ஆதியாகமம் 4:1-26

ஆதியாகமம் 4:1-26 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள். பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள்; ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான். சிலநாள் சென்றபின்பு, காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான். ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளின் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார். காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது. அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது? நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார். காயீன் தன் சகோதரனாகிய ஆபேலோடே பேசினான்; அவர்கள் வயல்வெளியில் இருக்கும் சமயத்தில், காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலைசெய்தான். கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார்; அதற்கு அவன்: நான் அறியேன்; என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான். அதற்கு அவர்: என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது. இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக் கொள்ள தன் வாயைத் திறந்த இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய். நீ நிலத்தைப் பயிரிடும்போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது; நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பாய் என்றார். அப்பொழுது காயீன் கர்த்தரை நோக்கி: எனக்கு இட்ட தண்டனை என்னால் சகிக்கமுடியாது. இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது சமுகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே என்றான். அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று சொல்லி; காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்றுபோடாதபடிக்குக் கர்த்தர் அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார். அப்படியே காயீன் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக் கிழக்கான நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான். காயீன் தன் மனைவியை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள்; அப்பொழுது அவன் ஒரு பட்டணத்தைக் கட்டி, அந்தப் பட்டணத்துக்குத் தன் குமாரனாகிய ஏனோக்குடைய பேரை இட்டான். ஏனோக்குக்கு ஈராத் பிறந்தான்; ஈராத் மெகுயவேலைப் பெற்றான்; மெகுயவேல் மெத்தூசவேலைப் பெற்றான்; மெத்தூசவேல் லாமேக்கைப் பெற்றான். லாமேக்கு இரண்டு ஸ்திரீகளை விவாகம்பண்ணினான்; ஒருத்திக்கு ஆதாள் என்று பேர், மற்றொருத்திக்குச் சில்லாள் என்று பேர். ஆதாள் யாபாலைப் பெற்றாள்; அவன் கூடாரங்களில் வாசம்பண்ணுகிறவர்களுக்கும், மந்தை மேய்க்கிறவர்களுக்கும் தகப்பனானான். அவன் சகோதரனுடைய பேர் யூபால்; அவன் கின்னரக்காரர், நாகசுரக்காரர் யாவருக்கும் தகப்பனானான். சில்லாளும் தூபால் காயீனைப் பெற்றாள்; அவன் பித்தளை, இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் ஆசாரியனானான்; தூபால் காயீனுடைய சகோதரி நாமாள். லாமேக்கு தன் மனைவிகளைப் பார்த்து: ஆதாளே, சில்லாளே, நான் சொல்வதைக் கேளுங்கள்; லாமேக்கின் மனைவிகளே, என் சத்தத்துக்குச் செவி கொடுங்கள்; எனக்குக் காயமுண்டாக ஒரு மனுஷனைக் கொன்றேன்; எனக்குத் தழும்புண்டாக ஒரு வாலிபனைக் கொலைசெய்தேன். காயீனுக்காக ஏழு பழி சுமருமானால், லாமேக்குக்காக எழுபத்தேழு பழி சுமரும் என்றான். பின்னும் ஆதாம் தன் மனைவியை அறிந்தான்; அவள் ஒரு குமாரனைப் பெற்று: காயீன் கொலை செய்த ஆபேலுக்குப் பதிலாக, தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குச் சேத் என்று பேரிட்டாள். சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான்; அவனுக்கு ஏனோஸ் என்று பேரிட்டான்; அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள்.

