ஆதியாகமம் 41:9-41

ஆதியாகமம் 41:9-41 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது பானம் பரிமாறுவோரின் பொறுப்பாளன் பார்வோனிடம், “நான் செய்த தவறொன்று இன்றுதான் எனக்கு நினைவு வருகிறது. பார்வோன் ஒருமுறை தமது பணியாட்களில் கோபங்கொண்டு, என்னையும் அப்பம் சுடுவோரின் பொறுப்பாளனையும் காவல் அதிகாரியின் வீடாகிய சிறையில் வைத்தார். நாங்கள் இருவரும் ஒரே இரவில் கனவு கண்டோம், அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு விளக்கமுடையதாய் இருந்தன. அங்கே காவலர் அதிகாரிக்குப் பணியாளனாயிருந்த, எபிரெய இளைஞன் ஒருவனும் எங்களோடிருந்தான். நாங்கள் அவனிடம் எங்கள் கனவுகளைச் சொன்னோம், அவன் எங்கள் ஒவ்வொருவருடைய கனவின் அர்த்தத்தைச் சொல்லி, அவற்றை எங்களுக்கு விளக்கிக் கூறினான். அவன் எங்களுக்குச் சொன்னவாறே எல்லாம் நிறைவேறின: நான் மறுபடியும் எனது பதவியில் நியமிக்கப்பட்டேன், மற்றவனோ தூக்கிலிடப்பட்டான்” என்றான். எனவே பார்வோன் யோசேப்பை அழைத்துவரச் செய்தான், அவன் காவல் கிடங்கிலிருந்து உடனே கொண்டுவரப்பட்டான். அவன் சவரம்செய்து, உடைமாற்றி பார்வோன் முன்வந்து நின்றான். பார்வோன் யோசேப்பிடம், “நான் ஒரு கனவு கண்டேன், அதற்குரிய விளக்கத்தை யாராலும் சொல்ல முடியவில்லை. யாராவது உனக்கு ஒரு கனவைச் சொன்னால், நீ அதற்கு விளக்கம் கூறுவாய் என நான் கேள்விப்பட்டேன்” என்றான். அதற்கு யோசேப்பு பார்வோனிடம், “என்னால் அதைச் செய்யமுடியாது, ஆனால் பார்வோன் விரும்பும் பதிலை இறைவன் அவருக்குத் தருவார்” என்றான். பார்வோன் யோசேப்பிடம், “என் கனவில் நான் நைல் நதிக்கரையில் நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது கொழுத்ததும் செழிப்புமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து வெளியேறி, நாணல்களுக்கு இடையே மேய்ந்து கொண்டிருந்தன. அவற்றின்பின் எலும்பும் தோலுமான, மெலிந்த அவலட்சணமான வேறு ஏழு பசுக்கள் நதியிலிருந்து வெளியேறின. இதைப்போன்ற அவலட்சணமான பசுக்களை எகிப்து நாடெங்கும் நான் ஒருபோதும் கண்டதில்லை. அந்த மெலிந்த அவலட்சணமுள்ள ஏழு பசுக்களும், முதலில் வெளியேறிய ஏழு கொழுத்த பசுக்களையும் தின்றுவிட்டன. அவற்றைத் தின்ற பின்பும், அவை அவற்றைத் தின்றன என யாராலும் சொல்ல முடியாதிருந்தது; அவை முன்புபோலவே அவலட்சணமாய் இருந்தன. அதன்பின் நான் விழித்துக்கொண்டேன். “மேலும், நான் இன்னும் ஒரு கனவைக் கண்டேன். அதில், நன்கு விளைந்து முற்றிய ஏழு நெற்கதிர்கள், ஒரே தாளில் ஓங்கி வளர்ந்ததைக் கண்டேன். அதன்பின் வாடிய, மெலிந்த, கீழ்க்காற்றினால் கருகிப்போன வேறு ஏழு கதிர்கள் முளைத்து வந்தன. இந்த மெலிந்த ஏழு நெற்கதிர்களும், மற்ற ஏழு விளைந்த கதிர்களையும் விழுங்கிவிட்டன. நான் இந்தக் கனவுகளை மந்திரவாதிகளிடம் சொன்னேன். ஆனால் அவற்றின் விளக்கத்தை