ஆதியாகமம் 9:2-21

ஆதியாகமம் 9:2-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

உங்களைப்பற்றிய பயமும், பீதியும் பூமியிலுள்ள எல்லா விலங்குகளுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், தரையில் ஊரும்பிராணிகளுக்கும், கடல்வாழ் மீன்களுக்கும் இருக்கும்; அவை உங்கள் அதிகாரத்தின்கீழ் கொடுக்கப்பட்டிருக்கிறது. நடமாடும் உயிரினங்கள் யாவும் உங்களுக்கு உணவாகும். தாவரங்களை உங்களுக்கு உணவாகக் கொடுத்ததுபோல, இப்பொழுது இவை எல்லாவற்றையும் உங்களுக்கு உணவாகக் கொடுக்கிறேன். “ஆனாலும், இறைச்சியை அதன் உயிருள்ளபோது அதாவது இரத்தம் அதில் இருக்கும்போது சாப்பிடவேண்டாம். உங்கள் உயிராகிய இரத்தத்திற்கு நான் நிச்சயமாக ஈடு கேட்பேன். ஒவ்வொரு மிருகத்திடமும் ஒவ்வொரு மனிதரிடமும் ஈடு கேட்பேன். மனிதரின் உயிருக்காக அவர்களோடிருக்கும் சக மனிதரிடம் உயிரை நான் ஈடாகக் கேட்பேன். “யாராவது மனித இரத்தத்தைச் சிந்தினால், அவர்களுடைய இரத்தமும் மனிதராலேயே சிந்தப்பட வேண்டும்; ஏனெனில், இறைவன் மனிதரை இறைவனின் சாயலிலேயே படைத்திருக்கிறார். நீங்களோ, இனவிருத்தியில் பெருகி எண்ணிக்கையில் அதிகரியுங்கள்; பூமியில் பெருகி, விருத்தியடையுங்கள்.” பின்பு இறைவன் நோவாவிடமும், அவனுடனிருந்த அவன் மகன்களிடமும்: “நான் உங்களுடனும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியுடனும் இப்பொழுது என்னுடைய உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன். உங்களுடன் பேழையிலிருந்து வெளியேறிய உயிரினங்களான பறவைகள், வளர்ப்பு மிருகங்கள், காட்டு மிருகங்கள் ஆகிய பூமியின் எல்லா உயிரினங்களுடனும் என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன். ‘வெள்ளத்தினால் இனி ஒருபோதும் எல்லா உயிர்களும் அழிக்கப்படமாட்டாது; பூமியை அழிக்க இனி ஒருபோதும் வெள்ளப்பெருக்கு உண்டாகாது’ என்று உங்களோடு என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன்” என்றார். மேலும் இறைவன், “நான் உங்களோடும், உங்களோடிருக்கும் எல்லா உயிரினங்களோடும், வரப்போகும் எல்லா சந்ததிகளோடும் ஏற்படுத்தும் உடன்படிக்கையின் அடையாளம் இதுவே: நான், என் வானவில்லை மேகங்களில் அமைத்திருக்கிறேன், பூமிக்கும் எனக்கும் இடையிலான உடன்படிக்கையின் அடையாளம் இதுவே. நான் பூமிக்கு மேலாக மேகங்களை வரப்பண்ணுகையில், அம்மேகங்களில் வானவில் தோன்றும்போதெல்லாம், உங்களோடும் எல்லாவித உயிரினங்களோடும் நான் செய்துகொண்ட என் உடன்படிக்கையை நினைவுகூருவேன். இனி ஒருபோதும் எல்லா உயிர்களையும் அழிக்கும்படி தண்ணீர் வெள்ளமாய் பெருகாது. மேகங்களில் வானவில் தோன்றும்போதெல்லாம் நான் அதைப் பார்த்து, இறைவனுக்கும் பூமியிலுள்ள எல்லாவித உயிரினங்களுக்கும் இடையே உள்ள நித்திய உடன்படிக்கையை நினைவுகூருவேன்” என்றார். இப்படியாக இறைவன் நோவாவிடம், “எனக்கும் பூமியிலுள்ள எல்லா உயிர்களுக்கும் இடையே நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளம் இதுவே” என்று சொன்னார். பேழையிலிருந்து வெளியேறிய நோவாவின் மகன்கள் சேம், காம், யாப்பேத் என்பவர்களாவர். காம் கானானின் தகப்பன். நோவாவின் மூன்று மகன்கள் இவர்களே; இவர்களிலிருந்தே பூமி எங்கும் பரந்திருக்கும் மக்கள் வந்தார்கள். நோவா நிலத்தைப் பயிரிடுகிறவனாகி, திராட்சைத் தோட்டமொன்றை உண்டாக்கத் தொடங்கினான். அவன் ஒரு நாள் தோட்டத்தின் திராட்சை இரசத்தைக் குடித்து, வெறிகொண்டு, தன் கூடாரத்தினுள்ளே உடை விலகிய நிலையில் கிடந்தான்.

