ஆதியாகமம் 40:16-23
ஆதியாகமம் 40:16-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யோசேப்பு அவனுக்கு நல்ல விளக்கம் சொன்னதைக் கேட்ட, அப்பம் சுடுவோரின் பொறுப்பாளன் யோசேப்பிடம், “நானும் ஒரு கனவு கண்டேன்: என் தலையில் அப்பமுள்ள மூன்று கூடைகள் இருந்தன. மேலேயிருந்த கூடையில் பார்வோனுக்காகத் தயாரிக்கப்பட்ட பல வகையான உணவுகள் இருந்தன, ஆனால் பறவைகள் என் தலையின் மேலிருந்த கூடையிலிருந்து அப்பங்களைத் தின்றன” என்றான். அதற்கு யோசேப்பு, “உன் கனவுக்குரிய விளக்கம் இதுவே: மூன்று கூடைகளும் மூன்று நாட்களாகும். இன்னும் மூன்று நாட்களில் பார்வோன் உன் தலையை வெட்டி, உன்னை மரத்திலே தூக்கிலிடுவான். பறவைகள் உன் சதையைக் கொத்தித் தின்னும்” என்றான். மூன்றாம் நாள் வந்தது, அது பார்வோனின் பிறந்தநாளாய் இருந்தபடியால், அவன் தன் அதிகாரிகளுக்கெல்லாம் ஒரு விருந்து கொடுத்தான். அப்பொழுது அவன், பானம் பரிமாறுவோரின் பொறுப்பாளனையும், அப்பம் சுடுபவர்களின் பொறுப்பாளனையும் வெளியே கொண்டுவந்து, தான் விருந்துக்கு அழைத்திருந்த அதிகாரிகளின்முன் நிறுத்தினான். பானம் பரிமாறுவோரின் பொறுப்பாளனை மீண்டும் அவனுடைய பதவியில் அமர்த்தினான்; அவன் முன்போலவே பார்வோனுக்குப் பானம் பரிமாறினான். ஆனால் யோசேப்பு அவர்களுக்குச் சொன்ன விளக்கத்தின்படியே, அப்பம் சுடுபவர்களின் பொறுப்பாளனை அவன் தூக்கிலிட்டான். ஆனாலும், பானம் பரிமாறுவோரின் பொறுப்பாளன் யோசேப்பை நினைவில்கொள்ளவில்லை; அவனை மறந்துபோனான்.
ஆதியாகமம் 40:16-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அர்த்தம் நன்றாயிருக்கிறது என்று அப்பம் சுடுகிறவர்களின் தலைவன் கண்டு, யோசேப்பை நோக்கி: “நானும் என் கனவில் மூன்று வெள்ளைக் கூடைகள் என் தலையின்மேல் இருக்கக்கண்டேன்; மேற்கூடையிலே பார்வோனுக்காக சமைக்கப்பட்ட அனைத்துவித பலகாரங்களிலும் கொஞ்சம் கொஞ்சம் இருந்தது; என் தலையின் மேற்கூடையில் இருந்தவைகளைப் பறவைகள் வந்து சாப்பிட்டுவிட்டது” என்றான். அதற்கு யோசேப்பு: “அந்த மூன்று கூடைகளும் மூன்று நாட்களாம். இன்னும் மூன்று நாட்களுக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மரத்திலே தூக்கிலிடுவார்; அப்பொழுது பறவைகள் உன் மாம்சத்தைத் தின்னும், இதுதான் அதனுடைய அர்த்தம்” என்று சொன்னான். மூன்றாம் நாள் பார்வோனுடைய பிறந்த நாளாயிருந்தது; அவன் தன் வேலைக்காரர்கள் எல்லோருக்கும் விருந்துசெய்து, பானபாத்திரக்காரர்களுடைய தலைவனையும் அப்பம் சுடுகிறவர்களின் தலைவனையும் தன் உத்தியோகஸ்தரின் நடுவே நிறுத்தி, பானபாத்திரக்காரர்களின் தலைவனைப் பானம் கொடுக்கிற தன் உத்தியோகத்திலே மறுபடியும் வைத்தான்; அந்தப்படியே அவன் பார்வோனுடைய கையிலே பாத்திரத்தைக் கொடுத்தான். அப்பம் சுடுகிறவர்களின் தலைவனையோ தூக்கிலிட்டான். யோசேப்பு அவர்களுக்குச் சொன்ன அர்த்தத்தின்படியே சம்பவித்தது. ஆனாலும் பானபாத்திரக்காரனின் தலைவன் யோசேப்பை நினைக்காமல் அவனை மறந்துவிட்டான்.
