எபிரெயர் 10:32-39

எபிரெயர் 10:32-39 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

வெளிச்சத்தை நீங்கள் பெற்ற ஆரம்ப நாட்களில் நீங்கள் பல வேதனைகளின் மத்தியில், பெரும் போராட்டத்தில் நிலைத்து நின்ற உங்கள் நிலையை ஞாபகப்படுத்திப் பாருங்கள். சில சமயங்களில் நீங்கள் பகிரங்கமாக அவமானப்படுத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டீர்கள். இன்னும் வேறுசில சமயங்களில், இவ்விதம் துன்புறுத்தப்பட்டவர்களுடன் தோள்கொடுத்து நின்றீர்கள். சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் காண்பித்தீர்கள். உங்கள் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டபோது, அவற்றைவிடச் மேன்மையானதும், என்றும் நிலைத்திருக்கிறதுமான உரிமைச்சொத்து உங்களுக்கு இருக்கிறது என்பதை அறிந்திருந்ததினால் அதை மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொண்டீர்கள். ஆகையால் உங்களுக்கிருக்கும் அந்த மனவுறுதியை நீங்கள் இழந்துவிடாதீர்கள். அது உங்களுக்கு ஒரு பெரிதான வெகுமதியைக் கொண்டுவரும். நீங்கள் விடாமுயற்சியுடையவர்களாய் இருக்கவேண்டும். அப்பொழுதே நீங்கள் இறைவனுடைய சித்தத்தைச் செய்து முடித்தபின், அவர் வாக்குக்கொடுத்ததைப் பெற்றுக்கொள்வீர்கள். ஏனெனில், “வருகிறவர் கொஞ்சக் காலத்திலே, வந்துவிடுவார். அவர் தாமதிக்கமாட்டார். ஆனால், “எனது நீதிமான்கள் விசுவாசத்தினாலே பிழைப்பார்கள். அவர்களில் ஒருவனாவது பின்வாங்கிப்போனால், நான் அவனில் பிரியமாயிருக்கமாட்டேன்” என்ற உற்சாகமூட்டும் வேதவசனங்களை நாம் அறிவோம். நாமோ விசுவாசத்திலிருந்து பின்வாங்கி, அழிந்துபோகிறவர்களோடு அல்ல. விசுவாசித்து, இரட்சிக்கப்படுகிறவர்களோடே சேர்ந்தவர்களாயிருக்கிறோம்.

எபிரெயர் 10:32-39 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்கள் பிரகாசமாக்கப்பட்டிருந்த அந்த நாட்களில் உபத்திரவங்களாகிய அதிக போராட்டத்தைச் சகித்தீர்களே. நிந்தைகளாலும், உபத்திரவங்களாலும் நீங்கள் வேடிக்கையாக்கப்பட்டதுமட்டுமில்லாமல், அப்படி நடத்தப்பட்டவர்களுக்குப் பங்காளிகளுமானீர்கள். நான் கட்டப்பட்டிருக்கும்போது நீங்கள் என்னைக்குறித்துப் பரிதாபப்பட்டதுமில்லாமல், பரலோகத்தில் அதிக மேன்மையும் நிலையுள்ளதுமான சொத்து உங்களுக்கு உண்டு என்று அறிந்து, உங்களுடைய ஆஸ்திகளையும் சந்தோஷமாகக் கொள்ளையிடக் கொடுத்தீர்கள். ஆகவே, அதிக பலனைத் தரும் உங்களுடைய தைரியத்தை விட்டுவிடாமல் இருங்கள். நீங்கள் தேவனுடைய விருப்பத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறுவதற்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாக இருக்கிறது. வருகிறவர் இன்னும் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம் செய்யார். விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவான் என்றால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாக இருக்காது என்கிறார். நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாக இருக்காமல், ஆத்துமாவைக் காக்க விசுவாசிக்கிறவர்களாக இருக்கிறோம்.

எபிரெயர் 10:32-39 பரிசுத்த பைபிள் (TAERV)

நீங்கள் முதன் முதலாக உண்மையை அறிந்துகொண்ட நாட்களை நினைத்துப் பாருங்கள். பல சோதனைகளை நீங்கள் சகித்துக்கொண்டீர்கள். எனினும் நீங்கள் உறுதியாக இருந்தீர்கள். சிலவேளைகளில் வெறுக்கத்தக்க காரியங்களைப் பற்றி உங்களிடம் சொன்னார்கள். பலர் முன்னிலையில் உங்களைக் குற்றம் சுமத்தித் தண்டித்தார்கள். சில வேளைகளில் அப்படி நடத்தப்பட்டவர்களுக்கும் நீங்கள் உதவியாய் இருந்தீர்கள். ஆமாம், நீங்கள் சிறையில் இருந்த அவர்களுக்கு உதவி, அவர்கள் துன்பத்தில் பங்குகொண்டீர்கள். உங்கள் சொத்து உங்களிடமிருந்து அபகரிக்கப்பட்டபோதும் நீங்களும் அதை மகிழ்வோடு ஒத்துக்கொண்டீர்கள். ஏனெனில், இதைவிடவும் மதிப்புமிக்க நிலையான சொத்து உங்களுக்கு உண்டு என்று நீங்கள் அறிவீர்கள். எனவே முன்பு நீங்கள் வைத்திருந்த தைரியத்தை விட்டுவிடாதீர்கள். உங்கள் தைரியம் உங்களுக்கு பலனைத் தரும். நீங்கள் பொறுமையாக இருக்கவேண்டும். தேவனுக்கு விருப்பமானவற்றை நீங்கள் செய்த பிறகு, நிச்சயம் தேவன் வாக்களித்ததை நீங்கள் பெறுவீர்கள். கொஞ்ச காலத்தில், “வரவேண்டியவர் வருவார், அவர் தாமதிக்கமாட்டார். விசுவாசத்தினாலே நீதிமானாக இருக்கிறவன் பிழைப்பான். அவன் அச்சத்தால் இதிலிருந்து பின்வாங்குவானேயானால் நான் அவன்மீது பிரியமாக இருக்கமாட்டேன்.” ஆனால், நாம் கெட்டுப்போகும்படி பின் வாங்குகிறவர்களாய் இருக்கக்கூடாது. நாம் விசுவாசம் உடையவர்களாகவும் இரட்சிக்கப்படுகிறவர்களாகவும் இருக்கவேண்டும்.

எபிரெயர் 10:32-39 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்கள் பிரகாசமாக்கப்பட்டிருந்த அந்த நாட்களில் உபத்திரவங்களாகிய மிகுந்த போராட்டத்தைச் சகித்தீர்களே. நிந்தைகளாலும் உபத்திரவங்களாலும் நீங்கள் வேடிக்கையாக்கப்பட்டதுமல்லாமல், அப்படி நடத்தப்பட்டவர்களுக்குப் பங்காளிகளுமானீர்கள். நான் கட்டப்பட்டிருக்கையில் நீங்கள் என்னைக்குறித்துப் பரிதபித்ததுமன்றி, பரலோகத்தில் அதிக மேன்மையும் நிலையுள்ளதுமான சுதந்தரம் உங்களுக்கு உண்டென்று அறிந்து, உங்கள் ஆஸ்திகளையும் சந்தோஷமாய்க் கொள்ளையிடக் கொடுத்தீர்கள். ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள். நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது. வருகிறவர் இன்னுங்கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம்பண்ணார். விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார். நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்.