ஒருவனாலும் சொல்ல முடியவில்லை” என்றான். அப்பொழுது யோசேப்பு, “பார்வோனின் இரு கனவுகளுமே ஒன்றுதான். இறைவன் செய்யப்போவதைப் பார்வோனுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். நல்ல ஏழு பசுக்களும் ஏழு வருடங்கள், நல்ல ஏழு கதிர்களும் ஏழு வருடங்கள்; இவை இரண்டும் ஒரே கனவுதான். அவற்றின்பின் வந்த மெலிந்த அவலட்சணமுள்ள ஏழு பசுக்களும், அப்படியே கீழ்க்காற்றினால் கருகிப்போன பயனற்ற ஏழு கதிர்களும் பஞ்சமுள்ள ஏழு வருடங்கள். “பார்வோனுக்கு நான் சொன்னதுபோல், இறைவன் தாம் செய்யப்போவதைப் பார்வோனுக்குக் காண்பித்திருக்கிறார். எகிப்து நாடெங்கும் நிறைவான விளைச்சலுள்ள ஏழு வருடங்கள் வரப்போகின்றன. ஆனால் அதைத் தொடர்ந்து பஞ்சம் நிறைந்த ஏழு வருடங்கள் வரும். அப்பொழுது எகிப்தின் நிறைவான விளைச்சல் மறக்கப்படும், பஞ்சம் எகிப்து நாடு முழுவதையும் பாழாக்கும். நாட்டின் நிறைவான விளைச்சலுக்குப் பின் வரப்போகும் பஞ்சம் மிகவும் கொடியதாகையால், அந்த நிறைவான காலம் நினைக்கப்படமாட்டாது. இது இறைவனால் உறுதியாகத் தீர்மானிக்கப்பட்டபடியாலும், இதை இறைவன் விரைவில் நிறைவேற்றுவார் என்பதாலுமே, இறைவன் இவற்றைப் பார்வோனுக்கு இரண்டு விதத்தில் கனவுகளால் வெளிப்படுத்தியுள்ளார். “ஆதலால் பார்வோன் விவேகமும், ஞானமுமுள்ள ஒரு மனிதனைத் தேடி, எகிப்து நாட்டுக்கு அவனைப் பொறுப்பாக நியமிப்பாராக. பார்வோன் ஏழு வருட நிறைவான விளைச்சல் காலங்களில் எகிப்தின் அறுவடையில் ஐந்தில் ஒரு பங்கைச் சேகரித்து வைப்பதற்காக, நிலத்தின் மேற்பார்வையாளர்களையும் நியமிப்பாராக. அவர்கள் வரப்போகிற வளமான வருடங்களில் விளையும் தானியங்கள் எல்லாவற்றையும் சேகரித்து, பார்வோனின் அதிகாரத்தின்கீழ் அந்த தானியங்களை பட்டணங்களில் உணவுக்காக அதைப் பாதுகாக்க வேண்டும். எகிப்து பஞ்சத்தினால் அழிந்துபோகாதபடி, அதன்மேல் வரப்போகும் ஏழு வருட பஞ்சகாலத்தில் பயன்படுத்துவதற்காக, அந்த தானியம் ஒதுக்கி வைக்கப்பட வேண்டும்” என்றான். அந்த திட்டம் பார்வோனுக்கும் அவனுடைய அலுவலர்களுக்கும் நலமாய்க் காணப்பட்டது. பார்வோன் தம்முடைய அலுவலர்களிடம், “இறைவனின் ஆவியையுடைய இந்த மனிதனைப்போல் ஒருவனை நாம் காணக்கூடுமோ?” என்று கேட்டான். பின்பு பார்வோன் யோசேப்பிடம், “இவை எல்லாவற்றையும் இறைவன் உனக்கு தெரிவித்திருப்பதால், உன்னைப்போல் விவேகமும் ஞானமும் உள்ளவன் வேறொருவனும் இல்லை. எனவே, நான் உன்னை என் அரண்மனைக்கு அதிகாரி ஆக்குகிறேன்; என் மக்கள் யாவரும் உன் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பார்கள். என் அரியணையில் மட்டுமே நான் உன்னிலும் பெரியவனாயிருப்பேன்” என்றான். மேலும் பார்வோன் யோசேப்பிடம், “உன்னை எகிப்து நாடு முழுவதற்கும் பொறுப்பதிகாரியாக நியமிக்கிறேன்” என்றான்.

