ஆதியாகமம் 41:1-16

ஆதியாகமம் 41:1-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இரண்டு முழு வருடங்கள் சென்றபின் பார்வோன் ஒரு கனவு கண்டான். அக்கனவில் அவன், நைல் நதி அருகே நின்றான். அப்பொழுது கொழுத்ததும், செழிப்பானதுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து வெளியேறி, நாணல்களுக்கிடையில் மேய்ந்து கொண்டிருந்தன. அவற்றின் பிறகே அவலட்சணமும், மெலிந்ததுமான ஏழு பசுக்கள் நைல் நதியிலிருந்து வெளியேறி வந்து, நதிக்கரையில் மற்ற பசுக்களின் அருகில் நின்றன. அதன்பின் அவலட்சணமும் மெலிந்ததுமான ஏழு பசுக்களும், கொழுத்ததும் செழிப்பானதுமான ஏழு பசுக்களையும் தின்றுவிட்டன. அப்பொழுது பார்வோன் நித்திரையிலிருந்து விழித்துக்கொண்டான். மீண்டும் அவன் நித்திரை செய்தபோது, இன்னுமொரு கனவு கண்டான். அக்கனவில் நன்கு விளைந்து முற்றிய ஏழு நெற்கதிர்கள் ஒரே தாளிலிருந்து வளர்ந்து வந்தன. பின்பு மெல்லியதும், கீழ்க்காற்றினால் கருகிப்போனதுமான ஏழு நெற்கதிர்கள் முளைத்து வந்தன. அந்த ஏழு மெலிந்த நெற்கதிர்களும், நன்கு விளைந்து முற்றிய ஏழு நெற்கதிர்களையும் விழுங்கிவிட்டன. பார்வோன் நித்திரையிலிருந்து விழித்தெழுந்தபோது, அது கனவு என அறிந்தான். காலையில் பார்வோனுடைய மனம் குழப்பமடைந்தது, அதனால் அவன் எகிப்திலுள்ள மந்திரவாதிகள், ஞானிகள் எல்லோரையும் வரவழைத்து, தான் கண்ட கனவுகளை அவர்களுக்குச் சொன்னான். ஆனால், அவர்கள் ஒருவராலும் அக்கனவுகளுக்கு விளக்கங்கூற முடியவில்லை. அப்பொழுது பானம் பரிமாறுவோரின் பொறுப்பாளன் பார்வோனிடம், “நான் செய்த தவறொன்று இன்றுதான் எனக்கு நினைவு வருகிறது. பார்வோன் ஒருமுறை தமது பணியாட்களில் கோபங்கொண்டு, என்னையும் அப்பம் சுடுவோரின் பொறுப்பாளனையும் காவல் அதிகாரியின் வீடாகிய சிறையில் வைத்தார். நாங்கள் இருவரும் ஒரே இரவில் கனவு கண்டோம், அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு விளக்கமுடையதாய் இருந்தன. அங்கே காவலர் அதிகாரிக்குப் பணியாளனாயிருந்த, எபிரெய இளைஞன் ஒருவனும் எங்களோடிருந்தான். நாங்கள் அவனிடம் எங்கள் கனவுகளைச் சொன்னோம், அவன் எங்கள் ஒவ்வொருவருடைய கனவின் அர்த்தத்தைச் சொல்லி, அவற்றை எங்களுக்கு விளக்கிக் கூறினான். அவன் எங்களுக்குச் சொன்னவாறே எல்லாம் நிறைவேறின: நான் மறுபடியும் எனது பதவியில் நியமிக்கப்பட்டேன், மற்றவனோ தூக்கிலிடப்பட்டான்” என்றான். எனவே பார்வோன் யோசேப்பை அழைத்துவரச் செய்தான், அவன் காவல் கிடங்கிலிருந்து உடனே கொண்டுவரப்பட்டான். அவன் சவரம்செய்து, உடைமாற்றி பார்வோன் முன்வந்து நின்றான். பார்வோன் யோசேப்பிடம், “நான் ஒரு கனவு கண்டேன், அதற்குரிய விளக்கத்தை யாராலும் சொல்ல முடியவில்லை. யாராவது உனக்கு ஒரு கனவைச் சொன்னால், நீ அதற்கு விளக்கம் கூறுவாய் என நான் கேள்விப்பட்டேன்” என்றான். அதற்கு யோசேப்பு பார்வோனிடம், “என்னால் அதைச் செய்யமுடியாது, ஆனால் பார்வோன் விரும்பும் பதிலை இறைவன் அவருக்குத் தருவார்” என்றான்.

