தனது முடிவுகாலம் நெருங்கியபோது, இஸ்ரயேலர் எகிப்திலிருந்து புறப்பட்டுப் போவார்கள் என்பதைக் குறித்துப்பேசி, தனது எலும்புகளைக்குறித்துக் கட்டளை கொடுத்தான். மோசேயின் பெற்றோர் அவன் பிறந்தபோது, விசுவாசத்தினாலேயே அவனை மூன்று மாதத்திற்கு ஒளித்துவைத்தார்கள். அவன் ஒரு சாதாரண குழந்தையல்ல என்பதை உணர்ந்துகொண்டதால், அவர்கள் அரச கட்டளைக்குப் பயப்படவில்லை. விசுவாசத்தினாலேயே மோசே வளர்ந்து பெரியவனானபோது, தான் பார்வோனுடைய மகளின் மகன் என்று சொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள மறுத்தான். மோசே விரைவில் கடந்துபோகும் பாவச் சிற்றின்பங்களை அனுபவிப்பதைப் பார்க்கிலும், இறைவனுடைய மக்களுடன் சேர்ந்து கஷ்டங்களை அனுபவிப்பதையே தெரிந்துகொண்டான். கிறிஸ்துவுக்காக அவமானப்படுவது எகிப்தின் செல்வங்களைப் பார்க்கிலும் மேலான மதிப்புடையது என்றே கருதினான். ஏனெனில், அவன் வரப்போகின்ற வெகுமதிக்காகவே எதிர்பார்த்துக் காத்திருந்தான். விசுவாசத்தினாலேயே மோசே அரசனின் கோபத்திற்கும் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் புறப்பட்டுப் போனான். ஏனெனில், அவன் கண்ணுக்குக் காணப்படாத இறைவனைக் கண்டவனாய் மனவுறுதியுடன் இருந்தான். தலைப்பிள்ளைகளை அழிக்கும் இறைத்தூதன், இஸ்ரயேலரின் தலைப்பிள்ளைகளை தொடாதபடி விசுவாசத்தினாலேயே மோசே பஸ்காவையும், கதவு நிலைகளில் இரத்தத்தைத் தெளிப்பதையும் கைக்கொண்டான். விசுவாசத்தினாலேயே இஸ்ரயேல் மக்கள் உலர்ந்த தரையில் நடப்பதுபோல், செங்கடலைக் கடந்து சென்றார்கள். ஆனால், அவ்வாறு எகிப்தியர் செய்ய முற்பட்டபோது, அவர்கள் கடலில் மூழ்கிப்போனார்கள். விசுவாசத்தினாலேயே இஸ்ரயேல் மக்கள் எரிகோ பட்டணத்தைச்சுற்றி ஏழு நாட்கள் அணிவகுத்து நடந்தபோது, எரிகோவின் மதில்கள் இடிந்து விழுந்தன. விசுவாசத்தினாலேயே ராகாப் என்ற விலைமகள், இஸ்ரயேல் ஒற்றர்களை வரவேற்று, இறைவனுக்குக் கீழ்ப்படியாதவர்களுடனேகூட கொல்லப்படாமல் தப்பினாள்.

