ஆதியாகமம் 44:18-34
ஆதியாகமம் 44:18-34 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யூதா யோசேப்பிடம் சென்று, “ஆண்டவனே, உமது அடியானாகிய நான், உம்மிடம் ஒரு வார்த்தை சொல்ல அனுமதியும். நீர் பார்வோனுக்குச் சமமாய் இருக்கிறபோதிலும், உமது அடியவன்மேல் கோபிக்க வேண்டாம். ஆண்டவனே, நீர் உமது அடியார்களிடம், ‘உங்களுக்குத் தகப்பனாவது சகோதரராவது இருக்கிறார்களா?’ என்று கேட்டீர். அதற்கு நாங்கள் எங்கள் ஆண்டவனிடம், ‘ஆம், எங்களுக்கு வயதுசென்ற தகப்பனும், அவருக்கு முதிர்வயதில் பிறந்த ஒரு இளம் மகனும் இருக்கிறான். அவனுடைய சகோதரன் இறந்துபோனான், அவனுடைய தாயின் பிள்ளைகளில் அவன் ஒருவனே உயிரோடிருக்கிறான்; அவனுடைய தகப்பன் அவனை நேசிக்கிறார்’ என்று சொன்னோம். “அப்பொழுது நீர் உமது அடியாரிடம், ‘நான் அவனைப் பார்ப்பதற்கு அவனை என்னிடம் இங்கு கொண்டுவாருங்கள்’ என்றீர். அதற்கு நாங்கள் உம்மிடம், ‘ஐயா, அவன் தகப்பனைவிட்டு வரமுடியாது; அப்படி அவன் பிரிந்து வந்தால், அவனுடைய தகப்பன் இறந்து போவார்’ என்றோம். ஆனால் நீரோ, ‘உங்கள் இளைய சகோதரன் உங்களுடன் வராவிட்டால், மீண்டும் என் முகத்தை உங்களால் பார்க்க முடியாது’ என்று உமது அடியாராகிய எங்களிடம் சொன்னீர். நாங்கள் உமது அடியவனாகிய எங்கள் தகப்பனிடம் போனபோது, ஐயா, நீர் சொல்லியிருந்தவற்றை அவரிடம் சொன்னோம். “எங்கள் தகப்பனோ, ‘நீங்கள் மறுபடியும்போய் இன்னும் கொஞ்சம் தானியம் வாங்கி வாருங்கள்’ என்றார். அப்போது நாங்கள் அவரிடம், ‘நாங்கள் அங்கே போகமுடியாது; எங்கள் இளைய சகோதரன் எங்களுடன் வந்தால்தான் நாங்கள் அங்கே போவோம். எங்கள் இளைய சகோதரன் எங்களோடு வராவிட்டால், நாங்கள் அந்த மனிதனின் முகத்தைப் பார்க்கவே முடியாது’ என்று சொன்னோம். “அப்பொழுது உமது அடியானாகிய எங்கள் தகப்பன் எங்களிடம், ‘என் மனைவி இரண்டு மகன்களைப் பெற்றாள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்களில் ஒருவன் என்னைவிட்டுப் போய்விட்டான், “நிச்சயமாய் அவனை ஒரு கொடிய மிருகம் கிழித்துக் கொன்றிருக்க வேண்டும்.” அன்றிலிருந்து அவனை நான் காணவேயில்லை. நீங்கள் இவனையும் என்னிடமிருந்து கொண்டுபோய், இவனுக்குத் தீங்கு ஏதும் ஏற்பட்டுவிட்டால், முதியவனாகிய என்னைத் துக்கத்தோடே சவக்குழியில் இறங்கப் பண்ணுவீர்கள்’ என்றார். “இந்த சிறுவனுடைய உயிருடன் என் தகப்பனின் உயிர் ஒன்றிணைந்து