ஆதியாகமம் 8:1-16

ஆதியாகமம் 8:1-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இறைவன் நோவாவையும், பேழைக்குள் அவனுடன் இருந்த காட்டு மிருகங்களையும், வளர்ப்பு மிருகங்களையும் நினைவுகூர்ந்தார்; அவர் பூமிக்கு மேலாக ஒரு காற்றை அனுப்பினார், அப்பொழுது வெள்ளம் வற்றத் தொடங்கியது. நிலத்தின் ஆழத்திலிருந்த நீரூற்றுக்களும், வானத்தின் மதகுகளும் மூடப்பட்டன. வானத்திலிருந்து மழை பெய்வது நின்றுபோயிற்று. படிப்படியாக தண்ணீர் வற்றத் தொடங்கியது. நூற்று ஐம்பது நாட்களுக்குப்பின் தண்ணீர் மட்டம் குறைந்தது. ஏழாம் மாதம் பதினேழாம் நாள் பேழை அரராத் என்னும் மலையின்மேல் தங்கியது. பத்தாம் மாதம்வரை தொடர்ந்து வெள்ளம் வற்றிக்கொண்டிருந்தது. பத்தாம் மாதம் முதலாம் நாள் மலைகளின் உச்சிகள் தெரிந்தன. அதிலிருந்து நாற்பது நாட்கள் சென்றபின், நோவா பேழையில் தான் செய்திருந்த ஜன்னலைத் திறந்து, ஒரு காகத்தை வெளியே அனுப்பினான், அது தரையில் தண்ணீர் வற்றும்வரை போவதும் வருவதுமாய் இருந்தது. பின்பு அவன் நிலத்தின் மேலிருந்து தண்ணீர் வற்றிவிட்டதோ என்று பார்க்கும்படி ஒரு புறாவை அனுப்பினான். பூமியின் மேற்பரப்பெங்கும் வெள்ளமாய் இருந்தபடியால், அதற்கு காலூன்றி நிற்க இடம் இருக்கவில்லை; எனவே அது பேழைக்குத் திரும்பி நோவாவிடம் வந்தது. அவன் தன் கையை நீட்டிப் புறாவைப் பிடித்து, பேழைக்குள் தன்னிடம் எடுத்துக்கொண்டான். அவன் மேலும் ஏழு நாட்கள் பொறுத்திருந்து, திரும்பவும் பேழையிலிருந்து புறாவை வெளியே அனுப்பினான். அன்று மாலையில் அந்தப் புறா அவனிடத்தில் திரும்பிவந்தபோது, அதன் அலகில் புதிதாகக் கொத்தியெடுத்த ஒலிவ இலையொன்று இருந்தது. அதனால் பூமியில் தண்ணீர் வற்றிவிட்டது என்று நோவா அறிந்துகொண்டான். அவன் மேலும் ஏழு நாட்கள் பொறுத்திருந்து புறாவை மறுபடியும் வெளியே அனுப்பினான், ஆனால் இம்முறை அது அவனிடம் திரும்பி வரவில்லை. நோவாவுக்கு 601 வயதாகிய வருடத்தின் முதலாம் மாதம் முதலாம் நாள் நிலத்தின் மேலிருந்து தண்ணீர் வற்றிவிட்டது. நோவா பேழையின் மேல்தட்டு மூடியைத் திறந்து பார்த்தான், நிலம் உலர்ந்திருந்தது. இரண்டாம் மாதம் இருபத்தி ஏழாம்நாளில் பூமி முழுவதும் காய்ந்து போயிற்று. அப்பொழுது இறைவன் நோவாவிடம், “நீ உன் மனைவியுடனும், உன் மகன்களுடனும் அவர்களுடைய மனைவிகளுடனும் பேழையைவிட்டு வெளியே வா.