ஆதியாகமம் 4:1-26 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆதாம் தன் மனைவி ஏவாளுடன் உறவுகொண்டான்; அவள் கர்ப்பவதியாகி காயீனைப் பெற்று, “நான் யெகோவாவின் உதவியால் ஒரு மகனைப் பெற்றேன்” என்றாள். பின்பு அவள் காயீனின் சகோதரனான ஆபேலைப் பெற்றாள். ஆபேல் மந்தை மேய்த்தான், காயீன் விவசாயம் செய்தான். சிறிது காலத்தின்பின் காயீன் தன் நிலத்தின் விளைச்சலில் சிலவற்றை யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான். ஆபேலும் தன் மந்தையின் கொழுத்தத் தலையீற்றுகளில் சிலவற்றைக் காணிக்கையாகக் கொண்டுவந்தான். யெகோவா ஆபேலையும் அவன் காணிக்கையையும் தயவுடன் ஏற்றுக்கொண்டார், ஆனால் காயீனையும் அவன் காணிக்கையையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் காயீன் கடுங்கோபங்கொண்டான், கோபத்தால் அவன் முகம் சோர்ந்திருந்தது. அப்பொழுது யெகோவா காயீனிடம், “நீ ஏன் கோபமாய் இருக்கிறாய்? உன் முகம் ஏன் சோர்ந்திருக்கிறது? நீ சரியானதைச் செய்தால், நீ உயர்வு பெறுவாய் அல்லவா? நீ சரியானதைச் செய்யாவிட்டால், உன் கதவடியில் பதுங்கிக் கிடக்கும் பாவம் உன்னைப் பற்றிப் பிடித்துக்கொள்ளுமே; நீயோ அதை மேற்கொள்ளவேண்டும்” என்றார். அதன்பின்பு காயீன் தன் சகோதரன் ஆபேலிடம், “நாம் வயல்வெளிக்குப் போவோம்” என்றான். அவர்கள் வயலில் இருக்கையில் காயீன் தன் சகோதரன் ஆபேலைத் தாக்கிக் கொன்றான். அப்பொழுது யெகோவா காயீனிடம், “உன் சகோதரன் ஆபேல் எங்கே?” என்று கேட்டார். அதற்குக் காயீன், “எனக்குத் தெரியாது; நான் என் சகோதரனுக்குக் காவல்காரனோ?” என்று கேட்டான். அதற்கு யெகோவா, “நீ என்ன செய்துவிட்டாய்? கேள், உன் சகோதரனின் இரத்தம் நிலத்தில் இருந்து என்னை நோக்கிக் கதறுகிறது! இப்பொழுது நீ சபிக்கப்பட்டிருக்கிறாய், உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலிருந்து வாங்க தன் வாயைத் திறந்த, இந்த நிலத்திலிருந்து நீ துரத்தப்பட்டும் இருக்கிறாய். நீ நிலத்தைப் பண்படுத்திப் பயிரிடும்போது அது உனக்கு விளைச்சலைத் தராது. நீ பூமியில் நிம்மதியின்றி அலைந்து திரிகிறவனாய் இருப்பாய்” என்றார். அதற்கு காயீன் யெகோவாவிடம், “இந்த தண்டனை என்னால் தாங்க முடியாததாய் இருக்கிறது. இன்று நீர் என்னை இவ்விடத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது முன்னிலையிலிருந்து