ஆதியாகமம் 41:1-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இரண்டு வருடங்கள் சென்றபின்பு, பார்வோன் ஒரு கனவு கண்டான்; அது என்னவென்றால், அவன் நைல் நதியருகில் நின்றுகொண்டிருந்தான். அப்பொழுது அழகும் கொழுத்ததுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து புல் மேய்ந்தன. அவைகளுக்குப்பின்பு அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து, நதி ஓரத்தில் மற்ற பசுக்களுடன் நின்றன. அவலட்சணமும் கேவலமுமான பசுக்கள் அழகும் கொழுத்ததுமான ஏழு பசுக்களையும் விழுங்கிப்போட்டது; இப்படிப் பார்வோன் கண்டு விழித்துக்கொண்டான். மறுபடியும் அவன் தூங்கியபோது, இரண்டாம் முறை ஒரு கனவு கண்டான்; நல்ல செழுமையான ஏழு கதிர்கள் ஒரே செடியிலிருந்து ஓங்கி வளர்ந்தது. பின்பு, மெலிந்ததும் கீழ்காற்றினால் வறண்டதுமான ஏழு கதிர்கள் முளைத்தது. மெலிந்த கதிர்கள் செழுமையும் நிறை மேனியுமான அந்த ஏழு கதிர்களையும் விழுங்கிப்போட்டது; அப்பொழுது பார்வோன் விழித்துக்கொண்டு, அது கனவு என்று அறிந்தான். காலையிலேயே பார்வோனுடைய மனம் கலக்கம் கொண்டிருந்தது; அப்பொழுது அவன் எகிப்திலுள்ள அனைத்து மந்திரவாதிகளையும் அனைத்து அறிஞர்களையும் அழைப்பித்து, அவர்களுக்குத் தன் கனவைச் சொன்னான்; ஒருவராலும் அதின் அர்த்தத்தைப் பார்வோனுக்குச் சொல்ல முடியாமல் போனது. அப்பொழுது பானபாத்திரக்காரர்களின் தலைவன் பார்வோனை நோக்கி: “நான் செய்த குற்றம் இன்றுதான் என் ஞாபகத்தில் வந்தது. பார்வோன் தம்முடைய வேலைக்காரர்கள்மேல் கடுங்கோபங்கொண்டு, என்னையும் அப்பம் சுடுகிறவர்களின் தலைவனையும் காவலாளிகளின் அதிபதியின் வீடாகிய சிறைச்சாலையிலே வைத்திருந்த காலத்தில், நானும் அவனும் ஒரே இரவிலே வெவ்வேறு அர்த்தம்கொண்ட கனவு கண்டோம். அப்பொழுது காவலாளிகளின் அதிபதிக்கு வேலைக்காரனாகிய எபிரெய வாலிபன் ஒருவன் அங்கே எங்களோடு இருந்தான்; அவனிடத்தில் அவைகளைச் சொன்னோம், அவன் நாங்கள் கண்ட கனவுகளுக்குரிய வெவ்வேறு அர்த்தத்தின்படியே எங்கள் கனவுகளின் அர்த்தத்தைச் சொன்னான். அவன் எங்களுக்குச் சொல்லிய அர்த்தத்தின்படியே நடந்தது; என்னைத் திரும்ப என் நிலையிலே நிறுத்தி, அவனைத் தூக்கில் போட்டுவிட்டார்” என்றான். அப்பொழுது பார்வோன் யோசேப்பை அழைப்பித்தான்; அவனை அவசரமாகச் சிறைச்சாலையிலிருந்து அழைத்துவந்தார்கள். அவன் சவரம் செய்துகொண்டு, வேறு உடை அணிந்து, பார்வோனிடத்தில் வந்தான். பார்வோன் யோசேப்பை நோக்கி: “ஒரு கனவு கண்டேன்; அதின் அர்த்தத்தைச் சொல்ல ஒருவரும் இல்லை; நீ ஒரு கனவைக் கேட்டால், அதின் அர்த்தத்தைச் சொல்லுவாய் என்று உன்னைக்குறித்து நான் கேள்விப்பட்டேன்” என்றான். அப்பொழுது யோசேப்பு பார்வோனுக்கு மறுமொழியாக: “நான் அல்ல, தேவனே பார்வோனுக்கு மங்களமான உத்திரவு அருளிச்செய்வார்” என்றான்.

