ஆதியாகமம் 8:1-5

ஆதியாகமம் 8:1-5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இறைவன் நோவாவையும், பேழைக்குள் அவனுடன் இருந்த காட்டு மிருகங்களையும், வளர்ப்பு மிருகங்களையும் நினைவுகூர்ந்தார்; அவர் பூமிக்கு மேலாக ஒரு காற்றை அனுப்பினார், அப்பொழுது வெள்ளம் வற்றத் தொடங்கியது. நிலத்தின் ஆழத்திலிருந்த நீரூற்றுக்களும், வானத்தின் மதகுகளும் மூடப்பட்டன. வானத்திலிருந்து மழை பெய்வது நின்றுபோயிற்று. படிப்படியாக தண்ணீர் வற்றத் தொடங்கியது. நூற்று ஐம்பது நாட்களுக்குப்பின் தண்ணீர் மட்டம் குறைந்தது. ஏழாம் மாதம் பதினேழாம் நாள் பேழை அரராத் என்னும் மலையின்மேல் தங்கியது. பத்தாம் மாதம்வரை தொடர்ந்து வெள்ளம் வற்றிக்கொண்டிருந்தது. பத்தாம் மாதம் முதலாம் நாள் மலைகளின் உச்சிகள் தெரிந்தன.

ஆதியாகமம் 8:1-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தேவன் நோவாவையும், அவனுடன் கப்பலிலிருந்த அனைத்து காட்டுமிருகங்களையும், அனைத்து நாட்டுமிருகங்களையும் நினைவுகூர்ந்து, பூமியின்மேல் காற்றை வீசச்செய்தார். அப்பொழுது தண்ணீர் குறையத் தொடங்கியது. ஆழத்தின் ஊற்றுக்கண்களும், வானத்தின் மதகுகளும் அடைபட்டன; வானத்து மழையும் நின்றுபோனது. தண்ணீர் பூமியிலிருந்து நாளுக்குநாள் வற்றிக்கொண்டே வந்தது; 150 நாட்களுக்குப்பின்பு தண்ணீர் குறைந்தது. ஏழாம் மாதம் பதினேழாம் தேதியிலே கப்பல் அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கினது. பத்தாம் மாதம்வரைக்கும் தண்ணீர் குறைந்துகொண்டே வந்தது; பத்தாம் மாதம் முதல் தேதியிலே மலைச்சிகரங்கள் காணப்பட்டன.

ஆதியாகமம் 8:1-5 பரிசுத்த பைபிள் (TAERV)

ஆனால் தேவன் நோவாவை மறக்கவில்லை. தேவன் அவனையும் அவனது குடும்பத்தினரையும் அவனோடு கப்பலிலுள்ள விலங்குகளையும் நினைவுகூர்ந்தார். பூமியின்மீது காற்று வீசுமாறு செய்தார். தண்ணீரெல்லாம் மறையத்தொடங்கியது. வானிலிருந்து பெய்த மழை நின்றது. பூமியின் மீதிருந்த தண்ணீர் கீழே செல்லத் துவங்கியது. 150 நாட்கள் ஆனதும் மீண்டும் கப்பல் பூமியைத் தொடுகிற அளவிற்குக் குறைந்து போனது. கப்பல் அரராத் என்ற மலைமீது அமர்ந்தது. அது ஏழாவது மாதத்தின் 17வது நாள். வெள்ளமானது மேலும், மேலும் கீழே போயிற்று. பத்தாவது மாதத்தின் முதல் நாளில் அனைத்து மலைகளின் மேல்பாகமெல்லாம் தெரிய ஆரம்பித்தது.

ஆதியாகமம் 8:1-5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்; தேவன் பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது. ஆழத்தின் ஊற்றுக்கண்களும், வானத்தின் மதகுகளும் அடைபட்டன; வானத்து மழையும் நின்றுபோயிற்று. ஜலம் பூமியிலிருந்து நாளுக்குநாள் வற்றிக்கொண்டே வந்தது; நூற்றைம்பது நாளுக்குப்பின்பு ஜலம் வடிந்தது. ஏழாம் மாதம் பதினேழாம் தேதியிலே பேழை அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கிற்று. பத்தாம் மாதம் மட்டும் ஜலம் வடிந்துகொண்டே வந்தது; பத்தாம் மாதம் முதல் தேதியிலே மலைச்சிகரங்கள் காணப்பட்டன.