எபிரெயர் 10:1-10
எபிரெயர் 10:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய்மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்தவருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது. பூரணப்படுத்துமானால், ஆராதனைசெய்கிறவர்கள் ஒருதரம் சுத்தமாக்கப்பட்டபின்பு, இன்னும் பாவங்களுண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாதிருப்பதினால், அந்தப் பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படுமல்லவா? அப்படி நிறுத்தப்படாதபடியால், பாவங்கள் உண்டென்று அவைகளினாலே வருஷந்தோறும் நினைவுகூருதல் உண்டாயிருக்கிறது. அல்லாமலும், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்திசெய்யமாட்டாதே. ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்; சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரணபலிகளும் உமக்குப் பிரியமானதல்ல என்றீர். அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார். நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டுவருகிற பலிகளைக்குறித்து மேற்சொல்லியபடி: பலியையும், காணிக்கையையும், சர்வாங்கதகனபலிகளையும், பாவநிவாரணபலிகளையும் நீர் விரும்பவில்லை, அவைகள் உமக்குப் பிரியமானதல்ல என்று சொன்னபின்பு: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன் என்று சொன்னார். இரண்டாவதை நிலைநிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப்போடுகிறார். இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.
எபிரெயர் 10:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
மோசேயின் சட்டம் வரப்போகின்ற நன்மைகளின் ஒரு நிழல் மாத்திரமே, அதன் நிஜமல்ல. இதன் காரணமாகவே ஒவ்வொரு வருடமும், திரும்பத்திரும்ப தொடர்ச்சியாகச் செலுத்தப்பட்ட பலிகளின் மூலமாய், வழிபாட்டிற்கு வருகிறவர்களை ஒருபோதும் முழுமை பெறச்செய்ய, மோசேயின் சட்டத்தால் இயலாதிருக்கிறது. அவ்வாறு முடியுமாயிருந்தால், பலிகள் செலுத்துவதும் நின்றிருக்கும் அல்லவா? ஏனெனில் இறைவனை ஆராதிக்கிற மக்கள், ஒரே முறையாகத் தங்களுடைய பாவங்களிலிருந்து உண்மையாகவே சுத்திகரிக்கப்பட்டு இருப்பார்கள். அவர்கள் தங்களுடைய பாவத்தைக்குறித்துத் தொடர்ந்து குற்ற உணர்வுடையவர்களாய் இருந்திருக்கமாட்டார்களே! ஆனால் அந்த பலிகள் ஒவ்வொரு வருடமும், பாவங்களை நினைப்பூட்டுவதாகவே இருந்தன. ஏனெனில் காளைகள், வெள்ளாடுகள் ஆகியவற்றின் இரத்தத்தினால், பாவங்களை ஒருபோதும் நீக்கிப்போட முடியாது. இதன் காரணமாகவே கிறிஸ்து உலகத்திற்குள் வந்தபோது, அவர் சொன்னதாவது: “பலியையும், காணிக்கையையும் நீர் விரும்பவில்லை. ஆனால் ஒரு உடலை நீர் எனக்கென ஆயத்தம் செய்தீர்; தகன காணிக்கைகளிலும், பாவநிவாரண காணிக்கைகளிலும் நீர் பிரியப்படவில்லை. புத்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறபடி, ‘இதோ நான் இருக்கிறேன்; இறைவனே, அடியேன் உமது விருப்பத்தைச் செய்ய வந்திருக்கிறேன் என்றேன்.’ ” முன்பு கிறிஸ்து, “பலிகளையும், காணிக்கைகளையும், தகன காணிக்கைகளையும், பாவநிவாரணக் காணிக்கைகளையும் நீர் விரும்பவுமில்லை, அவற்றில் நீர் பிரியப்படவுமில்லை” என்றார். ஆனால் மோசேயின் சட்டத்தின்படி அவை செலுத்தப்பட்டன. பின்பு அவர், “இதோ, நான் இருக்கிறேன், அடியேன் உமது விருப்பத்தைச் செய்ய வந்திருக்கிறேன்” என்றார். இதனால் அவர் முதலாவதை நீக்கிவிட்டு, இரண்டாவதை ஏற்படுத்தி நிலைநிறுத்துகிறார். இவ்விதமாக, இயேசுகிறிஸ்து ஒரேதரம் எல்லா காலத்திற்குமாக தமது உடலை பலியாகச் செலுத்தியதின் மூலம் இறைவனுடைய சித்தத்தை நிறைவேற்றினதினால் நம்மை பரிசுத்தமாக்கியிருக்கிறார்.
