ஆதியாகமம் 41:37-57

ஆதியாகமம் 41:37-57 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அந்த திட்டம் பார்வோனுக்கும் அவனுடைய அலுவலர்களுக்கும் நலமாய்க் காணப்பட்டது. பார்வோன் தம்முடைய அலுவலர்களிடம், “இறைவனின் ஆவியையுடைய இந்த மனிதனைப்போல் ஒருவனை நாம் காணக்கூடுமோ?” என்று கேட்டான். பின்பு பார்வோன் யோசேப்பிடம், “இவை எல்லாவற்றையும் இறைவன் உனக்கு தெரிவித்திருப்பதால், உன்னைப்போல் விவேகமும் ஞானமும் உள்ளவன் வேறொருவனும் இல்லை. எனவே, நான் உன்னை என் அரண்மனைக்கு அதிகாரி ஆக்குகிறேன்; என் மக்கள் யாவரும் உன் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பார்கள். என் அரியணையில் மட்டுமே நான் உன்னிலும் பெரியவனாயிருப்பேன்” என்றான். மேலும் பார்வோன் யோசேப்பிடம், “உன்னை எகிப்து நாடு முழுவதற்கும் பொறுப்பதிகாரியாக நியமிக்கிறேன்” என்றான். பின்பு பார்வோன் தன் விரலில் அணிந்திருந்த தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, யோசேப்பின் விரலில் போட்டான். அவன் சிறந்த மென்பட்டு அங்கியை அவனுக்கு உடுத்தி, கழுத்தில் ஒரு தங்கச்சங்கிலியையும் அணிவித்தான். அதிகாரத்தில் தனக்கு அடுத்தவனாக அவனை தேரில் ஏற்றி பவனி வரச்செய்தான். அவனுக்கு முன்சென்ற மனிதர், “மண்டியிட்டுப் பணியுங்கள்!” என்று சத்தமிட்டார்கள். இவ்வாறு பார்வோன் அவனை எகிப்து நாடு முழுவதற்கும் அதிகாரியாக நியமித்தான். மேலும் பார்வோன் யோசேப்பிடம், “நான் பார்வோன்; ஆனாலும் எகிப்திலுள்ள யாரும் உனது உத்தரவின்றி கையையோ, காலையோ உயர்த்தக் கூடாது” என்றான். பார்வோன் யோசேப்பின் பெயரை சாப்நாத்பன்னேயா என மாற்றி, போத்திபிரா என்னும் ஓன் பட்டண ஆசாரியனின் மகள் ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். பின்பு யோசேப்பு எகிப்து நாடு முழுவதையும் சுற்றிப்பார்க்கச் சென்றான். யோசேப்பு எகிப்தின் அரசனாகிய பார்வோனுக்கு பணிபுரியத் தொடங்கியபோது, அவன் முப்பது வயதுடையவனாய் இருந்தான். யோசேப்பு பார்வோன் முன்னிலையில் இருந்து புறப்பட்டுப்போய், எகிப்து முழுவதையும் சுற்றிப் பயணம் செய்தான். அப்படியே செழிப்பான ஏழு வருடங்களில் நாடு மிகுதியான விளைச்சலைக் கொடுத்தது. செழிப்பான அந்த ஏழு வருடங்களில் எகிப்தில் விளைந்த தானியங்களை, யோசேப்பு பட்டணங்களில் சேகரித்து வைத்தான். ஒவ்வொரு பட்டணத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலுள்ள வயல்களில் விளைந்த தானியங்களைச் சேர்த்துவைத்தான். யோசேப்பு தானியத்தைக் கடலின் மணலைப்போல் பெருமளவாகச் சேர்த்துவைத்தான். அது கணக்கிட முடியாதபடி மிக அதிகமாக இருந்தபடியால், பின்பு அவன் பதிவுசெய்வதை நிறுத்திவிட்டான். பஞ்சமுள்ள வருடங்கள் தொடங்குவதற்கு முன்பே யோசேப்புக்கும் ஓன் பட்டணத்தின் ஆசாரியனாகிய போத்திபிராவின் மகள் ஆஸ்நாத்துக்கும் இரண்டு மகன்கள் பிறந்தார்கள். அப்பொழுது யோசேப்பு, “இறைவன் என் தொல்லைகளையும், என் தகப்பன் வீட்டையும் மறக்கச்செய்தார்” என்று சொல்லி, தன் மூத்த மகனுக்கு மனாசே