ஆதியாகமம் 43:23-34

ஆதியாகமம் 43:23-34 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதற்கு மேற்பார்வையாளன் அவர்களிடம், “பரவாயில்லை, நீங்கள் ஒன்றுக்கும் பயப்பட வேண்டியதில்லை. உங்கள் இறைவனான உங்கள் தகப்பனுடைய இறைவனே, உங்கள் சாக்குகளில் உங்களுக்குச் செல்வத்தை வைத்திருக்கிறார்; உங்கள் வெள்ளிக்காசை நான் பெற்றுக்கொண்டேன்” என்றான். பின்பு சிமியோனை வெளியே அவர்களிடம் கொண்டுவந்தான். மேற்பார்வையாளன் யோசேப்பின் சகோதரரை வீட்டுக்கு அழைத்துச்சென்று, அவர்கள் கால்களைக் கழுவுவதற்குத் தண்ணீர் கொடுத்தான். அத்துடன் அவர்கள் கழுதைகளுக்குத் தீனியும் கொடுத்தான். அவர்கள் யோசேப்புடன் சாப்பிடப் போவதாகக் கேள்விப்பட்டதால், மத்தியானம் யோசேப்பு வரும்போது கொடுப்பதற்காகத் தங்கள் அன்பளிப்புகளை ஆயத்தம் செய்தார்கள். யோசேப்பு வீட்டுக்கு வந்தபொழுது, அவர்கள் வீட்டுக்குள் கொண்டுவந்திருந்த தங்கள் அன்பளிப்புகளைக் கொடுத்துத் தரைமட்டும் விழுந்து, அவனை வணங்கினார்கள். யோசேப்பு அவர்கள் சுகசெய்திகளை விசாரித்து, “முன்பு நீங்கள் உங்கள் வயதுசென்ற தகப்பனைப் பற்றிச் சொன்னீர்களே, அவர் எப்படியிருக்கிறார்? இன்னும் அவர் உயிரோடிருக்கிறாரா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “உமது அடியவனாகிய எங்கள் தகப்பன் இன்னும் உயிரோடு சுகமாக இருக்கிறார்” என்று சொன்னார்கள். அவனுக்கு மதிப்புக் கொடுக்கும்படி குனிந்து வணங்கினார்கள். யோசேப்பு அவர்களைப் பார்த்து, தன் சொந்தத் தாயின் மகனான, தன் சகோதரன் பென்யமீனைக் கண்டதும், நீங்கள் சொன்ன உங்கள் இளைய சகோதரன் இவன்தானா? என்று கேட்டான். பின்பு, “என் மகனே, இறைவன் உனக்குக் கிருபை செய்வாராக” என்றான். யோசேப்பு தன் தம்பியைக் கண்டதும் உணர்ச்சி வசப்பட்டவனாய், விரைந்து வெளியே சென்று அழுவதற்கு இடம் தேடினான். அவன் தன்னுடைய அறைக்குள் சென்று அங்கே அழுதான். பின்பு அவன் தன் முகத்தைக் கழுவி, வெளியே வந்து தன்னை அடக்கிக்கொண்டு, “உணவு பரிமாறுங்கள்” என்றான். எபிரெயருடன் சாப்பிடுவது எகிப்தியருக்கு அருவருப்பாய் இருந்தபடியால், எகிப்தியர் எபிரெயருடன் அமர்ந்து சாப்பிடுவதில்லை. அதனால் யோசேப்புக்கு வேறாகவும், அவன் சகோதரர்களுக்கு வேறாகவும், அவனுடன் சாப்பிட்ட எகிப்தியருக்கு வேறாகவும் உணவு பரிமாறப்பட்டது. யோசேப்புக்கு முன்பாக மூத்தவன் தொடங்கி இளையவன் வரைக்கும் அவர்கள் வயதின்படியே பந்தியில் அமர்த்தப்பட்டார்கள்: யோசேப்பின் சகோதரர் அதைக்குறித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்தார்கள். யோசேப்பின் மேஜையிலிருந்து அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டபோது, மற்றவர்களுடைய பங்குகளைப் பார்க்கிலும் பென்யமீனின் பங்கு ஐந்து மடங்கு அதிகமாக இருந்தது. அவர்கள் யோசேப்புடன் தாராளமாக விருந்துண்டு குடித்தார்கள்.

