ஆதியாகமம் 45:3-28

ஆதியாகமம் 45:3-28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யோசேப்பு தன் சகோதரரிடம், “நான்தான் யோசேப்பு; என் தந்தை இன்னும் உயிரோடிருக்கிறாரா?” என்று கேட்டான். ஆனால் அவன் சகோதரர்களால் பதிலேதும் சொல்ல முடியவில்லை. ஏனெனில் அவன் முன்னிலையில் அவர்கள் திகிலடைந்திருந்தார்கள். யோசேப்பு தன் சகோதரரிடம், “என் அருகே வாருங்கள்” என்று கூப்பிட்டான். அவர்கள் வந்தவுடன் அவன் அவர்களிடம், “எகிப்திற்குப் போகிறவர்களிடத்தில் நீங்கள் விற்ற உங்கள் சகோதரன் யோசேப்பு நான்தான்! இப்பொழுது நீங்கள் என்னை விற்றதற்காக கலங்கவும், உங்கள்மேல் கோபங்கொள்ளவும் வேண்டாம். ஏனெனில், உயிர்களைக் காப்பதற்காகவே இறைவன் என்னை உங்களுக்கு முன்பாகவே இங்கு அனுப்பினார். இரு வருடங்களாக நாடெங்கும் பஞ்சம் உண்டாயிருக்கிறது, உழுதலும், அறுவடை செய்தலும் இன்னும் ஐந்து வருடங்களுக்கு இருக்காது. பூமியில் மிஞ்சியுள்ள உங்கள் சந்ததியைப் பாதுகாத்து வைக்கவும், உங்கள் உயிர்களைப் பெரும் மீட்பினால் காப்பாற்றவுமே, இறைவன் என்னை உங்களுக்கு முன்பாக இங்கு அனுப்பியுள்ளார். “ஆகையால் நீங்களல்ல, இறைவனே என்னை இங்கு அனுப்பினார். அவரே என்னைப் பார்வோனுக்குத் தந்தையாகவும், அவன் குடும்பம் முழுவதற்கும் தலைவனாகவும், எகிப்து முழுவதற்கும் ஆளுநனாகவும் ஏற்படுத்தினார். நீங்கள் என் தகப்பனிடம் விரைவாகத் திரும்பிப்போய், உமது மகன் யோசேப்பு சொல்வது இதுவே: ‘இறைவன் என்னை எகிப்து முழுவதற்கும் தலைவனாக்கியிருக்கிறார். தாமதிக்காமல், என்னிடம் வாருங்கள். நீங்களும், உங்கள் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் உங்களுடைய, ஆட்டு மந்தை, மாட்டு மந்தைகளோடும் உங்களுக்குரிய எல்லாவற்றோடும் எனக்கு அருகிலேயே கோசேன் பிரதேசத்தில் குடியிருக்கலாம். இன்னும் ஐந்து வருடங்கள் தொடர்ந்து பஞ்சம் நீடிக்கப்போகிறது. நான் உங்களுக்குத் தேவையானவற்றைத் தருவேன். இல்லாவிட்டால், நீங்களும் உங்கள் வீட்டாரும், உங்களுக்குரிய எல்லாரும் ஆதரவு அற்றவர்களாகிவிடுவீர்கள்’ என்கிறான் என்று சொல்லுங்கள்” என்றான். மேலும் யோசேப்பு, “உங்களுடன் பேசுகிறவன் உண்மையாகவே நானே என்பதை, நீங்களும் என் தம்பி பென்யமீனும் காண்கிறீர்கள். எகிப்திலே எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள எல்லா கனத்தையும், நீங்கள் கண்ட எல்லாவற்றையும் என் தகப்பனுக்குச் சொல்லுங்கள். நீங்கள் விரைவாய் போய் என் தகப்பனை இங்கே கூட்டிக்கொண்டு வாருங்கள்” என்றான். பின்பு தன் தம்பி பென்யமீனைக் கட்டிப்பிடித்து அழுதான், அப்படியே பென்யமீனும் யோசேப்பைக் கட்டிப்பிடித்து அழுதான். பின்பு அவன் தன் சகோதரர் எல்லோரையும் முத்தமிட்டு