ஆதியாகமம் 7:11-24

ஆதியாகமம் 7:11-24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நோவாவுக்கு 600 வயதான அந்த வருடம், இரண்டாம் மாதம், பதினேழாம் நாள் பூமியின் அதிக ஆழத்திலிருந்த ஊற்றுகள் எல்லாம் வெடித்துப் பீறிட்டன; வானத்தின் மதகுகளும் திறக்கப்பட்டன. நாற்பது பகல்களும் நாற்பது இரவுகளும் பூமியில் அடைமழை பெய்தது. மழை தொடங்கிய அன்றே நோவாவும், அவன் மனைவியும், சேம், காம், யாப்பேத் என்னும் அவனுடைய மகன்களும், அவர்களுடைய மனைவிமாரும் பேழைக்குள் போனார்கள். எல்லாவித காட்டு மிருகங்களும் அதினதின் வகைகளின்படியும், எல்லாவித வளர்ப்பு மிருகங்களும் அதினதின் வகைகளின்படியும், தரையில் ஊரும் எல்லாவித உயிரினங்களும் அதினதின் வகைகளின்படியும், எல்லாவித பறவைகளும் அதினதின் வகைகளின்படியும், சிறகுகளுடைய யாவும் அவர்களோடு இருந்தன. பூமியிலுள்ள உயிர்மூச்சுள்ள எல்லா உயிரினங்களும் ஜோடி ஜோடியாக நோவாவிடம் வந்து பேழைக்குள் சென்றன. இறைவன் நோவாவுக்குக் கட்டளையிட்டபடியே, உட்சென்ற எல்லா விலங்குகளும் ஒவ்வொரு உயிரினத்தையும் சேர்ந்த ஆணும் பெண்ணுமாகவே இருந்தன. யெகோவா நோவாவை உள்ளேவிட்டுக் கதவை அடைத்தார். வெள்ளம் நாற்பது நாட்களாகப் பூமியின்மேல் பெருகிக்கொண்டே இருந்தது, வெள்ளம் பெருகியபோது அது பேழையை நிலத்திற்கு மேலாக உயர்த்தியது. பூமியின்மேல் வெள்ளம் உயர்ந்து, பேழை நீரின்மேல் மிதந்தது. வெள்ளம் பூமியின்மேல் அதிகமாய்ப் பெருகியதால், வானத்தின் கீழுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன. வெள்ளம் மலைகளுக்கு மேலாக பதினைந்து முழத்திற்கு மேல் உயர்ந்து அவைகளை மூடியது. அப்பொழுது பூமியில் நடமாடிய பறவைகள், காட்டு மிருகங்கள், வளர்ப்பு மிருகங்கள் ஆகிய எல்லா உயிரினங்களும், பூமியில் கூட்டமாய்த் திரியும் எல்லா பிராணிகளும் அழிந்துபோயின; அத்துடன் மனுக்குலம் முழுவதும் அழிந்துபோனது. நிலத்தில் வாழ்ந்த தங்களது நாசியில் உயிர்மூச்சுள்ள யாவும் மாண்டுபோயின. பூமியிலிருந்த எல்லா உயிரினங்களும் அழிக்கப்பட்டன; மனிதர்களுடன், மிருகங்கள், தரையில் ஊரும் உயிரினங்கள், ஆகாயத்துப் பறவைகள் ஆகிய எல்லாமே பூமியிலிருந்து அழிக்கப்பட்டன. நோவாவும் அவனுடன் பேழைக்குள் இருந்தவர்களும் மாத்திரம் உயிர் தப்பினார்கள். பெருவெள்ளம் நூற்று ஐம்பது நாட்களாக பூமியை மூடியிருந்தது.

