ஆதியாகமம் 40:1-23

ஆதியாகமம் 40:1-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

சிலகாலம் சென்றபின், எகிப்திய அரசனுக்கு பானம் பரிமாறுகிறவனும், அப்பம் சுடுகிறவனுமான இருவரும் எகிப்தின் அரசனான தங்கள் எஜமானுக்கு எதிராகக் குற்றம் செய்தார்கள். ஆதலால் பார்வோன், பானம் பரிமாறுவோருக்குத் தலைவனும் அப்பம் சுடுவோருக்குத் தலைவனுமாயிருந்த அந்த இரு அலுவலர்கள் மேலும் கோபமடைந்தான். எனவே யோசேப்பு அடைக்கப்பட்டிருந்த காவலர் தலைவன் வீட்டிலுள்ள சிறையிலேயே பார்வோன் அவர்களையும் அடைத்தான். காவலர் தலைவன் அவர்களை யோசேப்பிடம் ஒப்படைக்க, அவன் அவர்களைப் பொறுப்பேற்றான். அவர்கள் அங்கே சிலகாலம் இருந்தார்கள். எகிப்திய அரசனுக்குப் பானம் பரிமாறுவோரின் தலைவனும், அப்பம் சுடுவோரின் தலைவனும் சிறையிலிருக்கும் போது, ஒரே இரவில் இருவரும் கனவு கண்டார்கள்; ஒவ்வொரு கனவும் வெவ்வேறு கருத்துடையனவாய் இருந்தன. மறுநாள் காலை யோசேப்பு அவர்களிடம் வந்தபோது, அவர்கள் கலங்கியிருப்பதைக் கண்டான். அவன் தன் தலைவனது வீட்டிலே, தன்னோடு காவலில் வைக்கப்பட்டிருந்த பார்வோனின் அலுவலர்களிடம், “உங்கள் முகம் இன்று ஏன் வாடியிருக்கிறது?” எனக் கேட்டான். அதற்கு அவர்கள், “நாங்கள் இருவரும் கனவு கண்டோம்; அவற்றுக்கு விளக்கம் தர ஒருவருமில்லை” என்றார்கள். அதற்கு யோசேப்பு, “விளக்கங்கள் இறைவனுக்குரியதல்லவா? உங்கள் கனவுகளை என்னிடம் சொல்லுங்கள்” என்றான். பானம் பரிமாறுவோருக்குப் பொறுப்பாயிருந்தவன் தன் கனவை யோசேப்புக்குச் சொன்னான். “என் கனவில் எனக்கு முன்பாக ஒரு திராட்சைக்கொடி இருப்பதைக் கண்டேன்; அக்கொடியில் மூன்று கிளைகள் இருந்தன. அவை துளிர்த்த உடனே பூ பூத்து, அதன் குலைகள் பழுத்துத் திராட்சைப் பழங்களாயின. பார்வோனுடைய பாத்திரம் என் கையில் இருந்தது, நான் திராட்சைப் பழங்களை எடுத்து, அவற்றை அப்பாத்திரத்தில் பிழிந்து, பார்வோனின் கையிலே கொடுத்தேன்” என்றான். அப்பொழுது யோசேப்பு, “கனவின் விளக்கம் இதுவே: மூன்று கிளைகளும் மூன்று நாட்களாகும். பார்வோன் மூன்று நாட்களுக்குள் உன்னை விடுவித்து, உன்னை உன் பழைய பதவியில் அமர்த்துவான்; நீ பானம் பரிமாறுகிறவனாய் இருந்தபோது செய்தவாறே, பார்வோனின் பாத்திரத்தை அவன் கையில் கொடுப்பாய்” என்றான். மேலும் அவன், “மீண்டும் நீ நல்ல நிலையில் இருக்கும்போது, என்னை நினைவில் வைத்து, எனக்குத் தயவுகாட்டு; பார்வோனிடம் என்னைப்பற்றிச் சொல்லி, இந்த சிறையிலிருந்து என்னை விடுதலையாக்கு. ஏனெனில், நான் எபிரெயருடைய நாட்டிலிருந்து பலவந்தமாய் இங்கு கொண்டுவரப்பட்டேன், இங்கேயும் இந்தக் காவல் கிடங்கில் வைக்கப்படுவதற்கு ஏதுவான குற்றம் எதையும் நான் செய்யவில்லை” என்றான். யோசேப்பு அவனுக்கு நல்ல விளக்கம் சொன்னதைக் கேட்ட, அப்பம் சுடுவோரின் பொறுப்பாளன் யோசேப்பிடம், “நானும் ஒரு