ஆபகூக் 1:13-17

ஆபகூக் 1:13-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

உம்முடைய கண்கள் அதிக தூய்மையானதால், அவை தீமையைப் பார்ப்பதில்லை; அநியாயத்தை சகிக்க உம்மால் முடியாது. அப்படியானால் துரோகிகளை நீர் ஏன் சகிக்கிறீர்? கொடியவர்களான பாபிலோனியர் தங்களைவிட நீதியானவர்களை விழுங்கும்போது நீர் ஏன் மவுனமாய் இருக்கிறீர்? நீர் எங்களை கடலில் உள்ள மீன்களைப் போலவும், தலைவனில்லாத கடல் பிராணிகளைப் போலவுமா காண்கிறீர்? பாபிலோனியனான கொடிய எதிரிகள் எல்லோரையும் தூண்டிலினால் இழுக்கிறான். தனது வலையினால் அவர்களைப் பிடிக்கிறான். தனது இழுவை வலையினால் அவர்களை ஒன்றாய் அள்ளிச் சேர்க்கிறான். இவ்விதம் அவன் மகிழ்ச்சிகொண்டு களிகூருகிறான். ஆதலினால் அவன் தனது வலைகளுக்குப் பலியிட்டு, தனது இழுவை வலைக்கு தூபங்காட்டுகிறான். ஏனெனில் தனது வலையினால் அவன் செல்வச் சிறப்புடன் வாழ்ந்து சிறந்த உணவைச் சாப்பிட்டு மகிழ்கிறான். அப்படியாயின் அவன் நாடுகளை இரக்கமின்றி அழிக்க இடங்கொடுப்பீரோ? அவன் தனது வலையை தொடர்ந்து நிரப்பிக்கொண்டே இருக்கவேண்டுமோ?

ஆபகூக் 1:13-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தீமையைப் பார்க்காமலிருக்கிற சுத்தக்கண்ணனே, அநியாயத்தை பார்த்துக்கொண்டிருக்கமாட்டீரே; அப்படியிருக்க துரோகிகளை நீர் பார்த்துக்கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைக்காட்டிலும் நீதிமானாக இருக்கிறவனை விழுங்கும்போது நீர் மௌனமாயிருக்கிறதென்ன? மனிதர்களைச் சமுத்திரத்து மீன்களுக்கும், அதிகாரியில்லாத ஊர்வனவற்றிற்கும் சமமாக்குகிறதென்ன? அவர்களெல்லோரையும் தூண்டிலைக்கொண்டு இழுத்துக்கொள்கிறான்; அவர்களைத் தன் வலையினால் பிடித்து, தன் கூடையிலே சேர்த்துக்கொள்ளுகிறான்; அதினால் சந்தோஷப்பட்டுக் களிகூருகிறான். ஆகையால் அவைகளினால் தன் பங்கு கொழுப்புள்ளதும், தன் உணவு சுவையுள்ளதாயிற்று என்று சொல்லி அவன் தன் வலைக்குப் பலியிட்டுத் தன் கூடைக்குத் தூபங்காட்டுகிறான். இதற்காக அவன் தன் வலையை இழுத்து அதிலுள்ளவைகளைக் கொட்டிக்கொண்டிருந்து, இரக்கமில்லாமல் மக்களை எப்போதும் கொன்றுபோடவேண்டுமோ?

ஆபகூக் 1:13-17 பரிசுத்த பைபிள் (TAERV)

உம்முடைய கண்கள் மிகவும் பரிசுத்தமானதால் அவை தீமையை நோக்குவதில்லை. ஜனங்கள் பாவம் செய்வதை உம்மால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. எனவே, இத்தீய ஜனங்கள் வெற்றிப்பெறுவதை எப்படி உம்மால் பார்த்துக்கொண்டிருக்க முடியும். தீய ஜனங்கள் நல்லவர்களை அழிப்பதைக் கண்டு ஒன்றும் செய்யாமல் நீர் எப்படி பார்த்திருக்கக்கூடும்? “நீர் ஜனங்களை கடலில் உள்ள மீன்களைப் போலவும், கடலில் உள்ள தலைவனற்ற சிறிய உயிரினங்களைப்போன்றும் படைத்துள்ளீர். பகைவர் அவர்களனைவரையும் தூண்டிலாலும் வலைகளாலும் பிடிப்பார்கள். பகைவன் தனது வலையால் அவர்களை பிடித்து இழுத்துப் போவான். பகைவன் தான் கைப்பற்றியதுப்பற்றி மகிழுவான். அவனது வலை அவன் செல்வந்தனாக வாழ்ந்து நல்ல உணவை உண்டு மகிழ உதவுகிறது. எனவே பகைவன் தனது வலைகளை தொழுதுகொள்கிறான், அவன் தனது வலையைக் கௌரவப்படுத்த பலிகளை செலுத்தி நறுமணப் பொருட்களையும் எரிக்கிறான். அவன் தனது வலையுடன் செல்வத்தைத் தொடர்ந்து எடுப்பானா? அவன் தொடர்ந்து இரக்கமில்லாமல் ஜனங்களை அழிப்பானா?

ஆபகூக் 1:13-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே; பின்னை துரோகிகளை நீர் நோக்கிக் கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மௌனமாயிருக்கிறதென்ன? மனுஷரைச் சமுத்திரத்து மச்சங்களுக்கும், அதிகாரியில்லாத ஊர்வனவற்றிற்கும் சமானமாக்குகிறதென்ன? அவர்களெல்லாரையும் தூண்டிலினால் இழுத்துக்கொள்ளுகிறான்; அவர்களைத் தன் வலையினால் பிடித்து, தன் பறியிலே சேர்த்துக்கொள்ளுகிறான்; அதினால் சந்தோஷப்பட்டுக் களிகூருகிறான். ஆகையால் அவைகளினால் தன் பங்கு கொழுப்புள்ளதும், தன் போஜனம் ருசிகரமுள்ளதுமாயிற்று என்று சொல்லி அவன் தன் வலைக்குப் பலியிட்டுத் தன் பறிக்குத் தூபங்காட்டுகிறான். இதற்காக அவன் தன் வலையை இழுத்து அதிலுள்ளவைகளைக் கொட்டிக்கொண்டிருந்து, இரக்கமில்லாமல் ஜாதிகளை எப்போதும் கொன்றுபோடவேண்டுமோ?