ஆதியாகமம் 42:1-20

ஆதியாகமம் 42:1-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எகிப்திலே தானியம் இருக்கிறதாக யாக்கோபு அறிந்தான். அவன் தன் மகன்களிடம், “நீங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு ஏன் சும்மா இருக்கிறீர்கள்? எகிப்திலே தானியம் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். நாம் சாகாமல் உயிர்வாழும்படி, அங்குபோய் நமக்குத் தானியம் வாங்கி வாருங்கள்” என்றான். அப்பொழுது யோசேப்பின் பத்து சகோதரரும் தானியம் வாங்குவதற்காக எகிப்திற்குப் போனார்கள். ஆனால் யோசேப்பின் தம்பியான பென்யமீனுக்குத் தீங்கு நேரிடலாம் எனப் பயந்த யாக்கோபு, அவனை அவர்களோடு அனுப்பவில்லை. கானான் நாட்டிலும் பஞ்சம் ஏற்பட்டபடியால், தானியம் வாங்குவதற்காக எகிப்திற்குப் போனவர்களுடன் இஸ்ரயேலின் மகன்களும் போனார்கள். இப்பொழுது யோசேப்பு எகிப்து நாட்டின் ஆளுநனாக இருந்தான், மக்கள் யாவருக்கும் அவனே தானியம் விற்றான். யோசேப்பின் சகோதரர் அங்கு வந்ததும், தரையிலே முகங்குப்புற விழுந்து அவனை வணங்கினார்கள். யோசேப்பு சகோதரர்களைக் கண்டவுடனே, அவர்களை இன்னார் என அறிந்துகொண்டான். ஆனால் அவன் அவர்களை அறியாத ஒரு அந்நியனைப்போல் பாசாங்கு செய்து கடுமையாய்ப் பேசி, “நீங்கள் எங்கேயிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “நாங்கள் தானியம் வாங்கும்படி கானான் நாட்டிலிருந்து வந்திருக்கிறோம்” என்றார்கள். யோசேப்பு தன் சகோதரர்களை யாரென்று அறிந்திருந்தாலும் அவர்களோ அவனை இன்னாரென்று அறிந்துகொள்ளவில்லை. பின்பு யோசேப்பு, தான் முன்னர் அவர்களைக் குறித்துக் கண்ட கனவுகளை நினைத்துத் தன் சகோதரர்களிடம், “நீங்கள் உளவாளிகள்! எங்கள் நாட்டில் பாதுகாப்புக் குறைவு எங்கிருக்கின்றது என அறியவே இங்கு வந்தீர்கள்” என்றான். அதற்கு அவர்கள், “இல்லை ஆண்டவனே, உம்முடைய அடியவர்களாகிய நாங்கள் உணவு வாங்குவதற்காகவே இங்கு வந்திருக்கிறோம். நாங்கள் எல்லோரும் ஒரே தகப்பனின் பிள்ளைகள். உமது அடியார்கள் உண்மையானவர்கள், உளவாளிகள் அல்ல” என்றார்கள். யோசேப்போ, “இல்லை! நீங்களோ எங்கள் நாடு எங்கே பாதுகாப்பற்று இருக்கிறது எனப் பார்க்கவே வந்தீர்கள்” என்றான். அதற்கு அவர்கள், “உம்முடைய அடியார்களாகிய நாங்கள் பன்னிரண்டு சகோதரர்கள், கானான் நாட்டில் வாழும் ஒரே தகப்பனின் மகன்கள். கடைசி மகன் இப்பொழுது எங்கள் தகப்பனோடு இருக்கிறான், மற்றவன் இறந்துபோனான்” என்றார்கள். யோசேப்பு அவர்களிடம், “நான் சொன்னபடியே நீங்கள் உளவாளிகள்தான்! நான் உங்களைச் சோதிக்கப்போகிறேன். பார்வோன் வாழ்வது நிச்சயம்போல, உங்கள் இளைய சகோதரன் இங்கு வந்தாலன்றி, நீங்கள் இவ்விடத்தைவிட்டுப் போகமாட்டீர்கள் என்பதும் நிச்சயம். உங்கள் இளைய சகோதரனை அழைத்துவர இப்பொழுது