ஆதியாகமம் 41:9-41 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது பானபாத்திரக்காரர்களின் தலைவன் பார்வோனை நோக்கி: “நான் செய்த குற்றம் இன்றுதான் என் ஞாபகத்தில் வந்தது. பார்வோன் தம்முடைய வேலைக்காரர்கள்மேல் கடுங்கோபங்கொண்டு, என்னையும் அப்பம் சுடுகிறவர்களின் தலைவனையும் காவலாளிகளின் அதிபதியின் வீடாகிய சிறைச்சாலையிலே வைத்திருந்த காலத்தில், நானும் அவனும் ஒரே இரவிலே வெவ்வேறு அர்த்தம்கொண்ட கனவு கண்டோம். அப்பொழுது காவலாளிகளின் அதிபதிக்கு வேலைக்காரனாகிய எபிரெய வாலிபன் ஒருவன் அங்கே எங்களோடு இருந்தான்; அவனிடத்தில் அவைகளைச் சொன்னோம், அவன் நாங்கள் கண்ட கனவுகளுக்குரிய வெவ்வேறு அர்த்தத்தின்படியே எங்கள் கனவுகளின் அர்த்தத்தைச் சொன்னான். அவன் எங்களுக்குச் சொல்லிய அர்த்தத்தின்படியே நடந்தது; என்னைத் திரும்ப என் நிலையிலே நிறுத்தி, அவனைத் தூக்கில் போட்டுவிட்டார்” என்றான். அப்பொழுது பார்வோன் யோசேப்பை அழைப்பித்தான்; அவனை அவசரமாகச் சிறைச்சாலையிலிருந்து அழைத்துவந்தார்கள். அவன் சவரம் செய்துகொண்டு, வேறு உடை அணிந்து, பார்வோனிடத்தில் வந்தான். பார்வோன் யோசேப்பை நோக்கி: “ஒரு கனவு கண்டேன்; அதின் அர்த்தத்தைச் சொல்ல ஒருவரும் இல்லை; நீ ஒரு கனவைக் கேட்டால், அதின் அர்த்தத்தைச் சொல்லுவாய் என்று உன்னைக்குறித்து நான் கேள்விப்பட்டேன்” என்றான். அப்பொழுது யோசேப்பு பார்வோனுக்கு மறுமொழியாக: “நான் அல்ல, தேவனே பார்வோனுக்கு மங்களமான உத்திரவு அருளிச்செய்வார்” என்றான். பார்வோன் யோசேப்பை நோக்கி: “என் கனவிலே, நான் நதியின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்தேன். அழகும் கொழுத்ததுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து புல் மேய்ந்தன. அவைகளுக்குப்பின்பு இளைத்ததும் மகா அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் ஏறிவந்தன; இவைகளைப்போல அவலட்சணமான பசுக்களை எகிப்து தேசமெங்கும் நான் கண்டதில்லை. கேவலமும் அவலட்சணமுமான பசுக்கள், கொழுத்திருந்த முந்தின ஏழு பசுக்களையும் விழுங்கிப்போட்டன. அவைகள் இவைகளின் வயிற்றுக்குள் போனபோதிலும், வயிற்றுக்குள் போயிற்றென்று தோன்றாமல், முன்பு இருந்தது போலவே அவலட்சணமாக இருந்தன; இப்படிக் கண்டு விழித்துக்கொண்டேன். பின்னும் நான் என் கனவிலே, நிறை மேனியுள்ள ஏழு நல்ல கதிர்கள் ஒரே செடியிலிருந்து ஓங்கி வளரக்கண்டேன். பின்பு மெலிந்தவைகளும் கீழ்காற்றினால் உலர்ந்து பதரானவைகளுமான ஏழு கதிர்கள் முளைத்தன. மெலிந்த கதிர்கள் அந்த ஏழு நல்ல கதிர்களையும் விழுங்கிப்போட்டன”. இதை மந்திரவாதிகளிடத்தில் சொன்னேன்; இதின் அர்த்தத்தை எனக்கு சொல்லுகிறவன் ஒருவனும் இல்லை என்றான். அப்பொழுது யோசேப்பு