கனவு கண்டேன்: என் தலையில் அப்பமுள்ள மூன்று கூடைகள் இருந்தன. மேலேயிருந்த கூடையில் பார்வோனுக்காகத் தயாரிக்கப்பட்ட பல வகையான உணவுகள் இருந்தன, ஆனால் பறவைகள் என் தலையின் மேலிருந்த கூடையிலிருந்து அப்பங்களைத் தின்றன” என்றான். அதற்கு யோசேப்பு, “உன் கனவுக்குரிய விளக்கம் இதுவே: மூன்று கூடைகளும் மூன்று நாட்களாகும். இன்னும் மூன்று நாட்களில் பார்வோன் உன் தலையை வெட்டி, உன்னை மரத்திலே தூக்கிலிடுவான். பறவைகள் உன் சதையைக் கொத்தித் தின்னும்” என்றான். மூன்றாம் நாள் வந்தது, அது பார்வோனின் பிறந்தநாளாய் இருந்தபடியால், அவன் தன் அதிகாரிகளுக்கெல்லாம் ஒரு விருந்து கொடுத்தான். அப்பொழுது அவன், பானம் பரிமாறுவோரின் பொறுப்பாளனையும், அப்பம் சுடுபவர்களின் பொறுப்பாளனையும் வெளியே கொண்டுவந்து, தான் விருந்துக்கு அழைத்திருந்த அதிகாரிகளின்முன் நிறுத்தினான். பானம் பரிமாறுவோரின் பொறுப்பாளனை மீண்டும் அவனுடைய பதவியில் அமர்த்தினான்; அவன் முன்போலவே பார்வோனுக்குப் பானம் பரிமாறினான். ஆனால் யோசேப்பு அவர்களுக்குச் சொன்ன விளக்கத்தின்படியே, அப்பம் சுடுபவர்களின் பொறுப்பாளனை அவன் தூக்கிலிட்டான். ஆனாலும், பானம் பரிமாறுவோரின் பொறுப்பாளன் யோசேப்பை நினைவில்கொள்ளவில்லை; அவனை மறந்துபோனான்.

ஆதியாகமம் 40:1-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இந்த சம்பவங்களுக்குப்பின்பு, எகிப்தின் ராஜாவுக்கு பானபாத்திரக்காரனும் அப்பம் சுடுகிறவனும் எகிப்தின் ராஜாவாகிய தங்கள் ஆண்டவனுக்கு விரோதமாகக் குற்றம் செய்தார்கள். பார்வோன் தன் பானபாத்திரக்காரர்களின் தலைவனும் அப்பம் சுடுகிறவர்களின் தலைவனுமாகிய இவ்விரண்டு அதிகாரிகள்மேல் கடுங்கோபம்கொண்டு, அவர்களை யோசேப்பு வைக்கப்பட்டிருந்த இடமும் காவலாளிகளின் அதிபதியின் வீடுமாகிய சிறைச்சாலையிலே காவலில் வைத்தான். காவலாளிகளின் அதிபதி அவர்களை விசாரிக்கும்படி யோசேப்பின் வசத்தில் ஒப்புவித்தான்; அவன் அவர்களை விசாரித்துவந்தான்; அவர்கள் அநேகநாட்கள் காவலில் இருந்தார்கள். எகிப்தின் ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனும் அப்பம் சுடுகிறவனுமாகிய அந்த இரண்டுபேரும் சிறைச்சாலையில் இருக்கும்போது, ஒரே இரவில் வெவ்வேறு அர்த்தமுள்ள கனவு கண்டார்கள். காலையில் யோசேப்பு அவர்களிடத்தில் போய், அவர்களைப் பார்க்கும்போது, அவர்கள் கலங்கியிருந்தார்கள். அப்பொழுது அவன் தன் எஜமானுடைய வீட்டில் தன்னோடு காவலில் வைக்கப்பட்டிருந்த பார்வோனுடைய அதிகாரிகளை நோக்கி: “உங்கள் முகங்கள் இன்று துக்கமாயிருக்கிறது என்ன” என்று கேட்டான். அதற்கு அவர்கள்: “கனவு கண்டோம், அதற்கு அர்த்தம் சொல்லுகிறவன் ஒருவனும் இல்லை” என்றார்கள். அதற்கு யோசேப்பு: “கனவுக்கு அர்த்தம் சொல்லுவது