ஆதியாகமம் 8:1-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தேவன் நோவாவையும், அவனுடன் கப்பலிலிருந்த அனைத்து காட்டுமிருகங்களையும், அனைத்து நாட்டுமிருகங்களையும் நினைவுகூர்ந்து, பூமியின்மேல் காற்றை வீசச்செய்தார். அப்பொழுது தண்ணீர் குறையத் தொடங்கியது. ஆழத்தின் ஊற்றுக்கண்களும், வானத்தின் மதகுகளும் அடைபட்டன; வானத்து மழையும் நின்றுபோனது. தண்ணீர் பூமியிலிருந்து நாளுக்குநாள் வற்றிக்கொண்டே வந்தது; 150 நாட்களுக்குப்பின்பு தண்ணீர் குறைந்தது. ஏழாம் மாதம் பதினேழாம் தேதியிலே கப்பல் அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கினது. பத்தாம் மாதம்வரைக்கும் தண்ணீர் குறைந்துகொண்டே வந்தது; பத்தாம் மாதம் முதல் தேதியிலே மலைச்சிகரங்கள் காணப்பட்டன. 40 நாட்களுக்குப் பிறகு, நோவா தான் கப்பலில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து, ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டு பூமியின்மேல் இருந்த தண்ணீர் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாக இருந்தது. பின்பு பூமியின்மேல் தண்ணீர் குறைந்து போயிற்றோ என்று தெரிந்துகொள்ளும்படி, ஒரு புறாவை வெளியே விட்டான். பூமியின்மேலெங்கும் தண்ணீர் இருந்ததினால், அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடம் கிடைக்காததால், திரும்பிக் கப்பலிலே அவனிடத்திற்கு வந்தது; அவன் தன் கையை நீட்டி அதைப்பிடித்துத் தன்னிடமாகக் கப்பலுக்குள் சேர்த்துக்கொண்டான். பின்னும் ஏழு நாட்களுக்குப் பிறகு, மறுபடியும் புறாவைக் கப்பலிலிருந்து வெளியே விட்டான். அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்திற்கு வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவமரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதனால் நோவா பூமியின்மேல் தண்ணீர் குறைந்துபோயிற்று என்று தெரிந்து கொண்டான். பின்னும் ஏழு நாட்களுக்குப் பிறகு, அவன் புறாவை வெளியே விட்டான்; அது அவனிடத்திற்குத் திரும்பி வரவில்லை. அவனுக்கு 601 வயதாகும் வருடத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த தண்ணீர் வற்றிப்போயிற்று; நோவா கப்பலின் மேல் அடுக்கை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் தண்ணீர் இல்லாதிருந்தது. இரண்டாம் மாதம் இருபத்தேழாம் தேதியிலே பூமி காய்ந்திருந்தது. அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: “நீயும், உன்னோடுகூட உன்னுடைய மனைவியும், மகன்களும், மகன்களின் மனைவிகளும் கப்பலைவிட்டுப் புறப்படுங்கள்.

ஆதியாகமம் 8:1-16 பரிசுத்த பைபிள் (TAERV)