அழுதான். அதன்பின் அவன் சகோதரரும் அவனுடன் பேசினார்கள். யோசேப்பின் சகோதரர் வந்திருக்கிறார்கள் என்ற செய்தி பார்வோனின் அரண்மனைக்கு எட்டியபோது, அவனும் அவனுடைய அதிகாரிகள் எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். அப்பொழுது பார்வோன் யோசேப்பிடம் சொன்னதாவது: “நீ உன் சகோதரரிடம், ‘நீங்கள் உங்கள் மிருகங்களில் பொதிகளை ஏற்றிக்கொண்டு கானானுக்குத் திரும்பிப்போங்கள், அங்கிருந்து உங்கள் தகப்பனையும் உங்கள் குடும்பங்களையும் இங்கே என்னிடம் கூட்டிக்கொண்டு வாருங்கள். நான் எகிப்து நாட்டின் சிறந்ததை உங்களுக்குக் கொடுப்பேன்; நீங்கள் நாட்டின் செழிப்பை அனுபவிக்கலாம்.’ “மேலும், நீ அவர்களுக்கு அறிவுறுத்திச் சொல்லவேண்டியதாவது: ‘எகிப்திலிருந்து சில வண்டிகளைக் கொண்டுபோய் உங்கள் பிள்ளைகளையும், மனைவிகளையும், உங்கள் தகப்பனோடுகூட இங்கே கூட்டிக்கொண்டு வாருங்கள். உங்களுக்குள்ள உடைமைகளைக் குறித்து கவலைப்பட வேண்டாம். ஏனெனில், எகிப்தின் சிறந்த பொருட்களெல்லாம் உங்களுடையதாகும்’ என்று சொல்” என்று பார்வோன் சொன்னான். இஸ்ரயேலின் மகன்கள் அவ்வாறே செய்தார்கள். யோசேப்பு பார்வோன் கட்டளையிட்டபடியே அவர்களுக்கு வண்டிகளையும், அவர்களுடைய பயணத்திற்குத் தேவையான உணவுகளையும் கொடுத்தான். அவர்கள் ஒவ்வொருவருக்கும் புதிய உடைகளையும் கொடுத்தான், பென்யமீனுக்கோ முந்நூறு சேக்கல் வெள்ளியையும், ஐந்து உடைகளையும் கொடுத்தான். யோசேப்பு தன் தகப்பனுக்கு பத்துக் கழுதைகளின்மேல் எகிப்தின் சிறந்த பொருட்கள், பத்துப் பெண் கழுதைகளின்மேல் தானியம், அப்பம் அவருடைய பயணத்திற்குத் தேவையான பொருட்கள் ஆகியவற்றை அனுப்பினான். அதன்பின் அவன் தன் சகோதரர்களை வழியனுப்பினான். அவர்கள் புறப்பட்டுப் போகும்போது அவர்களிடம், “நீங்கள் வழியில் வாக்குவாதம் செய்யவேண்டாம்!” என்றான். அவர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு கானானில் வசிக்கும் தங்கள் தகப்பன் யாக்கோபிடம் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் தங்கள் தகப்பனிடம், “யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறான்! உண்மையில், அவனே எகிப்து முழுவதற்கும் ஆளுநனாகவும் இருக்கிறான்” என்றார்கள். அதைக் கேட்டதும் யாக்கோபு திகைத்துப் போனான்; அவன் அவர்களை நம்பவில்லை. ஆனால் அவர்கள் யோசேப்பு சொன்ன எல்லாவற்றையும் தங்கள் தகப்பனுக்குச் சொன்னபோதும், யாக்கோபை எகிப்திற்கு அழைத்துப் போவதற்காக யோசேப்பு அனுப்பிய வண்டிகளைக் கண்டபோதும் அவனுடைய ஆவி புத்துயிர் பெற்றது. அப்பொழுது இஸ்ரயேல், “என் மகன் யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறான் என இப்பொழுது நான் நம்புகிறேன்! நான் சாகிறதற்கு முன் அவனைப் போய் பார்ப்பேன்” என்றான்.