நீங்கள் உங்களில் ஒருவனை அனுப்பவேண்டும்; மற்றவர்கள் சிறையில் வைக்கப்படுவீர்கள், நீங்கள் சொன்னவை உண்மையோ எனப் பார்ப்பதற்கு உங்கள் வார்த்தைகள் இவ்வாறு சோதிக்கப்படும். இல்லாவிட்டால் பார்வோன் வாழ்வது நிச்சயம்போல நீங்கள் உளவாளிகள் என்பதும் நிச்சயமே!” என்றான். அவன் அவர்களை மூன்று நாட்கள் தடுப்புக் காவலில் வைத்தான். மூன்றாம் நாள் யோசேப்பு தன் சகோதரரிடம், “நான் இறைவனுக்குப் பயப்படுகிறவன், நீங்கள் இதைச் செய்யுங்கள்; அப்பொழுது உயிர் வாழ்வீர்கள். நீங்கள் உண்மையானவர்களானால், உங்கள் சகோதரர்களில் ஒருவன் இங்கே சிறையில் இருக்கட்டும், மற்றவர்கள் பட்டினியாய் இருக்கும் உங்கள் குடும்பத்துக்குத் தானியத்தைக் கொண்டுபோங்கள். உங்கள் வார்த்தை நிரூபிக்கப்படும்படியும், நீங்கள் சாகாமல் இருக்கும்படியும், உங்களுடைய இளைய சகோதரனை என்னிடம் கொண்டுவர வேண்டும்” என்றான். அவர்கள் அவ்வாறு செய்யும்படி புறப்பட்டார்கள்.

ஆதியாகமம் 42:1-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு அறிந்து, தன் மகன்களை நோக்கி: “நீங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறது என்ன? எகிப்திலே தானியம் உண்டென்று கேள்விப்படுகிறேன்; நாம் சாகாமல் உயிரோடிருக்க நீங்கள் அங்கே போய், நமக்காகத் தானியத்தை வாங்குங்கள்” என்றான். யோசேப்பின் சகோதரர்கள் பத்துப்பேர் தானியம் வாங்க எகிப்திற்குப் போனார்கள். யோசேப்பின் தம்பியாகிய பென்யமீனுக்கு ஏதோ தீங்கு வரும் என்று சொல்லி, யாக்கோபு அவனை அவனுடைய சகோதரர்களோடு அனுப்பவில்லை. கானான் தேசத்திலே பஞ்சம் உண்டாயிருந்ததால், தானியம் வாங்கப்போகிறவர்களுடனேகூட இஸ்ரவேலின் மகன்களும் போனார்கள். யோசேப்பு அந்த தேசத்திற்கு அதிபதியாயிருந்து, தேசத்தின் மக்கள் அனைவருக்கும் தானியத்தை விற்றான். யோசேப்பின் சகோதரர்கள் வந்து, முகங்குப்புறத் தரையிலே விழுந்து அவனை வணங்கினார்கள். யோசேப்பு அவர்களைப் பார்த்து, தன் சகோதரர்கள் என்று தெரிந்துகொண்டான்; தெரிந்தும் தெரியாதவன்போலக் கடினமாக அவர்களோடு பேசி: “நீங்கள் எங்கேயிருந்து வந்தீர்கள்” என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: “கானான் தேசத்திலிருந்து தானியம் வாங்கவந்தோம்” என்றார்கள். யோசேப்பு அவர்களைத் தன் சகோதரர்கள் என்று தெரிந்தும், அவர்களுக்கு அவனைத் தெரியவில்லை. யோசேப்பு அவர்களைக் குறித்துத் தான் கண்ட கனவுகளை நினைத்து, அவர்களை நோக்கி: “நீங்கள் உளவாளிகள், தேசம் எங்கே திறந்துகிடக்கிறது என்று பார்க்க வந்தீர்கள்” என்றான். அதற்கு அவர்கள்: “அப்படியல்ல, ஆண்டவனே, உமது அடியாராகிய நாங்கள் தானியம் வாங்க வந்தோம். நாங்கள் எல்லோரும் ஒரு தகப்பனுடைய பிள்ளைகள்; நாங்கள் நேர்மையானவர்கள்; உமது அடியார் உளவாளிகள் அல்ல” என்றார்கள். அதற்கு அவன்: “அப்படியல்ல, தேசம் எங்கே திறந்துகிடக்கிறது என்று பார்க்கவே வந்தீர்கள்” என்றான். அப்பொழுது அவர்கள்: “உமது அடியாராகிய நாங்கள் பன்னிரண்டு சகோதரர்கள்; கானான் தேசத்தில் இருக்கிற ஒரு தகப்பனுடைய பிள்ளைகள்; இளையவன் இப்பொழுது எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான்; ஒருவன் காணாமற்போனான்” என்றார்கள். யோசேப்பு அவர்களை நோக்கி: “உங்களை உளவாளிகள் என்று நான் சொன்னது சரி. உங்களுடைய இளைய சகோதரன் இங்கே வந்தாலொழிய நீங்கள் இங்கேயிருந்து புறப்படுவது இல்லை என்று பார்வோனின் ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறேன். இதனால் நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்கள் சகோதரனை அழைத்து வரும்படி உங்களில் ஒருவனை அனுப்புங்கள்; உங்களிடத்தில் உண்மை உண்டோ இல்லையோ என்று உங்கள் வார்த்தைகள் சோதிக்கப்படும்வரைக்கும், நீங்கள் காவலில் இருக்கவேண்டும்; இல்லாவிட்டால், நீங்கள் உளவாளிகள்தான் என்று பார்வோனின் ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்கள் எல்லோரையும் மூன்றுநாட்கள் காவலிலே வைத்தான். மூன்றாம் நாளிலே யோசேப்பு அவர்களை நோக்கி: “நான் தேவனுக்குப் பயப்படுகிறவன்; நீங்கள் உயிரோடு இருக்க ஒன்று செய்யுங்கள். நீங்கள் நேர்மையானவர்களானால், சகோதரர்களாகிய உங்களில் ஒருவன் காவலில் கட்டப்பட்டிருக்கட்டும்; மற்றவர்கள் புறப்பட்டு, பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள் குடும்பத்திற்குத் தானியம் கொண்டுபோய்க் கொடுத்து, உங்கள் இளைய சகோதரனை என்னிடத்திற்கு அழைத்துக்கொண்டு வாருங்கள்; அப்பொழுது உங்கள் வார்த்தைகள் உண்மையென்று விளங்கும்; நீங்கள் சாவதில்லை” என்றான். அவர்கள் அப்படிச்செய்கிறதற்குச் சம்மதித்து

ஆதியாகமம் 42:1-20 பரிசுத்த பைபிள் (TAERV)

கானான் தேசத்திலும் கொடிய பஞ்சம் இருந்தது. யாக்கோபு எகிப்தில் உணவுப் பொருட்கள் இருப்பதாக அறிந்தான். எனவே அவன் தன் குமாரர்களிடம், “எதுவும் செய்யாமல் இங்கே இருந்து என்ன பயன்? எகிப்தில் உணவுப் பொருட்களை விற்பதாகக் கேள்விப்பட்டேன். எனவே நாம் செத்துப் போவதற்குப் பதிலாக அங்கே போய் உணவுப் பொருட்களை வாங்கி வருவோம்” என்றான். எனவே, யோசேப்பின் பத்து சகோதரர்களும் உணவுப் பொருட்கள் வாங்க எகிப்து நாட்டிற்குப் போனார்கள். யாக்கோபு பென்யமீனை அவர்களோடு அனுப்பவில்லை. (அவனே யோசேப்பின் முழுமையான சகோதரன்) அவனுக்கும் ஏதாவது கேடு ஏற்படலாம் என்று யாக்கோபு பயந்தான். கானான் பகுதியில் பஞ்சம் மிகவும் கொடுமையாக இருந்தது. எனவே ஏராளமான ஜனங்கள் எகிப்துக்குப் போனார்கள். அவர்களுள் இஸ்ரவேலின் குமாரர்களும் இருந்தனர். யோசேப்புதான் எகிப்தின் ஆளுநராக அச்சமயத்தில் இருந்தான். எகிப்துக்கு வரும் ஜனங்களுக்கு