எனப் பெயரிட்டான். “நான் துன்பப்பட்ட நாட்டிலே இறைவன் என்னைச் செழிக்கப்பண்ணினார் என்று சொல்லி, தன் இரண்டாவது மகனுக்கு எப்பிராயீம் எனப் பெயரிட்டான்.” எகிப்தின் செழிப்பான வளம் நிறைந்த ஏழு வருடங்களும் முடிவுற்றன. அதன்பின் யோசேப்பு சொல்லியிருந்தது போலவே, பஞ்சம் நிறைந்த ஏழு வருடங்கள் ஆரம்பமாகின. மற்ற எல்லா நாடுகளிலும் பஞ்சம் உண்டானது, ஆனால் எகிப்து முழுவதிலும் உணவு இருந்தது. எகிப்தியர் எல்லோரும் பஞ்சத்தை அனுபவிக்கத் தொடங்கியபோது, பார்வோனிடம் உணவு கேட்டு அழுதார்கள். பார்வோன் எல்லா எகிப்தியரிடமும், “நீங்கள் யோசேப்பிடம் போய், அவன் சொல்லுகிறபடி செய்யுங்கள்” என்றான். எகிப்து முழுவதிலும் பஞ்சம் பரவியபோது, யோசேப்பு எல்லா களஞ்சியங்களையும் திறந்து, தானியத்தை எகிப்தியருக்கு விற்றான். ஏனெனில், பஞ்சம் எகிப்து முழுவதும் கொடியதாயிருந்தது. உலகெங்கும் பஞ்சம் கொடியதாய் இருந்தபடியால், எல்லா நாட்டினரும் யோசேப்பிடம் தானியம் வாங்குவதற்காக எகிப்திற்கு வந்தார்கள்.

ஆதியாகமம் 41:37-57 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இந்த வார்த்தை பார்வோனுடைய பார்வைக்கும் அவனுடைய வேலைக்காரர்கள் எல்லோருடைய பார்வைக்கும் நன்றாகத் தோன்றியது. அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி: “தேவ ஆவியைப் பெற்ற இந்த மனிதனைப்போல வேறொருவன் உண்டோ” என்றான். பின்பு, பார்வோன் யோசேப்பை நோக்கி: “தேவன் இவையெல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறதினால், உன்னைப்போல விவேகமும் ஞானமுமுள்ளவன் வேறொருவனும் இல்லை. நீ என் அரண்மனைக்கு அதிகாரியாயிருப்பாய்; உன் வார்த்தைக்கு என் மக்கள் எல்லோரும் அடங்கி நடக்கக்கடவர்கள்; சிங்காசனத்தில் மாத்திரம் உன்னிலும் நான் பெரியவனாக இருப்பேன்” என்றான். பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: “பார், முழு எகிப்துதேசத்திற்கும் உன்னை அதிகாரியாக்கினேன்” என்று சொல்லி, பார்வோன் தன் கையில் போட்டிருந்த தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, அதை யோசேப்பின் கையிலே போட்டு, மெல்லிய ஆடைகளை அவனுக்கு அணிவித்து, தங்கச் சங்கிலியை அவனுடைய கழுத்திலே அணிவித்து, தன்னுடைய இரண்டாம் இரதத்தின்மேல் அவனை ஏற்றி, குனிந்து பணியுங்கள் என்று அவனுக்கு முன்பாகக் கூறுவித்து, முழு எகிப்துதேசத்திற்கும் அவனை அதிகாரியாக்கினான்; பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: “நான் பார்வோன்; ஆனாலும் எகிப்துதேசத்திலுள்ளவர்களில் ஒருவனும் உன் உத்திரவில்லாமல் தன் கையையாவது தன் காலையாவது அசைக்கக்கூடாது” என்றான். மேலும், பார்வோன் யோசேப்புக்கு சாப்நாத்பன்னேயா என்கிற பெயரையிட்டு; ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் மகளாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். யோசேப்பு எகிப்துதேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படிப் புறப்பட்டான். யோசேப்பு எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு முன்பாக