தேவனுக்குரியதல்லவா? அவைகளை என்னிடத்தில் சொல்லுங்கள்” என்றான். அப்பொழுது பானபாத்திரக்காரர்களின் தலைவன் யோசேப்பை நோக்கி: “என் கனவிலே ஒரு திராட்சைச்செடி எனக்கு முன்பாக இருக்கக்கண்டேன். அந்தத் திராட்சைச்செடியிலே மூன்று கொடிகள் இருந்தது; அது துளிர்க்கிறதாயிருந்தது; அதில் பூக்கள் மலர்ந்திருந்தது; அதின் குலைகள் பழுத்த பழங்களாயிருந்தது. பார்வோனுடைய பாத்திரம் என்னுடைய கையிலே இருந்தது; நான் அந்தப் பழங்களைப் பறித்து, அவைகளைப் பார்வோனுடைய பாத்திரத்தில் பிழிந்து, அந்தப் பாத்திரத்தைப் பார்வோனுடைய கையிலே கொடுத்தேன்” என்று தன் கனவைச் சொன்னான். அதற்கு யோசேப்பு: “அந்த மூன்று கொடிகளும் மூன்று நாட்களாம். மூன்று நாட்களுக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மறுபடியும் உன் நிலையிலே நிறுத்துவார்; முன்னே அவருக்கு பானம் கொடுத்துவந்த வழக்கத்தின்படி பார்வோனின் பாத்திரத்தை அவருடைய கையிலே கொடுப்பாய்; இதுதான் அதனுடைய அர்த்தம் என்று சொன்னதுமல்லாமல் நீ வாழ்வடைந்திருக்கும்போது, என்னை நினைத்து, என்மேல் தயவுவைத்து, என் காரியத்தைப் பார்வோனுக்குத் தெரிவித்து, இந்த இடத்திலிருந்து என்னை விடுதலையாக்கவேண்டும். நான் எபிரெயர்களுடைய தேசத்திலிருந்து களவாகக் கொண்டுவரப்பட்டேன்; என்னை இந்தக் காவல்கிடங்கில் வைக்கும்படி நான் இந்த இடத்தில் ஒன்றும் செய்யவில்லை” என்றும் சொன்னான். அர்த்தம் நன்றாயிருக்கிறது என்று அப்பம் சுடுகிறவர்களின் தலைவன் கண்டு, யோசேப்பை நோக்கி: “நானும் என் கனவில் மூன்று வெள்ளைக் கூடைகள் என் தலையின்மேல் இருக்கக்கண்டேன்; மேற்கூடையிலே பார்வோனுக்காக சமைக்கப்பட்ட அனைத்துவித பலகாரங்களிலும் கொஞ்சம் கொஞ்சம் இருந்தது; என் தலையின் மேற்கூடையில் இருந்தவைகளைப் பறவைகள் வந்து சாப்பிட்டுவிட்டது” என்றான். அதற்கு யோசேப்பு: “அந்த மூன்று கூடைகளும் மூன்று நாட்களாம். இன்னும் மூன்று நாட்களுக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மரத்திலே தூக்கிலிடுவார்; அப்பொழுது பறவைகள் உன் மாம்சத்தைத் தின்னும், இதுதான் அதனுடைய அர்த்தம்” என்று சொன்னான். மூன்றாம் நாள் பார்வோனுடைய பிறந்த நாளாயிருந்தது; அவன் தன் வேலைக்காரர்கள் எல்லோருக்கும் விருந்துசெய்து, பானபாத்திரக்காரர்களுடைய தலைவனையும் அப்பம் சுடுகிறவர்களின் தலைவனையும் தன் உத்தியோகஸ்தரின் நடுவே நிறுத்தி, பானபாத்திரக்காரர்களின் தலைவனைப் பானம் கொடுக்கிற தன் உத்தியோகத்திலே மறுபடியும் வைத்தான்; அந்தப்படியே அவன் பார்வோனுடைய கையிலே பாத்திரத்தைக் கொடுத்தான். அப்பம் சுடுகிறவர்களின் தலைவனையோ தூக்கிலிட்டான். யோசேப்பு அவர்களுக்குச் சொன்ன அர்த்தத்தின்படியே சம்பவித்தது. ஆனாலும் பானபாத்திரக்காரனின் தலைவன் யோசேப்பை நினைக்காமல் அவனை மறந்துவிட்டான்.