ஆதியாகமம் 7:11-24 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நோவாவுக்கு 600 வயதாகும் வருடம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்த நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறந்தன. நாற்பது நாட்கள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை பெய்தது. அன்றையத்தினமே நோவாவும், நோவாவின் மகன்களாகிய சேமும் காமும் யாப்பேத்தும், அவர்களுடனேகூட நோவாவின் மனைவியும், அவனுடைய மகன்களின் மூன்று மனைவிகளும், கப்பலுக்குள் சென்றார்கள். அவர்களோடு வகைவகையான அனைத்துவிதக் காட்டுமிருகங்களும், வகைவகையான அனைத்துவித நாட்டுமிருகங்களும், பூமியின்மேல் ஊருகிற வகைவகையான அனைத்துவித ஊரும் பிராணிகளும், வகைவகையான அனைத்துவிதப் பறவைகளும், பலவிதமான சிறகுகளுள்ள அனைத்துவிதப் பறவைகளும் சென்றன. இப்படியே ஜீவசுவாசமுள்ள உயிரினங்களெல்லாம் ஜோடிஜோடியாக நோவாவிடத்திற்கு வந்து கப்பலுக்குள் சென்றன. தேவன் அவனுக்குக் கட்டளையிட்டபடியே, ஆணும் பெண்ணுமாக அனைத்துவித உயிரினங்களும் உள்ளே சென்றன; அப்பொழுது யெகோவா அவனை உள்ளே விட்டுக் கதவை அடைத்தார். வெள்ளப்பெருக்கு 40 நாட்கள் பூமியின்மேல் இருந்தபோது தண்ணீர் பெருகி கப்பலை மேலே எழும்பச் செய்தது; அது பூமிக்குமேல் மிதந்தது. தண்ணீர் பெருவெள்ளமாகி பூமியின்மேல் மிகவும் பெருகியது; கப்பலானது தண்ணீரின்மேல் மிதந்துகொண்டிருந்தது. தண்ணீர் பூமியின்மேல் மிகவும் அதிகமாகப் பெருகியதால், வானத்தின்கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன. மூடப்பட்ட மலைகளுக்கு மேலாகப் 22 அடி உயரத்திற்குத் தண்ணீர் பெருகியது. அப்பொழுது உயிரினங்களாகிய பறவைகளும், நாட்டுமிருகங்களும், காட்டுமிருகங்களும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் அனைத்தும், எல்லா மனிதர்களும், பூமியின்மேல் வாழ்கிறவைகள் அனைத்தும் இறந்தன. நிலப்பரப்பு எல்லாவற்றிலும் இருந்த உயிருள்ள அனைத்தும் இறந்துபோயின. மனிதர்கள்முதல் மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள்வரை, பூமியின்மீது இருந்த உயிருள்ள அனைத்தும் அழிக்கப்பட்டு, அவைகள் பூமியில் இல்லாமல் ஒழிந்தன; நோவாவும் அவனோடு கப்பலிலிருந்த உயிர்களும் மாத்திரம் காக்கப்பட்டன. தண்ணீர் பூமியை 150 நாட்கள் மூடிக்கொண்டிருந்தது.

ஆதியாகமம் 7:11-24 பரிசுத்த பைபிள் (TAERV)

இரண்டாவது மாதத்தின் பதினேழாவது நாள் பூமிக்கடியில் உள்ள ஊற்றுகள் எல்லாம் திறந்து பீறிட்டுக் கிளம்பின. அன்று பெருமழையும் சேர்ந்து கொட்ட ஆரம்பித்தது. அது வானத்தின் ஜன்னல்கள் திறந்துகொண்டது போன்று இருந்தது. நாற்பது நாட்கள் இரவும் பகலுமாக மழை தொடர்ந்து பெய்தது. முதல் நாளே நோவாவும் அவனது மனைவியும் அவன் குமாரர்களான சேம், காம், யாப்பேத் ஆகியோரும் அவர்களது மனைவிமாரும் கப்பலுக்குள் சென்றுவிட்டனர். அப்போது நோவாவுக்கு 600 வயது. அவர்களும் எல்லாவகை மிருகங்களும் கப்பலுக்குள் இருந்தனர். எல்லா வகை மிருகங்களும், எல்லாவகைப் பறவைகளும், எல்லாவகை ஊர்வனவும் கப்பலுக்குள் இருந்தன. இவை எல்லாம் நோவாவோடு கப்பலுக்குள் சென்றன. அவைகள் எல்லா மிருக வகைகளிலிருந்தும் ஜோடி, ஜோடியாக வந்தன. இந்த மிருகங்கள் எல்லாம் இரண்டு இரண்டாக, கப்பலுக்குள் சென்றன. தேவனுடைய ஆணையின்படியே அவை கப்பலுக்குள் சென்றன. பிறகு கர்த்தர் கப்பலின் கதவை அடைத்துவிட்டார். பூமியில் 40 நாட்கள் தொடர்ந்து வெள்ளம் பெருகியது. அவ்வெள்ளம் கப்பலைத் தரையிலிருந்து மேல் நோக்கிக் கிளப்பியது. வெள்ளம் தொடர்ந்து ஏறியது. அதனால் கப்பல் தண்ணீரில் மிதக்க ஆரம்பித்தது. உயரமான மலைகளும் மூழ்கும்படி வெள்ளம் உயர்ந்தது. வெள்ளம் மலைகளுக்கு மேலும் உயர்ந்தது. அதன் உயரம் மலைகளுக்கு மேல் 20 அடி இருந்தது. உலகில் உள்ள அனைத்து உயிர்களும் மரித்தன. எல்லா ஆண்களும் பெண்களும், பறவைகளும், எல்லா மிருகங்களும், எல்லா ஊர்வனவும் மரித்தன. தரையில் வாழக்கூடிய அனைத்து உயிர்களும் மரித்துப்போயின. இவ்வாறு தேவன் பூமியை அழித்தார். தேவன் பூமியில் உயிருள்ள அனைத்தையும் மனிதன், மிருகம், ஊர்ந்து செல்லும் பிராணிகள், பறவைகள் உட்பட எல்லாவற்றையும் பூமியிலிருந்து முற்றிலுமாய் அழித்தார். நோவாவும் அவனது குடும்பத்தினரும் அவனோடு கப்பலிலிருந்த பறவைகளும், மிருகங்களும் மட்டுமே உயிர் பிழைத்தன. வெள்ளமானது தொடர்ந்து 150 நாட்கள் பூமியில் பரவியிருந்தது.

