ஆதியாகமம் 48:8-16

ஆதியாகமம் 48:8-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இஸ்ரயேல் யோசேப்பின் மகன்களை கண்டபோது, “இவர்கள் யார்?” என்று அவனிடம் கேட்டான். அதற்கு யோசேப்பு தன் தகப்பனிடம், “இவர்கள்தான் இறைவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகள்” என்றான். அப்பொழுது இஸ்ரயேல் யோசேப்பிடம், “நான் அவர்களை ஆசீர்வதிக்கும்படி அவர்களை என்னிடம் கொண்டுவா” என்றான். வயது சென்றபடியால் இஸ்ரயேலின் கண்பார்வை மங்கியிருந்தது, அதனால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. ஆகையால் யோசேப்பு அவர்களை அவனுக்கு அருகில் கொண்டுவந்தான்; யாக்கோபு அவர்களைக் கட்டி அணைத்து முத்தமிட்டான். அதன்பின் இஸ்ரயேல் யோசேப்பிடம், “திரும்பவும் உன் முகத்தைப் பார்ப்பேனென்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. இப்பொழுதோ இறைவன் நான் உன்னுடைய பிள்ளைகளையும் காணும்படி செய்தாரே” என்றான். யோசேப்பு இஸ்ரயேலின் முழங்கால்கள் நடுவிலிருந்த தன் பிள்ளைகளை விலக்கிவிட்டு செய்து தரைமட்டும் குனிந்து தன் தகப்பனை வணங்கினான். பின்பு யோசேப்பு அவர்கள் இருவரையும் பிடித்து, எப்பிராயீமை தன் வலதுகையினால் இஸ்ரயேலின் இடப்பக்கத்திலும், மனாசேயைத் தன் இடது கையினால் இஸ்ரயேலின் வலதுபக்கத்திலுமாகத் தன் தகப்பன் அருகே கொண்டுவந்தான். ஆனால் இஸ்ரயேல், தன் இரு கைகளையும் குறுக்காக நீட்டி, எப்பிராயீம் இளையவனாயிருந்தபோதிலும் அவன் தலையின்மேல் தன் வலதுகையை வைத்தான்; மனாசே மூத்தவனாய் இருந்தபோதிலும், அவன் தலையின்மேல் இடதுகையை வைத்தான். அதன்பின் இஸ்ரயேல் யோசேப்பை ஆசீர்வதித்து சொன்னது: “என் தந்தையர்களான ஆபிரகாம், ஈசாக்கு ஆகியோர் வழிபட்ட இறைவனும், என் வாழ்நாள் முழுவதும் இன்றுவரை என் மேய்ப்பராயிருந்த இறைவனும், எல்லா தீங்குகளிலிருந்தும் என்னை விடுவித்த தூதனுமானவர் இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிப்பாராக. இவர்கள் என்னுடைய பெயராலும், என் தந்தையர்களான ஆபிரகாமினுடைய, ஈசாக்கினுடைய பெயர்களாலும் அழைக்கப்படுவார்களாக. இவர்கள் பூமியில் மிகுதியாய்ப் பெருகுவார்களாக.”