ஆதியாகமம் 45:3-28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யோசேப்பு தன் சகோதரர்களைப்பார்த்து: நான் யோசேப்பு; என் தகப்பனார் இன்னும் உயிரோடு இருக்கிறாரா என்றான். அவனுடைய சகோதரர்கள் அவனுக்கு முன்பாகக் கலக்கமடைந்திருந்ததினாலே, அவனுக்கு பதில் சொல்லமுடியாமல் இருந்தார்கள். அப்பொழுது யோசேப்பு தன் சகோதரர்களை நோக்கி: என்னருகில் வாருங்கள் என்றான். அவர்கள் அருகில்போனார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் எகிப்திற்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான். என்னை இந்த இடத்திற்கு வருவதற்காக விற்றுப்போட்டதினால், நீங்கள் வருத்தப்படவேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; உயிர்களைப் பாதுகாக்க தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார். தேசத்தில் இப்பொழுது இரண்டு வருடங்களாகப் பஞ்சம் உண்டாயிருக்கிறது; இன்னும் ஐந்து வருடங்கள் விதைப்பும் அறுப்பும் இல்லாமல் பஞ்சம் இருக்கும். பூமியிலே உங்கள் வம்சம் அழியாமலிருக்க உங்களை ஆதரிப்பதற்காகவும், பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடு காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார். ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே என்னை இந்த இடத்திற்கு அனுப்பி, என்னைப் பார்வோனுக்குத் தகப்பனாகவும், அவருடைய குடும்பம் அனைத்திற்கும் கர்த்தனாகவும், முழு எகிப்துதேசத்திற்கும் அதிபதியாகவும் வைத்தார். நீங்கள் சீக்கிரமாக என் தகப்பனிடத்தில் போய்: தேவன் என்னை எகிப்துதேசம் முழுவதிற்கும் அதிபதியாக வைத்தார்; என்னிடத்தில் வாரும், தாமதிக்க வேண்டாம். நீரும், உம்முடைய பிள்ளைகளும், அவர்களுடைய பிள்ளைகளும், உம்முடைய ஆடுமாடுகளோடும் உமக்கு உண்டாயிருக்கிற எல்லாவற்றோடும் கோசேன் நாட்டில் குடியிருந்து என் அருகில் இருக்கலாம். உமக்கும் உம்முடைய குடும்பத்தாருக்கும் உமக்கு இருக்கிற எல்லாவற்றிற்கும் வறுமை வராதபடி, அங்கே உம்மைப் பராமரிப்பேன்; இன்னும் ஐந்து வருடங்கள் பஞ்சம் இருக்கும் என்று, உம்முடைய மகனாகிய யோசேப்பு சொல்லச்சொன்னான் என்று சொல்லுங்கள். இதோ, உங்களோடு பேசுகிற வாய் என் வாய்தான் என்பதை உங்கள் கண்களும் என் தம்பியாகிய பென்யமீனின் கண்களும் காண்கிறதே. எகிப்திலே எனக்கு உண்டாயிருக்கிற அனைத்து மகிமையையும், நீங்கள் கண்ட எல்லாவற்றையும் என் தகப்பனுக்கு அறிவித்து, அவர் சீக்கிரமாக இந்த இடத்திற்கு வரும்படிச் செய்யுங்கள் என்று சொல்லி; தன் தம்பியாகிய பென்யமீனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்; பென்யமீனும் அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான். பின்பு தன் சகோதரர்கள் அனைவரையும் முத்தம்செய்து, அவர்களையும் கட்டிக்கொண்டு அழுதான். அதற்குப்பின் அவனுடைய சகோதரர்கள் அவனோடு உரையாடினார்கள். யோசேப்பின் சகோதரர்கள் வந்தார்கள் என்ற செய்தி பார்வோன் அரண்மனையில் பரவியபோது, பார்வோனும் அவனுடைய ஊழியக்காரரும் சந்தோஷம் அடைந்தார்கள். பார்வோன் யோசேப்பை நோக்கி: நீ உன் சகோதரர்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் கழுதைகளின்மேல் பாரமேற்றிக்கொண்டு புறப்பட்டு, கானான்தேசத்திற்குப் போய், உங்கள் தகப்பனையும் உங்கள் குடும்பத்தாரையும் கூட்டிக்கொண்டு, என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு எகிப்துதேசத்தின் நன்மையைத் தருவேன்; தேசத்தின் கொழுமையைச் சாப்பிடுவீர்கள். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காகவும் உங்கள் மனைவிகளுக்காகவும் வண்டிகளை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுபோய், அவர்களையும் உங்கள் தகப்பனுடனே ஏற்றிக்கொண்டு வாருங்கள். உங்கள் வீட்டு உபயோகப்பொருட்களைக் குறித்துக் கவலைப்படவேண்டாம்; எகிப்துதேசமெங்குமுள்ள நன்மை உங்களுடையதாயிருக்கும் என்று சொல்லச் சொல்லி, உனக்கு நான் கொடுத்த கட்டளையின்படியே செய் என்றான். இஸ்ரவேலின் மகன்கள் அப்படியே செய்தார்கள், யோசேப்பு பார்வோனுடைய கட்டளையின்படியே அவர்களுக்கு வண்டிகளைக் கொடுத்ததுமன்றி, பயணத்திற்கு ஆகாரத்தையும், அவர்களில் ஒவ்வொருவனுக்கும் மாற்று உடைகளையும் கொடுத்தான்; பென்யமீனுக்கோ முந்நூறு வெள்ளிக்காசையும் ஐந்து மாற்று உடைகளையும் கொடுத்தான். அப்படியே தன் தகப்பனுக்குப் பத்துக் கழுதைகளின்மேல் எகிப்தின் சிறப்பான பதார்த்தங்களும், பத்து கழுதைகளின்மேல் தன் தகப்பனுக்காக பயணத்திற்குத் தானியமும் அப்பமும் மற்றத் தின்பண்டங்களும் ஏற்றி அனுப்பினான். மேலும், நீங்கள் போகும் வழியிலே சண்டையிட்டுக்கொள்ளாதிருங்கள் என்று அவன் தன் சகோதரர்களுக்குச் சொல்லி அனுப்பினான்; அவர்கள் புறப்பட்டுப்போனார்கள். அவர்கள் எகிப்திலிருந்து போய், கானான்தேசத்திலே தங்கள் தகப்பனாகிய யாக்கோபினிடத்திற்கு வந்து: யோசேப்பு உயிரோடிருக்கிறான், அவன் எகிப்துதேசத்திற்கெல்லாம் அதிபதியாக இருக்கிறான் என்று அவனுக்குத் தெரிவித்தார்கள். அவனுடைய இருதயம் அதிர்ச்சி அடைந்தது; அவன் அவர்களை நம்பவில்லை. அவர்கள் யோசேப்பு தங்களுடனே சொன்ன வார்த்தைகள் எல்லாவற்றையும் அவனுக்குச் சொன்னபோதும், தன்னை ஏற்றிக்கொண்டு போகும்படி யோசேப்பு அனுப்பின வண்டிகளை அவன் கண்டபோதும், அவர்களுடைய தகப்பனாகிய யாக்கோபின் ஆவி உயிர்த்தது. அப்பொழுது இஸ்ரவேல்: என் மகனாகிய யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறானே, இது போதும்; நான் மரணமடையுமுன்னே போய் அவனைப் பார்ப்பேன் என்றான்.

ஆதியாகமம் 45:3-28 பரிசுத்த பைபிள் (TAERV)

யோசேப்பு தனது சகோதரர்களிடம், “நான் உங்களின் சகோதரன் யோசேப்பு. என் தந்தை உயிரோடு நலமாக இருக்கிறாரா?” என்று கேட்டான். சகோதரர்கள் அவனுக்குப் பதில் சொல்லவில்லை. அவர்கள் குழப்பமும் பயமும் கொண்டனர். யோசேப்பு மீண்டும், “என்னருகே வாருங்கள். கெஞ்சி கேட்கிறேன், வாருங்கள்” என்றான். சகோதரர்கள் அவனருகே வந்தனர். அவர்களிடம், “நான் உங்கள் சகோதரன் யோசேப்பு. எகிப்திய வியாபாரிகளிடம் உங்களால் விற்கப்பட்டவன். இப்போது அதற்காக வருத்தப்படாதீர்கள். நீங்கள் செய்தவற்றுக்காக உங்களையே கோபித்துக்கொள்ளாதீர்கள். இங்கே நான் வரவேண்டும் என்பது தேவனின் திட்டம். உங்கள் வாழ்க்கையைக் காப்பாற்றவே இங்கே இருக்கிறேன். இந்தப் பஞ்சம் இரண்டு ஆண்டுகளாக இருக்கின்றன. இன்னும் ஐந்து