எபிரெயர் 1:2-14
எபிரெயர் 1:2-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார். இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலது பாரிசத்திலே உட்கார்ந்தார். இவர் தேவதூதரைப்பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்த நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்களிலும் மேன்மையுள்ளவரானார். எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா? மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார். தேவதூதரைக்குறித்தோ: தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினிஜூவாலைகளாகவும் செய்கிறார் என்று சொல்லியிருக்கிறது. குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது. நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; ஆதலால், தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப் பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார் என்றும்; கர்த்தாவே, நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியைகளாயிருக்கிறது; அவைகள் அழிந்துபோகும்; நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போலப் பழைமையாய்ப்போகும்; ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது மாறிப்போகும்; நீரோ மாறாதவராயிருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்துபோவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது. மேலும், நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் அவர் சொன்னதுண்டா? இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?
எபிரெயர் 1:2-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஆனால் இந்தக் கடைசி நாட்களில் அவர் தமது மகன் மூலமாகவே நம்மோடு பேசியுள்ளார். இவரையே இறைவன் எல்லாவற்றிற்கும் உரிமையாளராய் நியமித்திருக்கிறார். இவர் மூலமாகவே இறைவன் அண்ட சராசரங்களையும் படைத்தார். இறைவனுடைய மகனே அவருடைய மகிமையின் ஒளியாயும், அவருடைய தன்மையின் ரூபமாயும் இருக்கிறார். இந்த கிறிஸ்துவே தம்முடைய வல்லமையான வார்த்தையினாலே எல்லாவற்றையும் தாங்குகிறார். இவர் பாவங்களுக்கான சுத்திகரிப்பை ஏற்படுத்தி முடித்தபின்பு, பரலோகத்தில் உன்னதமான இறைவனுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார். இவ்விதமாய் இறைவனின் மகனாகிய கிறிஸ்து இறைத்தூதர்களிலும் மேன்மையானவர் ஆனார். இவருக்கு இறைவன் கொடுத்த பெயரும் இறைத்தூதர்களின் பெயரிலும் மேன்மையானதே. ஏனெனில் இறைவன் இறைத்தூதர்களில் யாரையாவது பார்த்து எப்பொழுதாவது இவ்வாறு சொல்லியிருக்கிறாரா? “நீர் என்னுடைய மகன்; இன்று நான் உமக்குத் தந்தையானேன்” அல்லது, “நான் இவருடைய தந்தையாயிருப்பேன்; அவர் என்னுடைய மகனாயிருப்பார்.” மேலும், இறைவன் தம்முடைய முதற்பேறானவரை உலகத்திற்குள் கொண்டுவந்தபோது அவர் கூறியது, “இறைவனுடைய தூதர்கள் எல்லோரும் அவரை வழிபடவேண்டும்.” ஆனால் இறைத்தூதர்களைக்குறித்து பேசும்போது இறைவன் சொல்லுகிறதாவது, “அவர் தம்முடைய இறைத்தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியர்களை நெருப்பு ஜுவாலைகளாகவும் ஆக்குகிறார்.” ஆனால் தம்முடைய மகனைக் குறித்தோ அவர் சொல்கிறதாவது, “இறைவனே, உம்முடைய அரியணை என்றென்றுமாய் நிலைத்திருக்கும். நீதியே உம்முடைய அரசின் செங்கோலாயிருக்கும். நீர் நீதியை விரும்பி, அநீதியை வெறுத்தீர்; ஆகையால் இறைவனே, உமது இறைவனே உம்மை மகிழ்ச்சியின் எண்ணெயால் அபிஷேகித்து, உமது தோழர்களுக்கு மேலாக