ஆதியாகமம் 42:29-36

ஆதியாகமம் 42:29-36 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவர்கள் கானான் நாட்டுக்குத் தங்கள் தகப்பன் யாக்கோபிடம் வந்தபோது, தங்களுக்கு நடந்ததையெல்லாம் அவனுக்குச் சொன்னார்கள். “எகிப்தில் அதிகாரியாய் இருப்பவன் எங்களுடன் மிகவும் கடுமையாகப் பேசி, எங்களை உளவு பார்ப்பவர்களைப் போல் நடத்தினான். ஆனால் நாங்கள் அவனிடம், ‘நாங்கள் நீதியானவர்கள்; உளவாளிகள் அல்ல. நாங்கள் பன்னிரண்டு சகோதரர், ஒரே தகப்பனின் பிள்ளைகள், ஒருவன் இறந்துவிட்டான்; இப்பொழுது இளையவன் எங்கள் தகப்பனோடு கானான் நாட்டில் இருக்கிறான்’ என்று சொன்னோம். “அப்பொழுது அந்நாட்டின் அதிபதியானவன் எங்களிடம், ‘நீங்கள் நீதியானவர்கள் என்று நான் அறிய உங்கள் சகோதரரில் ஒருவனை இங்கே என்னுடன் விட்டுவிட்டு, மற்றவர்கள் பட்டினியாய் இருக்கும் உங்கள் குடும்பத்துக்குத் தானியத்தை எடுத்துக்கொண்டு போங்கள். ஆனால், நீங்கள் உளவாளிகள் அல்ல, நீதியானவர்கள் என நான் அறியும்படி, உங்கள் இளைய சகோதரனை என்னிடம் கொண்டுவாருங்கள். அப்பொழுது உங்கள் சகோதரனை உங்களிடம் திருப்பி ஒப்படைப்பேன், நீங்களும் இந்நாட்டில் வியாபாரம் செய்யலாம் என்று சொன்னான்’ ” என்றார்கள். அவர்கள் தங்கள் சாக்குகளிலுள்ள தானியத்தைக் கொட்டியபோது, ஒவ்வொருவனுடைய சாக்கிலும் அவனவனுடைய பணப்பை இருந்தது! அவர்களும், அவர்கள் தகப்பனும் அவற்றைக் கண்டபோது பயந்தார்கள். அவர்கள் தகப்பன் யாக்கோபு அவர்களிடம், “நீங்கள் எனக்கு என் பிள்ளைகளை இல்லாமல் செய்துவிட்டீர்கள். யோசேப்பும் இல்லை, சிமியோனும் இல்லை, இப்போது பென்யமீனையும் கொண்டு போகப்போகிறீர்கள். எல்லாமே எனக்கு விரோதமாய் இருக்கின்றதே!” என்று சொல்லிக் கலங்கினான்.

ஆதியாகமம் 42:29-36 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவர்கள் கானான் தேசத்திலுள்ள தங்கள் தகப்பனாகிய யாக்கோபிடம் வந்து, தங்களுக்குச் சம்பவித்தவைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்து: “தேசத்திற்கு அதிபதியாயிருக்கிறவன் எங்களை தேசத்தை உளவுபார்க்க வந்தவர்கள் என்று நினைத்து எங்களோடு கடினமாகப் பேசினான். நாங்களோ அவனை நோக்கி: நாங்கள் நேர்மையானவர்கள், உளவாளிகள் அல்ல. நாங்கள் பன்னிரண்டு சகோதரர்கள், ஒரு தகப்பனுடைய பிள்ளைகள், ஒருவன் காணாமற்போனான், இளையவன் இப்பொழுது கானான்தேசத்தில் எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான்” என்றோம். அப்பொழுது தேசத்தின் அதிபதியானவன்: நீங்கள் நேர்மையானவர்கள் என்பதை நான் அறியும்படி உங்கள் சகோதரர்களில் ஒருவனை நீங்கள் என்னிடத்தில் விட்டு, பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள் குடும்பத்திற்குத் தானியம் வாங்கிக்கொண்டுபோய்க் கொடுத்து, உங்கள் இளைய சகோதரனை என்னிடத்தில் அழைத்துக்கொண்டு வாருங்கள்; அதனால் நீங்கள் உளவாளிகள் அல்ல, நேர்மையானவர்கள் என்பதை நான் அறிந்துகொண்டு, உங்கள் சகோதரனை விடுதலை செய்வேன்; நீங்கள் இந்தத் தேசத்திலே வியாபாரமும் செய்யலாம் என்றான் என்று சொன்னார்கள். அவர்கள் தங்கள் சாக்குகளிலுள்ள தானியத்தைக் கொட்டும்போது, இதோ, அவனவன் சாக்கிலே அவனவன் பணமுடிப்பு இருந்தது; அந்த பணமுடிப்புகளை அவர்களும் அவர்கள் தகப்பனும் கண்டு பயந்தார்கள். அவர்கள் தகப்பனாகிய யாக்கோபு அவர்களை நோக்கி: “என்னைப் பிள்ளையற்றவனாக்குகிறீர்கள்; யோசேப்பும் இல்லை, சிமியோனும் இல்லை; பென்யமீனையும் கொண்டுபோகப் பார்க்கிறீர்கள்; இதெல்லாம் எனக்கு விரோதமாக நேரிடுகிறது” என்றான்.