ஆண்டுகள் இருக்கும். ஆகவே தேவன் என்னை உங்களுக்கு முன்னதாக அனுப்பி இருக்கிறார். அதனால் உங்களை காப்பாற்றமுடியும். என்னை இங்கே அனுப்பியது உங்களது தவறு அல்ல. இது தேவனின் திட்டம். பார்வோன் மன்னருக்கே தந்தை போன்று நான் இங்கே இருக்கிறேன். நான் அரண்மனைக்கும் இந்த நாட்டிற்கும் ஆளுநராக இருக்கிறேன்” என்றான். யோசேப்பு அவர்களிடம், “வேகமாக என் தந்தையிடம் போங்கள். அவரது குமாரன் யோசேப்பு இந்தச் செய்தியை அனுப்பியதாகக் கூறுங்கள்: ‘தேவன் என்னை எகிப்தின் ஆளுநராக ஆக்கினார். எனவே என்னிடம் வாருங்கள். காத்திருக்க வேண்டாம். இப்போதே வாருங்கள். என்னருகில் கோசேன் நிலப்பகுதியில் வாழலாம். நீங்களும், உங்கள் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும், மிருகங்களும் இங்கே வரவேற்கப்படுகிறீர்கள். இனிவரும் ஐந்தாண்டு பஞ்சத்திலும் உங்கள் அனைவரையும் பாதுகாத்துக்கொள்வேன். எனவே, நீங்களும் உங்கள் குடும்பமும் உங்களுக்குரிய எதையும் இழக்கமாட்டீர்கள்’ என்று கூறுங்கள்” என்றான். யோசேப்பு தன் சகோதரர்களிடம், “நன்றாக உறுதி செய்துகொள்ளுங்கள். நான் தான் யோசேப்பு. உங்கள் சகோதரனாகிய எனது வாய்தான் பேசுகிறது என்பதை நீங்களும் பென்யமீனும் கண்களால் காண்கிறீர்கள். எகிப்திலே எனக்குள்ள மரியாதையையும் இங்கே நீங்கள் பார்க்கின்றவற்றையும் தந்தையிடம் சொல்லுங்கள். வேகமாகப் போய் தந்தையை அழைத்து வாருங்கள்” என்று சொன்னான். பிறகு தன் தம்பி பென்யமீனை அணைத்துக்கொண்டான். இருவரும் அழுதார்கள். பிறகு அவன் சகோதரர்கள் அனைவரையும் முத்தமிட்டான். அவர்களுக்காக அழுதான். இதற்குப் பிறகு அவர்கள் அவனோடு பேசத் தொடங்கினார்கள். யோசேப்பின் சகோதரர்கள் வந்த செய்தியை பார்வோன் அறிந்துகொண்டான். பார்வோன் அரண்மனை முழுக்க அச்செய்தி பரவியது. ராஜாவும் அவனது வேலைக்காரர்களும் மகிழ்ச்சியடைந்தனர். ராஜா யோசேப்பிடம் வந்து, “உங்கள் சகோதரர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை எடுத்துக்கொண்டு கானான் பகுதிக்குப் போகட்டும். உனது குடும்பத்தையும் தந்தையையும் என்னிடம் அழைத்து வருமாறு கூறு. உங்களுக்கு வாழ நல்ல நிலத்தைக் கொடுக்கிறேன். இங்குள்ள சிறந்த உணவை அவர்கள் உண்ணலாம்” என்றான். “அதோடு இங்குள்ள சிறந்த வண்டிகளை உன் சகோதரர்களுக்கு கொடு. அவர்கள் கானான் பகுதிக்குச் சென்று உன் தந்தையையும், பெண்களையும், குழந்தைகளையும் ஏற்றிக்கொண்டு வரட்டும். அங்கிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வருவதைக் குறித்துக் கவலைகொள்ள வேண்டாம். எகிப்திலுள்ளவற்றில் சிறந்தவற்றை அவர்களுக்குக் கொடுக்கலாம்” என்றான். எனவே இஸ்ரவேலின் பிள்ளைகளும் அவ்வாறே செய்தனர். பார்வோன் மன்னன் சொன்னது போல் நல்ல வண்டிகளையும், பயணத்திற்கு வேண்டிய உணவையும் யோசேப்பு கொடுத்து அனுப்பினான். சகோதரர் அனைவருக்கும் யோசேப்பு அழகான ஆடைகளைக் கொடுத்தான். ஆனால் யோசேப்பு பென்யமீனுக்கு மட்டும் ஐந்து ஜோடி ஆடைகளையும், 300 வெள்ளிக் காசுகளையும் கொடுத்தான். யோசேப்பு தன் தந்தைக்கும் அன்பளிப்புகளைக் கொடுத்து அனுப்பினான். 10 கழுதைகள் சுமக்குமளவு எகிப்திலுள்ள சிறந்த பொருட்களையெல்லாம் கொடுத்தான். 