உம்மை உயர்த்திவைத்தார்.” இறைவன் மேலும் சொன்னதாவது, “நீர் ஆதியிலே பூமிக்கு அஸ்திபாரங்களை அமைத்தீர்; வானங்களும் உமது கரங்களின் வேலைப்பாடாய் இருக்கின்றன. அவை அழிந்துபோகும்; நீரோ நிலைத்திருப்பீர்; அவையெல்லாம் உடையைப்போல பழமையாய்ப்போகும். அவற்றை ஒரு மேலுடையைப்போல் நீர் சுருட்டிவைப்பீர்; அவை ஒரு உடையைப்போல் மாற்றப்படும். நீரோ மாறாதவராய் நிலைத்திருக்கிறீர். உம்முடைய வருடங்கள் ஒருபோதும் முடிந்து போவதில்லை.” மேலும், இறைவன் இறைத்தூதர்களில் யாரையாவது பார்த்து எப்பொழுதாவது, “நான் உமது பகைவரை உமது கால்களுக்குப் பாதபடியாக்கும்வரை நீர் என் வலதுபக்கத்தில் அமர்ந்திரும்” என்று சொல்லியிருக்கிறாரா? இறைத்தூதர்களெல்லோரும் ஊழியம் செய்யும் ஆவிகள் அல்லவா? இரட்சிப்பை உரிமையாக்கிக்கொள்ளப் போகிறவர்களுக்குப் பணிசெய்யும்படி அனுப்பப்பட்டவர்களல்லவா?
எபிரெயர் 1:2-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இந்தக் கடைசிநாட்களில் குமாரன் மூலமாக நம்மோடு பேசினார்; இவரை எல்லாவற்றிற்கும் வாரிசாக நியமித்தார், இவர் மூலமாக உலகங்களையும் உண்டாக்கினார். இவர் பிதாவுடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய குணத்தின் சாயலாகவும் இருந்து, எல்லாவற்றையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராக, அவர்தாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்தார். இவர் தேவதூதர்களைவிட எவ்வளவு விசேஷமான நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாக அவர்களைவிட மேன்மையுள்ளவரானார். எப்படியென்றால், நீர் என்னுடைய நேசகுமாரன், இன்று நான் உம் தகப்பனானேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாக இருப்பேன், அவர் எனக்குக் குமாரனாக இருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாவது சொன்னது உண்டா? மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர்கள் எல்லோரும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். தேவதூதர்களைப்பற்றி: தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரர்களை அக்கினிஜூவாலைகளாகவும் செய்கிறார் என்று சொல்லியிருக்கிறது. குமாரனைப்பற்றி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்கும் உள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாக இருக்கிறது. நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; எனவே, தேவனே, உம்முடைய தேவன், உமது தோழர்களைவிட உம்மை ஆனந்தத் தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார் என்றும்; கர்த்தாவே, நீர் ஆரம்பத்திலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கைவேலைகளாக இருக்கிறது; அவைகள் அழிந்துபோகும்; நீரோ நிலைத்திருப்பீர்; அவைகள் எல்லாம் ஆடைபோலப் பழைமையாகப்போகும்; ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது அவைகள் மாறிப்போகும்; ஆனால், நீரோ மாறாதவராக இருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்து போவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது. மேலும், நான் உம்முடைய எதிரிகளை உமது பாதத்தின் கீழே போடும்வரை நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்திரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாவது அவர் சொன்னதுண்டா? அவர்கள் எல்லோரும், இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களுக்காக ஊழியம் செய்வதற்கு அனுப்பப்பட்ட பணிவிடை செய்யும் ஆவிகளாக இருக்கிறார்கள் அல்லவா?