எபிரெயர் 11:1-31 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாக இருக்கிறது. அதினாலே முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள். விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையாலே உண்டாக்கப்பட்டது என்றும், இவ்விதமாக, காணப்படுகிறவைகள் காணப்படுகிறவைகளால் உண்டாகவில்லை என்றும் அறிந்திருக்கிறோம். விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியைவிட மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமான் என்று சாட்சிபெற்றான்; அவனுடைய காணிக்கைகளைப்பற்றி தேவனே சாட்சிகொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான். விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணமடையாமல் எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டதினால், அவன் காணப்படாமல் போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவன் என்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பே சாட்சிபெற்றான். விசுவாசம் இல்லாமல் தேவனுக்குப் பிரியமாக இருப்பது முடியாதகாரியம்; ஏனென்றால், தேவனிடம் சேருகிறவன் அவர் இருக்கிறார் என்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் கொடுக்கிறவர் என்றும் விசுவாசிக்கவேண்டும். விசுவாசத்தினாலே நோவா அவனுடைய நாட்களிலே பார்க்காதவைகளைப்பற்றி தேவ எச்சரிப்பைப் பெற்று, பயபக்தியுள்ளவனாக, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குக் கப்பலை உண்டாக்கினான்; அதினாலே அவன் உலகம் தண்டனைக்குரியது என்று முடிவுசெய்து, விசுவாசத்தினால் உண்டாகும் நீதிக்கு வாரிசானான். விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் உரிமைப்பங்காகப் பெறப்போகிற இடத்திற்குப் போக அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் எதுவென்று தெரியாமல் புறப்பட்டுப்போனான். விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே அந்நியனைப்போல வாழ்ந்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் வாரிசாகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்; ஏனென்றால், தேவனே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்கள் உள்ள நகரத்திற்கு அவன் காத்திருந்தான். விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவர் என்று எண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலன் பெற்று, வயதானவளாக இருந்தும் குழந்தைப் பெற்றாள். எனவே, சரீரம் செத்தவன் என்று நினைக்கப்படும் ஒருவனாலே, வானத்தில் உள்ள அதிகமான நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரையில் உள்ள எண்ணமுடியாத மணலைப்போலவும் அதிக மக்கள் பிறந்தார்கள். இவர்கள் எல்லோரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைப் பெறாமல், தூரத்திலே அவைகளைப் பார்த்து, நம்பி, அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியர்களும், பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு விசுவாசத்தோடு மரித்தார்கள். இப்படி அறிக்கையிடுகிறவர்கள் சொந்த தேசத்தை தேடிப்போகிறோம் என்று தெரியப்படுத்துகிறார்கள். தாங்கள் விட்டுவந்த தேசத்தை நினைத்தார்கள் என்றால், அதற்குத் திரும்பிப்போவதற்கு அவர்களுக்கு நேரம் கிடைத்திருக்குமே. அதையல்ல, அதைவிட மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்; ஆகவே, தேவன் அவர்களுடைய தேவன் என்று சொல்லப்பட வெட்கப்படுவது இல்லை; அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே. மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான். ஈசாக்கிடம் உன் வம்சம் விளங்கும் என்று அவனிடம் சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்ப தேவன் வல்லவராக இருக்கிறார் என்று நினைத்து, தன்னுடைய ஒரே மகனைப் பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை ஒப்பனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான். விசுவாசத்தினாலே ஈசாக்கு வருகின்ற காரியங்களைக்குறித்து யாக்கோபையும் ஏசாவையும் ஆசீர்வதித்தான். விசுவாசத்தினாலே யாக்கோபு தன் மரணகாலத்தில் யோசேப்பினுடைய குமாரர்கள் இருவரையும் ஆசீர்வதித்து, தன் கோலின் முனையிலே சாய்ந்து தொழுதுகொண்டான். விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்கள் என்பதைப்பற்றித் தன்னுடைய கடைசிகாலத்தில் பேசி, தன் எலும்புகளைத் தங்களோடு எடுத்துக்கொண்டுபோகக் கட்டளைக் கொடுத்தான். மோசே பிறந்தபோது அவனுடைய பெற்றோர் அவனை அழகான குழந்தையென்று கண்டு, விசுவாசத்தினாலே, ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படாமல் அவனை மூன்று மாதங்கள் ஒளித்து வைத்தார்கள். விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்று சொல்லப்படுவதை வெறுத்து, நிலையில்லாத பாவசந்தோஷங்களை அனுபவிப்பதைவிட தேவனுடைய மக்களோடு துன்பத்தை அனுபவிப்பதையே தெரிந்துகொண்டு, இனிவரும் பலன்மேல் நோக்கமாக இருந்து, எகிப்தில் உள்ள பொக்கிஷங்களைவிட கிறிஸ்துவுக்காக வரும் நிந்தையை அதிக பாக்கியம் என்று நினைத்தான். விசுவாசத்தினாலே அவன் கண்ணுக்குத் தெரியாதவரைக் காண்கிறதுபோல உறுதியாக இருந்து, ராஜாவின் கோபத்திற்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான். விசுவாசத்தினாலே, தலைப்பிள்ளைகளைக் கொல்லுகிறவன் இஸ்ரவேலரைத் தொடாமல் இருக்க, அவன் பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான். விசுவாசத்தினாலே அவர்கள் செங்கடலை உலர்ந்த தரையைக் கடந்துபோவதைப்போலக் கடந்துபோனார்கள்; எகிப்தியரும் அப்படிக்கடந்துபோகத் துணிந்து மூழ்கிப்போனார்கள். விசுவாசத்தினாலே எரிகோ பட்டணத்தின் மதில்கள் ஏழுநாட்கள் சுற்றிவரப்பட்டு விழுந்தது. விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரர்களைச் சமாதானத்தோடு ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடு சேர்ந்து அழிந்துபோகாமல் இருந்தாள்.

எபிரெயர் 11:1-31 பரிசுத்த பைபிள் (TAERV)

நாம் நம்புகிறவற்றின் மீது கொண்டுள்ள உறுதிதான் விசுவாசம் ஆகும். நாம் கண்ணால் பார்க்காவிட்டாலும் கூட உண்மையான ஒன்றை நம்புவது தான் விசுவாசம். முன்பு வாழ்ந்தவர்களை தேவன் பெரிதும் விரும்பினார். ஏனென்றால் அவர்கள் இது போன்ற விசுவாசம் கொண்டவர்களாய் இருந்தார்கள். தேவன் தமது ஆணையால் இந்த முழு உலகையும் படைத்தார் என்று நாம் நம்ப விசுவாசம் உதவுகிறது. அதாவது நாம் பார்க்கின்ற பொருட்கள் எல்லாம் பார்க்கப்படாத ஒன்றால் உருவாக்கப்பட்டதை உணர்ந்துகொள்கிறோம். காயீனும் ஆபேலும் தேவனுக்குப் பலி கொடுத்தார்கள். ஆனால் ஆபேலின் பலி, அவனது விசுவாசம் காரணமாக உயர்வாகக் கருதப்பட்டது. தேவனும் அதையே