இருக்கின்றது. அதனால் இப்பொழுது நான் உமது அடியானாகிய என் தகப்பனிடம் போகும்போது, இந்த சிறுவன் அங்கு இல்லாததைக் கண்டால், அவர் இறந்துவிடுவார். அதனால் உமது அடியாராகிய நாங்கள், எங்கள் முதிர்வயதான தகப்பனைத் துக்கத்துடன் சவக்குழியில் இறங்கச் செய்வோம். உமது அடியானாகிய நானே இந்த சிறுவனின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தேன். நான் என் தகப்பனிடம், ‘என் தகப்பனே, இவனை மறுபடியும் உம்மிடம் கொண்டுவராவிட்டால், உமக்கு முன்பாக என் வாழ்நாளெல்லாம் அந்தப் பழியை நானே சுமப்பேன்’ என்றும் சொல்லியிருக்கிறேன். “ஆகையால் இப்பொழுது இந்த சிறுவனுக்குப் மறுமொழியாக, ஐயா, உமது அடியானாகிய நான் உமது அடிமையாக இங்கே இருப்பேன், இவன் தன் சகோதரருடன் திரும்பிச் செல்லட்டும். இவன் என்னுடன் இல்லாவிட்டால், நான் எப்படித் திரும்பிப் போகமுடியும்? முடியாது! என் தகப்பனுக்கு வரும் அவலத்தை என்னைப் பார்க்க விடாதேயும்” என்று சொன்னான்.
ஆதியாகமம் 44:18-34 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்பொழுது யூதா அவனருகில் வந்து: “ஆ, என் ஆண்டவனே, உமது அடியேன் உம்முடைய செவிகள் கேட்க ஒரு வார்த்தை சொல்லுகிறேன் கேட்பீராக; அடியேன்மேல் உமது கோபம் வராதிருப்பதாக; நீர் பார்வோனுக்கு ஒப்பாயிருக்கிறீர். உங்களுக்குத் தகப்பனாவது சகோதரனாவது உண்டா என்று என் ஆண்டவன் உம்முடைய அடியாரிடத்தில் கேட்டீர். அதற்கு நாங்கள்: எங்களுக்கு முதிர்வயதுள்ள தகப்பனாரும், அவருக்கு முதிர்வயதிலே பிறந்த ஒரு இளைஞனும் உண்டு என்றும், அவனுடைய அண்ணன் இறந்துபோனான் என்றும், அவன் ஒருவன்மாத்திரமே அவனைப்பெற்ற தாயாருக்கு இருப்பதால் தகப்பனார் அவன்மேல் பாசமாயிருக்கிறார் என்றும் என் ஆண்டவனுக்குச் சொன்னோம். அப்பொழுது நீர்: அவனை என்னிடத்திற்குக் கொண்டுவாருங்கள்; என் கண்களினால் அவனைப் பார்க்கவேண்டும் என்று உமது அடியாருக்குச் சொன்னீர். நாங்கள் ஆண்டவனை நோக்கி: அந்த இளைஞன் தன் தகப்பனைவிட்டுப் பிரியக்கூடாது, பிரிந்தால் அவர் இறந்துபோவார் என்று சொன்னோம். அதற்கு நீர்: உங்கள் இளைய சகோதரனைக் கொண்டுவராவிட்டால், நீங்கள் இனி என் முகத்தைக் காண்பதில்லை என்று உமது அடியாருக்குச் சொன்னீர். நாங்கள் உமது அடியானாகிய என் தகப்பனாரிடத்திற்குப் போனபோது, என் ஆண்டவனுடைய வார்த்தைகளை