ஆதியாகமம் 41:1-16 பரிசுத்த பைபிள் (TAERV)

இரண்டு ஆண்டுகள் கழிந்தது. பார்வோன் ஒரு கனவு கண்டான். நைல் நதியின் அருகில் நின்றுகொண்டிருப்பதாகக் கனவு கண்டான். ஆற்றிலிருந்து ஏழு பசுக்கள் வெளியே வந்து புல் தின்றுகொண்டிருந்தன. அவை செழுமையாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தன. மேலும் ஏழு பசுக்கள் ஆற்றிலிருந்து வெளியே வந்து கரையில் நின்ற மற்ற பசுக்களோடு நின்றன. அவை மெலிந்தும் பார்க்க அருவருப்பாகவும் இருந்தன. மெலிந்த அருவருப்பான பசுக்கள் கொழுத்த ஆரோக்கியமான ஏழு பசுக்களையும் உண்டன. பிறகு பார்வோன் எழும்பினான். பார்வோன் மீண்டும் தூங்கி கனவு காண ஆரம்பித்தான். அப்போது ஒரே செடியில் ஏழு செழுமையான கதிர்கள் வந்திருந்தன. மேலும் ஒரு செடியில் ஏழு கதிர்கள் வந்தன. ஆனால் அவை செழுமையில்லாமல் இருந்தன. காற்றில் உதிர்ந்துபோயின. மெலிந்த ஏழு கதிர்களும் செழுமையான ஏழு கதிர்களை விழுங்கிவிட்டன. பார்வோன் மீண்டும் எழுந்து தான் கண்டது கனவு என உணர்ந்தான். மறுநாள் காலையில் அவன் இதைப்பற்றி மிகவும் கவலைப்பட்டான். அவன் எகிப்திலுள்ள அனைத்து மந்திரவாதிகளையும், ஞானிகளையும் அழைத்தான். அவர்களிடம் தன் கனவைச் சொன்னான். ஆனால் ஒருவராலும் அதற்கு விளக்கம் சொல்ல முடியவில்லை. பிறகு திராட்சைரசம் கொடுப்பவனுக்கு யோசேப்பைப்பற்றிய நினைவு வந்தது. அவன் பார்வோனிடம், “எனக்கு ஏற்பட்டது இன்று நினைவுக்கு வருகிறது. உங்களுக்குக் கோபம் வந்து என்னையும், ரொட்டி சுடுபவனையும் சிறையில் அடைத்திருந்தீர்களே, அப்போது ஓரிரவில் நாங்கள் கனவு கண்டோம். இரண்டும் வெவ்வேறு கனவுகள். அங்கு எபிரேய இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் சிறையதிகாரியின் உதவியாள். நாங்கள் அவனிடம் கனவைச் சொன்னோம். அவன் அதைப்பற்றி விளக்கம் சொன்னான். அவன் சொன்னதெல்லாம் உண்மையாயிற்று. நான் மூன்று நாளில் விடுதலையாகிப் பழைய வேலையைப் பெறுவேன் என்றான். அது அவ்வாறாயிற்று. ரொட்டி சுடுபவன் தூக்கிலிடப்படுவான் என்றான். அது போலவே நடந்தது” என்றான். எனவே, பார்வோன் சிறையில் இருந்து யோசேப்பை அழைத்தான். அதிகாரி உடனே யோசேப்பை வெளியே கொண்டு வந்தான். அவன் சவரம் செய்து நல்ல ஆடைகள் அணிந்துகொண்டு, பார்வோனைப் பார்க்கப்போனான். பார்வோன் யோசேப்பிடம், “நான் கனவு கண்டேன். எவராலும் அதற்கு பொருள் சொல்லமுடியவில்லை. உன்னிடம் அவற்றைப்பற்றி சொன்னால் நீ அதற்கு விளக்கம் சொல்ல முடியும் என்று அறிந்தேன்” என்றான். யோசேப்பு, “என்னால் முடியாது. ஆனால் தேவன் உமக்காக விளக்கம் தருவார்” என்றான்.