எபிரெயர் 1:2-14 பரிசுத்த பைபிள் (TAERV)
இப்போது இந்த இறுதி நாட்களில் மீண்டும் தேவன் நம்மோடு பேசியிருக்கிறார். அவர் தன் குமாரன் மூலம் நம்மோடு பேசி இருக்கிறார். அவர் தன் குமாரன் மூலமாக இந்த முழு உலகையும் படைத்தார். எல்லாவற்றிற்கும் உரிமையாளராக தேவன் தன் குமாரனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அந்தக் குமாரன் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறார். தேவனுடைய தன்மையை முழுவதுமாக வெளிக்காட்டும் உருவமாக அவர் இருக்கிறார். அவர் தனது வலிமைமிக்க கட்டளைகளினால் ஒவ்வொன்றையும் ஒருங்கிணைத்து வைத்திருக்கிறார். குமாரனானவர் மக்களைப் பாவங்களிலிருந்து பரிசுத்தப்படுத்தினார். பிறகு அவர் தேவனுடைய வலது பக்கத்தில் பரலோகத்தில் அமர்ந்தார். அவர் தேவதூதர்களைவிட மிகச் சிறந்த பெயரை தேவனிடமிருந்து பெற்றார். அவர் தேவதூதர்களை விட மிகவும் சிறப்புக்குரியவரானார். கீழ்க்கண்டவற்றை தேவன் ஒருபோதும் தேவதூதர்களிடம் சொன்னதில்லை, “நீர் எனது குமாரன், இன்று நான் உமக்குப் பிதா ஆனேன்.” அதோடு எந்த தேவதூதனிடமும் தேவன் இவ்வாறு சொன்னதில்லை, “நான் அவரது பிதாவாக இருப்பேன். அவர் எனது குமாரனாக இருப்பார்.” மேலும் தனது முதற்பேறான குமாரனை பூமிக்கு அனுப்புகிறபோது, “தேவதூதர்கள் எல்லோரும் அந்தக் குமாரனைத் தொழுதுகொள்ளக்கடவர்கள்” என்று கூறினார். தேவன் தேவதூதர்களைப் பற்றிக் கூறும்போது, “தேவன் தன் தேவதூதர்களைக் காற்றைப் போன்றும் தன் ஊழியர்களை நெருப்பு ஜூவாலைகளைப் போன்றும் செய்கிறார்” எனக் குறிப்பிடுகிறார். ஆனால் தேவன் தம் குமாரனைப் பற்றிச் சொல்லும்போது, “தேவனே! உமது சிம்மாசனம் என்றென்றைக்கும் உள்ளது. சரியான தீர்ப்புகளால் உமது இராஜ்யத்தை நீர் ஆள்வீர். நீர் நீதியை விரும்புகிறீர். அநீதியை வெறுக்கின்றீர். ஆகையால் தேவனே, உமது தேவன் உம்மோடு இருப்பவர்களுக்குக் கொடுத்ததைக் காட்டிலும் பெருமகிழ்ச்சியை உமக்குத் தந்திருக்கிறார்.” மேலும் தேவன், “கர்த்தாவே, ஆரம்பத்தில் நீர் பூமியைப் படைத்தீர். மேலும் உமது கைகள் ஆகாயத்தைப் படைத்தன. இவை மறைந்து போகலாம். ஆனால் நீரோ நிலைத்திருப்பீர். ஆடைகளைப் போன்று அனைத்தும் பழசாகிப் போகும். நீர் அவற்றை ஒரு சால்வையைப் போல மடித்துவிடுவீர். அவை ஓர் ஆடையைப் போன்று மாறும். ஆனால் நீரோ மாறவேமாட்டீர். உமது ஜீவன் ஒருபோதும் அழியாது” என்றும் கூறுகிறார். தேவன் எந்த தேவ தூதனிடமும், “உமது பகைவர்களை உம்முடைய அதிகாரத்துக்குக் கீழ்க்கொண்டு வரும்வரை எனது வலது பக்கத்தில் உட்காரும்” என்று என்றைக்கும் சொன்னதில்லை. தேவதூதர்கள் எல்லாரும், தேவனுக்கு சேவை செய்துகொண்டிருக்கிற ஆவிகள் ஆவார்கள். இரட்சிப்பைப் பெறப் போகிறவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு அவர்கள் அனுப்பப்படுகிறார்கள்.