10 பெண் கழுதைகள் சுமக்கும்படி உணவுப் பொருட்களும், ரொட்டியும் பிற பொருட்களும் தன் தந்தையார் திரும்பிவரும் பயணத்திற்குப் பயன்பட கொடுத்தான். பிறகு சகோதரர்களை அனுப்பினான். அவர்கள் பிரிந்து போகும்போது “நேராக வீட்டிற்குப் போங்கள், வழியில் சண்டை போடாதீர்கள்” என்றான். எனவே, சகோதரர்கள் எகிப்தை விட்டு கானான் பகுதிக்குத் தந்தையிடம் போனார்கள். அவர்கள் அவரிடம், “யோசேப்பு உயிரோடு இருக்கிறான் அவன் எகிப்து நாடு முழுவதிற்கும் ஆளுநராக இருக்கிறான்” என்றனர். இந்தச் செய்தியைக் கேட்டதும் யாக்கோபு புரியாமலிருந்தான். முதலில் அவனால் நம்ப முடியவில்லை. ஆனால் அவர்கள் யோசேப்பு சொன்னதை எல்லாம் சொன்னார்கள். தன்னை அழைத்துப் போவதற்காக யோசேப்பு அனுப்பியிருந்த வண்டிகளையெல்லாம் பார்த்தான். பிறகு யாக்கோபு புத்துணர்வு பெற்று மிக்க சந்தோஷமடைந்தான். “இப்போது உங்களை நம்புகிறேன், என் குமாரன் யோசேப்பு இன்னும் உயிரோடு இருக்கிறான். மரிப்பதற்கு முன்னால் அவனைப் பார்க்கப் போவேன்” என்று இஸ்ரவேல் கூறினான்.

ஆதியாகமம் 45:3-28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

யோசேப்பு தன் சகோதரரைப்பார்த்து: நான் யோசேப்பு; என் தகப்பனார் இன்னும் உயிரோடே இருக்கிறாரா என்றான். அவனுடைய சகோதரர் அவனுக்கு முன்பாகக் கலக்கமுற்றிருந்ததினாலே, அவனுக்கு உத்தரம் சொல்லக்கூடாமல் இருந்தார்கள். அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: என் கிட்ட வாருங்கள் என்றான். அவர்கள் கிட்டப்போனார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் எகிப்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான். என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்படவேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார். தேசத்தில் இப்பொழுது இரண்டு வருஷமாகப் பஞ்சம் உண்டாயிருக்கிறது; இன்னும் ஐந்து வருஷம் உழவும் அறுப்பும் இல்லாமல் பஞ்சம் இருக்கும். பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும், பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார். ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே என்னை இவ்விடத்துக்கு அனுப்பி, என்னைப் பார்வோனுக்குத் தகப்பனாகவும், அவர் குடும்பம் அனைத்திற்கும் கர்த்தனாகவும், எகிப்துதேசம் முழுதுக்கும் அதிபதியாகவும் வைத்தார். நீங்கள் சீக்கிரமாய் என் தகப்பனிடத்தில் போய்: தேவன் என்னை எகிப்துதேசம் முழுவதுக்கும் அதிபதியாக வைத்தார்; என்னிடத்தில் வாரும், தாமதிக்க வேண்டாம். நீரும், உம்முடைய பிள்ளைகளும், அவர்களுடைய பிள்ளைகளும், உம்முடைய ஆடுமாடுகளோடும் உமக்கு உண்டாயிருக்கிற யாவற்றோடும் கோசேன் நாட்டில் வாசம்பண்ணி என் சமீபத்தில் இருக்கலாம். உமக்கும் உம்முடைய குடும்பத்தாருக்கும் உமக்கு இருக்கிற யாவற்றிற்கும் வறுமை வராதபடிக்கு, அங்கே உம்மைப் பராமரிப்பேன்; இன்னும் ஐந்து வருஷம் பஞ்சம் இருக்கும் என்று, உம்முடைய குமாரனாகிய யோசேப்பு சொல்லச்சொன்னான் என்று சொல்லுங்கள். இதோ, உங்களோடே பேசுகிற வாய் என் வாய்தான் என்பதை உங்கள் கண்களும் என் தம்பியாகிய பென்யமீனின் கண்களும் காண்கிறதே. எகிப்திலே