விரும்பி ஏற்றுக்கொண்டார். ஆகவே அவனை நல்லவன் என்று அழைத்தார். அவன் இறந்து போனான். எனினும் அவன் தன் விசுவாசத்தின் வழியே இன்னும் பேசிக்கொண்டிருக்கிறான். ஏனோக்கு இறக்கவில்லை. இந்த பூமியில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டான். அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன் தேவனுக்கு விருப்பமானவனாக இருந்தான். தேவன் அவனைத் தன்னிடம் எடுத்துக்கொண்டார். அதனால் மக்கள் அதன் பிறகு அவனைக் கண்டுகொள்ள முடியவில்லை. இது அவனது விசுவாசத்தினாலேயே ஆயிற்று. விசுவாசம் இல்லாமல் எவனும் தேவனுக்கு விருப்பமானவனாக இருக்கமுடியாது. தேவனிடத்தில் வருகிறவன் அவர் உண்மையாகவே இருக்கிறார் என நம்பிக்கை கொள்கிறான். அதோடு தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் கொடுப்பார் என்றும் நம்பிக்கை கொள்ளவேண்டும். நோவா, இதுவரை அவன் காணாததைப் பற்றி தேவனால் எச்சரிக்கை செய்யப்பட்டான். ஆனால் நோவா தேவன் மீது விசுவாசமும், மரியாதையும் கொண்டிருந்தான். எனவே அவன் பெரிய கப்பலைச் செய்து தன் குடும்பத்தைக் காப்பாற்றிக்கொண்டான். தனது விசுவாசத்தின் மூலமாக இந்த உலகம் தவறானது என்பதை நோவா நிரூபித்தான். இதனால் விசுவாசத்தின் வழியாக தேவனுக்கு முன் நீதிமான்களாகக் கருதப்பட்ட சிலருள் ஒருவனானான். தேவன் ஆபிரகாமை அழைத்தார். அவர் வாக்களித்தப்படி ஒரு இடத்துக்குப் பயணம் போகச் சொன்னார். அவனுக்கு அந்த இடம் எங்கே உள்ளது என்று தெரியாது. எனினும் அவனுக்கு விசுவாசம் இருந்ததால், தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவர் சொன்னபடி பயணம் செய்தான். தேவன் தருவதாக வாக்களித்த நாட்டில் ஆபிரகாம் வாழ்ந்தான். அங்கே ஒரு பரதேசியைப் போல அலைந்தான். எனினும் அவன் விசுவாசம் வைத்திருந்தான். ஈசாக்கு, யாக்கோபு, ஆகியோரோடு கூடாரத்தில் குடியிருந்தான். அவர்களும் தேவனுடைய வாக்குறுதியைப் பெற்றார்கள். ஆபிரகாம், உண்மையான அஸ்திபாரம் இடப்பட்ட தேவனுடைய நகரத்துக்காகக் காத்திருந்தான். ஆபிரகாம் மிகவும் முதியவன். குழந்தைப் பேற்றுக்கான வாய்ப்பு இல்லாதவன். சாராளும் அப்படியே. ஆபிரகாம் தேவனிடம் விசுவாசம் வைத்ததால் அவர்களுக்குக் குழந்தை பிறந்தது. அவன் ஏறக்குறைய இறந்து போகின்றவனைப் போன்று இருந்தான். ஆனால் அவனிடமிருந்து முதுமைப் பருவத்தில் ஒரு பரம்பரை தோன்றி வானத்து நட்சத்திரங்களைப் போன்று விளங்கியது. கடற்கரையில் உள்ள மணலைப்போன்று ஏராளமான மக்கள் அவனிடமிருந்து வெளிப்பட்டனர். இந்த மாபெரும் மனிதர்கள் அனைவரும் இறுதிவரை தங்கள் விசுவாசத்துடனேயே வாழ்ந்தனர். இவர்கள் வாக்களிக்கப்பட்டதைப் பெற்றுக்கொள்ளாமல், வெகுதூரத்திலே அவற்றைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டனர். பூலோகத்தில் தாம் அந்நியர்களாகவும், பரதேசிகளாகவும் இருந்ததை அவர்கள் வெளிப்படையாக ஒத்துக்கொண்டனர். அவர்கள் தம் சொந்த தேசத்தை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையே இத்தகைய விஷயங்களைப் பேசுகிறவர்கள் உணர்த்துகிறார்கள். அவர்கள் தாங்கள் விட்டுவந்த நாட்டைப் பற்றி நினைத்திருந்தார்களேயானால் அவர்கள் அதற்குத் திரும்பிப் போக சமயம் கிடைத்திருக்குமே. ஆனால் அவர்கள் பரலோகம் என்னும் சிறப்பான நாட்டிற்குப் போகக் காத்திருக்கிறார்கள். எனவே தேவன் தன்னை