நிற்கும்போது முப்பது வயதாயிருந்தான்; யோசேப்பு பார்வோனுடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, எகிப்துதேசம் எங்கும் போய்ச் சுற்றிப்பார்த்தான். பரிபூரணமுள்ள ஏழு வருடங்களிலும் பூமி மிகுதியான பலனைக் கொடுத்தது. அந்த ஏழு வருடங்களில் எகிப்துதேசத்தில் விளைந்த தானியங்களையெல்லாம் அவன் சேகரித்து, அந்தத் தானியங்களைப் பட்டணங்களில் சேமித்துவைத்தான்; அந்தந்தப் பட்டணத்தில் அதினதின் சுற்றுப்புறத்து தானியங்களைச் சேமித்துவைத்தான். இப்படி யோசேப்பு அளக்கமுடியாத அளவிற்குக் கடற்கரை மணலைப்போல மிகுதியாகத் தானியத்தைச் சேர்த்துவைத்தான்; அது அளவுக்கு அடங்காததாயிருந்தது. பஞ்சமுள்ள வருடங்கள் வருவதற்கு முன்னே யோசேப்புக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள்; அவர்களை ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் மகளாகிய ஆஸ்நாத்து அவனுக்குப் பெற்றெடுத்தாள். யோசேப்பு: என் வருத்தம் அனைத்தையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் செய்தார் என்று சொல்லி, மூத்தவனுக்கு மனாசே என்று பெயரிட்டான். நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகச்செய்தார் என்று சொல்லி, இளையவனுக்கு எப்பிராயீம் என்று பெயரிட்டான். எகிப்துதேசத்தில் வந்த பரிபூரணமுள்ள ஏழு வருடங்களும் முடிந்தபின், யோசேப்பு சொல்லியிருந்தபடி ஏழுவருட பஞ்சம் தொடங்கினது; அனைத்துதேசங்களிலும் பஞ்சம் உண்டானது; ஆனாலும் எகிப்துதேசமெங்கும் ஆகாரம் இருந்தது. எகிப்துதேசமெங்கும் பஞ்சம் உண்டானபோது, மக்கள் உணவுக்காகப் பார்வோனை நோக்கி முறையிட்டார்கள்; அதற்கு பார்வோன்: “நீங்கள் யோசேப்பிடம் போய், அவன் உங்களுக்குச் சொல்லுகிறபடி செய்யுங்கள்” என்று எகிப்தியர்கள் எல்லோருக்கும் சொன்னான். தேசமெங்கும் பஞ்சம் உண்டானதால், யோசேப்பு களஞ்சியங்களையெல்லாம் திறந்து, எகிப்தியருக்கு விற்றான்; பஞ்சம் எகிப்துதேசத்தில் வரவர அதிகமானது. அனைத்து தேசங்களிலும் பஞ்சம் அதிகமாக இருந்ததால், அனைத்து தேசத்தார்களும் யோசேப்பிடம் தானியம் வாங்க எகிப்திற்கு வந்தார்கள்.

ஆதியாகமம் 41:37-57 பரிசுத்த பைபிள் (TAERV)

இந்த விளக்கம் பார்வோனுக்கும் அவனது அதிகாரிகளுக்கும் பொருத்தமானதாக இருந்தது. அதோடு பார்வோன் அவர்களிடம், “யோசேப்பைவிடப் பொருத்தமானவன் வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. தேவ ஆவியானவர் அவன் மேல் இருக்கிறார். அவனை மிக ஞானமுள்ளவனாக ஆக்கியிருக்கிறார்!” என்றான். எனவே, பார்வோன் யோசேப்பிடம், “தேவன் இவற்றை உனக்குத் தெரியச் செய்தார். உன்னைப்போல் அறிவுக் கூர்மையும், ஞானமும் உள்ளவர்கள் வேறு யாருமில்லை. உன்னை என் நாட்டிற்கு அதிகாரியாய் ஆக்குகிறேன். உன் கட்டளைகளுக்கு என் ஜனங்கள் அடங்கி நடப்பார்கள். நான் மட்டுமே உன்னைவிட மிகுந்த அதிகாரம் பெற்றவனாக இருப்பேன்” என்று கூறினான். யோசேப்பை ஆளுநர் ஆக்குவதற்குரிய விசேஷச் சடங்கும், ஊர்வலமும் சிறப்பான முறையில் நடந்தன. “உன்னை எகிப்து முழுமைக்கும் ஆளுநர் ஆக்குகிறேன்” என்றான். பார்வோன் யோசேப்புக்கு