மறைக்கப்பட்டு, பூமியில் நிம்மதியின்றி அலைந்து திரிகிறவனாவேன்; என்னைக் காண்கிற எவனும் என்னைக் கொன்றுபோடுவானே” என்றான். அதற்கு யெகோவா, “அப்படியல்ல; காயீனைக் கொல்பவன் எவனிடமும் ஏழுமடங்கு பழிவாங்கப்படும்” என்று அவனுக்குச் சொன்னார். பின்பு யெகோவா அவனைக் காண்பவர்கள் அவனைக் கொன்றுவிடாதபடி, அவன்மேல் ஓர் அடையாளத்தை வைத்தார். அப்பொழுது காயீன் யெகோவாவின் முன்னிலையிலிருந்து சென்று, ஏதேனுக்குக் கிழக்கேயுள்ள நோத் என்னும் நாட்டில் குடியிருந்தான். பின்பு காயீன் தன் மனைவியுடன் உறவுகொண்டான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள். பின்பு காயீன் ஒரு பட்டணத்தைக் கட்டிக்கொண்டிருந்தான்; அதற்கு தன் மகனின் பெயரின்படி ஏனோக் என்று பெயரிட்டான். ஏனோக்கிற்கு ஈராத் பிறந்தான், ஈராத் மெகுயயேலின் தகப்பனும், மெகுயயேல் மெத்தூசயேலின் தகப்பனும், மெத்தூசயேல் லாமேக்கின் தகப்பனும் ஆனார்கள். லாமேக் இரு பெண்களைத் திருமணம் செய்தான். ஒருத்தியின் பெயர் ஆதாள், மற்றவள் சில்லாள். ஆதாள் யாபாலைப் பெற்றாள்; முதன்முதலில் கூடாரங்களில் வசித்து, மந்தை மேய்த்தவன் அவனே. அவனுடைய சகோதரனின் பெயர் யூபால்; அவன் முதன்முதலில் வீணை, புல்லாங்குழல் ஆகிய இசைக்கருவிகளை இசைத்தவன் ஆனான். சில்லாளும், தூபால்காயீன் என்னும் ஒரு மகனைப் பெற்றாள்; அவன் வெண்கலம், இரும்பு ஆகியவற்றால் கருவிகளைச் செய்யும் தொழிலாளி ஆனான். தூபால்காயீனுடைய சகோதரி நாமாள். லாமேக் தன் இரு மனைவிகளிடம் சொன்னதாவது: “ஆதாளே, சில்லாளே, எனக்குச் செவிகொடுங்கள்; லாமேக்கின் மனைவிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள். என்னைக் காயப்படுத்தியபடியால் ஒரு மனிதனைக் கொன்றேன், எனக்குத் தீங்கு செய்தபடியாலேயே அந்த வாலிபனைக் கொன்றேன். காயீனைக் கொல்பவனிடம் ஏழுமடங்கு பழிவாங்கப்படும் என்றால், லாமேக்கிற்காக எழுபத்தேழு மடங்கு பழிவாங்கப்படும்.” ஆதாம் மீண்டும் தன் மனைவியுடன் உறவுகொண்டான், அவள் ஒரு மகனைப் பெற்றாள், “காயீன் கொலைசெய்த ஆபேலுக்குப் பதிலாக இறைவன் வேறொரு பிள்ளையைக் கொடுத்தார்” என்று சொல்லி, அவனுக்கு சேத் என்று பெயரிட்டாள். சேத்தும் ஒரு மகனைப் பெற்றான்; அவன் தன் மகனுக்கு ஏனோஸ் என்று பெயரிட்டான். அக்காலத்தில் மக்கள் யெகோவாவின் பெயரைக் கூப்பிட்டு அவரை ஆராதிக்க ஆரம்பித்தார்கள்.