அவர்களது தேவன் என்று அழைத்துக்கொள்வதில் வெட்கப்படுவதில்லை. தேவன் அவர்களுக்காக ஒரு நகரத்தை உருவாக்கியிருக்கிறார். தேவன் ஆபிரகாமின் விசுவாசத்தை சோதித்தார். ஆபிரகாமிடம் ஈசாக்கைப் பலி கொடுக்கும்படி தேவன் சொன்னார். ஆபிரகாமும் விசுவாசத்தின் காரணமாக அந்தக் கட்டளையைப் பின்பற்றினான், ஏனென்றால் ஏற்கெனவே தேவன் ஆபிரகாமுக்கு வாக்களித்துள்ளார். “ஈசாக்கு மூலம் உன் பரம்பரை வளரும்” என்றும் கூறியுள்ளார். ஆனாலும் ஒரே குமாரனான அந்த ஈசாக்கைப் பலிகொடுக்க ஆபிரகாம் முன் வந்தான். தேவன் மக்களை மரணத்திலிருந்து எழுப்புவார் என ஆபிரகாம் நம்பினான். உண்மையில் அதுபோன்றே ஆபிரகாம் அவன் குமாரனைக் கொல்லாதபடி தேவன் தடுத்துவிட்டார். இதுவும் மரணத்திலிருந்து எழுப்பியது போலாயிற்று. யாக்கோபையும் ஏசாவையும் ஈசாக்கு ஆசீர்வதித்தான். ஈசாக்கு இதனை விசுவாசத்தின் அடிப்டையில் செய்தான். யாக்கோபு யோசேப்பின் குமாரர்களில் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்தான். யாக்கோபு தான் இறந்துகொண்டிருக்கும்போது இதனைச் செய்தான். அவன் தனது கோலின் முனையில் சாய்ந்துகொண்டு தொழுதான். யாக்கோபு இப்படிச் செய்ததற்கும் அவனது விசுவாசமே காரணமாகும். யோசேப்பு இறந்துகொண்டிருந்த நேரத்தில் இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டுப் போவதைப் பற்றி பேசினான். அவன் இதனை விசுவாசத்தால் சொன்னான். தனது சரீரத்தை என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் மக்களிடம் சொன்னான். மோசே பிறந்த பிறகு, அவன் அழகாக இருந்ததை அவன் பெற்றோர்கள் கண்டு மூன்று மாத காலத்திற்கு மறைத்து வைத்தார்கள். விசுவாசத்தின் அடிப்படையிலேயே இதைச் செய்தனர். அரச கட்டளைக்குப் பயப்படாமல் இதை செய்தனர். மோசே வளர்ந்து பெரியவன் ஆனான். பார்வோனுடைய குமாரத்தியின் குமாரன் என அழைக்கப்படுவதை மறுத்தான். பாவத்துக்குரிய தற்காலிக சந்தோஷத்தை அனுபவிப்பதைவிட தேவனுடய மக்களோடு துன்பத்தை அனுபவிப்பதையே அவன் தேர்ந்தெடுத்தான். எகிப்தின் கருவூலத்தைவிட கிறிஸ்துவுக்காகத் தாங்கிக்கொண்ட பாடுகளை மதிப்புமிக்கதாக அவன் நினைத்தான். ஏனெனில் வர இருக்கிற பலனுக்காக அவன் பார்த்திருந்தான். மோசே எகிப்திலிருந்து வெளியேறினான். தன் விசுவாசத்தின் அடிப்படையில் அப்படிச் செய்தான். அவன் ராஜாவின் கோபத்துக்கும் அஞ்சவில்லை. அவன் தொடர்ந்து உறுதியாக இருந்தான். ஒருவராலும் பார்க்க இயலாத தேவனை அவனால் பார்க்க முடிந்தது. அவன் பஸ்காவைத் தயார் செய்தான். கதவின் மீது இரத்தத்தைப் பூசினான். யூதமக்களின் முதல் ஆண் குழந்தையை மரண தூதன் கொல்லாதபடிக்கு இதைச் செய்தான். மோசே இதனை விசுவாசத்தோடு செய்தான். மோசே தன் மக்களை அழைத்துக்கொண்டு போனான். அப்போது செங்கடல் காய்ந்த தரையைப் போலாயிற்று. அவர்களின் விசுவாசமே இதற்குக் காரணமாகும். எகிப்தியர்களும் அவ்வாறே கடலைக் கடக்க முனைந்து அமிழ்ந்துபோனார்கள். எரிகோவின் சுவர்கள், தேவனது மக்களின் விசுவாசத்தினால் விழுந்துபோனது. அவர்கள் ஏழு நாட்கள் அந்தச் சுவர்களைச் சுற்றி வந்தனர். அப்புறம் அச்சுவர்கள் விழுந்தன. ராகாப் என்னும் விலைமாதும் இஸ்ரவேல் ஒற்றர்களை நண்பர்களைப்போல வரவேற்றாள். அவளது விசுவாசத்தின் காரணமாகக் கீழ்ப்படியாதவர்கள் கொல்லப்பட்டபோது அவள் தன் வீட்டாருடன் சேதமடையாமல் தப்பினாள்.