ஆதியாகமம் 40:16-23 பரிசுத்த பைபிள் (TAERV)
ரொட்டி சுடுபவன் மற்றவனின் கனவுக்கு நல்ல பொருள் இருப்பதை அறிந்தான். தன் கனவையும் யோசேப்பிடம் கூறினான். “நானும் ஒரு கனவு கண்டேன். என் தலையில் மூன்று ரொட்டிக் கூடைகள் இருந்தன. மேல் கூடையில் எல்லா வகையான சமைத்த உணவுகளும் இருந்தது. அது பார்வோனுக்கு உரியது. ஆனால் பறவைகள் அவற்றைத் தின்றுகொண்டிருந்தன” என்றான். யோசேப்பு, “நான் உனக்கு அக்கனவின் பொருளைச் சொல்கிறேன். மூன்று கூடைகள் மூன்று நாட்களைக் குறிக்கும். மூன்று நாள் முடிவதற்குள் நீ வெளியே செல்வாய். ராஜா உன் தலையை வெட்டிவிடுவான். உனது உடலைக் கம்பத்தில் தொங்கவிடுவான். பறவைகள் உன் உடலைத் தின்னும்” என்று சொன்னான். மூன்று நாளானதும் பார்வோனுடைய பிறந்த நாள் வந்தது. அவன் தன் வேலைக்காரர்களுக்கெல்லாம் விருந்து கொடுத்தான். அதனால் ரொட்டி சுடுபவனையும் திராட்சைரசம் கொடுப்பவனையும் விடுதலை செய்தான். பார்வோன் திராட்சைரசம் கொடுப்பவனுக்கு மீண்டும் வேலை கொடுத்தான். அவனும் பார்வோனிடம் ஒரு கோப்பை திராட்சை ரசத்தை கொடுத்தான். ஆனால் பார்வோன் ரொட்டி சுடுபவனைக் கொன்றுவிட்டான். யோசேப்பு சொன்னதுபோலவே அனைத்தும் நிகழ்ந்தது. ஆனால் திராட்சைரசம் வழங்குபவன் உதவிசெய்ய மறந்துவிட்டான். அவன் யோசேப்பைப்பற்றி பார்வோனிடம் எதுவும் சொல்லவில்லை.
ஆதியாகமம் 40:16-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அர்த்தம் நன்றாயிருக்கிறது என்று சுயம்பாகிகளின் தலைவன் கண்டு, யோசேப்பை நோக்கி: நானும் என் சொப்பனத்தில் மூன்று வெள்ளைக் கூடைகள் என் தலையின்மேல் இருக்கக்கண்டேன்; மேற்கூடையிலே பார்வோனுக்காக சமைக்கப்பட்ட சகலவித பலகாரங்களிலும் கொஞ்சம் கொஞ்சம் இருந்தது; என் தலையின் மேல் கூடையில் இருந்தவைகளைப் பறவைகள் வந்து பட்சித்தது என்றான். அதற்கு யோசேப்பு: அந்த மூன்று கூடைகளும் மூன்று நாளாம். இன்னும் மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மரத்திலே தூக்கிப்போடுவார்; அப்பொழுது பறவைகள் உன் மாம்சத்தைத் தின்னும், இதுதான் அதின் அர்த்தம் என்று சொன்னான். மூன்றாம் நாள் பார்வோனுடைய ஜன்ம நாளாயிருந்தது; அவன் தன் ஊழியக்காரர் எல்லாருக்கும் விருந்துபண்ணி, பானபாத்திரக்காரருடைய தலைவன் தலையையும் சுயம்பாகிகளுடைய தலைவன் தலையையும் தன் உத்தியோகஸ்தரின் நடுவே உயர்த்தி, பானபாத்திரக்காரரின் தலைவனைப் பானங்கொடுக்கிற தன் உத்தியோகத்திலே மறுபடியும் வைத்தான்; அந்தப்படியே அவன் பார்வோனுடைய கையிலே பாத்திரத்தைக் கொடுத்தான். சுயம்பாகிகளின் தலைவனையோ தூக்கிப்போட்டான். யோசேப்பு அவர்களுக்குச் சொன்ன அர்த்தத்தின்படியே சம்பவித்தது. ஆனாலும் பானபாத்திரக்காரனின் தலைவன் யோசேப்பை நினையாமல் அவனை மறந்துவிட்டான்.