ஆதியாகமம் 4:1-26 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளுடன் இணைந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, “யெகோவாவுடைய உதவியால் ஒரு மகனைப் பெற்றேன்” என்றாள். பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றெடுத்தாள்; ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான். சிலநாட்கள் சென்றபின்பு, காயீன் நிலத்தின் பழங்களைக் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான். ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளின் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவனுடைய காணிக்கையையும் யெகோவா ஏற்றுக்கொண்டார். காயீனையும் அவனுடைய காணிக்கையையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவனுடைய முகத்தோற்றம் வேறுபட்டது. அப்பொழுது யெகோவா காயீனை நோக்கி: “உனக்கு ஏன் எரிச்சல் உண்டானது? உன் முகத்தோற்றம் ஏன் வேறுபட்டது? நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மை செய்யாமலிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அது உன்னை ஆளுகை செய்ய விரும்பும், ஆனால் நீ அதை ஆளுகை செய்யவேண்டும்” என்றார். காயீன் தன்னுடைய சகோதரனாகிய ஆபேலோடு பேசினான்; அவர்கள் வயல்வெளியில் இருக்கும்போது, காயீன் தன்னுடைய சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாக எழும்பி, அவனைக் கொலைசெய்தான். யெகோவா காயீனை நோக்கி: “உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே” என்றார்; அதற்கு அவன்: எனக்குத் தெரியாது; என் சகோதரனுக்கு நான் காவலாளியா” என்றான். அதற்கு அவர்: “என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது. இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தம் உன்னால் பூமியில் சிந்தப்பட்டதால் இந்த பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய். நீ நிலத்தில் பயிரிடும்போது, அது தன்னுடைய பலனை இனி உனக்குக் கொடுக்காது; நீ பூமியில் நிலையில்லாமல் அலைகிறவனாக இருப்பாய்” என்றார். அப்பொழுது காயீன் யெகோவாவை நோக்கி: “எனக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையை என்னால் தாங்கிக்கொள்ளமுடியாது. இன்று என்னை இந்த தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது சமுகத்திற்கு விலகி மறைந்து, பூமியில் நிலையில்லாமல் அலைகிறவனாக இருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே” என்றான். அப்பொழுது யெகோவா அவனை நோக்கி: “காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும்” என்று சொல்லி; காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்றுபோடாமலிருக்க யெகோவா அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார். அப்படியே காயீன் யெகோவாவுடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக் கிழக்கே நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான். காயீன் தன்னுடைய மனைவியுடன் இணைந்தான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றெடுத்தாள்; அப்பொழுது அவன் ஒரு பட்டணத்தைக் கட்டி, அந்தப் பட்டணத்திற்குத் தன் மகனாகிய ஏனோக்குடைய பெயரை வைத்தான். ஏனோக்குக்கு ஈராத் பிறந்தான்; ஈராத் மெகுயவேலைப் பெற்றெடுத்தான்; மெகுயவேல் மெத்தூசவேலைப் பெற்றெடுத்தான்; மெத்தூசவேல் லாமேக்கைப் பெற்றெடுத்தான். லாமேக்கு இரண்டு பெண்களைத் திருமணம் செய்தான்; ஒருத்திக்கு ஆதாள் என்று பெயர், மற்றொருவளுக்குச் சில்லாள் என்று பெயர். ஆதாள் யாபாலைப் பெற்றெடுத்தாள்; அவன் கூடாரங்களில் குடியிருக்கிறவர்களுக்கும், மந்தை மேய்க்கிறவர்களுக்கும் தகப்பனானான். அவனுடைய சகோதரனுடைய பெயர் யூபால்; அவன் கின்னரக்காரர்கள், நாதசுரக்காரர்கள் அனைவருக்கும் தகப்பனானான். சில்லாளும், தூபால் காயீனைப் பெற்றெடுத்தாள்; அவன் பித்தளை, இரும்பு முதலியவற்றின் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஆசாரியனானான்; தூபால் காயீனுடைய சகோதரி நாமாள். லாமேக்கு தன் மனைவிகளைப் பார்த்து: “ஆதாளே, சில்லாளே, நான் சொல்வதைக் கேளுங்கள்; லாமேக்கின் மனைவிகளே, நான் சொல்வதை மிகவும் கவனமாகக் கேளுங்கள்; எனக்குக் காயமுண்டாக்கிய ஒரு மனிதனைக் கொன்றேன்; எனக்குத் தழும்புண்டாக்கிய ஒரு வாலிபனைக் கொலைசெய்தேன்; காயீனுக்காக ஏழு பழி சுமருமானால், லாமேக்குக்காக எழுபத்தேழு பழி சுமரும்” என்றான். பின்னும் ஆதாம் தன் மனைவியுடன் இணைந்தான்; அவள் ஒரு மகனைப் பெற்று: “காயீன் கொலைசெய்த ஆபேலுக்கு பதிலாக, தேவன் எனக்கு வேறொரு மகனைக் கொடுத்தார்” என்று சொல்லி, அவனுக்கு சேத் என்று பெயரிட்டாள். சேத்துக்கும் ஒரு மகன் பிறந்தான்; அவனுக்கு ஏனோஸ் என்று பெயரிட்டான்; அப்பொழுது மக்கள் யெகோவாவுடைய நாமத்தை வழிபட ஆரம்பித்தார்கள்.