எபிரெயர் 11:1-31 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. அதினாலே முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள். விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம். விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சிபெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக் குறித்து தேவனே சாட்சிகொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான். விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டபடியினாலே, அவன் காணப்படாமற்போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சி பெற்றான். விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும். விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்து தேவ எச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்; அதினாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான். விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான். விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போல சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்; ஏனெனில், தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான். விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள். ஆனபடியால், சரீரஞ்செத்தவனென்று எண்ணத்தகும் ஒருவனாலே, வானத்திலுள்ள பெருக்கமான நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப்போலவும், மிகுந்த ஜனங்கள் பிறந்தார்கள். இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள். இப்படி அறிக்கையிடுகிறவர்கள் சுயதேசத்தை நாடிப்போகிறோம் என்று தெரியப்படுத்துகிறார்கள். தாங்கள் விட்டுவந்த தேசத்தை நினைத்தார்களானால், அதற்குத் திரும்பிப்போவதற்கு அவர்களுக்குச் சமயங்கிடைத்திருக்குமே. அதையல்ல, அதிலும் மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்; ஆகையால் தேவன் அவர்களுடைய தேவனென்னப்பட வெட்கப்படுகிறதில்லை; அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே. மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான். ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்தெழுப்பத் தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி, தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான். விசுவாசத்தினாலே ஈசாக்கு வருங்காரியங்களைக்குறித்து யாக்கோபையும் ஏசாவையும் ஆசீர்வதித்தான். விசுவாசத்தினாலே யாக்கோபு தன் மரணகாலத்தில் யோசேப்பினுடைய குமாரர் இருவரையும் ஆசீர்வதித்து, தன் கோலின் முனையிலே சாய்ந்து தொழுதுகொண்டான். விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்களென்பதைப்பற்றித் தன் அந்தியகாலத்தில் பேசி, தன் எலும்புகளைக்குறித்துக் கட்டளைகொடுத்தான். மோசே பிறந்தபோது அவனுடைய தாய்தகப்பன்மார் அவனை அழகுள்ள பிள்ளையென்று கண்டு, விசுவாசத்தினாலே, ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படாமல் அவனை மூன்றுமாதம் ஒளித்துவைத்தார்கள். விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு, இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான். விசுவாசத்தினாலே அவன் அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்து, ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான். விசுவாசத்தினாலே, முதற்பேறானவைகளைச் சங்கரிக்கிறவன் இஸ்ரவேலரைத் தொடாதபடிக்கு, அவன் பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான். விசுவாசத்தினாலே அவர்கள் சிவந்த சமுத்திரத்தை உலர்ந்த தரையைக் கடந்துபோவதுபோலக் கடந்து போனார்கள்; எகிப்தியர் அப்படிச் செய்யத்துணிந்து அமிழ்ந்துபோனார்கள். விசுவாசத்தினாலே எரிகோ பட்டணத்தின் மதில்கள் ஏழுநாள் சுற்றிவரப்பட்டு விழுந்தது. விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடேகூடச் சேதமாகாதிருந்தாள்.

எபிரெயர் 11:1-31

எபிரெயர் 11:1-31 TAOVBSIஎபிரெயர் 11:1-31 TAOVBSIஎபிரெயர் 11:1-31 TAOVBSIஎபிரெயர் 11:1-31 TAOVBSI