பார்வோனை நோக்கி: “பார்வோனின் கனவு ஒன்று தான்; தேவன் தாம் செய்யப்போகிறது இன்னதென்று பார்வோனுக்கு தெரிவித்திருக்கிறார். அந்த ஏழு நல்ல பசுக்களும் ஏழு வருடங்களாம்; அந்த ஏழு நல்ல கதிர்களும் ஏழு வருடங்களாம்; கனவு ஒன்றே. அவைகளுக்குப்பின்பு ஏறிவந்த கேவலமும் அவலட்சணமுமான ஏழு பசுக்களும் ஏழு வருடங்களாம்; கீழ்காற்றினால் தீய்ந்து உலர்ந்ததுமான ஏழு கதிர்களும் ஏழு வருடங்களாம்; இவைகள் பஞ்சமுள்ள ஏழு வருடங்களாம். பார்வோனுக்கு நான் சொல்லவேண்டிய காரியம் இதுவே; தேவன் தாம் செய்யப்போகிறதைப் பார்வோனுக்குக் காண்பித்திருக்கிறார். எகிப்து தேசமெங்கும் பரிபூரணமான விளைச்சல் உண்டாயிருக்கும் ஏழு வருடங்கள் வரும். அதன்பின்பு பஞ்சமுண்டாயிருக்கும் ஏழு வருடங்கள் வரும்; அப்பொழுது எகிப்துதேசத்தில் அந்தப் பரிபூரணமெல்லாம் மறக்கப்பட்டுப்போகும்; அந்தப் பஞ்சம் தேசத்தைப் பாழாக்கும். வரப்போகிற மகா கொடுமையான பஞ்சத்தால் தேசத்தில் முன்னிருந்த பரிபூரணமெல்லாம் ஒழிந்துபோகும். இந்தக் காரியம் தேவனால் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்பதையும், தேவன் இதைச் சீக்கிரத்தில் செய்வார் என்பதையும் குறிப்பதற்காக, இந்தக் கனவு பார்வோனுக்கு மீண்டும் வந்தது. ஆகையால், விவேகமும் ஞானமுமுள்ள ஒரு மனிதனைத் தேடி, அவனை எகிப்துதேசத்திற்கு அதிகாரியாகப் பார்வோன் ஏற்படுத்துவாராக. இப்படிப் பார்வோன் செய்து, தேசத்தின்மேல் விசாரணைக்காரரை வைத்து, பரிபூரணமுள்ள ஏழு வருடங்களில் எகிப்துதேசத்திலே விளையும் விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கை வாங்கும்படிச் செய்வாராக. அவர்கள் வரப்போகிற நல்ல வருடங்களில் விளையும் தானியங்களையெல்லாம் சேர்த்து, பட்டணங்களில் ஆகாரம் உண்டாயிருப்பதற்கு, பார்வோனுடைய அதிகாரத்திற்குள்ளாகத் தானியங்களைப் பத்திரப்படுத்தி சேமித்துவைப்பார்களாக. தேசம் பஞ்சத்தினால் அழிந்துபோகாமலிருக்க, அந்தத் தானியம் இனி எகிப்துதேசத்தில் உண்டாகும் பஞ்சமுள்ள ஏழு வருடங்களுக்காக தேசத்திற்கு ஒரு வைப்பாயிருப்பதாக” என்றான். இந்த வார்த்தை பார்வோனுடைய பார்வைக்கும் அவனுடைய வேலைக்காரர்கள் எல்லோருடைய பார்வைக்கும் நன்றாகத் தோன்றியது. அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி: “தேவ ஆவியைப் பெற்ற இந்த மனிதனைப்போல வேறொருவன் உண்டோ” என்றான். பின்பு, பார்வோன் யோசேப்பை நோக்கி: “தேவன் இவையெல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறதினால், உன்னைப்போல விவேகமும் ஞானமுமுள்ளவன் வேறொருவனும் இல்லை. நீ என் அரண்மனைக்கு அதிகாரியாயிருப்பாய்; உன் வார்த்தைக்கு என் மக்கள் எல்லோரும் அடங்கி நடக்கக்கடவர்கள்; சிங்காசனத்தில் மாத்திரம் உன்னிலும் நான் பெரியவனாக இருப்பேன்” என்றான். பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: “பார், முழு எகிப்துதேசத்திற்கும் உன்னை அதிகாரியாக்கினேன்” என்று சொல்லி