ஆதியாகமம் 48:8-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இஸ்ரவேல் யோசேப்பின் மகன்களைப் பார்த்து: “இவர்கள் யார்” என்று கேட்டான். யோசேப்பு தன் தகப்பனை நோக்கி: “இவர்கள் இந்த இடத்தில் தேவன் எனக்கு அருளின மகன்கள்” என்றான். அப்பொழுது அவன்: “நான் அவர்களை ஆசீர்வதிக்க அவர்களை என் அருகில் கொண்டுவா” என்றான். முதிர்வயதினால் இஸ்ரவேலின் கண்கள் மங்கலாயிருந்தால், அவன் நன்றாகப் பார்க்கமுடியாமலிருந்தது. அவர்களை அவனருகில் சேரச்செய்தான்; அப்பொழுது அவன் அவர்களை முத்தம்செய்து அணைத்துக்கொண்டான். இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: “உன் முகத்தைக் காண்பேன் என்று நான் நினைக்கவில்லை; ஆனாலும், இதோ, உன் சந்ததியையும் காணும்படி தேவன் எனக்கு அருள்செய்தார்” என்றான். அப்பொழுது அவனுடைய முழங்கால்கள் நடுவே இருந்த பிள்ளைகளை யோசேப்பு பின்னிடச்செய்து, அவனுடைய முகத்திற்கு முன்பாகத் தரைமட்டும் குனிந்து வணங்கினான். பின்பு, யோசேப்பு அவ்விருவரையும் கொண்டுவந்து, எப்பிராயீமைத் தன் வலது கையினாலே இஸ்ரவேலின் இடது கைக்கு நேராகவும், மனாசேயைத் தன் இடது கையினாலே இஸ்ரவேலின் வலது கைக்கு நேராகவும் விட்டான். அப்பொழுது இஸ்ரவேல், மனமறிய, தன் வலது கையை நீட்டி, இளையவனாகிய எப்பிராயீமுடைய தலையின்மேலும், மனாசே மூத்தவனாயிருந்தும், தன் இடது கையை மனாசேயுடைய தலையின்மேலும் வைத்தான். அவன் யோசேப்பை ஆசீர்வதித்து: “என் பிதாக்களாகிய ஆபிரகாமும் ஈசாக்கும் வழிபட்டு வணங்கிய தேவனும், நான் பிறந்த நாள்முதல் இந்த நாள்வரைக்கும் என்னை ஆதரித்துவந்த தேவனும், எல்லாத் தீமைக்கும் விலக்கி என்னை மீட்ட தூதனுமானவர் இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிப்பாராக, என் பெயரும் என் பிதாக்களாகிய ஆபிரகாம் ஈசாக்கு என்பவர்களின் பெயரும் இவர்களுக்கு வைக்கப்படக்கடவது; பூமியில் இவர்கள் மிகுதியாகப் பெருகுவார்களாக” என்றான்.

ஆதியாகமம் 48:8-16 பரிசுத்த பைபிள் (TAERV)

பின் இஸ்ரவேல் யோசேப்பின் பிள்ளைகளைப் பார்த்து, “இவர்கள் யார்?” என்று கேட்டார். யோசேப்பு தந்தையிடம், “இவர்கள் என் பிள்ளைகள், எனக்குத் தேவன் கொடுத்த குமாரர்கள்” என்றான். இஸ்ரவேல் அவனிடம், “என்னிடம் அவர்களை அழைத்து வா, நான் அவர்களை ஆசீர்வதிக்கிறேன்” என்றான். இஸ்ரவேலுக்கு வயதானதால் கண்களும் சரியாகத் தெரியவில்லை. எனவே, யோசேப்பு தன் குமாரர்களை மிக அருகில் அழைத்து வந்தான். இஸ்ரவேல் அவர்களை முத்தமிட்டு அணைத்துகொண்டான். பிறகு அவன் யோசேப்பிடம், “நான் உனது முகத்தை மீண்டும் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. ஆனால் தேவன் உன்னையும் உன் பிள்ளைகளையும் பார்க்கும்படி செய்துவிட்டார்” என்றான். பிறகு யோசேப்பு தன் குமாரர்களை இஸ்ரவேலின் மடியில் இருந்து இறக்கிவிட்டான். அவர்கள் அவரைக் குனிந்து வணங்கினார்கள். யோசேப்பு எப்பிராயீமை தனது வலது பக்கத்திலும் மனாசேயை தனது இடது பக்கத்திலும் அமர வைத்தான். ஆனால் இஸ்ரவேல் தனது கைகளைக் குறுக்காக வைத்து வலது கையை இளையவன் மீதும் இடது கையை மூத்தவன் மீதும் வைத்து ஆசீர்வாதம் செய்தான். மனாசே மூத்தவனாக இருப்பினும் அவன் மீது இடது கையை வைத்து ஆசீர்வதித்தான். இஸ்ரவேல் யோசேப்பையும் ஆசீர்வதித்தான். அவன், “என் முற்பிதாக்களான ஆபிரகாமும் ஈசாக்கும் நம் தேவனை வழிபட்டனர். அதே தேவன் என் வாழ்க்கை முழுவதும் என்னை வழி நடத்தினார். எனது அனைத்து துன்பங்களிலும் என்னைக் காப்பாற்றும் தேவதூதனாக இருந்தார். இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிக்கும்படி அந்த தேவனை வேண்டுகிறேன். இப்போது இவர்கள் எனது பெயரையும், எனது முற்பிதாக்களான ஆபிரகாம் மற்றும் ஈசாக்கின் பெயரையும் பெறுவார்கள். இவர்கள் வளர்ந்து மகத்தான குடும்பமாகவும், தேசமாகவும் இப்பூமியில் விளங்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்” என்றான்.