ஆதியாகமம் 43:23-34 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அதற்கு அவன்: “உங்களுக்குச் சமாதானம்; பயப்படவேண்டாம்; உங்கள் தேவனும் உங்கள் தகப்பனுடைய தேவனுமாயிருக்கிறவர் உங்கள் சாக்குகளில் அதை உங்களுக்குப் புதையலாகக் கட்டளையிட்டார்; நீங்கள் கொடுத்த பணம் என்னிடத்தில் வந்து சேர்ந்தது” என்று சொல்லி, சிமியோனை வெளியே அழைத்து வந்து, அவர்களிடத்தில் விட்டான். மேலும், அந்த மனிதன் அவர்களை யோசேப்பின் வீட்டிற்குள்ளே கூட்டிக்கொண்டுபோய், அவர்கள் தங்கள் கால்களைக் கழுவும்படி தண்ணீர் கொடுத்து, அவர்களுடைய கழுதைகளுக்குத் தீவனம் போட்டான். தாங்கள் அங்கே சாப்பிடப்போகிறதை அவர்கள் கேள்விப்பட்டதால், மத்தியானத்தில் யோசேப்பு வரும்வரை காணிக்கையை ஆயத்தமாக வைத்துக் காத்துக்கொண்டிருந்தார்கள். யோசேப்பு வீட்டிற்கு வந்தபோது, அவர்கள் தங்கள் கையில் இருந்த காணிக்கையை வீட்டிற்குள் அவனிடத்தில் கொண்டுபோய் வைத்து, தரைவரைக்கும் குனிந்து, அவனை வணங்கினார்கள். அப்பொழுது அவன்: “அவர்கள் சுகசெய்தியை விசாரித்து, நீங்கள் சொன்ன முதிர்வயதான உங்கள் தகப்பன் சுகமாயிருக்கிறாரா? அவர் இன்னும் உயிரோடிருக்கிறாரா”? என்று அவர்களிடத்தில் விசாரித்தான். அதற்கு அவர்கள்: “எங்கள் தகப்பனாராகிய உமது அடியான் சுகமாயிருக்கிறார், இன்னும் உயிரோடிருக்கிறார்” என்று சொல்லி, குனிந்து வணங்கினார்கள். அவன் தன் கண்களை ஏறெடுத்து, தன் தாய் பெற்ற மகனாகிய தன் சகோதரன் பென்யமீனைக் கண்டு, “நீங்கள் எனக்குச் சொன்ன உங்கள் இளைய சகோதரன் இவன்தானா என்று கேட்டு, மகனே, தேவன் உனக்குக் கிருபை செய்யக்கடவர்” என்றான். யோசேப்பின் உள்ளம் தன் சகோதரனுக்காகப் பொங்கினதால், அவன் அழுகிறதற்கு இடம் தேடி, வேகமாக அறைக்குள்ளே போய், அங்கே அழுதான். பின்பு, அவன் தன் முகத்தைக் கழுவி வெளியே வந்து, தன்னை அடக்கிக்கொண்டு, “உணவு வையுங்கள்” என்றான். எகிப்தியர்கள் எபிரெயரோடு சாப்பிடமாட்டார்கள்; அப்படிச் செய்வது எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கும்; ஆகையால், அவனுக்குத் தனியாகவும், அவர்களுக்குத் தனியாகவும், அவனோடு சாப்பிடுகிற எகிப்தியருக்குத் தனியாகவும் வைத்தார்கள். அவனுக்கு முன்பாக, மூத்தவன்முதல் இளையவன்வரைக்கும் அவனவன் வயதின்படியே அவர்களை உட்காரவைத்தார்கள்; அதற்காக அவர்கள், ஒருவரை ஒருவர் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். அவன் தனக்குமுன் வைக்கப்பட்டிருந்த உணவில் அவர்களுக்குப் பங்கிட்டு அனுப்பினான்; அவர்கள் எல்லோருடைய பங்குகளைவிட பென்யமீனுடைய பங்கு ஐந்துமடங்கு அதிகமாயிருந்தது; அவர்கள் குடித்து, அவனோடு சந்தோஷமாயிருந்தார்கள்.