ஆதியாகமம் 41:9-41 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு திராட்சைரசம் கொடுப்பவனுக்கு யோசேப்பைப்பற்றிய நினைவு வந்தது. அவன் பார்வோனிடம், “எனக்கு ஏற்பட்டது இன்று நினைவுக்கு வருகிறது. உங்களுக்குக் கோபம் வந்து என்னையும், ரொட்டி சுடுபவனையும் சிறையில் அடைத்திருந்தீர்களே, அப்போது ஓரிரவில் நாங்கள் கனவு கண்டோம். இரண்டும் வெவ்வேறு கனவுகள். அங்கு எபிரேய இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் சிறையதிகாரியின் உதவியாள். நாங்கள் அவனிடம் கனவைச் சொன்னோம். அவன் அதைப்பற்றி விளக்கம் சொன்னான். அவன் சொன்னதெல்லாம் உண்மையாயிற்று. நான் மூன்று நாளில் விடுதலையாகிப் பழைய வேலையைப் பெறுவேன் என்றான். அது அவ்வாறாயிற்று. ரொட்டி சுடுபவன் தூக்கிலிடப்படுவான் என்றான். அது போலவே நடந்தது” என்றான். எனவே, பார்வோன் சிறையில் இருந்து யோசேப்பை அழைத்தான். அதிகாரி உடனே யோசேப்பை வெளியே கொண்டு வந்தான். அவன் சவரம் செய்து நல்ல ஆடைகள் அணிந்துகொண்டு, பார்வோனைப் பார்க்கப்போனான். பார்வோன் யோசேப்பிடம், “நான் கனவு கண்டேன். எவராலும் அதற்கு பொருள் சொல்லமுடியவில்லை. உன்னிடம் அவற்றைப்பற்றி சொன்னால் நீ அதற்கு விளக்கம் சொல்ல முடியும் என்று அறிந்தேன்” என்றான். யோசேப்பு, “என்னால் முடியாது. ஆனால் தேவன் உமக்காக விளக்கம் தருவார்” என்றான். பிறகு பார்வோன், “கனவில் நான் நைல் ஆற்றின் கரையில் நின்றுகொண்டிருந்தேன். அப்போது ஏழு பசுக்கள் ஆற்றிலிருந்து வெளியே வந்து புல் மேய்ந்துகொண்டிருந்தது. அவை செழுமையாகவும், பார்க்க அழகாகவும் இருந்தன. பிறகு மேலும் ஏழு பசுக்கள் ஆற்றிலிருந்து வெளியே வந்தன. அவை மெலிந்து, நோய் கொண்டவையாக இருந்தன. அவற்றைப் போன்று மோசமான பசுக்களை நான் எகிப்திலே எங்கும் பார்த்ததில்லை. அவை செழுமையான பசுக்களை உண்டுவிட்டன. அவை அதற்குப் பிறகும் ஒல்லியாகவும், நோயுற்றும் தோன்றின. அவை பசுக்களைத் தின்றுவிடும் என்று சொல்ல முடியாத வகையிலேயே இருந்தன. அதற்குள் நான் எழுந்துவிட்டேன். “அடுத்த கனவில் ஒரு செடியில் ஏழு கதிர்களைக் கண்டேன். அவை செழுமையாக இருந்தன. பிறகு செடியில் மேலும் ஏழு கதிர்கள் வளர்ந்தன. காற்றில் உதிரக் கூடிய நிலையில் மெலிந்து இருந்தன. பிறகு இவை செழுமையான கதிர்களை விழுங்கிவிட்டன. “நான் இந்தக் கனவை மந்திரவாதிகளிடமும் ஞானிகளிடமும் கூறினேன். ஆனால் யாராலும் இவற்றிற்கு பதில் சொல்ல முடியவில்லை, இவற்றின் பொருள் என்ன?” என்று கேட்டான். பிறகு யோசேப்பு பார்வோனிடம், “இரண்டு