ஆதியாகமம் 8:15-20

ஆதியாகமம் 8:15-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது இறைவன் நோவாவிடம், “நீ உன் மனைவியுடனும், உன் மகன்களுடனும் அவர்களுடைய மனைவிகளுடனும் பேழையைவிட்டு வெளியே வா. உன்னுடன் இருக்கும் எல்லா விதமான உயிரினங்களாகிய பறவைகள், விலங்குகள், தரையில் ஊரும் உயிரினங்கள் ஆகிய எல்லாவற்றையும் வெளியே கொண்டுவா. அவை பூமியில் பலுகி, எண்ணிக்கையில் பெருகட்டும்” என்றார். அப்படியே நோவா தன்னுடைய மகன்களோடும், தன் மனைவியோடும், மகன்களின் மனைவிகளோடும் வெளியே வந்தான். எல்லா மிருகங்களும், தரையில் ஊரும் எல்லா உயிரினங்களும், எல்லா பறவைகளும் பூமியில் நடமாடும் உயிரினங்கள் அனைத்தும் வகை வகையாகப் பேழையிலிருந்து வெளியே வந்தன. அப்பொழுது நோவா யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதன்மேல் அவன் சுத்தமான மிருகங்கள், சுத்தமான பறவைகள் எல்லாவற்றிலுமிருந்து சிலவற்றைத் தகன காணிக்கைகளாகப் பலியிட்டான்.

ஆதியாகமம் 8:15-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: “நீயும், உன்னோடுகூட உன்னுடைய மனைவியும், மகன்களும், மகன்களின் மனைவிகளும் கப்பலைவிட்டுப் புறப்படுங்கள். உன்னிடத்தில் இருக்கிற அனைத்துவித உயிரினங்களாகிய பறவைகளையும், மிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற அனைத்து பிராணிகளையும் உன்னோடு வெளியே வரவிடு; அவைகள் பூமியிலே திரளாக ஈன்றெடுத்து, பூமியின்மேல் பலுகிப் பெருகட்டும்” என்றார். அப்பொழுது நோவாவும், அவனுடைய மனைவியும், மகன்களும், மகன்களின் மனைவிகளும் வெளியே வந்தார்கள். பூமியின்மேல் நடமாடுகிற அனைத்து மிருகங்களும், ஊருகிற அனைத்து பிராணிகளும், அனைத்து பறவைகளும் வகைவகையாகக் கப்பலிலிருந்து வெளியே வந்தன. அப்பொழுது நோவா யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சுத்தமான அனைத்து மிருகங்களிலும், சுத்தமான அனைத்து பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான்.

ஆதியாகமம் 8:15-20 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு தேவன் நோவாவிடம், “நீயும் உன் மனைவியும் உன் குமாரர்களும் அவர்களின் மனைவியரும் இப்போது கப்பலை விட்டு வெளியே வாருங்கள். உங்களோடுள்ள அனைத்தையும் வெளியே கொண்டு வாருங்கள். பறவைகள், விலங்குகள், ஊர்வன அனைத்தும் மீண்டும் குட்டிகளும் குஞ்சுகளும் இட்டு பூமியை நிரப்பட்டும்” என்றார். எனவே நோவா தன் மனைவி, குமாரர்கள், மருமகள்கள் ஆகியோரோடு வெளியே வந்தான். கப்பலிலுள்ள அனைத்து மிருகங்களும் பறவைகளும் ஊர்வனவும் எல்லா விலங்கினங்களும் கப்பலை விட்டு ஜோடிகளாக வெளியே வந்தன. பிறகு நோவா கர்த்தருக்கு ஓர் பலிபீடத்தைக் கட்டினான். அவன் பலிக்குரிய சுத்தமான மிருகங்களையும், பறவைகளையும் தேர்ந்தெடுத்து தேவனுக்குப் பலியிட்டான்.

ஆதியாகமம் 8:15-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி; நீயும், உன்னோடேகூட உன் மனைவியும், உன் குமாரரும், உன் குமாரரின் மனைவிகளும் பேழையை விட்டுப் புறப்படுங்கள். உன்னிடத்தில் இருக்கிற சகலவித மாம்சஜந்துக்களாகிய பறவைகளையும், மிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளையும் உன்னோடே வெளியே வரவிடு; அவைகள் பூமியிலே திரளாய் வர்த்தித்து, பூமியின்மேல் பலுகிப் பெருகக்கடவது என்றார். அப்பொழுது நோவாவும், அவன் குமாரரும், அவன் மனைவியும், அவன் குமாரரின் மனைவிகளும் புறப்பட்டு வந்தார்கள். பூமியின்மேல் நடமாடுகிற சகல மிருகங்களும், ஊருகிற சகல பிராணிகளும், சகல பறவைகளும் ஜாதிஜாதியாய்ப் பேழையிலிருந்து புறப்பட்டு வந்தன. அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்