ஆதியாகமம் 9:22-29

ஆதியாகமம் 9:22-29 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது கானானின் தகப்பனான காம், தன் தகப்பனின் நிர்வாணத்தைக் கண்டு, வெளியே போய் தன் இரு சகோதரருக்கும் அதைத் தெரியப்படுத்தினான். ஆனால் சேமும் யாப்பேத்தும் ஓர் உடையை எடுத்துத் தம் இருவர் தோளிலும் போட்டவாறு, பின்னிட்டுச் சென்று தங்கள் தகப்பனின் நிர்வாணத்தை மூடினார்கள். அவர்கள் தங்கள் தகப்பனின் நிர்வாணத்தைக் காணாதபடிக்குத் தங்கள் முகங்களை மறுபக்கமாகத் திருப்பிக்கொண்டார்கள். நோவா வெறி தெளிந்து எழுந்தபோது, தன் இளையமகன் தனக்குச் செய்ததை அறிந்தான். எனவே அவன், “கானான் சபிக்கப்படட்டும்! அவன் தன் சகோதரர்களிலும் அடிமைகளிலும் கீழ்ப்பட்டவனாய் இருக்கட்டும்.” மேலும் நோவா சொன்னதாவது: “சேமின் இறைவனாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக! கானான் சேமுக்கு அடிமையாய் இருப்பானாக. இறைவன் யாப்பேத்தின் எல்லையை விரிவுபடுத்துவாராக; யாப்பேத் சேமின் கூடாரங்களில் குடியிருப்பானாக, கானான் யாப்பேத்துக்கு அடிமையாய் இருப்பானாக.” பெருவெள்ளத்திற்கு பிறகு நோவா முந்நூற்று ஐம்பது வருடங்கள் வாழ்ந்தான். நோவா மொத்தம் 950 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.

ஆதியாகமம் 9:22-29 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது கானானுக்குத் தகப்பனாகிய காம், தன் தகப்பனுடைய நிர்வாணத்தைக் கண்டு, வெளியில் இருந்த தன் சகோதரர்கள் இருவருக்கும் சொன்னான். அப்பொழுது சேமும், யாப்பேத்தும் ஒரு ஆடையை எடுத்துத் தங்களுடைய தோள்களின்மேல் போட்டுக்கொண்டு, பின்முகமாக வந்து, தங்களுடைய தகப்பனின் நிர்வாணத்தை மூடினார்கள்; அவர்கள் எதிர்முகமாகப் போகாததால், தங்களுடைய தகப்பனின் நிர்வாணத்தைப் பார்க்கவில்லை. நோவா திராட்சைரசத்தின் போதைதெளிந்து விழித்தபோது, தன் இளையமகன் தனக்குச் செய்ததை அறிந்து: “கானான் சபிக்கப்பட்டவன், தன் சகோதாரர்களிடம் அடிமைகளுக்கு அடிமையாக இருப்பான்” என்றான். “சேமுடைய தேவனாகிய யெகோவாவிற்க்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; கானான் அவனுக்கு அடிமையாக இருப்பான். யாப்பேத்தை தேவன் பெருகச்செய்வார்; அவன் சேமுடைய கூடாரங்களில் குடியிருப்பான்; கானான் அவனுக்கு அடிமையாக இருப்பான்” என்றான். வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு நோவா 350 வருடங்கள் உயிரோடிருந்தான். நோவாவின் நாட்களெல்லாம் 950 வருடங்கள்; அவன் இறந்தான்.

ஆதியாகமம் 9:22-29 பரிசுத்த பைபிள் (TAERV)

கானானின் தந்தையான காம் ஆடையற்ற தனது தந்தையைப் பார்த்து அதைக் கூடாரத்திற்கு வெளியே இருந்த தன் சகோதரர்களிடம் சொன்னான். சேமும் யாப்பேத்தும் ஒரு ஆடையை எடுத்து தங்கள் முதுகின் மேல் போட்டுக்கொண்டு பின்னால் நடந்து கூடாரத்திற்குள் நுழைந்து அதைத் தங்கள் தகப்பன் மேல் போட்டார்கள். இவ்வாறு தந்தையின் நிர்வாணத்தைப் பார்க்காமல் தவிர்த்தார்கள். திராட்சை ரசத்தைக் குடித்ததினால் தூங்கிய நோவா எழுந்ததும் தனது இளைய குமாரனான காம் செய்தது அவனுக்குத் தெரியவந்தது. எனவே அவன், “கானான் சபிக்கப்பட்டவன். அவன் தன் சகோதரர்களுக்கு அடிமையிலும் அடிமையாக இருப்பான்” என்றான். மேலும், “சேமுடைய தேவனாகிய கர்த்தர் துதிக்கப்படுவாராக. கானான் சேமுடைய அடிமையாய் இருப்பான். தேவன் யாப்பேத்துக்கு மேலும் நிலங்களைக் கொடுப்பார். தேவன் சேமுடைய கூடாரத்தில் இருப்பார். இவர்களின் அடிமையாகக் கானான் இருப்பான்” என்றான். வெள்ளப் பெருக்குக்குப் பிறகு நோவா 350 ஆண்டுகள் வாழ்ந்தான். அவன் மொத்தம் 950 ஆண்டுகள் வாழ்ந்து மரணமடைந்தான்.

ஆதியாகமம் 9:22-29 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது கானானுக்குத் தகப்பனாகிய காம் தன் தகப்பனுடைய நிர்வாணத்தைத் கண்டு, வெளியில் இருந்த தன் சகோதரர் இருவருக்கும் அறிவித்தான். அப்பொழுது சேமும், யாப்பேத்தும் ஒரு வஸ்திரத்தை எடுத்துத் தங்கள் இருவருடைய தோள்மேலும் போட்டுக்கொண்டு, பின்னிட்டு வந்து, தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தை மூடினார்கள்; அவர்கள் எதிர்முகமாய்ப் போகாதபடியினால், தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தைக் காணவில்லை. நோவா திராட்சரசத்தின் வெறி தெளிந்து விழித்தபோது, தன் இளையகுமாரன் தனக்குச் செய்ததை அறிந்து: கானான் சபிக்கப்பட்டவன், தன் சகோதரரிடத்தில் அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான் என்றான். சேமுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான். யாப்பேத்தை தேவன் விர்த்தியாக்குவார்; அவன் சேமுடைய கூடாரங்களில் குடியிருப்பான்; கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான் என்றான். ஜலப்பிரளயத்துக்குப்பின்பு நோவா முந்நூற்று ஐம்பது வருஷம் உயிரோடிருந்தான். நோவாவின் நாட்களெல்லாம் தொளாயிரத்து ஐம்பது வருஷம்; அவன் மரித்தான்.