கனவுகளுக்கும் ஒரே பொருள் தான். விரைவில் என்ன நடக்கும் என்பதை தேவன் கூறிவிட்டார். ஏழு செழுமையான பசுக்கள், ஏழு செழுமையான கதிர்கள் என்பது ஏழு வளமான ஆண்டுகளைக் குறிக்கும். ஏழு மெலிந்த பசுக்கள் ஏழு மெலிந்த கதிர்கள் என்பது பஞ்சமான ஏழு ஆண்டுகளைக் குறிக்கும். வளமான ஏழு ஆண்டுகளுக்குப் பிறகே பஞ்சமான ஏழு ஆண்டுகள் வரும். விரைவில் என்ன நடக்கும் என்பதை தேவன் உமக்கு காண்பித்திருக்கிறார். இவ்வாறே தேவன் நடத்துவார். இன்னும் ஏழு ஆண்டுகளுக்கு எகிப்தில் ஏராளமான உணவுப் பொருட்கள் விளையும். பிறகு ஏழு ஆண்டுகள் பஞ்சமும் பசியும் இருக்கும். எகிப்து ஜனங்கள் முன்பு கடந்த காலத்தில் தாங்கள் வைத்திருந்த உணவின் மிகுதியை மறந்துவிடுவார்கள். இப்பஞ்சம் நாட்டை அழித்துவிடும். ஏனென்றால் தொடர்ந்து வரும் பஞ்சம் அவ்வளவு கடுமையாக இருக்கும். “நீர் ஏன் ஒரே பொருள்பற்றிய இரு கனவுகளைக் கண்டிருக்கிறீர் தெரியுமா? இது நிச்சயம் நடக்கும் என்பதை தேவன் உமக்குக் காட்ட விரும்புகிறார். அதோடு தேவன் இதனை விரைவில் நிகழவைப்பார். எனவே, நீர் புத்திசாலியான ஒருவனிடம் எகிப்தின் பொறுப்புகளை விடவேண்டும். பிறகு மேலும் சிறந்த ஆட்களை தேர்ந்தெடுத்து உணவுப் பொருட்களை எல்லாம் சேகரிக்க வேண்டும். இனியுள்ள ஏழு வருடங்களும் ஜனங்கள் தங்கள் விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கை ராஜாவுக்குரியதென இவர்களிடம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த ஆட்கள் உணவுப் பொருட்களைச் சேகரித்து, தேவைப்படும் அளவுக்கு நன்றாகச் சேமித்து வைக்கவேண்டும். இந்த உணவு உமது கட்டுப்பாட்டிற்குள் இருக்கவேண்டும். பிறகு ஏழு பஞ்ச ஆண்டுகளில் தேவையான உணவுப் பொருள் எகிப்து நாட்டில் இருக்கும். அதனால் எகிப்து பஞ்சத்தில் அழியாமல் இருக்கும்” என்றான். இந்த விளக்கம் பார்வோனுக்கும் அவனது அதிகாரிகளுக்கும் பொருத்தமானதாக இருந்தது. அதோடு பார்வோன் அவர்களிடம், “யோசேப்பைவிடப் பொருத்தமானவன் வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. தேவ ஆவியானவர் அவன் மேல் இருக்கிறார். அவனை மிக ஞானமுள்ளவனாக ஆக்கியிருக்கிறார்!” என்றான். எனவே, பார்வோன் யோசேப்பிடம், “தேவன் இவற்றை உனக்குத் தெரியச் செய்தார். உன்னைப்போல் அறிவுக் கூர்மையும், ஞானமும் உள்ளவர்கள் வேறு யாருமில்லை. உன்னை என் நாட்டிற்கு அதிகாரியாய் ஆக்குகிறேன். உன் கட்டளைகளுக்கு என் ஜனங்கள் அடங்கி நடப்பார்கள். நான் மட்டுமே உன்னைவிட மிகுந்த அதிகாரம் பெற்றவனாக இருப்பேன்” என்று கூறினான். யோசேப்பை ஆளுநர் ஆக்குவதற்குரிய விசேஷச் சடங்கும், ஊர்வலமும் சிறப்பான முறையில் நடந்தன. “உன்னை எகிப்து முழுமைக்கும் ஆளுநர் ஆக்குகிறேன்” என்றான்.