தனது விசேஷ மோதிரத்தைக் கொடுத்தான். அம்மோதிரத்தில் ராஜமுத்திரை பொறிக்கப்பட்டிருந்தது. இத்தோடு அழகான ஆடைகளையும், அவன் கழுத்தில் பொன்மாலையும் அணிவித்தான். யோசேப்பைத் தனது இரண்டாவது இரதத்தில் ஏற்றி ஊர்வலமாகப் போகச் செய்தான். காவல் அதிகாரிகள் அவன் முன்னே போய் ஜனங்களிடம், “யோசேப்புக்கு அடிபணியுங்கள்” என்றனர். இவ்வாறு யோசேப்பு எகிப்து முழுவதற்கும் ஆளுநர் ஆனான். பார்வோன் யோசேப்பிடம், “நான் எகிப்தின் ராஜாவாகிய பார்வோன். எனக்கு விருப்பமான முறையில் நான் நடந்துகொள்வேன். வேறுயாரும் இந்நாட்டில் உன் அனுமதி இல்லாமல் கையைத் தூக்கவோ காலை நகர்த்தவோ முடியாது” என்றான். பார்வோன் யோசேப்புக்கு சாப்னாத்பன்னேயா என்று வேறு பெயர் சூட்டினான். அவனுக்கு ஆஸ்நாத் என்ற மனைவியையும் கொடுத்தான். அவள் ஓன் நகரத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தி. இவ்வாறாக யோசேப்பு எகிப்து தேசத்து ஆளுநரானான். யோசேப்புக்கு அப்போது 30 வயது. அவன் நாடு முழுவதையும் சுற்றிப்பார்க்கப் புறப்பட்டான். ஏழு ஆண்டுகளாக எகிப்தில் நல்ல விளைச்சல் இருந்தது. யோசேப்பு அவற்றை நன்கு சேமித்து வைத்தான். ஒவ்வொரு நகரத்திலும் அதன் சுற்றுப்புறத்திலுள்ள தானியங்களையெல்லாம் சேமித்து வைத்தான். யோசேப்பு ஏராளமாக கடற்கரை மணலைப்போன்று தானியங்களைச் சேமித்து வைத்தான். அவன் சேமித்த தானியமானது அளக்கமுடியாத அளவில் இருந்தது. யோசேப்பின் மனைவி ஆஸ்நாத்து ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தி. முதலாண்டு பஞ்சம் வருவதற்கு முன்னால் அவளுக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள். முதல் குமாரனுக்கு மனாசே என்று பேரிட்டான். ஏனென்றால், “தேவன் என் துன்பங்களையெல்லாம் மறக்கச் செய்தார். என் வீட்டையும் மறக்கச் செய்துவிட்டார்” என்றான். யோசேப்பு இரண்டாவது குமாரனுக்கு எப்பிராயீம் என்று பேரிட்டான். “நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகப் பண்ணினார்” என்று சொல்லி இந்தப் பெயரை வைத்தான். ஏழு ஆண்டுகளுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் இருந்தன. அந்த ஆண்டுகள் முடிந்தன. அதன் பிறகு யோசேப்பு சொன்னதைப்போலவே பஞ்ச காலம் துவங்கியது. எந்த நாடுகளிலும் உணவுப் பொருட்கள் விளையவில்லை. ஆனால் எகிப்தில் உணவுப் பொருட்கள் ஏராளமாக சேமிக்கப்பட்டிருந்தன. இதற்குக் காரணம் யோசேப்பின் திட்டம். பஞ்சம் துவங்கியதும் ஜனங்கள் பார்வோனிடம் வந்து உணவுக்கு அழுதனர். பார்வோன் ஜனங்களிடம், “நீங்கள் போய் யோசேப்பிடம் என்ன செய்யலாம் எனக் கேளுங்கள்” என்றான். எங்கும் பஞ்சம் அதனால் யோசேப்பு ஜனங்களுக்குச் சேமிப்பிலிருந்து தானியத்தை எடுத்துக் கொடுத்தான். சேர்த்து வைத்த தானியங்களை யோசேப்பு எகிப்தியருக்கு விற்றான். பஞ்சம் மேலும் மோசமாகியது. எல்லா இடத்திலும் மோசமான அளவில் பஞ்சம் இருந்தது. எகிப்தைச் சுற்றி பல் வேறு நாடுகளிலிருந்து ஜனங்கள் உணவுப் பொருட்களை வாங்குவதற்காக எகிப்திற்கு வந்தார்கள்.