ஆதியாகமம் 4:1-26 பரிசுத்த பைபிள் (TAERV)

ஆதாமும் அவன் மனைவியும் பாலின உறவு கொண்டனர். அவள் கர்ப்பமுற்று காயீன் என்ற ஒரு குமாரனைப் பெற்றெடுத்து, நான், “கர்த்தரின் உதவியால் ஒரு மனிதனைப் பெற்றுள்ளேன்” என்றாள். அதன் பிறகு ஏவாள் இன்னொரு குமாரனைப் பெற்றாள். அவன் காயீனின் சகோதரனான ஆபேல். ஆபேல் ஒரு மேய்ப்பனாகவும், காயீன் ஒரு விவசாயியாகவும் வளர்ந்தனர். அறுவடைக் காலத்தில் காயீன் தன் வயலில் விளைந்த தானியங்களைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டு போனான். ஆனால் ஆபேல் தன் மந்தையிலிருந்து சில சிறந்த ஆடுகளைக் கொண்டு போனான். கர்த்தர் ஆபேலையும், அவன் காணிக்கையையும் ஏற்றுக்கொண்டார். ஆனால் கர்த்தர் காயீனையும் அவன் காணிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் காயீன் துக்கமும் கோபமும் கொண்டான். கர்த்தர் அவனிடம், “ஏன் நீ கோபமாயிருக்கிறாய்? ஏன் உன் முகத்தில் கவலை தெரிகிறது. நீ நன்மை செய்திருந்தால் எனக்கு விருப்பமானவனாக இருந்திருப்பாய். நானும் உன்னை ஏற்றுக்கொண்டிருப்பேன். ஆனால் நீ தீமை செய்தால் பிறகு அந்தப் பாவம் உன் வாழ்வில் இருக்கும். உனது பாவம் உன்னை அடக்கி ஆள விரும்பும். நீயோ உன் பாவத்தை அடக்கி ஆளவேண்டும்” என்றார். காயீன் தனது சகோதரன் ஆபேலிடம். “வயலுக்குப் போவோம்” என்றான். அவர்கள் வயலுக்குப் போனார்கள். அங்கே காயீன் தன் தம்பியைத் தாக்கிக் கொலை செய்துவிட்டான். பிறகு கர்த்தர் காயீனிடம், “உனது சகோதரன் ஆபேல் எங்கே?” என்று கேட்டார். அதற்கு அவன், “எனக்குத் தெரியாது. என் தம்பியைக் காவல் செய்வது என் வேலையில்லை” என்றான். அதற்குக் கர்த்தர், “நீ என்ன காரியம் செய்தாய்? நீ உன் சகோதரனைக் கொன்றுவிட்டாய். பூமியிலிருந்து அவனது இரத்தம் என்னைக் கூப்பிடுகிறதே. இப்பொழுது அவனது இரத்தத்தை உன் கைகளிலிருந்து வாங்கிக்கொள்ள தன் வாயைத் திறந்த, இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய். கடந்த காலத்தில் நீ பயிர் செய்தவை நன்றாக விளைந்தன. ஆனால் இனிமேல் நீ பயிரிடுபவை விளையாதவாறு இந்த பூமி தடை செய்யும். இந்தப் பூமியில் நிலையில்லாமல் ஒவ்வொரு இடமாக அலைந்துகொண்டிருப்பாய்” என்றார். பிறகு காயீன், “என்னால் தாங்கிக்கொள்ள இயலாதவாறு இந்தத் தண்டனை அதிகமாக இருக்கிறது. எனது பூமியை விட்டுப் போகுமாறு நீர் என்னை வற்புறுத்துகின்றீர். நான் உமது பார்வையிலிருந்து மறைவேன். எனக்கென்று ஒரு வீடு இருக்காது. பூமியில் ஒவ்வொரு இடமாக