ஆதியாகமம் 41:9-41 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது பானபாத்திரக்காரரின் தலைவன் பார்வோனை நோக்கி: நான் செய்த குற்றம் இன்றுதான் என் நினைவில் வந்தது. பார்வோன் தம்முடைய ஊழியக்காரர்மேல் கடுங்கோபங்கொண்டு, என்னையும் சுயம்பாகிகளின் தலைவனையும் தலையாரிகளின் அதிபதி வீடாகிய சிறைச்சாலையிலே வைத்திருந்த காலத்தில், நானும் அவனும் ஒரே இராத்திரியிலே வெவ்வேறு பொருள்கொண்ட சொப்பனம் கண்டோம். அப்பொழுது தலையாரிகளின் அதிபதிக்கு வேலைக்காரனாகிய எபிரெய பிள்ளையாண்டான் ஒருவன் அங்கே எங்களோடே இருந்தான்; அவனிடத்தில் அவைகளைச் சொன்னோம், அவன் நாங்கள் கண்ட சொப்பனங்களுக்குரிய வெவ்வேறு அர்த்தத்தின்படியே எங்கள் சொப்பனத்தின் பயனைச் சொன்னான். அவன் எங்களுக்குச் சொல்லிய அர்த்தத்தின்படியே நடந்தது; என்னைத் திரும்ப என் நிலையிலே நிறுத்தி, அவனைத் தூக்கிப்போடுவித்தார் என்றான். அப்பொழுது பார்வோன் யோசேப்பை அழைப்பித்தான்; அவனைத் தீவிரமாய்க் காவல்கிடங்கிலிருந்து கொண்டுவந்தார்கள். அவன் சவரம் பண்ணிக்கொண்டு, வேறு வஸ்திரம் தரித்து, பார்வோனிடத்தில் வந்தான். பார்வோன் யோசேப்பை நோக்கி: ஒரு சொப்பனம் கண்டேன்; அதின் அர்த்தத்தைச் சொல்ல ஒருவரும் இல்லை; நீ ஒரு சொப்பனத்தைக் கேட்டால், அதின் அர்த்தத்தைச் சொல்லுவாய் என்று உன்னைக்குறித்து நான் கேள்விப்பட்டேன் என்றான். அப்பொழுது யோசேப்பு பார்வோனுக்குப் பிரதியுத்தரமாக: நான் அல்ல, தேவனே பார்வோனுக்கு மங்களமான உத்தரவு அருளிச்செய்வார் என்றான், பார்வோன் யோசேப்பை நோக்கி: என் சொப்பனத்திலே, நான் நதி ஓரத்தில் நின்றுகொண்டிருந்தேன். அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து புல்மேய்ந்தது. அவைகளின்பின் இளைத்ததும் மகா அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் ஏறிவந்தது; இவைகளைப்போல அவலட்சணமான பசுக்களை எகிப்து தேசமெங்கும் நான் கண்டதில்லை. கேவலமும் அவலட்சணமுமான பசுக்கள் கொழுமையான முந்தின ஏழு பசுக்களையும் பட்சித்துப்போட்டது. அவைகள் இவைகளின் வயிற்றுக்குள் போயும், வயிற்றுக்குள் போயிற்றென்று தோன்றாமல், முன் இருந்தது போலவே அவலட்சணமாயிருந்தது; இப்படிக் கண்டு விழித்துக்கொண்டேன். பின்னும் நான் என் சொப்பனத்திலே, நிறைமேனியுள்ள ஏழு நல்ல கதிர்கள் ஒரே தாளிலிருந்து ஓங்கி வளரக்கண்டேன். பின்பு சாவியானவைகளும் கீழ்காற்றினால் தீய்ந்து பதரானவைகளுமான ஏழு கதிர்கள் முளைத்தது. சாவியான கதிர்கள் அந்த ஏழு நல்ல கதிர்களையும் விழுங்கிப்போட்டது. இதை மந்திரவாதிகளிடத்தில் சொன்னேன்; இதின் பொருளை எனக்கு விடுவிக்கிறவன் ஒருவனும் இல்லை என்றான். அப்பொழுது யோசேப்பு பார்வோனை நோக்கி: பார்வோனின் சொப்பனம் ஒன்றுதான்; தேவன் தாம் செய்யப்போகிறது இன்னதென்று பார்வோனுக்கு