ஆதியாகமம் 41:37-57 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இந்த வார்த்தை பார்வோனுடைய பார்வைக்கும் அவன் ஊழியக்காரர் எல்லாருடைய பார்வைக்கும் நன்றாய்க் கண்டது. அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி: தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப்போல வேறொருவன் உண்டோ என்றான். பின்பு, பார்வோன் யோசேப்பை நோக்கி: தேவன் இவையெல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால், உன்னைப்போல விவேகமும் ஞானமுமுள்ளவன் வேறொருவனும் இல்லை. நீ என் அரமனைக்கு அதிகாரியாயிருப்பாய்; உன் வாக்கின்படியே என் ஜனங்கள் எல்லாரும் அடங்கி நடக்கக்கடவர்கள்; சிங்காசனத்தில் மாத்திரம் உன்னிலும் நான் பெரியவனாய் இருப்பேன் என்றான். பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: பார், எகிப்துதேசம் முழுமைக்கும் உன்னை அதிகாரியாக்கினேன் என்று சொல்லி, பார்வோன் தன் கையில் போட்டிருந்த தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, அதை யோசேப்பின் கையிலே போட்டு, மெல்லிய வஸ்திரங்களை அவனுக்கு உடுத்தி, பொன் சரப்பணியை அவன் கழுத்திலே தரித்து, தன்னுடைய இரண்டாம் இரதத்தின்மேல் அவனை ஏற்றி, தெண்டனிட்டுப் பணியுங்கள் என்று அவனுக்கு முன்பாகக் கூறுவித்து, எகிப்துதேசம் முழுமைக்கும் அவனை அதிகாரியாக்கினான்; பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: நான் பார்வோன்; ஆனாலும் எகிப்துதேசத்திலுள்ளவர்களில் ஒருவனும் உன் உத்தரவில்லாமல் தன் கையையாவது தன் காலையாவது அசைக்கக்கூடாது என்றான். மேலும், பார்வோன் யோசேப்புக்கு சாப்நாத்பன்னேயா என்கிற பெயரையிட்டு; ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். யோசேப்பு எகிப்துதேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி புறப்பட்டான். யோசேப்பு எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு முன்பாக நிற்கும்போது முப்பது வயதாயிருந்தான்; யோசேப்பு பார்வோனுடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, எகிப்துதேசம் எங்கும் போய்ச் சுற்றிப்பார்த்தான். பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களிலும் பூமி மிகுதியான பலனைக் கொடுத்தது. அவ்வேழு வருஷங்களில் எகிப்துதேசத்தில் விளைந்த தானியங்களையெல்லாம் அவன் சேர்த்து, அந்தத் தானியங்களைப் பட்டணங்களில் கட்டிவைத்தான்; அந்தந்தப் பட்டணத்தில் அதினதின் சுற்றுப்புறத்துத் தானியங்களைக் கட்டிவைத்தான். இப்படி யோசேப்பு அளவிறந்ததாய்க் கடற்கரை மணலைப்போல மிகுதியாக தானியத்தைச் சேர்த்துவைத்தான்; அது அளவுக்கு அடங்காததாயிருந்தது. பஞ்சமுள்ள வருஷங்கள் வருவதற்கு முன்னே யோசேப்புக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; அவர்களை ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்து அவனுக்குப் பெற்றாள். யோசேப்பு: என் வருத்தம் யாவையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் பண்ணினார் என்று சொல்லி, மூத்தவனுக்கு மனாசே என்று பேரிட்டான். நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகப்பண்ணினார் என்று சொல்லி, இளையவனுக்கு எப்பிராயீம் என்று பேரிட்டான். எகிப்துதேசத்தில் வந்த பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களும் முடிந்தபின், யோசேப்பு சொல்லியபடி ஏழுவருஷ பஞ்சம் தொடங்கினது; சகலதேசங்களிலும் பஞ்சம் உண்டாயிற்று; ஆனாலும் எகிப்துதேசமெங்கும் ஆகாரம் இருந்தது. எகிப்துதேசமெங்கும் பஞ்சம் உண்டானபோது, ஜனங்கள் உணவுக்காகப் பார்வோனை நோக்கி ஓலமிட்டார்கள்; அதற்குப் பார்வோன்: நீங்கள் யோசேப்பினிடத்துக்குப் போய், அவன் உங்களுக்குச் சொல்லுகிறபடி செய்யுங்கள் என்று எகிப்தியர் எல்லாருக்கும் சொன்னான். தேசமெங்கும் பஞ்சம் உண்டானபடியால், யோசேப்பு களஞ்சியங்களையெல்லாம் திறந்து, எகிப்தியருக்கு விற்றான்; பஞ்சம் எகிப்துதேசத்தில் வரவரக் கொடிதாயிற்று. சகல தேசங்களிலும் பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், சகல தேசத்தார்களும் யோசேப்பினிடத்தில் தானியம் கொள்ளும்படி எகிப்துக்கு வந்தார்கள்.