அலையும்படி நிர்பந்தப்படுத்தப்பட்டிருக்கிறேன். என்னைப் பார்க்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே” என்றான். பிறகு கர்த்தர் காயீனிடம், “அவ்வாறு நடக்குமாறு நான் விடமாட்டேன். எவராவது உன்னைக் கொன்றால் நான் அவர்களை மிகுதியாகத் தண்டிப்பேன்” என்றார். ஆகையால் கர்த்தர் காயீன்மீது ஒரு அடையாளம் இட்டார். அதனால் எவரும் அவனைக் கொல்லமாட்டார்கள் என்றார். காயீன் கர்த்தரைவிட்டு விலகிப்போய் ஏதேனின் கிழக்கிலிருந்த நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான். காயீன் தன் மனைவியுடன் பாலின உறவு கொண்டபோது அவள் ஏனோக் என்னும் பெயருள்ள குமாரனைப் பெற்றாள். காயீன் ஒரு நகரத்தை உருவாக்கி அதற்குத் தன் குமாரனின் பெயரை வைத்தான். ஏனோக்குக்கு ஈராத் என்னும் குமாரன் பிறந்தான். ஈராத்துக்கு மெகுயவேல் என்ற குமாரன் பிறந்தான். மெகுயவேலுக்கு மெத்தூசவேல் என்ற குமாரன் பிறந்தான். மெத்தூசவேலுக்கு லாமேக் என்ற குமாரன் பிறந்தான். லாமேக் இரண்டு பெண்களை மணந்துகொண்டான். ஒருத்தியின் பெயர் ஆதாள், இன்னொருத்தியின் பெயர் சில்லாள். ஆதாள் யாபாலைப் பெற்றாள். யாபால் கூடாரத்தில் வாழ்பவர்களுக்கும், மந்தையை மேய்க்கிறவர்களுக்கும் தந்தை ஆனான். ஆதாளுக்கு யூபால் என்று இன்னொரு குமாரன் இருந்தான். அவன் கின்னரக்காரர் நாகசுரக்காரர் போன்றோருக்குத் தந்தை ஆனான். சில்லாள் தூபால்-காயீனைப் பெற்றாள். அவன் பித்தளை, இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் தந்தை ஆனான். தூபால் காயீனுக்கு, நாமாள் என்ற சகோதரி இருந்தாள். லாமேக்கு தன் மனைவிகளிடம், “ஆதாளே, சில்லாளே என் பேச்சைக் கேளுங்கள். நீங்கள் லாமேக்கின் மனைவியர், நான் சொல்வதைக் கவனியுங்கள். என்னை ஒருவன் துன்புறுத்தினான், அவனை நான் கொன்றேன். என்னுடன் இளைஞன் மோதினான், எனவே அவனையும் கொன்றேன். காயீனின் கொலைக்காக கொடுக்கப்பட்ட தண்டனை மிகப்பெரியது. என்னைக் கொல்வதால் கிடைக்கும் தண்டனையும் மிக அதிகமாகவே இருக்கும்” என்றான். ஆதாம் ஏவாளோடு பாலின் உறவு கொண்டான். ஏவாள் இன்னொரு குமாரனைப் பெற்றாள். அவனுக்குச் சேத் என்று பெயரிட்டனர். ஏவாள், “தேவன் எனக்கு இன்னொரு குமாரனைக் கொடுத்திருக்கிறார். காயீன் ஆபேலைக் கொன்றான். ஆனால் நான் சேத்தைப் பெற்றேன்” என்றாள். சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான். அவனுக்கு ஏனோஸ் என்று பெயர் வைத்தான். அப்பொழுது மனிதர்கள் கர்த்தரிடத்தில் நம்பிக்கை வைக்க ஆரம்பித்தனர்.