ஆதியாகமம் 50:22-26

ஆதியாகமம் 50:22-26 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

யோசேப்பும் அவன் தகப்பன் குடும்பத்தாரும் எகிப்திலே குடியிருந்தார்கள். யோசேப்பு நூற்றுப்பத்து வருஷம் உயிரோடிருந்தான். யோசேப்பு எப்பிராயீமுக்குப் பிறந்த மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளையும் கண்டான்; மனாசேயின் குமாரனாகிய மாகீரின் பிள்ளைகளும் யோசேப்பின் மடியில் வளர்க்கப்பட்டார்கள். யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: நான் மரணமடையப்போகிறேன்; ஆனாலும் தேவன் உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, நீங்கள் இந்தத் தேசத்தை விட்டு, தாம் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக் கொடுத்திருக்கிற தேசத்துக்குப் போகப்பண்ணுவார் என்று சொன்னதுமன்றி; தேவன் உங்களைச் சந்திக்கும்போது, என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக என்றும் சொல்லி; யோசேப்பு இஸ்ரவேல் புத்திரரிடத்தில் ஆணையிடுவித்துக்கொண்டான். யோசேப்பு நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரித்தான். அவனுக்குச் சுகந்தவர்க்கமிட்டு, எகிப்து தேசத்தில் அவனை ஒரு பெட்டியிலே வைத்துவைத்தார்கள்.

ஆதியாகமம் 50:22-26 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யோசேப்பு தன் தகப்பனின் குடும்பத்தார் எல்லோருடனும் எகிப்தில் வாழ்ந்து வந்தான். அவன் நூற்றுப்பத்து வயதுவரை உயிர் வாழ்ந்தான். யோசேப்பு, எப்பிராயீமின் பிள்ளைகளுடைய மூன்றாம் தலைமுறையையும் கண்டான். அப்பிள்ளைகள் எல்லோரும், மனாசேயின் மகன் மாகீரின் பிள்ளைகளும் யோசேப்பின் மடியிலே வளர்ந்தார்கள். பின்பு யோசேப்பு தன் சகோதரரிடம், “எனக்கு மரணம் நெருங்கிவிட்டது. இறைவன் உங்களுக்கு நிச்சயமாய் உதவி செய்வார்; ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் வாக்குப்பண்ணப்பட்டிருக்கும் நாட்டுக்கு அவர் உங்களை இவ்விடத்திலிருந்து கொண்டுபோவார்” என்றான். பின்னும் யோசேப்பு அவர்களிடம், “நிச்சயமாய் இறைவன் உங்களுக்கு உதவி செய்வார். அப்பொழுது நீங்கள் என்னுடைய எலும்புகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டு போகவேண்டும்” என்று இஸ்ரயேலின் மகன்களிடம் சத்தியம் பெற்றுக்கொண்டான். யோசேப்பு தனது நூற்றுப்பத்தாம் வயதில் மரணமடைந்தான். அவனுடைய உடல் நறுமணப்பொருட்களால் பதப்படுத்தப்பட்டு, எகிப்திலே ஒரு சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டது.

ஆதியாகமம் 50:22-26 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யோசேப்பும் அவனுடைய தகப்பன் குடும்பத்தாரும் எகிப்திலே குடியிருந்தார்கள். யோசேப்பு 110 வருடங்கள் உயிரோடிருந்தான். யோசேப்பு எப்பிராயீமுக்குப் பிறந்த மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளையும் கண்டான்; மனாசேயின் மகனாகிய மாகீரின் பிள்ளைகளும் யோசேப்பின் மடியில் வளர்க்கப்பட்டார்கள். யோசேப்பு தன் சகோதரர்களை நோக்கி: “நான் மரணமடையப்போகிறேன்; ஆனாலும் தேவன் உங்களை நிச்சயமாகச் சந்தித்து, நீங்கள் இந்த தேசத்தைவிட்டு, தாம் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக் கொடுத்திருக்கிற தேசத்திற்குப் போகச்செய்வார் என்று சொன்னதுமல்லாமல்; தேவன் உங்களைச் சந்திக்கும்போது, என் எலும்புகளை இந்த இடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக” என்றும் சொல்லி; யோசேப்பு இஸ்ரவேல் வம்சத்தாரிடத்தில் உறுதிமொழி வாங்கிக்கொண்டான். யோசேப்பு 110 வயதுள்ளவனாக இறந்தான். அவனுடைய உடலைப் பதப்படுத்தி, எகிப்து தேசத்தில் அவனை ஒரு பெட்டியிலே வைத்துவைத்தார்கள்.

ஆதியாகமம் 50:22-26 பரிசுத்த பைபிள் (TAERV)

யோசேப்பு தொடர்ந்து எகிப்தில் தன் தந்தையின் குடும்பத்தோடு வாழ்ந்தான். அவனுக்கு 110 வயதானபோது மரணமடைந்தான். யோசேப்பு உயிரோடு இருக்கும்போதே எப்பிராயீமுக்குப் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் இருந்தனர். மனாசேக்கு மாகீர் என்ற குமாரன் இருந்தான். மாகீரின் பிள்ளைகளையும் யோசேப்பு பார்த்தான். மரணம் நெருங்கியதும் யோசேப்பு தன் சகோதரர்களிடம், “எனது மரண நேரம் நெருங்கிவிட்டது. தேவன் உங்களை கவனித்துக்கொள்வார் என்பதை நான் அறிவேன். உங்களை இந்த நாட்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்வார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு தேவன் கொடுப்பதாகச் சொன்ன நாடுகளை உங்களுக்குக் கொடுப்பார்” என்றான். பின் யோசேப்பு இஸ்ரவேல் ஜனங்களிடம் ஒரு வாக்குறுதிச் செய்தான். அவன், “நான் மரித்த பிறகு என் எலும்புகளை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் தேவனால் வழி நடத்தப்பட்டு புதிய பூமிக்குப் போகும்போது அதையும் கொண்டு செல்லுங்கள்” இதைப்பற்றி வாக்குறுதி செய்யுங்கள் என்றான். யோசேப்பு எகிப்திலேயே மரணமடைந்தான். அப்போது அவனுக்கு 110 வயது. மருத்துவர்கள் அவனது உடலை அடக்கம் செய்வதற்காகத் தயார் செய்தனர். அதனை ஒரு பெட்டியில் வைத்தார்கள்.