ஆதியாகமம் 48:8-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இஸ்ரவேல் யோசேப்பின் குமாரரைப் பார்த்து: இவர்கள் யார் என்று கேட்டான். யோசேப்பு தன் தகப்பனை நோக்கி: இவர்கள் இவ்விடத்தில் தேவன் எனக்கு அருளின குமாரர் என்றான். அப்பொழுது அவன்: நான் அவர்களை ஆசீர்வதிக்கும்படி அவர்களை என் கிட்டக்கொண்டுவா என்றான். முதிர்வயதினால் இஸ்ரவேலின் கண்கள் மங்கலாயிருந்தபடியால், அவன் நன்றாய்ப் பார்க்கக்கூடாதிருந்தது. அவர்களை அவனண்டையிலே சேரப்பண்ணினான்; அப்பொழுது அவன் அவர்களை முத்தஞ்செய்து அணைத்துக்கொண்டான். இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: உன் முகத்தைக் காண்பேன் என்று நான் நினைக்கவில்லை; ஆனாலும், இதோ, உன் சந்ததியையும் காணும்படி தேவன் எனக்கு அருள்செய்தார் என்றான். அப்பொழுது அவனுடைய முழங்கால்கள் நடுவே இருந்த பிள்ளைகளை யோசேப்பு பின்னிடப்பண்ணி, அவனுடைய முகத்துக்கு முன்பாகத் தரைமட்டும் குனிந்து வணங்கினான். பின்பு, யோசேப்பு அவ்விருவரையும் கொண்டுவந்து, எப்பிராயீமைத் தன் வலது கையினாலே இஸ்ரவேலின் இடது கைக்கு நேராகவும், மனாசேயைத் தன் இடது கையினாலே இஸ்ரவேலின் வலது கைக்கு நேராகவும் விட்டான். அப்பொழுது இஸ்ரவேல், மனமறிய, தன் வலது கையை நீட்டி, இளையவனாகிய எப்பிராயீமுடைய தலையின்மேலும், மனாசே மூத்தவனாயிருந்தும், தன் இடது கையை மனாசேயுடைய தலையின்மேலும் வைத்தான். அவன் யோசேப்பை ஆசீர்வதித்து: என் பிதாக்களாகிய ஆபிரகாமும் ஈசாக்கும் வழிபட்டு வணங்கிய தேவனும், நான் பிறந்த நாள்முதல் இந்நாள்வரைக்கும் என்னை ஆதரித்துவந்த தேவனும், எல்லாத் தீமைக்கும் நீங்கலாக்கி என்னை மீட்ட தூதனுமானவர் இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிப்பாராக, என் பேரும் என் பிதாக்களாகிய ஆபிரகாம் ஈசாக்கு என்பவர்களின் பேரும் இவர்களுக்கு இடப்படக்கடவது; பூமியில் இவர்கள் மிகுதியாய்ப் பெருகக்கடவர்கள் என்றான்.