அறிவித்திருக்கிறார். அந்த ஏழு நல்ல பசுக்களும் ஏழு வருஷமாம்; அந்த ஏழு நல்ல கதிர்களும் ஏழு வருஷமாம்; சொப்பனம் ஒன்றே. அவைகளின்பின் ஏறிவந்த கேவலமும் அவலட்சணமுமான ஏழு பசுக்களும் ஏழு வருஷமாம்; கீழ்காற்றினால் தீய்ந்து சாவியான ஏழு கதிர்களும் ஏழு வருஷமாம்; இவைகள் பஞ்சமுள்ள ஏழு வருஷமாம். பார்வோனுக்கு நான் சொல்லவேண்டிய காரியம் இதுவே; தேவன் தாம் செய்யப்போகிறதைப் பார்வோனுக்குக் காண்பித்திருக்கிறார். எகிப்து தேசமெங்கும் பரிபூரணமான விளைவு உண்டாயிருக்கும் ஏழு வருஷம் வரும். அதன்பின் பஞ்சமுண்டாயிருக்கும் ஏழு வருஷம் வரும்; அப்பொழுது எகிப்துதேசத்தில் அந்தப் பரிபூரணமெல்லாம் மறக்கப்பட்டுப்போகும்; அந்தப் பஞ்சம் தேசத்தைப் பாழாக்கும். வரப்போகிற மகா கொடுமையான பஞ்சத்தால் தேசத்தில் முன்னிருந்த பரிபூரணமெல்லாம் ஒழிந்துபோம். இந்தக் காரியம் தேவனால் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்பதையும், தேவன் இதைச் சீக்கிரத்தில் செய்வார் என்பதையும் குறிக்கும்பொருட்டு, இந்தச் சொப்பனம் பார்வோனுக்கு இரட்டித்தது. ஆகையால், விவேகமும் ஞானமுமுள்ள ஒரு மனுஷனைத் தேடி, அவனை எகிப்து தேசத்துக்கு அதிகாரியாகப் பார்வோன் ஏற்படுத்துவாராக. இப்படிப் பார்வோன் செய்து, தேசத்தின்மேல் விசாரணைக்காரரை வைத்து, பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களில் எகிப்துதேசத்திலே விளையும் விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கை வாங்கும்படி செய்வாராக, அவர்கள் வரப்போகிற நல்ல வருஷங்களில் விளையும் தானியங்களையெல்லாம் சேர்த்து, பட்டணங்களில் ஆகாரம் உண்டாயிருக்கும்படிக்கு, பார்வோனுடைய அதிகாரத்துக்குள்ளாகத் தானியங்களைப் பத்திரப்படுத்தி வைத்துவைப்பார்களாக. தேசம் பஞ்சத்தினால் அழிந்துபோகாதபடிக்கு, அந்தத் தானியம் இனி எகிப்துதேசத்தில் உண்டாகும் பஞ்சமுள்ள ஏழு வருஷங்களுக்காக தேசத்திற்கு ஒரு வைப்பாயிருப்பதாக என்றான். இந்த வார்த்தை பார்வோனுடைய பார்வைக்கும் அவன் ஊழியக்காரர் எல்லாருடைய பார்வைக்கும் நன்றாய்க் கண்டது. அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி: தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப்போல வேறொருவன் உண்டோ என்றான். பின்பு, பார்வோன் யோசேப்பை நோக்கி: தேவன் இவையெல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால், உன்னைப்போல விவேகமும் ஞானமுமுள்ளவன் வேறொருவனும் இல்லை. நீ என் அரமனைக்கு அதிகாரியாயிருப்பாய்; உன் வாக்கின்படியே என் ஜனங்கள் எல்லாரும் அடங்கி நடக்கக்கடவர்கள்; சிங்காசனத்தில் மாத்திரம் உன்னிலும் நான் பெரியவனாய் இருப்பேன் என்றான். பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: பார், எகிப்துதேசம் முழுமைக்கும் உன்னை அதிகாரியாக்கினேன் என்று சொல்லி