ஆதியாகமம் 9:2-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

உங்களைப்பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள அனைத்து மிருகங்களுக்கும், ஆகாயத்திலுள்ள அனைத்துப் பறவைகளுக்கும் உண்டாயிருக்கும்; பூமியிலே நடமாடுகிற அனைத்தும், சமுத்திரத்தின் மீன்வகைகள் அனைத்தும் உங்கள் கையில் கொடுக்கப்பட்டன. நடமாடுகிற உயிரினங்கள் அனைத்தும் உங்களுக்கு உணவாக இருக்கட்டும்; பசுமையான தாவரங்களை உங்களுக்குக் கொடுத்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குக் கொடுத்தேன். இறைச்சியை அதின் உயிராகிய இரத்தத்துடன் சாப்பிடவேண்டாம். உங்களுக்கு உயிராயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்; அனைத்து உயிரினங்களிடத்திலும் மனிதனிடத்திலும் பழிவாங்குவேன்; மனிதனுடைய உயிருக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன். மனிதன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டதால், மனிதனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனிதனாலே சிந்தப்படட்டும். நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாகப் பெற்றெடுத்து பெருகுங்கள்” என்றார். பின்னும் தேவன் நோவாவையும், அவனுடைய மகன்களையும் நோக்கி: “நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியோடும், உங்களுடன் கப்பலிலிருந்து புறப்பட்ட அனைத்து உயிரினங்கள்முதல் இனிப் பூமியில் பிறக்கப்போகிற அனைத்து உயிரினங்கள்வரை பறவைகளோடும், நாட்டுமிருகங்களோடும், உங்களிடத்தில் இருக்கிற பூமியிலுள்ள அனைத்து காட்டுமிருகங்களோடும் என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன். இனி உயிருள்ளவைகளெல்லாம் வெள்ளப்பெருக்கினால் அழிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி வெள்ளப்பெருக்கு உண்டாவதில்லையென்றும், உங்களோடு என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன்” என்றார். மேலும் தேவன்: “எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும், நித்திய தலை முறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடையாளமாக: நான் எனது வானவில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாக இருக்கும். நான் பூமிக்கு மேலாக மேகத்தை வரச்செய்யும்போது, அந்த வானவில் மேகத்தில் தோன்றும். அப்பொழுது எல்லா உயிரினங்களையும் அழிக்க இனி தண்ணீரானது வெள்ளமாகப் பெருகாதபடி, எனக்கும் உங்களுக்கும் மாம்சமான அனைத்து உயிரினங்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவுகூருவேன். அந்த வானவில் மேகத்தில் தோன்றும்போது, தேவனுக்கும் பூமியின்மேலுள்ள அனைத்துவித உயிரினங்களுக்கும் உண்டான நித்திய உடன்படிக்கையை நான் நினைவுகூரும்படி அதைப் பார்ப்பேன். இது எனக்கும், பூமியின்மேலுள்ள மாம்சமான அனைத்திற்கும் நான் ஏற்படுத்தின உடன்படிக்கையின் அடையாளம்” என்று நோவாவிடம் சொன்னார். கப்பலிலிருந்து புறப்பட்ட நோவாவின் மகன்கள் சேம், காம், யாப்பேத் என்பவர்களே. காம் கானானுக்குத் தகப்பன். இம்மூவரும் நோவாவின் மகன்கள்; இவர்களாலே பூமியெங்கும் மக்கள் பெருகினார்கள். நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சைத்தோட்டத்தை நாட்டினான். அவன் திராட்சைரசத்தைக் குடித்து வெறிகொண்டு, தன் கூடாரத்தில் ஆடை விலகிப் படுத்திருந்தான்.