எனக்கு உண்டாயிருக்கிற சகல மகிமையையும், நீங்கள் கண்ட யாவையும் என் தகப்பனுக்கு அறிவித்து, அவர் சீக்கிரமாய் இவ்விடத்துக்கு வரும்படி செய்யுங்கள் என்று சொல்லி; தன் தம்பியாகிய பென்யமீனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்; பென்யமீனும் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான். பின்பு தன் சகோதரர் யாவரையும் முத்தஞ்செய்து, அவர்களையும் கட்டிக்கொண்டு அழுதான். அதற்குப்பின் அவன் சகோதரர் அவனோடே சம்பாஷித்தார்கள். யோசேப்பின் சகோதரர் வந்தார்கள் என்கிற சமாசாரம் பார்வோன் அரமனையில் பிரசித்தமானபோது, பார்வோனும் அவனுடைய ஊழியக்காரரும் சந்தோஷம் அடைந்தார்கள். பார்வோன் யோசேப்பை நோக்கி: நீ உன் சகோதரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் கழுதைகளின்மேல் பொதியேற்றிக்கொண்டு புறப்பட்டு, கானான் தேசத்துக்குப் போய், உங்கள் தகப்பனையும் உங்கள் குடும்பத்தாரையும் கூட்டிக்கொண்டு, என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு எகிப்து தேசத்தின் நன்மையைத் தருவேன்; தேசத்தின் கொழுமையைச் சாப்பிடுவீர்கள். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காகவும் உங்கள் மனைவிகளுக்காகவும் வண்டிகளை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுபோய், அவர்களையும் உங்கள் தகப்பனுடனே ஏற்றிக்கொண்டு வாருங்கள். உங்கள் தட்டுமுட்டுகளைக் குறித்துக் கவலைப்படவேண்டாம்; எகிப்துதேசமெங்குமுள்ள நன்மை உங்களுடையதாயிருக்கும் என்று சொல்லச் சொல்லி, உனக்கு நான் இட்ட கட்டளைப்படியே செய் என்றான். இஸ்ரவேலின் குமாரர் அப்படியே செய்தார்கள், யோசேப்பு பார்வோனுடைய கட்டளையின்படியே அவர்களுக்கு வண்டிகளைக் கொடுத்ததுமன்றி, வழிக்கு ஆகாரத்தையும், அவர்களில் ஒவ்வொருவனுக்கும் மாற்று வஸ்திரங்களையும் கொடுத்தான்; பென்யமீனுக்கோ முந்நூறு வெள்ளிக்காசையும் ஐந்து மாற்று வஸ்திரங்களையும் கொடுத்தான். அப்படியே தன் தகப்பனுக்குப் பத்துக் கழுதைகளின்மேல் எகிப்தின் உச்சிதமான பதார்த்தங்களும், பத்துக் கோளிகைக் கழுதைகளின்மேல் தன் தகப்பனுக்காக வழிக்குத் தானியமும் அப்பமும் மற்றத் தின்பண்டங்களும் ஏற்றி அனுப்பினான். மேலும், நீங்கள் போகும் வழியிலே சண்டைபண்ணிக்கொள்ளாதிருங்கள் என்று அவன் தன் சகோதரருக்குச் சொல்லி அனுப்பினான்; அவர்கள் புறப்பட்டுப்போனார்கள். அவர்கள் எகிப்திலிருந்து போய், கானான் தேசத்திலே தங்கள் தகப்பனாகிய யாக்கோபினிடத்தில் வந்து: யோசேப்பு உயிரோடிருக்கிறான், அவன் எகிப்துதேசத்துக்கெல்லாம் அதிபதியாயிருக்கிறான் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அவன் இருதயம் மூர்ச்சை அடைந்தது; அவன் அவர்களை நம்பவில்லை. அவர்கள் யோசேப்பு தங்களுடனே சொன்ன வார்த்தைகள் யாவையும் அவனுக்குச் சொன்னபோதும், தன்னை ஏற்றிக்கொண்டு போகும்படி யோசேப்பு அனுப்பின வண்டிகளை அவன் கண்டபோதும், அவர்களுடைய தகப்பனாகிய யாக்கோபின் ஆவி உயிர்த்தது. அப்பொழுது இஸ்ரவேல்: என் குமாரனாகிய யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறானே, இது போதும்; நான் மரணமடையுமுன்னே போய் அவனைப் பார்ப்பேன் என்றான்.