எபிரெயர் 10:1-4

எபிரெயர் 10:1-4 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மோசேயின் சட்டம் வரப்போகின்ற நன்மைகளின் ஒரு நிழல் மாத்திரமே, அதன் நிஜமல்ல. இதன் காரணமாகவே ஒவ்வொரு வருடமும், திரும்பத்திரும்ப தொடர்ச்சியாகச் செலுத்தப்பட்ட பலிகளின் மூலமாய், வழிபாட்டிற்கு வருகிறவர்களை ஒருபோதும் முழுமை பெறச்செய்ய, மோசேயின் சட்டத்தால் இயலாதிருக்கிறது. அவ்வாறு முடியுமாயிருந்தால், பலிகள் செலுத்துவதும் நின்றிருக்கும் அல்லவா? ஏனெனில் இறைவனை ஆராதிக்கிற மக்கள், ஒரே முறையாகத் தங்களுடைய பாவங்களிலிருந்து உண்மையாகவே சுத்திகரிக்கப்பட்டு இருப்பார்கள். அவர்கள் தங்களுடைய பாவத்தைக்குறித்துத் தொடர்ந்து குற்ற உணர்வுடையவர்களாய் இருந்திருக்கமாட்டார்களே! ஆனால் அந்த பலிகள் ஒவ்வொரு வருடமும், பாவங்களை நினைப்பூட்டுவதாகவே இருந்தன. ஏனெனில் காளைகள், வெள்ளாடுகள் ஆகியவற்றின் இரத்தத்தினால், பாவங்களை ஒருபோதும் நீக்கிப்போட முடியாது.

எபிரெயர் 10:1-4 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாக இல்லாமல், அவைகளின் நிழலாகமட்டும் இருக்கிறதினால், ஒவ்வொரு வருடமும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருபோதும் பூரணப்படுத்தாது. பூரணப்படுத்துமானால், ஆராதனை செய்கிறவர்கள் ஒருமுறை சுத்தமாக்கப்பட்டப்பின்பு, இன்னும் பாவங்கள் உண்டு என்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாததினால், அந்தப் பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படும் அல்லவா? அப்படி நிறுத்தாததினால், பாவங்கள் உண்டு என்று அவைகளினாலே ஒவ்வொரு வருடமும் நினைவுகூருதல் உண்டாயிருக்கிறது. அல்லாமலும், காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவர்த்தி செய்யமுடியாதே.

எபிரெயர் 10:1-4 பரிசுத்த பைபிள் (TAERV)

நியாயப்பிரமாணமானது எதிர்காலத்தில் நேரிடும் நன்மைகளைப் பற்றிய முழுமையற்ற ஒரு சித்திரத்தையே கொடுக்கிறது. அது தெளிவற்றதாக உள்ளது. அது உண்மையான விஷயங்களின் முழுச் சித்திரம் அல்ல. அது மக்களிடம் ஒவ்வொரு ஆண்டும் ஒரே மாதிரியான பலிகளைக் கொடுக்குமாறு கூறுகிறது. தேவனை வழிபட வருகிறவர்களும் அவ்வாறே கொடுத்து வருகின்றனர். நியாயப்பிரமாணம் அவர்களை என்றும் முழுமையானவர்களாக ஆக்காது. சட்டம் மனிதர்களை பூரணப் படுத்துமானால், வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிற பலிகளும் நின்றிருக்கும். ஏனெனில் வழிபடுகிறவர்கள் ஏற்கெனவே பரிசுத்தப்படுத்தப்பட்டு அவர்கள் தம் பாவங்களுக்காகக் குற்ற உணர்ச்சி உடையவர்களாக இருக்கமாட்டார்கள். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிற அப்பலிகள் அவர்களின் பாவங்களையே அவர்களுக்கு நினைவுறுத்துகின்றன. ஏனென்றால் வெள்ளாடு, கன்று குட்டி போன்றவற்றின் இரத்தம் நமது பாவங்களை விலக்காது.

எபிரெயர் 10:1-4 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய்மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்தவருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது. பூரணப்படுத்துமானால், ஆராதனைசெய்கிறவர்கள் ஒருதரம் சுத்தமாக்கப்பட்டபின்பு, இன்னும் பாவங்களுண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாதிருப்பதினால், அந்தப் பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படுமல்லவா? அப்படி நிறுத்தப்படாதபடியால், பாவங்கள் உண்டென்று அவைகளினாலே வருஷந்தோறும் நினைவுகூருதல் உண்டாயிருக்கிறது. அல்லாமலும், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்திசெய்யமாட்டாதே.