ஆதியாகமம் 40:1-23 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு, பார்வோனுக்கு எதிராக ரொட்டி சுடுபவனும், திராட்சைரசம் கொடுப்பவனுமான இரண்டு வேலைக்காரர்கள் தவறு செய்தனர். அவர்கள் மீது பார்வோனுக்கு மிகுந்த கோபம் இருந்தது. ராஜா அவர்களை யோசேப்பு இருந்த சிறையிலேயே அடைத்துவிட்டான். போத்திபார் இந்தச் சிறையின் பொறுப்பாளன். அதிகாரி, இந்த இருவரையும் யோசேப்பின் கண்காணிப்பில் வைத்தார். இருவரும் சிறையில் கொஞ்சக் காலம் தொடர்ந்து இருந்தனர். ஓரிரவு, இருவருக்கும் கனவு வந்தது. இருவரும் வெவ்வேறு கனவுகளைக் கண்டனர். இருவரும் எகிப்திய ராஜாவின் வேலைக்காரர்கள். ஒருவன் ரொட்டி சுடுபவன், மற்றொருவன் திராட்சைரசம் கொடுப்பவன். ஒவ்வொன்றுக்கும் தனிதனிப் பொருள் இருந்தது. மறுநாள் காலையில் யோசேப்பு அவர்களிடம் சென்றான். அவர்கள் இருவரும் கவலையாயிருப்பதைக் கண்டான். அவர்களிடம், “ஏன் இவ்வாறு இன்று கவலையோடு இருக்கிறீர்கள்?” என்று கேட்டான். அவர்கள், “நேற்று நாங்கள் இருவரும் கனவு கண்டோம். அதன் பொருள் புரியவில்லை. அதின் பொருளையோ, விளக்கத்தையோ சொல்பவர்கள் யாரும் எங்களுக்கு இல்லை” என்றனர். யோசேப்பு அவர்களிடம், “தேவன் ஒருவரே நமது கனவுகளைப் புரிந்துகொண்டு விளக்க வல்லவர். என்னிடம் உங்கள் கனவுகளைக் கூறுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றான். திராட்சைரசம் கொடுப்பவன் தன் கனவை யோசேப்பிடம் கூறினான். “என் கனவில் நான் ஒரு திராட்சைக் கொடியைக் கண்டேன். அதில் மூன்று கிளைகள் இருந்தன. அவை வளர்ந்து பூக்கள் விட்டு கனிவதைக் கண்டேன். நான் பார்வோனின் கோப்பையை ஏந்தியிருந்தேன். எனவே அந்தத் திராட்சையைப் பிழிந்து சாறு எடுத்தேன். பிறகு அதனைப் பார்வோனுக்குக் கொடுத்தேன்” என்றான். பிறகு யோசேப்பு, “இந்தக் கனவை உனக்கு விளக்குவேன். மூன்று கிளைகள் என்பது மூன்று நாட்கள். இன்னும் மூன்று நாளில் பார்வோன் உன்னை மன்னித்து, உன்னை விடுதலை செய்து, முன்பு அவரது கிண்ணம் ஏந்துபவனாக இருந்தது போல் உன்னை ஏற்றுக்கொள்வார். ஆனால் நீ விடுதலையானதும் என்னை நினைத்துக்கொள். எனக்கும் உதவி செய். பார்வோனிடம் என்னைப்பற்றிக் கூறு. அவர் என்னை விடுதலை செய்வார். நான் என் சொந்த எபிரெய நாட்டைவிட்டு இங்கு பலவந்தமாக கொண்டு வரப்பட்டேன். இங்கேயும் நான் தவறு செய்யவில்லை. நான் சிறையில் இருக்க வேண்டியவன் அல்ல” என்றான். ரொட்டி சுடுபவன் மற்றவனின் கனவுக்கு நல்ல பொருள் இருப்பதை அறிந்தான். தன் கனவையும் யோசேப்பிடம் கூறினான். “நானும் ஒரு கனவு கண்டேன். என் தலையில் மூன்று ரொட்டிக் கூடைகள் இருந்தன. மேல் கூடையில் எல்லா வகையான