ஆனால் தேவன் நோவாவை மறக்கவில்லை. தேவன் அவனையும் அவனது குடும்பத்தினரையும் அவனோடு கப்பலிலுள்ள விலங்குகளையும் நினைவுகூர்ந்தார். பூமியின்மீது காற்று வீசுமாறு செய்தார். தண்ணீரெல்லாம் மறையத்தொடங்கியது. வானிலிருந்து பெய்த மழை நின்றது. பூமியின் மீதிருந்த தண்ணீர் கீழே செல்லத் துவங்கியது. 150 நாட்கள் ஆனதும் மீண்டும் கப்பல் பூமியைத் தொடுகிற அளவிற்குக் குறைந்து போனது. கப்பல் அரராத் என்ற மலைமீது அமர்ந்தது. அது ஏழாவது மாதத்தின் 17வது நாள். வெள்ளமானது மேலும், மேலும் கீழே போயிற்று. பத்தாவது மாதத்தின் முதல் நாளில் அனைத்து மலைகளின் மேல்பாகமெல்லாம் தெரிய ஆரம்பித்தது. நாற்பது நாட்களுக்குப் பிறகு நோவா கப்பலின் ஜன்னலைத் திறந்து, ஒரு காகத்தை வெளியே அனுப்பினான். அது பூமியிலுள்ள தண்ணீர் வற்றிப்போகும்வரை போவதும் வருவதுமாக இருந்தது. நோவா ஒரு புறாவையும் வெளியே அனுப்பினான். அது தான் தங்கிட ஒரு வறண்ட இடத்தைக் கண்டுக்கொள்ளும் என எண்ணினான். இதன் மூலம் பூமியில் தண்ணீர் வற்றிவிட்டதா என்பதை அறிந்துகொள்ளலாம் என நினைத்தான். ஆனால் தண்ணீர் இன்னும் பூமியில் பரவியிருந்தது. எனவே புறா மீண்டும் கப்பலுக்கே திரும்பி வந்தது. நோவா அதனைத் தன் கையை நீட்டிப் பிடித்து கப்பலுக்குள் சேர்த்துக்கொண்டான். ஏழு நாட்களானதும் நோவா மீண்டும் புறாவை அனுப்பினான். அன்று மாலையில் அப்புறா மீண்டும் திரும்பி வந்தது. அதன் வாயில் ஒலிவ மரத்தின் புதிய இலை இருந்தது. இதன் மூலம் அவன் தண்ணீர் வற்றிவிட்டது என்பதை அறிந்துக்கொண்டான். மேலும் 7 நாட்கள் ஆனதும் மீண்டும் புறாவை வெளியே அனுப்பினான். ஆனால் அது திரும்பி வரவே இல்லை. அதன் பிறகு நோவா கப்பலின் கதவைத் திறந்தான். தரை காய்ந்துபோனதை நோவா தெரிந்துகொண்டான். இதுதான் அந்த ஆண்டின் முதல் மாதத்தின் முதல் நாளாக ஆயிற்று. நோவா 601 வயதுடையவன் ஆனான். இரண்டாவது மாதத்தின் 27வது நாளில் தரை முழுவதும் நன்றாகக் காய்ந்துவிட்டது. பிறகு தேவன் நோவாவிடம், “நீயும் உன் மனைவியும் உன் குமாரர்களும் அவர்களின் மனைவியரும் இப்போது கப்பலை விட்டு வெளியே வாருங்கள்.

ஆதியாகமம் 8:1-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்; தேவன் பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது. ஆழத்தின் ஊற்றுக்கண்களும், வானத்தின் மதகுகளும் அடைபட்டன; வானத்து மழையும் நின்றுபோயிற்று. ஜலம் பூமியிலிருந்து நாளுக்குநாள் வற்றிக்கொண்டே வந்தது; நூற்றைம்பது நாளுக்குப்பின்பு ஜலம் வடிந்தது. ஏழாம் மாதம் பதினேழாம் தேதியிலே பேழை அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கிற்று. பத்தாம் மாதம் மட்டும் ஜலம் வடிந்துகொண்டே வந்தது; பத்தாம் மாதம் முதல் தேதியிலே மலைச்சிகரங்கள் காணப்பட்டன. நாற்பது நாள் சென்றபின், நோவா தான் பேழையில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து, ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டுப் பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாய் இருந்தது. பின்பு பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்றோ என்று அறியும்படி, ஒரு புறாவைத் தன்னிடத்திலிருந்து வெளியே விட்டான். பூமியின்மீதெங்கும் ஜலம் இருந்தபடியால், அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடம் காணாமல், திரும்பிப் பேழையிலே அவனிடத்தில் வந்தது; அவன் தன் கையை நீட்டி அதைப்பிடித்துத் தன்னிடமாகப் பேழைக்குள் சேர்த்துக்கொண்டான். பின்னும் ஏழு நாள் பொறுத்து, மறுபடியும் புறாவைப் பேழையிலிருந்து வெளியே விட்டான். அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்தில் வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவமரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதினாலே நோவா பூமியின்மேல் ஜலம் குறைந்துபோயிற்று என்று அறிந்தான். பின்னும் ஏழு நாள் பொறுத்து, அவன் புறாவை வெளியே விட்டான்; அது அவனிடத்திற்குத் திரும்பி வரவில்லை. அவனுக்கு அறுநூற்றொரு வயதாகும் வருஷத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போயிற்று; நோவா பேழையின் மேல்தட்டை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் ஜலம் இல்லாதிருந்தது. இரண்டாம் மாதம் இருபத்தேழாம் தேதியிலே பூமி காய்ந்திருந்தது. அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி; நீயும், உன்னோடேகூட உன் மனைவியும், உன் குமாரரும், உன் குமாரரின் மனைவிகளும் பேழையை விட்டுப் புறப்படுங்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்