ஆதியாகமம் 9:2-21 பரிசுத்த பைபிள் (TAERV)

பூமியிலுள்ள அனைத்து மிருகங்களும், வானத்திலுள்ள அனைத்து பறவைகளும், தண்ணீரிலுள்ள அனைத்து மீன்களும், பிற அனைத்து ஊர்வனவும் உங்களைக் கண்டு அஞ்சும், அவை உங்கள் அதிகாரத்திற்குள் இருக்கும். கடந்த காலத்தில் பச்சையான தாவரங்களை உங்களுக்கு உணவாகக் கொடுத்தேன். இப்போது அனைத்து மிருகங்களும் உங்களுக்கு உணவாகட்டும். உலகிலுள்ள அனைத்தும் உங்களுக்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உங்களுக்கு ஒரு ஆணை இடுகிறேன். இறைச்சியை அதின் உயிராகிய இரத்தத்துடன் உண்ணாதீர்கள். நான் உங்களது உயிருக்காக உங்களது இரத்தத்தைக் கேட்பேன். அதாவது ஒரு மனிதனைக் கொல்லுகிற விலங்கின் இரத்தத்தைக் கேட்பேன். மேலும் மற்றொரு மனிதனைக் கொல்லுகிற மனிதனின் இரத்தத்தைக் கேட்பேன். “தேவன் மனிதனைத் தமது சாயலாகவேப் படைத்தார். எனவே மற்றவனைக் கொல்லுகிற எவனும் இன்னொருவரால் கொல்லப்பட வேண்டும். “நோவா, நீயும் உன் குமாரர்களும் குழந்தைகளைப் பெற்று, உங்கள் ஜனங்களால் பூமியை நிரப்புங்கள்” என்றார். பிறகு தேவன் நோவாவிடமும் அவனது பிள்ளைகளிடமும், “நான் உங்களோடும் உங்களுக்குப் பின்னுள்ள வாரிசுகளோடும், உங்களோடு கப்பலிலே இருந்த பறவைகளோடும் மிருகங்களோடும் ஊர்வனவற்றோடும் பூமியில் உள்ள அனைத்து உயிர்களோடும் எனது உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்கிறேன். வெள்ளப்பெருக்கால் பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் அழிக்கப்பட்டன. ஆனால் மீண்டும் இது போல் நடைபெறாது. இன்னொரு வெள்ளப் பெருக்கு பூமியில் உள்ள உயிர்களை அழிக்காது” என்றார். மேலும் தேவன், “உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு அடையாளமாக ஒன்றை உங்களுக்குத் தருகிறேன். உன்னோடும் பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரோடும் நான் செய்துகொண்ட உடன்படிக்கைக்கு அது அத்தாட்சியாக இருக்கும். இந்த உடன்படிக்கை இனிவரும் எல்லாக் காலத்துக்கும் உரியதாக இருக்கும். இதுவே அந்த அத்தாட்சி. மேகங்களுக்கு இடையே ஒரு வானவில்லை உருவாக்கி உள்ளேன். எனக்கும் பூமிக்குமான உடன்படிக்கைக்கு இதுவே அத்தாட்சி. பூமிக்கு மேலாய் மேகங்களைக் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் அதில் வானவில்லைப் பார்க்கலாம். வானவில்லைப் பார்க்கும்போதெல்லாம் நான் எனக்கும் உங்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் இடையில் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையை நினைத்துக்கொள்வேன். அந்த உடன்படிக்கை இனி ஒரு வெள்ளப் பெருக்கு உலகில் தோன்றி இங்குள்ள உயிர்களை அழிக்காது என்று கூறுகிறது. மேகங்களுக்கிடையில் நான் வானவில்லைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கும் பூமியின் மீதுள்ள அனைத்து உயிர்களுக்குமிடையிலான நிரந்தரமான உடன்படிக்கையை நினைத்துக்கொள்வேன்.” “நான் பூமியில் உள்ள அனைத்து உயிர்களோடும் செய்துகொண்ட உடன்படிக்கைக்கு அத்தாட்சியாக வானவில் விளங்குகிறது” என்றார். நோவாவின் குமாரர்கள் கப்பலைவிட்டு வெளியே வந்தனர். அவர்களின் பெயர் சேம், காம், யாப்பேத் ஆகும். காம், கானானின் தந்தை. இந்த மூன்று பேரும் நோவாவின் குமாரர்கள். பூமியில் உள்ள அனைத்து ஜனங்களும் அவர்களது வம்சமேயாகும். நோவா ஒரு விவசாயி ஆனான். அவன் ஒரு திராட்சைத் தோட்டத்தைப் பயிர் செய்தான். நோவா அதில் திராட்சை ரசத்தைச் செய்து குடித்தான். அவன் போதையில் தன் கூடாரத்தில் ஆடையில்லாமல் விழுந்து கிடந்தான்.

