ஆதியாகமம் 6:5-9
ஆதியாகமம் 6:5-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. அப்பொழுது கர்த்தர்: நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம்பண்ணுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது என்றார். நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது. நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்.
ஆதியாகமம் 6:5-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பூமியில் மனிதனின் கொடுமைகள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கின்றன என்பதையும், அவன் எப்பொழுதும் தன் இருதய சிந்தனைகள் ஒவ்வொன்றிலும் தீமையின் பக்கம் மட்டுமே சாய்கிறான் என்பதையும் யெகோவா கண்டார். அதனால் யெகோவா பூமியில் மனிதனை உண்டாக்கியதைக் குறித்து வருத்தப்பட்டார்; அவருடைய இருதயம் வேதனையால் நிறைந்தது. அப்பொழுது யெகோவா, “நான் படைத்த இந்த மனுக்குலத்தைப் பூமியிலிருந்து அழித்துவிடுவேன்; மனிதரோடு விலங்குகளையும், நிலத்தில் ஊரும் உயிரினங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும் அழித்துப்போடுவேன்; அவர்களை உண்டாக்கியதைக் குறித்து எனக்கு மனவேதனையாக இருக்கிறது” என்றார். ஆனால் நோவாவுக்கு யெகோவாவினுடைய பார்வையில் தயவு கிடைத்தது. நோவாவின் வம்சவரலாறு இதுவே
ஆதியாகமம் 6:5-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மனிதனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவனுடைய இருதயத்தின் நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், யெகோவா கண்டு, தாம் பூமியிலே மனிதனை உண்டாக்கினதற்காகக் யெகோவா மனவேதனை அடைந்தார்; அது அவர் இருதயத்திற்கு வருத்தமாக இருந்தது. அப்பொழுது யெகோவா: “நான் உருவாக்கிய மனிதனை பூமியின்மேல் வைக்காமல், மனிதன் முதற்கொண்டு, மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள்வரை உண்டாயிருக்கிறவைகளை அழித்துப்போடுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனவேதனையாக இருக்கிறது” என்றார். நோவாவுக்கோ, யெகோவாவுடைய கண்களில் கிருபை கிடைத்தது. நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருந்தான்.
ஆதியாகமம் 6:5-9 பரிசுத்த பைபிள் (TAERV)
பூமியில் உள்ள மனிதர்கள் அனைவரும் பெரும் பாவிகளாக இருப்பதை கர்த்தர் அறிந்தார். அவர்கள் எல்லாக் காலத்திலும் பாவ எண்ணங்களையே கொண்டிருப்பதை கர்த்தர் பார்த்தார். கர்த்தர் மனிதர்களைப் பூமியில் படைத்ததற்காக வருத்தப்பட்டார். எனவே கர்த்தர், “பூமியில் நான் படைத்த அனைத்து மனிதர்களையும், மிருகங்களையும், ஊர்வனவற்றையும், வானத்தில் பறக்கும் பறவைகளையும் அழிக்கப் போகிறேன். ஏனென்றால் நான் இவற்றையெல்லாம் படைத்ததற்காக வருத்தப்படுகிறேன்” என்றார். ஆனால் கர்த்தருக்கு விருப்பமான வழியில் நடப்பவனாக நோவா என்னும் ஒரே ஒரு மனிதன் மட்டும் இருந்தான். இது நோவாவின் குடும்பத்தைப்பற்றிக் கூறுகின்ற பகுதி. நோவா நேர்மையான மனிதனாக இருந்தான். அவன் தன்னைச் சுற்றியுள்ள ஜனங்களில் குற்றமற்றவனாக இருந்தான். அவன் எப்பொழுதும் தேவனைப் பின்பற்றி வாழ்ந்தான்.