விற்கப்படும் தானியத்தைக் கண்காணிக்கும் பொறுப்பு அவனிடமே இருந்தது. எனவே யோசேப்பின் சகோதரர்கள் அவனிடம் வந்து குனிந்து வணங்கி நின்றனர். யோசேப்பு தன் சகோதரர்களைப் பார்த்ததும், உடனே அடையாளம் கண்டுகொண்டான். எனினும் தெரிந்துகொண்டதைப்போல் காட்டிகொள்ளாமல் அவர்களிடம் கடுமையாக நடந்துகொண்டான். “எங்கேயிருந்து வருகின்றீர்கள்?” என்று கேட்டான். அவர்கள், “நாங்கள் கானான் பகுதியிலிருந்து வருகிறோம். உணவுப் பொருட்களை வாங்குவதற்காக வந்தோம்” என்றனர். யோசேப்புக்கு அவர்கள் அனைவரும் தன் சகோதரர்கள் என்று புரிந்தது. ஆனால் அவர்களுக்கு அவனை அடையாளம் தெரியவில்லை. அவன் தன் சகோதரர்களைப்பற்றி தான் கண்ட கனவை நினைத்துப் பார்த்தான். யோசேப்பு அவர்களிடம், “நீங்கள் உணவுப் பொருட்கள் வாங்க வரவில்லை, நீங்கள் ஒற்றர்கள். எங்கள் நாட்டின் பலவீனத்தைத் தெரிந்துகொள்ள வந்திருக்கிறீர்கள்” என்றான். அவர்களோ, “இல்லை ஐயா! நாங்கள் உங்கள் வேலைக்காரர்களாக வந்திருக்கிறோம். உணவுப் பொருட்களை வாங்கவே வந்துள்ளோம். நாங்கள் அனைவரும் சகோதரர்கள். எங்கள் அனைவருக்கும் ஒரே தந்தை. நாங்கள் நேர்மையானவர்கள். நாங்கள் தானியம் வாங்கவே வந்தோம்” என்றனர். பின்னும் யோசேப்பு, “இல்லை! நீங்கள் எங்கள் பலவீனத்தை அறியவே வந்துள்ளீர்கள்” என்றான். அவர்களோ, “இல்லை நாங்கள் அனைவரும் சகோதரர்கள். மொத்தம் பன்னிரெண்டு பேர். எல்லோருக்கும் ஒரே தந்தை. எங்கள் இளைய தம்பி வீட்டில் தந்தையோடு இருக்கிறான். இன்னொரு சகோதரன் பல ஆண்டுகளுக்கு முன் மரித்து போனான். இப்போது உங்கள் முன் வேலைக்காரர்களைப் போன்று இருக்கிறோம். நாங்கள் கானான் நாட்டிலிருந்து வந்துள்ளோம்” என்றார்கள். ஆனால் யோசேப்போ, “இல்லை! நீங்கள் ஒற்றர்களே. ஆனால், நீங்கள் சொல்வது உண்மை என்பதை நிரூபிக்க அனுமதிக்கிறேன். உங்கள் இளைய சகோதரன் வந்தால் நீங்கள் போகலாம், இது பார்வோன்மேல் நான் இடுகிற ஆணை. உங்களில் ஒருவர் மட்டும் ஊருக்குப் போய் இளைய சகோதரனை அழைத்துவர அனுமதிக்கிறேன். மற்றவர்கள் அனைவரும் சிறையில் இருக்கவேண்டும். நீங்கள் சொல்வது உண்மையா என்று பார்ப்பேன். ஆனால் உங்களை நான் ஒற்றர்கள் என்றே நினைக்கிறேன்” என்றான். பின்பு அவர்களை மூன்று நாட்களுக்குச் சிறையில் அடைத்தான். மூன்று நாட்கள் ஆனதும் யோசேப்பு அவர்களிடம், “நான் தேவனுக்குப் பயந்தவன். நான் சொல்கிறபடி செய்தால் உங்களை விடுவேன். நீங்கள் உண்மையில் நேர்மையானவர்கள் என்றால் உங்களில் ஒருவன் சிறையில் இருக்கட்டும். மற்றவர்கள் உணவுப் பொருட்களோடு உங்கள் நாட்டிற்கு செல்லுங்கள். ஆனால் நீங்கள் உங்கள் இளைய சகோதரனை என்னிடம் அழைத்துவர வேண்டும். அதனால் உங்களது வார்த்தைகள் உண்மை என்று அறிவேன். நீங்களும் மரிக்காமல் இருக்கலாம்” என்றான். சகோதரர்கள் இதற்கு ஒப்புக்கொண்டனர்.