ஆதியாகமம் 9:2-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

உங்களைப்பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள சகல மிருகங்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும் உண்டாயிருக்கும்; பூமியிலே நடமாடுகிற யாவும், சமுத்திரத்தின் மச்சங்கள் யாவும், உங்களுக்குக் கையளிக்கப்பட்டன. நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்தது போல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன். மாம்சத்தை அதின் உயிராகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம். உங்களுக்கு உயிராயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்; சகல ஜீவஜந்துக்களிடத்திலும் மனுஷனிடத்திலும் பழிவாங்குவேன்; மனுஷனுடைய உயிருக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன், மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது. நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாய் வர்த்தித்து விர்த்தியாகுங்கள் என்றார். பின்னும் தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் நோக்கி: நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியோடும், உங்களோடே பேழையிலிருந்து புறப்பட்ட சகல ஜீவஜந்துக்கள்முதல் இனிப் பூமியில் உண்டாகப்போகிற சகல ஜீவஜந்துக்கள்பரியந்தம், பறவைகளோடும், நாட்டு மிருகங்களோடும், உங்களிடத்தில் இருக்கிற பூமியிலுள்ள சகல காட்டு மிருகங்களோடும் என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன். இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லையென்றும், உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார். அன்றியும் தேவன்: எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் சகல ஜீவஜந்துக்களுக்கும், நித்திய தலைமுறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடையாளமாக: நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும். நான் பூமிக்கு மேலாய் மேகத்தை வருவிக்கும்போது, அந்த வில் மேகத்தில் தோன்றும். அப்பொழுது எல்லா மாம்சஜீவன்களையும் அழிக்க இனி ஜலமானது பிரளயமாய்ப் பெருகாதபடிக்கு எனக்கும் உங்களுக்கும் மாம்சமான சகல ஜீவஜந்துக்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவுகூருவேன். அந்த வில் மேகத்தில் தோன்றும்போது, தேவனுக்கும் பூமியின்மேலுள்ள சகலவித மாம்சஜீவன்களுக்கும் உண்டான நித்திய உடன்படிக்கையை நான் நினைவுகூரும்படிக்கு அதை நோக்கிப்பார்ப்பேன். இது எனக்கும், பூமியின்மேலுள்ள மாம்சமான யாவுக்கும், நான் ஏற்படுத்தின உடன்படிக்கையின் அடையாளம் என்று நோவாவோடே சொன்னார். பேழையிலிருந்து புறப்பட்ட நோவாவின் குமாரர், சேம், காம், யாப்பேத் என்பவர்களே. காம் கானானுக்குத் தகப்பன். இம்மூவரும் நோவாவின் குமாரர்; இவர்களாலே பூமியெங்கும் ஜனங்கள் பரம்பினார்கள். நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சத்தோட்டத்தை நாட்டினான். அவன் திராட்சரசத்தைக் குடித்து, வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான்.