ஆதியாகமம் 43:23-34 பரிசுத்த பைபிள் (TAERV)

ஆனால் வேலைக்காரனோ, “பயப்பட வேண்டாம், நம்புங்கள் உங்கள் தேவனும் உங்கள் தந்தையின் தேவனும் அந்தப் பணத்தை உங்கள் பைகளில் போட்டிருக்கலாம். கடந்த முறை தானியத்துக்கான பணத்தைக் கொடுத்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்” என்றான். பிறகு அவன் சிமியோனைச் சிறையிலிருந்து விடுவித்தான். அவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு வேலைக்காரன் வீட்டிற்குள் போனான். அவர்களுக்குத் தண்ணீர் கொடுத்தான். அவர்கள் பாதங்களைக் கழுவிக்கொண்டனர். அவர்களின் கழுதைகளுக்கும் உணவு கொடுத்தான். அவர்கள் ஆளுநரோடு உண்ணப் போகிறோம் என்பதை அறிந்தனர். எனவே, அவனுக்குக் கொடுக்க வேண்டிய காணிக்கைகளை எடுத்து தயார் செய்தனர். மதியம் ஆனபோது யோசேப்பு வீட்டிற்கு வந்தான். அவர்கள் அவனுக்குக் காணிக்கைகளைக் கொடுத்தனர். பிறகு அவனுக்கு முன்னால் பணிந்து வணங்கினார்கள். யோசேப்பு அவர்களிடம் நடந்ததை எல்லாம் கேட்டான், “உங்கள் வயதான தந்தை எப்படி இருக்கிறார். இப்போதும் அவர் உயிரோடும் நலமாகவும் இருக்கிறாரா?” என்று கேட்டான். சகோதரர்கள் அனைவரும், “ஆமாம் ஐயா, அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார்” என்றனர். மீண்டும் அவனைப் பணிந்து வணங்கினார்கள். பிறகு யோசேப்பு தன் தம்பியைப் பார்த்தான். (இருவரும் ஒரே தாயின் வயிற்றில் பிறந்தவர்கள்.) “இதுதான் எனக்கு நீங்கள் சொன்ன உங்கள் இளைய சகோதரனா?” என்று கேட்டான். பிறகு யோசேப்பு, “என் மகனே தேவன் உன்னை ஆசீர்வதிக்கட்டும்” என்று பென்யமீனிடம் சொன்னான். பிறகு அவன் அந்த அறையை விட்டு வெளியே ஓடினான். தன் சகோதரன் பென்யமீனைத் தான் மிகவும் விரும்புவதை அவனுக்கு உணர்த்தப் பெரிதும் விரும்பினான். அவனுக்கு அழவேண்டும்போல இருந்தது. ஆனால் தான் அழுவதைத் தன் சகோதரர்கள் பார்த்துவிடக் கூடாதே என்று அஞ்சினான். இதனால்தன் அறைக்குச் சென்று அழுதான். பிறகு முகத்தைக் கழுவிக்கொண்டு வந்தான். அவன் தன்னைத் தானே அடக்கிக்கொண்டு, “இது உணவு உண்ணும் நேரம்” என்றான். அவனுக்கும் அவர்களுக்கும் மற்ற எகிப்தியர்களுக்கும் தனித்தனியாக மேஜை போடப்பட்டிருந்தது. அவர்களும் தனித் தனியாக அமர்ந்தார்கள். எகிப்தியர்கள் எபிரெயர்களோடு சேர்ந்து சாப்பிடுவதில்லை. யோசேப்பின் சகோதரர்கள் அவனுக்கு முன்னால் அமர்ந்தார்கள். மூத்தவன் முதல் இளையவன் வரை வரிசையாக அமர்ந்திருந்தார்கள். அவர்கள் நடப்பதைப்பற்றி வியப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். வேலைக்காரர்கள் யோசேப்பின் மேஜையிலிருந்து உணவை எடுத்து வந்து அவர்களிடம் கொடுத்தார்கள். அவர்கள் பென்யமீனுக்கு மற்றவர்களைக் காட்டிலும் ஐந்து மடங்கு அதிகமாக உணவு கொடுத்தனர். சகோதரர்கள் யோசேப்போடு சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

