ஆதியாகமம் 44:14-17

ஆதியாகமம் 44:14-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யூதாவும் அவன் சகோதரரும் திரும்பிவந்தபோது, யோசேப்பு இன்னும் தன் வீட்டிலேயே இருந்தான். அவர்கள் யோசேப்பின் முன் தரையில் முகங்குப்புற விழுந்தார்கள். யோசேப்பு அவர்களிடம், “நீங்கள் செய்திருப்பது என்ன? என்னைப்போன்ற ஒரு மனிதன், சம்பவிக்கப் போவதை முன்பே கணித்துவிடுவான் என்று உங்களுக்குத் தெரியாதா?” என்றான். அதற்கு யூதா, “ஆண்டவனே, உமக்கு நாங்கள் என்ன சொல்வோம்? நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை எப்படி நிரூபிப்போம்? இறைவன் உமது அடியாரின் குற்றத்தை வெளிப்படுத்திவிட்டார். நாங்களும் உமது பாத்திரத்தை வைத்திருப்பவனும் இப்பொழுது என் எஜமானுக்கு அடிமைகள்” என்றான். ஆனால் யோசேப்போ, “அப்படிப்பட்ட செயலைச் செய்வதை என்னால் எண்ணிப்பார்க்கவும் முடியாது! கிண்ணத்தை வைத்திருக்கக் காணப்பட்டவன் மட்டுமே எனக்கு அடிமையாவான். மற்றவர்கள் உங்கள் தகப்பனிடம் சமாதானத்துடன் திரும்பிப்போங்கள்” என்றான்.

ஆதியாகமம் 44:14-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யூதாவும் அவனுடைய சகோதரர்களும் யோசேப்பின் வீட்டிற்குப் போனார்கள். யோசேப்பு அதுவரைக்கும் அங்கே இருந்தான்; அவனுக்கு முன்பாகத் தரையிலே விழுந்தார்கள். யோசேப்பு அவர்களை நோக்கி: “நீங்கள் என்ன காரியம் செய்தீர்கள்? என்னைப் போன்ற மனிதனுக்கு ஞானப்பார்வையினால் காரியம் தெரியவரும் என்று அறியாமற்போனீர்களா” என்றான். அதற்கு யூதா: “என் ஆண்டவனாகிய உம்மிடத்தில் நாங்கள் என்ன சொல்லுவோம்? எதைப் பேசுவோம்? எதினாலே எங்களுடைய நீதியை விளங்கச்செய்வோம்? உம்முடைய அடியாரின் அக்கிரமத்தை தேவன் விளங்கச்செய்தார்; பாத்திரத்தை வைத்திருக்கிறவனும் நாங்களும் என் ஆண்டவனுக்கு அடிமைகள்” என்றான். அதற்கு அவன்: “அப்படிப்பட்ட செயல் எனக்குத் தூரமாயிருப்பதாக; யாரிடத்தில் பாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டதோ, அவனே எனக்கு அடிமையாயிருப்பான்; நீங்களோ சமாதானத்தோடு உங்கள் தகப்பனிடத்திற்குப் போங்கள்” என்றான்.

ஆதியாகமம் 44:14-17 பரிசுத்த பைபிள் (TAERV)

யூதாவும் பிற சகோதரர்களும் யோசேப்பின் வீட்டிற்கு வந்தனர். யோசேப்பு அங்கேயே இருந்தான். அவர்கள் அவனுக்கு முன்னால் விழுந்து வணங்கினார்கள். யோசேப்பு, “ஏன் இவ்வாறு செய்தீர்கள்? நான் இரகசியங்களை அறிந்துகொள்ள சிறப்பான வழிகள் உண்டு என்று உங்களுக்குத் தெரியாதா? என்னைத் தவிர வேறு எவராலும் சிறப்பாகச் செய்ய முடியாது!” என்றான். யூதா, ஐயா, “நாங்கள் சொல்வதற்கு எதுவுமில்லை. விளக்கிச் சொல்லவும் வழியில்லை. நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க முடியவில்லை. நாங்கள் எப்போதோ செய்த தவறுக்கு இப்போது தேவன் தண்டிக்கிறார். நாங்களும் பென்யமீனும் இனி உங்கள் அடிமைகள்” என்றான். ஆனால் யோசேப்போ, “உங்கள் அனைவரையும் அடிமையாக்க நான் விரும்பவில்லை. என் கோப்பையைத் திருடியவனை மட்டுமே அடிமையாக்குவேன். உங்கள் தந்தையிடம் நீங்கள் அனைவரும் சமாதானமாகத் திரும்பிப் போகலாம்” என்றான்.

ஆதியாகமம் 44:14-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

யூதாவும் அவன் சகோதரரும் யோசேப்பின் வீட்டுக்குப் போனார்கள். யோசேப்பு அதுவரையும் அங்கே இருந்தான்; அவனுக்கு முன்பாகத் தரையிலே விழுந்தார்கள். யோசேப்பு அவர்களை நோக்கி: நீங்கள் என்ன காரியம் செய்தீர்கள்? என்னைப் போலொத்த மனிதனுக்கு ஞானதிருஷ்டியினால் காரியம் தெரியவரும் என்று அறியாமற்போனீர்களா என்றான். அதற்கு யூதா: என் ஆண்டவனாகிய உம்மிடத்தில் நாங்கள் என்ன சொல்லுவோம்? என்னத்தைப் பேசுவோம்? எதினாலே எங்கள் நீதியை விளங்கப்பண்ணுவோம்? உம்முடைய அடியாரின் அக்கிரமத்தை தேவன் விளங்கப்பண்ணினார்; பாத்திரத்தை வைத்திருக்கிறவனும் நாங்களும் என் ஆண்டவனுக்கு அடிமைகள் என்றான். அதற்கு அவன்: அப்படிப்பட்ட செய்கை எனக்குத் தூரமாயிருப்பதாக; எவன் வசத்தில் பாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டதோ, அவனே எனக்கு அடிமையாயிருப்பான்; நீங்களோ சமாதானத்தோடே உங்கள் தகப்பனிடத்துக்குப் போங்கள் என்றான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்