சமைத்த உணவுகளும் இருந்தது. அது பார்வோனுக்கு உரியது. ஆனால் பறவைகள் அவற்றைத் தின்றுகொண்டிருந்தன” என்றான். யோசேப்பு, “நான் உனக்கு அக்கனவின் பொருளைச் சொல்கிறேன். மூன்று கூடைகள் மூன்று நாட்களைக் குறிக்கும். மூன்று நாள் முடிவதற்குள் நீ வெளியே செல்வாய். ராஜா உன் தலையை வெட்டிவிடுவான். உனது உடலைக் கம்பத்தில் தொங்கவிடுவான். பறவைகள் உன் உடலைத் தின்னும்” என்று சொன்னான். மூன்று நாளானதும் பார்வோனுடைய பிறந்த நாள் வந்தது. அவன் தன் வேலைக்காரர்களுக்கெல்லாம் விருந்து கொடுத்தான். அதனால் ரொட்டி சுடுபவனையும் திராட்சைரசம் கொடுப்பவனையும் விடுதலை செய்தான். பார்வோன் திராட்சைரசம் கொடுப்பவனுக்கு மீண்டும் வேலை கொடுத்தான். அவனும் பார்வோனிடம் ஒரு கோப்பை திராட்சை ரசத்தை கொடுத்தான். ஆனால் பார்வோன் ரொட்டி சுடுபவனைக் கொன்றுவிட்டான். யோசேப்பு சொன்னதுபோலவே அனைத்தும் நிகழ்ந்தது. ஆனால் திராட்சைரசம் வழங்குபவன் உதவிசெய்ய மறந்துவிட்டான். அவன் யோசேப்பைப்பற்றி பார்வோனிடம் எதுவும் சொல்லவில்லை.

ஆதியாகமம் 40:1-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இந்த நடபடிகளுக்குப்பின்பு, எகிப்து ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனும் சுயம்பாகியும் எகிப்து ராஜாவாகிய தங்கள் ஆண்டவனுக்குக் குற்றம் செய்தார்கள். பார்வோன் தன் பானபாத்திரக்காரரின் தலைவனும் சுயம்பாகிகளின் தலைவனும் ஆகிய இவ்விரண்டு பிரதானிகள் மேலும் கடுங்கோபங்கொண்டு, அவர்களை யோசேப்பு வைக்கப்பட்டிருந்த இடமும் தலையாரிகளின் அதிபதியின் வீடுமாகிய சிறைச்சாலையிலே காவல்பண்ணுவித்தான். தலையாரிகளின் அதிபதி அவர்களை விசாரிக்கும்படி யோசேப்பின் வசத்தில் ஒப்புவித்தான்; அவன் அவர்களை விசாரித்து வந்தான்; அவர்கள் அநேகநாள் காவலில் இருந்தார்கள். எகிப்து ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனும் சுயம்பாகியுமாகிய அவ்விரண்டுபேரும் சிறைச்சாலையில் இருக்கும்போது, ஒரே ராத்திரியிலே வெவ்வேறு பொருள்கொண்ட சொப்பனம் கண்டார்கள். காலமே யோசேப்பு அவர்களிடத்தில் போய், அவர்களைப் பார்க்கும்போது, அவர்கள் கலங்கியிருந்தார்கள். அப்பொழுது அவன் தன் எஜமானுடைய வீட்டில் தன்னோடே காவல்பண்ணப்பட்டிருந்த பார்வோனுடைய பிரதானிகளை நோக்கி: உங்கள் முகங்கள் இன்று துக்கமாயிருக்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அவர்கள்: சொப்பனம் கண்டோம், அதற்கு அர்த்தம் சொல்லுகிறவன் ஒருவனும் இல்லை என்றார்கள். அதற்கு யோசேப்பு: சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குரியதல்லவா? அவைகளை என்னிடத்தில் சொல்லுங்கள் என்றான். அப்பொழுது