ஆதியாகமம் 43:23-34 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அதற்கு அவன்: உங்களுக்குச் சமாதானம்; பயப்படவேண்டாம்; உங்கள் தேவனும் உங்கள் தகப்பனுடைய தேவனுமாயிருக்கிறவர் உங்கள் சாக்குகளில் அதை உங்களுக்குப் புதையலாகக் கட்டளையிட்டார்; நீங்கள் கொடுத்த பணம் என்னிடத்தில் வந்து சேர்ந்தது என்று சொல்லி, சிமியோனை வெளியே அழைத்து வந்து, அவர்களிடத்தில் விட்டான். மேலும், அந்த மனிதன் அவர்களை யோசேப்பின் வீட்டுக்குள்ளே கூட்டிக்கொண்டுபோய், அவர்கள் தங்கள் கால்களைக் கழுவும்படி தண்ணீர் கொடுத்து, அவர்களுடைய கழுதைகளுக்குத் தீவனம் போட்டான். தாங்கள் அங்கே போஜனம் செய்யப்போகிறதை அவர்கள் கேள்விப்பட்டபடியால், மத்தியானத்தில் யோசேப்பு வருமளவும் காணிக்கையை ஆயத்தமாய் வைத்துக் காத்துக்கொண்டிருந்தார்கள். யோசேப்பு வீட்டுக்கு வந்தபோது, அவர்கள் தங்கள் கையில் இருந்த காணிக்கையை வீட்டுக்குள் அவனிடத்தில் கொண்டுபோய் வைத்து, தரைமட்டும் குனிந்து, அவனை வணங்கினார்கள். அப்பொழுது அவன்: அவர்கள் சுகசெய்தியை விசாரித்து, நீங்கள் சொன்ன முதிர்வயதான உங்கள் தகப்பன் சுகமாயிருக்கிறாரா? அவர் இன்னும் உயிரோடிருக்கிறாரா? என்று அவர்களிடத்தில் விசாரித்தான். அதற்கு அவர்கள்: எங்கள் தகப்பனாராகிய உமது அடியான் சுகமாயிருக்கிறார், இன்னும் உயிரோடிருக்கிறார் என்று சொல்லி, குனிந்து வணங்கினார்கள். அவன் தன் கண்களை ஏறெடுத்து, தன் தாய் பெற்ற குமாரனாகிய தன் சகோதரன் பென்யமீனைக் கண்டு, நீங்கள் எனக்குச் சொன்ன உங்கள் இளைய சகோதரன் இவன்தானா என்று கேட்டு, மகனே, தேவன் உனக்குக் கிருபைசெய்யக்கடவர் என்றான். யோசேப்பின் உள்ளம் தன் சகோதரனுக்காகப் பொங்கினபடியால், அவன் அழுகிறதற்கு இடம் தேடி, துரிதமாய் அறைக்குள்ளே போய், அங்கே அழுதான். பின்பு, அவன் தன் முகத்தைக் கழுவி வெளியே வந்து, தன்னை அடக்கிக்கொண்டு, போஜனம் வையுங்கள் என்றான். எகிப்தியர் எபிரெயரோடே சாப்பிடமாட்டார்கள்; அப்படிச் செய்வது எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கும்; ஆகையால், அவனுக்குத் தனிப்படவும், அவர்களுக்குத் தனிப்படவும், அவனோடே சாப்பிடுகிற எகிப்தியருக்குத் தனிப்படவும் வைத்தார்கள். அவனுக்கு முன்பாக, மூத்தவன் முதல் இளையவன்வரைக்கும் அவனவன் வயதின்படியே அவர்களை உட்காரவைத்தார்கள்; அதற்காக அவர்கள், ஒருவரை ஒருவர் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். அவன் தனக்குமுன் வைக்கப்பட்டிருந்த போஜனத்தில் அவர்களுக்குப் பங்கிட்டு அனுப்பினான்; அவர்கள் எல்லாருடைய பங்குகளைப்பார்க்கிலும் பென்யமீனுடைய பங்கு ஐந்துமடங்கு அதிகமாயிருந்தது; அவர்கள் பானம்பண்ணி, அவனுடனே சந்தோஷமாயிருந்தார்கள்.