ஆதியாகமம் 42:29-36 பரிசுத்த பைபிள் (TAERV)

அவர்கள் கானான் பகுதிக்குப் போய் தம் தந்தையான யாக்கோபைச் சந்தித்து, நடந்தவை அனைத்தையும் சொன்னார்கள். “அந்நாட்டின் ஆளுநர் எங்களிடம் மிகக் கடுமையாகப் பேசினான். எங்களை ஒற்றர்கள் என்று குற்றம் சாட்டினான்” நாங்கள் அவ்வாறு இல்லை என்று மறுத்தோம். நாங்கள் நேர்மையானவர்கள் என்றோம். நாங்கள் பன்னிரண்டு சகோதரர்கள் என்றும் தந்தையைப்பற்றியும் இளைய தம்பியைப்பற்றியும் சொன்னோம். “பிறகு அந்த ஆளுநர் ‘நீங்கள் கௌரவமானவர்கள் என்பதை இதன் மூலம் நிரூபியுங்கள். ஒரு சகோதரனை விட்டு விட்டுப் போங்கள். உங்கள் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லுங்கள். பிறகு உங்கள் இளைய சகோதரனை அழைத்துக்கொண்டு வாருங்கள். அதன் பிறகு நீங்கள் கௌரமானவர்களா, இல்லை ஒற்றர்களா என்பதை அறிந்துகொள்வேன். நீங்கள் சொன்னது உண்மை என்றால் உங்கள் சகோதரனை விட்டு விடுவோம். நீங்களும் இந்த தேசத்திலே வியாபாரம் பண்ணலாம், என்று சொன்னான்’” என்றார்கள். பிறகு சகோதர்கள் அனைவரும் தங்கள் பைகளை அவிழ்த்து தானியத்தை வெளியே எடுத்தனர். எல்லாப் பைகளிலும் பணம் இருந்தது. சகோதரர்களும் தந்தையும் அவற்றைப் பார்த்து அஞ்சினார்கள். யாக்கோபு அவர்களிடம், “நான் எனது எல்லா குமாரர்களையும் இழக்கவேண்டும் என்று விரும்புகிறீர்களா? யோசேப்பு போய்விட்டான். சிமியோனும் போய்விட்டான். நீங்கள் இப்போது பென்யமீனையும் கொண்டுபோகிறீர்களா?” என்று கேட்டான்.

ஆதியாகமம் 42:29-36 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர்கள் கானான் தேசத்திலுள்ள தங்கள் தகப்பனாகிய யாக்கோபினிடத்தில் வந்து, தங்களுக்குச் சம்பவித்தவைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்து: தேசத்துக்கு அதிபதியாயிருக்கிறவன் எங்களை தேசத்தை வேவுபார்க்க வந்தவர்கள் என்று எண்ணி எங்களோடே கடினமாய்ப் பேசினான். நாங்களோ அவனை நோக்கி: நாங்கள் நிஜஸ்தர், வேவுகாரர் அல்ல. நாங்கள் பன்னிரண்டு சகோதரர், ஒரு தகப்பன் புத்திரர், ஒருவன் காணாமற்போனான், இளையவன் இப்பொழுது கானான்தேசத்தில் எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான் என்றோம். அப்பொழுது தேசத்தின் அதிபதியானவன்: நீங்கள் நிஜஸ்தர் என்பதை நான் அறியும்படி உங்கள் சகோதரரில் ஒருவனை நீங்கள் என்னிடத்தில் விட்டு, பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள் குடும்பத்துக்குத் தானியம் வாங்கிக்கொண்டுபோய்க் கொடுத்து, உங்கள் இளைய சகோதரனை என்னிடத்தில் அழைத்துக்கொண்டுவாருங்கள்; அதினாலே நீங்கள் வேவுகாரர் அல்ல, நிஜஸ்தர் என்பதை நான் அறிந்துகொண்டு, உங்கள் சகோதரனை விடுதலை செய்வேன்; நீங்கள் இந்தத் தேசத்திலே வியாபாரமும் பண்ணலாம் என்றான் என்று சொன்னார்கள். அவர்கள் தங்கள் சாக்குகளிலுள்ள தானியத்தைக் கொட்டுகையில், இதோ, அவனவன் சாக்கிலே அவனவன் பணமுடிப்பு இருந்தது; அந்தப் பணமுடிப்புகளை அவர்களும் அவர்கள் தகப்பனும் கண்டு பயந்தார்கள். அவர்கள் தகப்பனாகிய யாக்கோபு அவர்களை நோக்கி: என்னைப் பிள்ளையற்றவனாக்குகிறீர்கள்; யோசேப்பும் இல்லை, சிமியோனும் இல்லை; பென்யமீனையும் கொண்டுபோகப் பார்க்கிறீர்கள்; இதெல்லாம் எனக்கு விரோதமாய் நேரிடுகிறது என்றான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்