பானபாத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நோக்கி: என் சொப்பனத்திலே ஒரு திராட்சச்செடி எனக்கு முன்பாக இருக்கக்கண்டேன். அந்தத் திராட்சச்செடியிலே மூன்று கொடிகள் இருந்தது; அது துளிர்க்கிறதாயிருந்தது; அதில் பூக்கள் மலர்ந்திருந்தது; அதின் குலைகள் பழுத்த பழங்களாயிருந்தது. பார்வோனுடைய பாத்திரம் என்கையிலே இருந்தது; நான் அந்தப் பழங்களைப் பறித்து, அவைகளைப் பார்வோனுடைய பாத்திரத்தில் பிழிந்து, அந்தப் பாத்திரத்தைப் பார்வோனுடைய கையிலே கொடுத்தேன் என்று, தன் சொப்பனத்தைச் சொன்னான். அதற்கு யோசேப்பு: அந்த மூன்று கொடிகளும் மூன்று நாளாம். மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மறுபடியும் உன் நிலையிலே நிறுத்துவார்; முன்னே அவருக்குப் பானம் கொடுத்துவந்த வழக்கத்தின்படி பார்வோனின் பாத்திரத்தை அவர் கையிலே கொடுப்பாய்; இதுதான் அதின் அர்த்தம் என்று சொன்னதும் அன்றி நீ வாழ்வடைந்திருக்கும்போது, என்னை நினைத்து, என்மேல் தயவுவைத்து, என் காரியத்தைப் பார்வோனுக்கு அறிவித்து, இந்த இடத்திலிருந்து என்னை விடுதலையாக்கவேண்டும். நான் எபிரெயருடைய தேசத்திலிருந்து களவாய்க் கொண்டுவரப்பட்டேன்; என்னை இந்தக் காவல்கிடங்கில் வைக்கும்படிக்கும் நான் இவ்விடத்தில் ஒன்றும் செய்யவில்லை என்றும் சொன்னான். அர்த்தம் நன்றாயிருக்கிறது என்று சுயம்பாகிகளின் தலைவன் கண்டு, யோசேப்பை நோக்கி: நானும் என் சொப்பனத்தில் மூன்று வெள்ளைக் கூடைகள் என் தலையின்மேல் இருக்கக்கண்டேன்; மேற்கூடையிலே பார்வோனுக்காக சமைக்கப்பட்ட சகலவித பலகாரங்களிலும் கொஞ்சம் கொஞ்சம் இருந்தது; என் தலையின் மேல் கூடையில் இருந்தவைகளைப் பறவைகள் வந்து பட்சித்தது என்றான். அதற்கு யோசேப்பு: அந்த மூன்று கூடைகளும் மூன்று நாளாம். இன்னும் மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மரத்திலே தூக்கிப்போடுவார்; அப்பொழுது பறவைகள் உன் மாம்சத்தைத் தின்னும், இதுதான் அதின் அர்த்தம் என்று சொன்னான். மூன்றாம் நாள் பார்வோனுடைய ஜன்ம நாளாயிருந்தது; அவன் தன் ஊழியக்காரர் எல்லாருக்கும் விருந்துபண்ணி, பானபாத்திரக்காரருடைய தலைவன் தலையையும் சுயம்பாகிகளுடைய தலைவன் தலையையும் தன் உத்தியோகஸ்தரின் நடுவே உயர்த்தி, பானபாத்திரக்காரரின் தலைவனைப் பானங்கொடுக்கிற தன் உத்தியோகத்திலே மறுபடியும் வைத்தான்; அந்தப்படியே அவன் பார்வோனுடைய கையிலே பாத்திரத்தைக் கொடுத்தான். சுயம்பாகிகளின் தலைவனையோ தூக்கிப்போட்டான். யோசேப்பு அவர்களுக்குச் சொன்ன அர்த்தத்தின்படியே சம்பவித்தது. ஆனாலும் பானபாத்திரக்காரனின் தலைவன் யோசேப்பை நினையாமல் அவனை மறந்துவிட்டான்.