ஆதியாகமம் 42:1-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு அறிந்து, தன் குமாரரை நோக்கி: நீங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறது என்ன? எகிப்திலே தானியம் உண்டென்று கேள்விப்படுகிறேன்; நாம் சாகாமல் உயிரோடிருக்கும்படி நீங்கள் அவ்விடத்துக்குப் போய், நமக்காகத் தானியம் கொள்ளுங்கள் என்றான். யோசேப்பின் சகோதரர் பத்துப்பேர் தானியங்கொள்ள எகிப்துக்குப் போனார்கள். யோசேப்பின் தம்பியாகிய பென்யமீனுக்கு ஏதோ மோசம் வரும் என்று சொல்லி, யாக்கோபு அவனை அவன் சகோதரரோடே அனுப்பவில்லை. கானான் தேசத்திலே பஞ்சம் உண்டாயிருந்தபடியால், தானியம் கொள்ளப்போகிறவர்களுடனேகூட இஸ்ரவேலின் குமாரரும் போனார்கள். யோசேப்பு அத்தேசத்துக்கு அதிபதியாயிருந்து, தேசத்தின் ஜனங்கள் யாவருக்கும் விற்றான். யோசேப்பின் சகோதரர் வந்து, முகங்குப்புறத் தரையிலே விழுந்து அவனை வணங்கினார்கள். யோசேப்பு அவர்களைப் பார்த்து, தன் சகோதரர் என்று அறிந்துகொண்டான்; அறிந்தும் அறியாதவன்போலக் கடினமாய் அவர்களோடே பேசி: நீங்கள் எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: கானான் தேசத்திலிருந்து தானியம் கொள்ளவந்தோம் என்றார்கள். யோசேப்பு அவர்களைத் தன் சகோதரர் என்று அறிந்தும், அவர்கள் அவனை அறியவில்லை. யோசேப்பு அவர்களைக்குறித்துத் தான் கண்ட சொப்பனங்களை நினைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் வேவுகாரர், தேசம் எங்கே திறந்துகிடக்கிறது என்று பார்க்க வந்தீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: அப்படியல்ல, ஆண்டவனே, உமது அடியாராகிய நாங்கள் தானியம் கொள்ள வந்தோம். நாங்கள் எல்லாரும் ஒரு தகப்பனுடைய பிள்ளைகள்; நாங்கள் நிஜஸ்தர்; உமது அடியார் வேவுகாரர் அல்ல என்றார்கள். அதற்கு அவன்: அப்படியல்ல, தேசம் எங்கே திறந்துகிடக்கிறது என்று பார்க்கவே வந்தீர்கள் என்றான். அப்பொழுது அவர்கள்: உமது அடியாராகிய நாங்கள் பன்னிரண்டு சகோதரர்; கானான் தேசத்தில் இருக்கிற ஒரு தகப்பன் புத்திரர்; இளையவன் இப்பொழுது எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான்; ஒருவன் காணாமற்போனான் என்றார்கள். யோசேப்பு அவர்களை நோக்கி: உங்களை வேவுகாரர் என்று நான் சொன்னது சரி. உங்கள் இளைய சகோதரன் இங்கே வந்தாலொழிய நீங்கள் இங்கேயிருந்து புறப்படுவது இல்லை என்று பார்வோனின் ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறேன். இதினாலே நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்கள் சகோதரனை அழைத்து வரும்படி உங்களில் ஒருவனை அனுப்புங்கள்; உங்களிடத்தில் உண்மை உண்டோ இல்லையோ என்று உங்கள் வார்த்தைகள் சோதிக்கப்படுமளவும், நீங்கள் காவலில் இருக்கவேண்டும்; இல்லாவிட்டால், நீங்கள் வேவுகாரர்தான் என்று பார்வோனின் ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்கள் எல்லாரையும் மூன்றுநாள் காவலிலே வைத்தான். மூன்றாம் நாளிலே யோசேப்பு அவர்களை நோக்கி: நான் தேவனுக்குப் பயப்படுகிறவன்; நீங்கள் உயிரோடே இருக்கும்படிக்கு ஒன்று செய்யுங்கள். நீங்கள் நிஜஸ்தரானால், சகோதரராகிய உங்களில் ஒருவன் காவற்கூடத்தில் கட்டுண்டிருக்கட்டும்; மற்றவர்கள் புறப்பட்டு, பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள் குடும்பத்துக்குத் தானியம் கொண்டுபோய்க் கொடுத்து, உங்கள் இளைய சகோதரனை என்னிடத்துக்கு அழைத்துக்கொண்டுவாருங்கள்; அப்பொழுது உங்கள் வார்த்தைகள் மெய்யென்று விளங்கும்; நீங்கள் சாவதில்லை என்றான். அவர்கள் அப்படிச்செய்கிறதற்கு இசைந்து