அவருக்குத் தெரிவித்தோம். எங்களுடைய தகப்பனார் எங்களை நோக்கி: நீங்கள் திரும்பப்போய், நமக்குக் கொஞ்சம் தானியம் வாங்குங்கள் என்று சொன்னார். அதற்கு: நாங்கள் போகக்கூடாது; எங்கள் இளைய சகோதரன் எங்களோடு வந்தால் போவோம்; எங்கள் இளைய சகோதரன் எங்களோடு வராவிட்டால், நாங்கள் அந்த மனிதனுடைய முகத்தைக் காணமுடியாது என்றோம். அப்பொழுது உம்முடைய அடியானாகிய என் தகப்பனார்: என் மனைவி எனக்கு இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள்; அவர்களில் ஒருவன் என்னிடத்திலிருந்து போய்விட்டான், அவன் கிழிக்கப்பட்டிருப்பான் என்றிருந்தேன், இதுவரைக்கும் அவனைக் காணாதிருக்கிறேன், இதெல்லாம் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் இவனையும் என்னை விட்டுப்பிரித்து அழைத்துப்போகுமிடத்தில் இவனுக்குத் தீங்கு நேரிட்டால், என் நரைமுடியை வியாகுலத்தோடு பாதாளத்தில் இறங்கச் செய்வீர்கள் என்றார். ஆகையால் இளையவனைவிட்டு, நான் என் தகப்பனாகிய உமது அடியானிடத்திற்குப் போனால், அவருடைய ஜீவன் இவனுடைய ஜீவனோடு ஒன்றாக இணைந்திருப்பதால், அவர் இளையவன் வரவில்லை என்று அறிந்தமாத்திரத்தில் இறந்துபோவார்; இப்படி உமது அடியாராகிய நாங்கள் உமது அடியானாகிய எங்கள் தகப்பனுடைய நரைமுடியை மனதுக்கத்துடனே பாதாளத்தில் இறங்கச்செய்வோம். இந்த இளையவனுக்காக உமது அடியானாகிய நான் என் தகப்பனுக்கு உத்திரவாதி; மேலும், நான் இவனை உம்மிடத்திற்குக் கொண்டுவராவிட்டால், நான் எந்நாளும் உமக்கு முன்பாகக் குற்றவாளியாயிருப்பேன் என்று அவருக்குச் சொல்லியிருக்கிறேன். இப்படியிருக்க, இளையவன் தன் சகோதரர்களோடுகூடப் போகவிடும்படி மன்றாடுகிறேன்; உம்முடைய அடியானாகிய நான் இளையவனுக்குப் பதிலாக இங்கே என் ஆண்டவனுக்கு அடிமையாக இருக்கிறேன். இளையவனைவிட்டு, எப்படி என் தகப்பனிடத்திற்குப் போவேன்? போனால் என் தகப்பனுக்கு நேரிடும் தீங்கை நான் எப்படிக் காண்பேன்” என்றான்.
ஆதியாகமம் 44:18-34 பரிசுத்த பைபிள் (TAERV)
யூதா யோசேப்பிடம் போய், “ஐயா! எங்களை வெளிப்படையாகப் பேச விடுங்கள். எங்களிடம் கோபப்படாதீர்கள். நீங்கள் பார்வோன் மன்னரைப் போன்றவர் என்பதை அறிவோம். முன்பு இங்கு வந்தபோது ‘உங்களுக்குத் தந்தையோ சகோதரரோ இருக்கிறார்களா’ என்று கேட்டீர்கள். நாங்கள் எங்களுக்குத் தந்தை இருக்கிறார், அவர் முதியவர். இளைய