ஆதியாகமம் 41:1-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இரண்டு வருஷம் சென்றபின்பு, பார்வோன் ஒரு சொப்பனம் கண்டான்; அது என்னவென்றால், அவன் நதியண்டையிலே நின்றுகொண்டிருந்தான். அப்பொழுது அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து புல் மேய்ந்தது. அவைகளின்பின் அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து, நதி ஓரத்தில் மற்ற பசுக்களண்டையிலே நின்றது. அவலட்சணமும் கேவலமுமான பசுக்கள் அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்களையும் பட்சித்துப்போட்டது; இப்படிப் பார்வோன் கண்டு விழித்துக்கொண்டான். மறுபடியும் அவன் நித்திரைசெய்து, இரண்டாம் விசை ஒரு சொப்பனம் கண்டான்; நல்ல செழுமையான ஏழு கதிர்கள் ஒரே தாளிலிருந்து ஓங்கி வளர்ந்தது. பின்பு, சாவியானதும் கீழ்காற்றினால் தீய்ந்ததுமான ஏழு கதிர்கள் முளைத்தது. சாவியான கதிர்கள் செழுமையும் நிறைமேனியுமான அந்த ஏழு கதிர்களையும் விழுங்கிப்போட்டது; அப்பொழுது பார்வோன் விழித்துக்கொண்டு, அது சொப்பனம் என்று அறிந்தான். காலமே பார்வோனுடைய மனம் கலக்கங்கொண்டிருந்தது; அப்பொழுது அவன் எகிப்திலுள்ள சகல மந்திரவாதிகளையும் சகல சாஸ்திரிகளையும் அழைப்பித்து, அவர்களுக்குத் தன் சொப்பனத்தைச் சொன்னான்; ஒருவராலும் அதின் அர்த்தத்தைப் பார்வோனுக்குச் சொல்லக் கூடாமற்போயிற்று. அப்பொழுது பானபாத்திரக்காரரின் தலைவன் பார்வோனை நோக்கி: நான் செய்த குற்றம் இன்றுதான் என் நினைவில் வந்தது. பார்வோன் தம்முடைய ஊழியக்காரர்மேல் கடுங்கோபங்கொண்டு, என்னையும் சுயம்பாகிகளின் தலைவனையும் தலையாரிகளின் அதிபதி வீடாகிய சிறைச்சாலையிலே வைத்திருந்த காலத்தில், நானும் அவனும் ஒரே இராத்திரியிலே வெவ்வேறு பொருள்கொண்ட சொப்பனம் கண்டோம். அப்பொழுது தலையாரிகளின் அதிபதிக்கு வேலைக்காரனாகிய எபிரெய பிள்ளையாண்டான் ஒருவன் அங்கே எங்களோடே இருந்தான்; அவனிடத்தில் அவைகளைச் சொன்னோம், அவன் நாங்கள் கண்ட சொப்பனங்களுக்குரிய வெவ்வேறு அர்த்தத்தின்படியே எங்கள் சொப்பனத்தின் பயனைச் சொன்னான். அவன் எங்களுக்குச் சொல்லிய அர்த்தத்தின்படியே நடந்தது; என்னைத் திரும்ப என் நிலையிலே நிறுத்தி, அவனைத் தூக்கிப்போடுவித்தார் என்றான். அப்பொழுது பார்வோன் யோசேப்பை அழைப்பித்தான்; அவனைத் தீவிரமாய்க் காவல்கிடங்கிலிருந்து கொண்டுவந்தார்கள். அவன் சவரம் பண்ணிக்கொண்டு, வேறு வஸ்திரம் தரித்து, பார்வோனிடத்தில் வந்தான். பார்வோன் யோசேப்பை நோக்கி: ஒரு சொப்பனம் கண்டேன்; அதின் அர்த்தத்தைச் சொல்ல ஒருவரும் இல்லை; நீ ஒரு சொப்பனத்தைக் கேட்டால், அதின் அர்த்தத்தைச் சொல்லுவாய் என்று உன்னைக்குறித்து நான் கேள்விப்பட்டேன் என்றான். அப்பொழுது யோசேப்பு பார்வோனுக்குப் பிரதியுத்தரமாக: நான் அல்ல, தேவனே பார்வோனுக்கு மங்களமான உத்தரவு அருளிச்செய்வார் என்றான்