ஆதியாகமம் 7:11-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நோவாவுக்கு அறுநூறாம் வயதாகும் வருஷம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறவுண்டன. நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை பெய்தது. அன்றைத்தினமே நோவாவும், நோவாவின் குமாரராகிய சேமும் காமும் யாப்பேத்தும், அவர்களுடனேகூட நோவாவின் மனைவியும், அவன் குமாரரின் மூன்று மனைவிகளும், பேழைக்குள் பிரவேசித்தார்கள். அவர்களோடு ஜாதிஜாதியான சகலவிதக் காட்டு மிருகங்களும், ஜாதிஜாதியான சகலவித நாட்டு மிருகங்களும், பூமியின்மேல் ஊருகிற ஜாதிஜாதியான சகலவித ஊரும் பிராணிகளும், ஜாதிஜாதியான சகலவிதப் பறவைகளும், பலவிதமான சிறகுகளுள்ள சகலவிதப் பட்சிகளும் பிரவேசித்தன. இப்படியே ஜீவசுவாசமுள்ள மாம்ச ஜந்துக்களெல்லாம் ஜோடுஜோடாக நோவாவிடத்தில் பேழைக்குள் பிரவேசித்தன. தேவன் அவனுக்குக் கட்டளையிட்டபடியே, ஆணும் பெண்ணுமாக சகலவித மாம்சஜந்துக்களும் உள்ளே பிரவேசித்தன; அப்பொழுது கர்த்தர் அவனை உள்ளே விட்டுக் கதவை அடைத்தார். ஜலப்பிரளயம் நாற்பது நாள் பூமியின்மேல் உண்டானபோது, ஜலம் பெருகி, பேழையைக் கிளம்பப்பண்ணிற்று; அது பூமிக்குமேல் மிதந்தது. ஜலம் பெருவெள்ளமாகி, பூமியின்மேல் மிகவும் பெருகிற்று; பேழையானது ஜலத்தின்மேல் மிதந்துகொண்டிருந்தது. ஜலம் பூமியின்மேல் மிகவும் அதிகமாய்ப் பெருகினதினால், வானத்தின்கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன. மூடப்பட்ட மலைகளுக்கு மேலாய்ப் பதினைந்துமுழ உயரத்திற்கு ஜலம் பெருகிற்று. அப்பொழுது மாம்சஜந்துக்களாகிய பறவைகளும், நாட்டு மிருகங்களும், காட்டு மிருகங்களும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் யாவும், எல்லா நரஜீவன்களும், பூமியின்மேல் சஞ்சரிக்கிறவைகள் யாவும் மாண்டன. வெட்டாந்தரையில் உண்டான எல்லாவற்றிலும் நாசியிலே ஜீவசுவாசமுள்ளவைகள் எல்லாம் மாண்டுபோயின. மனுஷர் முதல், மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும், பூமியின்மேல் இருந்த உயிருள்ள வஸ்துக்கள் யாவும் அழிந்து, அவைகள் பூமியில் இராதபடிக்கு நிக்கிரகமாயின; நோவாவும் அவனோடே பேழையிலிருந்த உயிர்களும் மாத்திரம் காக்கப்பட்டன. ஜலம் பூமியின்மேல் நூற்றைம்பது நாள் மிகவும் பிரவாகித்துக்கொண்டிருந்தது.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்