சகோதரன் இருக்கிறான். அவன் எங்கள் தந்தையின் முதிய வயதில் பிறந்ததால் அவனைப் பெரிதும் நேசிக்கிறார். அவனோடு கூடப்பிறந்தவன் மரித்துப் போனான். இவன் ஒருவன் தான் அத்தாயின் குமாரர்களில் உயிரோடு இருக்கிறான். எனவே எங்கள் தந்தை இவனைப் பெரிதும் நேசிக்கிறார் என்றோம். பிறகு நீங்கள், ‘அவனையும் அழைத்துக்கொண்டு வாருங்கள். நான் அவனைப் பார்க்க விரும்புகிறேன்’ என்றீர்கள். அதற்கு நாங்கள், ‘அவனால் வரமுடியாது அவனைத் தந்தை விடமாட்டார். அவனைப் பிரிந்தால் எங்கள் தந்தை மரித்துபோவார்’ என்றோம். ஆனால் நீங்களோ எங்களிடம், ‘நீங்கள் அவனை அழைத்துக்கொண்டு வரவேண்டும் இல்லாவிட்டால் இனிமேல் தானியம் தரமுடியாது’ என்றீர்கள். அதனால் நாங்கள் எங்கள் தந்தையிடம் போய் நீங்கள் சொன்னதையெல்லாம் சொன்னோம். “இறுதியில் எங்கள் தந்தை, ‘போய் இன்னும் தானியம் வாங்கிக்கொண்டு வாருங்கள்’ என்றார். நாங்கள் எங்கள் தந்தையிடம் ‘நாங்கள் எங்கள் இளைய சகோதரன் இல்லாமல் போகமாட்டோம். ஆளுநர் இவனைப் பார்க்காவிட்டால் தானியம் தர முடியாது என்று கூறியிருக்கிறார்’ என்றோம். பிறகு என் தந்தை, ‘என் மனைவி ராகேல் எனக்கு இரண்டு குமாரர்களைக் கொடுத்தாள். ஒரு குமாரனை வெளியே அனுப்பினேன். அவனைக் காட்டு மிருகங்கள் கொன்றுவிட்டன. அவனை இன்றுவரை காணவில்லை. அடுத்த குமாரனையும் நீங்கள் அழைத்துப் போய் அவனுக்கு ஏதாவது நடந்தால் நான் மரணமடையுமளவுக்கு வருத்தமடைவேன்’ என்றார். இப்போதும் எங்களின் இளைய சகோதரன் இல்லாமல் நாங்கள் போகும்பொழுது என்ன நடக்கும் என்பதைக் கற்பனை செய்யுங்கள். அவனே எங்கள் தந்தையின் வாழ்வில் மிக முக்கியமானவன். அவன் எங்களுடன் இல்லை என்பதை எங்கள் தந்தை அறிந்தால் அவர் மரித்துவிடுவார். மேலும் அது எங்களுடைய தவறாகும். நாங்கள் எங்கள் தந்தையை மிகக் கவலைகொண்ட மனிதராக அவரது கல்லறைக்கு அனுப்புவோம்! “நான் என் தந்தையிடம் இவனுக்காக பொறுப்பேற்று வந்துள்ளேன். ‘நான் இவனைத் திரும்ப அழைத்துக்கொண்டு வராவிட்டால் என் வாழ்க்கை முழுவதும் என்னைப் பழிக்கலாம்’ என்றேன். எனவே நான் உங்களை கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். இவனை இவர்களோடு அனுப்பி வையுங்கள். நான் இங்கே உங்களுக்கு அடிமையாக இருக்கிறேன். இவன் இல்லாமல் நான் என் தந்தையிடம் போகமாட்டேன். என் தந்தைக்கு என்ன நேருமோ என்று எனக்கு அச்சமாக இருக்கிறது” என்றான்.