எபிரெயர் 10:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாக இல்லாமல், அவைகளின் நிழலாகமட்டும் இருக்கிறதினால், ஒவ்வொரு வருடமும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருபோதும் பூரணப்படுத்தாது. பூரணப்படுத்துமானால், ஆராதனை செய்கிறவர்கள் ஒருமுறை சுத்தமாக்கப்பட்டப்பின்பு, இன்னும் பாவங்கள் உண்டு என்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாததினால், அந்தப் பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படும் அல்லவா? அப்படி நிறுத்தாததினால், பாவங்கள் உண்டு என்று அவைகளினாலே ஒவ்வொரு வருடமும் நினைவுகூருதல் உண்டாயிருக்கிறது. அல்லாமலும், காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவர்த்தி செய்யமுடியாதே. ஆகவே, அவர் உலகத்திற்கு வந்தபோது: பலியையும், காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்; சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரணபலிகளும் உமக்குப் பிரியமானது இல்லை என்றீர். அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய விருப்பத்தின்படிசெய்ய, இதோ, வருகிறேன், புத்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார். நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டுவருகிற பலிகளைக்குறித்து மேலே சொன்னதுபோல: பலியையும், காணிக்கையையும், சர்வாங்கதகனபலிகளையும், பாவநிவாரணபலிகளையும் நீர் விரும்பவில்லை, அவைகள் உமக்குப் பிரியமானது இல்லை என்று சொன்னபின்பு: தேவனே, உம்முடைய விருப்பத்தின்படிசெய்ய, இதோ, வருகிறேன் என்று சொன்னார். இரண்டாவதை நிலைநிறுத்துவதற்காக முதலாவதை நீக்கிப்போடுகிறார். இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேமுறை பலியிடப்பட்டதினாலே, அந்த விருப்பத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டு இருக்கிறோம்.
எபிரெயர் 10:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)
நியாயப்பிரமாணமானது எதிர்காலத்தில் நேரிடும் நன்மைகளைப் பற்றிய முழுமையற்ற ஒரு சித்திரத்தையே கொடுக்கிறது. அது தெளிவற்றதாக உள்ளது. அது உண்மையான விஷயங்களின் முழுச் சித்திரம் அல்ல. அது மக்களிடம் ஒவ்வொரு ஆண்டும் ஒரே மாதிரியான பலிகளைக் கொடுக்குமாறு கூறுகிறது. தேவனை வழிபட வருகிறவர்களும் அவ்வாறே கொடுத்து வருகின்றனர். நியாயப்பிரமாணம் அவர்களை என்றும் முழுமையானவர்களாக ஆக்காது. சட்டம் மனிதர்களை பூரணப் படுத்துமானால், வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிற பலிகளும் நின்றிருக்கும். ஏனெனில் வழிபடுகிறவர்கள் ஏற்கெனவே பரிசுத்தப்படுத்தப்பட்டு அவர்கள் தம் பாவங்களுக்காகக் குற்ற உணர்ச்சி உடையவர்களாக இருக்கமாட்டார்கள். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிற அப்பலிகள் அவர்களின் பாவங்களையே அவர்களுக்கு நினைவுறுத்துகின்றன. ஏனென்றால் வெள்ளாடு, கன்று குட்டி போன்றவற்றின் இரத்தம் நமது பாவங்களை விலக்காது. ஆகவே கிறிஸ்து இந்த உலகத்துக்கு வரும்போது, அவர், “நீர் காணிக்கைகளையும் பலிகளையும் விரும்புவதில்லை. ஆனால் எனக்காக ஒரு சரீரத்தை ஆயத்தம் செய்தீர். மிருகங்களைக் கொன்றும் எரித்தும் கொடுக்கப்படுகிற பலிகள் உம்மைச் சந்தோஷப்படுத்தாது. பாவநிவாரண பலிகளும் உம்மைத் திருப்திப்படுத்தாது. பிறகு நான், ‘தேவனே! இதோ இருக்கிறேன். உம்முடைய விருப்பத்தை நிறைவேற்ற வந்திருக்கிறேன். நியாயப்பிரமாண புத்தகத்தில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது’ என்றேன்.” “நீர் பலிகளையும் காணிக்கைகளையும் விரும்புவதில்லை. மிருகங்களைக் கொன்றும் எரித்தும் கொடுக்கப்படுகிற பலிகளாலும் பாவநிவாரணபலிகளாலும் நீர் திருப்தியுறவில்லை” (இந்தப் பலிகள் எல்லாம் கட்டளையிடப்பட்டிருந்தாலும் கூட) என்று முதலில் அவர் சொன்னார். பிறகு கிறிஸ்து, “தேவனே! நான் இதோ இருக்கிறேன். உம்முடைய விருப்பப்படி செய்வதற்காக வந்திருக்கிறேன்” என்றார். ஆகவே தேவன் முதலாவதுள்ள பலி முறைகளை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து தன் புதிய வழிகளைத் தொடங்கிவிட்டார். இயேசு கிறிஸ்து தேவனுடைய விருப்பப்படியே காரியங்களைச் செய்தார். அதனால் அவரது இறப்பாகிய பலி மூலம் நம்மைப் பரிசுத்தமாக்கினார். அவர் இப்பலியை என்றென்றைக்கும் போதுமான வகையில் ஒருமுறை செய்து முடித்தார்.