ஆதியாகமம் 44:18-34 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்பொழுது யூதா அவனண்டையிலே சேர்ந்து: ஆ, என் ஆண்டவனே, உமது அடியேன் உம்முடைய செவிகள் கேட்க ஒரு வார்த்தை சொல்லுகிறேன் கேட்பீராக; அடியேன்மேல் உமது கோபம் மூளாதிருப்பதாக; நீர் பார்வோனுக்கு ஒப்பாயிருக்கிறீர். உங்களுக்குத் தகப்பனாவது சகோதரனாவது உண்டா என்று என் ஆண்டவன் உம்முடைய அடியாரிடத்தில் கேட்டீர். அதற்கு நாங்கள்: எங்களுக்கு முதிர்வயதுள்ள தகப்பனாரும், அவருக்கு முதிர்வயதிலே பிறந்த ஒரு இளைஞனும் உண்டு என்றும், அவனுடைய தமையன் இறந்துபோனான் என்றும், அவன் ஒருவன்மாத்திரமே அவனைப்பெற்ற தாயாருக்கு இருப்பதினால் தகப்பனார் அவன்மேல் பட்சமாயிருக்கிறார் என்றும் என் ஆண்டவனுக்குச் சொன்னோம். அப்பொழுது நீர்: அவனை என்னிடத்துக்குக் கொண்டுவாருங்கள்; என் கண்களினால் அவனைப் பார்க்கவேண்டும் என்று உமது அடியாருக்குச் சொன்னீர். நாங்கள் ஆண்டவனை நோக்கி: அந்த இளைஞன் தன் தகப்பனைவிட்டுப் பிரியக்கூடாது, பிரிந்தால் அவர் இறந்துபோவார் என்று சொன்னோம். அதற்கு நீர்: உங்கள் இளைய சகோதரனைக் கொண்டுவராவிட்டால், நீங்கள் இனி என் முகத்தைக் காண்பதில்லை என்று உமது அடியாருக்குச் சொன்னீர். நாங்கள் உமது அடியானாகிய என் தகப்பனாரிடத்துக்குப் போனபோது, என் ஆண்டவனுடைய வார்த்தைகளை அவருக்கு அறிவித்தோம். எங்கள் தகப்பனார் எங்களை நோக்கி: நீங்கள் திரும்பப்போய், நமக்குக் கொஞ்சம் தானியம் கொள்ளுங்கள் என்று சொன்னார். அதற்கு: நாங்கள் போகக்கூடாது; எங்கள் இளைய சகோதரன் எங்களோடே வந்தால் போவோம்; எங்கள் இளைய சகோதரன் எங்களோடே வராவிட்டால், நாங்கள் அந்தப் புருஷனுடைய முகத்தைக்காணக்கூடாது என்றோம். அப்பொழுது உம்முடைய அடியானாகிய என் தகப்பனார்: என் மனைவி எனக்கு இரண்டு பிள்ளைகளைப் பெற்றாள்; அவர்களில் ஒருவன் என்னிடத்திலிருந்து போய்விட்டான், அவன் பீறுண்டுபோயிருப்பான் என்றிருந்தேன், இதுவரைக்கும் அவனைக் காணாதிருக்கிறேன், இதெல்லாம் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் இவனையும் என்னை விட்டுப்பிரித்து அழைத்துப்போகுமிடத்தில் இவனுக்கு மோசம் நேரிட்டால், என் நரைமயிரை வியாகுலத்தோடே பாதாளத்தில் இறங்கப்பண்ணுவீர்கள் என்றார். ஆகையால் இளையவனை விட்டு, நான் என் தகப்பனாகிய உமது அடியானிடத்துக்குப் போனால், அவருடைய ஜீவன் இவனுடைய ஜீவனோடே ஒன்றாய் இணைக்கப்பட்டிருக்கிறபடியினால், அவர் இளையவன் வரவில்லை என்று அறிந்தமாத்திரத்தில் இறந்துபோவார்; இப்படி உமது அடியாராகிய நாங்கள் உமது அடியானாகிய எங்கள் தகப்பனுடைய நரைமயிரை வியாகுலத்துடனே பாதாளத்தில் இறங்கப்பண்ணுவோம். இந்த இளையவனுக்காக உமது அடியானாகிய நான் என் தகப்பனுக்கு உத்தரவாதி; அன்றியும், நான் இவனை உம்மிடத்துக்குக் கொண்டுவராவிட்டால், நான் எந்நாளும் உமக்கு முன்பாகக் குற்றவாளியாயிருப்பேன் என்று அவருக்குச் சொல்லியிருக்கிறேன். இப்படியிருக்க, இளையவன் தன் சகோதரரோடேகூடப் போகவிடும்படி மன்றாடுகிறேன்; உம்முடைய அடியானாகிய நான் இளையவனுக்குப் பதிலாக இங்கே என் ஆண்டவனுக்கு அடிமையாயிருக்கிறேன். இளையவனை விட்டு, எப்படி என் தகப்பனிடத்துக்குப் போவேன்? போனால் என் தகப்பனுக்கு நேரிடும் தீங்கை நான் எப்படிக் காண்பேன் என்றான்.