ஆதியாகமம் 39:6-23

ஆதியாகமம் 39:6-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதனால் அவன் தனக்குள்ள எல்லாவற்றையும் யோசேப்பிடம் ஒப்படைத்து, அவனை அதிகாரியாக நியமித்தான். போத்திபாரோ தான் உண்ணும் உணவைத் தவிர வேறெதிலும் கவனம் செலுத்தவில்லை. யோசேப்பு நல்ல உடற்கட்டும் அழகிய தோற்றமும் உடையவனாய் இருந்தான். சிலநாள் சென்றபின் போத்திபாரின் மனைவி யோசேப்பின்மீது ஆசைகொண்டு, “என்னுடன் உறவுகொள்ள வா!” என அழைத்தாள். அவனோ அதை மறுத்தான். அவன் அவளிடம், “என் எஜமான் தன் வீட்டிலுள்ள எதைக் குறித்தும் கவனிப்பதில்லை; தனக்குச் சொந்தமாயுள்ள அனைத்தையும் என்னுடைய பராமரிப்பில் ஒப்புவித்துள்ளார். இந்த வீட்டில் என்னைவிடப் பெரியவன் ஒருவனும் இல்லை. நீ அவருடைய மனைவி என்பதால் உன்னைத்தவிர, வேறொன்றையும் அவர் என்னிடமிருந்து விலக்கி வைக்கவில்லை. அப்படியிருக்க, இவ்வாறான கொடுமையான செயலைச் செய்து, இறைவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்ய என்னால் எப்படி முடியும்?” என்றான். அவள் நாளுக்குநாள் யோசேப்பைக் கட்டாயப்படுத்திய போதிலும், அவளோடு படுக்கைக்குச் செல்லவோ, அவளோடு இருக்கவோ அவன் உடன்படவில்லை. ஒரு நாள் யோசேப்பு தன் கடமைகளைச் செய்வதற்காக வீட்டுக்குள் போனான், வீட்டு வேலைக்காரர் யாரும் உள்ளே இருக்கவில்லை. அப்பொழுது அவள் யோசேப்பின் மேலுடையைப் பிடித்துக்கொண்டு, “என்னுடன் படுக்கைக்கு வா” என்றாள். அவனோ தன் மேலுடையை அவள் கையிலேயே விட்டு, வீட்டுக்கு வெளியே ஓடிவிட்டான். அவன் தன்னுடைய மேலுடையைத் தன் கையிலே விட்டுவிட்டு, வீட்டுக்கு வெளியே ஓடிப்போனதை அவள் கண்டபோது, தன் வீட்டு வேலைக்காரரைக் கூப்பிட்டு, “இதோ பாருங்கள், இந்த எபிரெயன் நம்மை அவமானப்படுத்தும்படி இங்கு கொண்டுவரப்பட்டிருக்கிறான்! அவன் என்னுடன் உறவுகொள்ளும்படி உள்ளே வந்தான். நான் கூச்சலிட்டேன். நான் உதவிகேட்டுக் கூச்சலிட்டதை அவன் கேட்டவுடன், தன் மேலுடையை இங்கே விட்டுவிட்டு வெளியே ஓடிவிட்டான்” என்றாள். அவள் அவனுடைய எஜமான் வீட்டுக்கு வரும்வரை அந்த மேலுடையை தன்னருகிலேயே வைத்திருந்தாள். அவன் வந்ததும் அவனிடம் இந்தக் கதையைச் சொன்னாள்: “நீர் நம்மிடம் கொண்டுவந்த அந்த எபிரெய அடிமை என்னை அவமானப்படுத்தும்படி இங்கு வந்தான். நான் உதவிக்காகக் கூச்சலிட, உடனே அவன் தன் மேலுடையை என் அருகே விட்டுவிட்டு, வீட்டுக்கு வெளியே ஓடிவிட்டான்” என்றாள். “இப்படித்தான் உம்முடைய அடிமை என்னை நடத்தினான்” என்று தன் மனைவி தனக்குச் சொன்ன வார்த்தைகளை அவனுடைய எஜமான் கேட்டதும், அவனுடைய கோபம் பற்றி எரிந்தது. யோசேப்பின் எஜமான் அவனைக் கைதுசெய்து, அரச கைதிகளை அடைத்துவைக்கும் சிறையில் போட்டான். யோசேப்பு சிறையில் இருக்கும்போதும், யெகோவா யோசேப்போடே இருந்தார்; அவர் அவனுக்கு இரக்கங்காட்டி, சிறைச்சாலைத் தலைவனின் கண்களில் அவனுக்குத் தயவு கிடைக்கச்செய்தார். அதனால் சிறைக்காவல் அதிகாரி யோசேப்பைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த எல்லோருக்கும் அதிகாரியாக்கினான்; அங்கு செய்யப்படவேண்டிய எல்லாவற்றுக்கும் அவனையே பொறுப்பாகவும் வைத்தான். யெகோவா யோசேப்போடு இருந்து, அவன் செய்த அனைத்திலும் வெற்றியைக் கொடுத்தார்; அதனால் சிறைச்சாலைத் தலைவன் யோசேப்பின் பொறுப்பிலிருந்த எதையும் மேற்பார்வை செய்யவில்லை.

ஆதியாகமம் 39:6-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆகையால், அவன் தனக்கு உண்டானதையெல்லாம் யோசேப்பின் கையிலே ஒப்புக்கொடுத்துவிட்டு, தான் சாப்பிடுகிற உணவு தவிர தன்னிடத்திலிருந்த மற்றொன்றைக்குறித்தும் விசாரிக்காமல் இருந்தான். யோசேப்பு அழகான ரூபமும் சௌந்தரிய முகமும் உள்ளவனாயிருந்தான். சிலநாட்கள் சென்றபின், அவனுடைய எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் மோகம்கொண்டு, “என்னோடு உறவுகொள்” என்றாள். அவனோ தன் எஜமானுடைய மனைவியின் சொல்லுக்குச் சம்மதிக்காமல், அவளை நோக்கி: “இதோ, வீட்டிலே என்னிடத்தில் இருக்கிறவைகளில் ஒன்றைக்குறித்தும் என் ஆண்டவன் விசாரிக்காமல், தமக்கு உண்டான எல்லாவற்றையும் என்னுடைய கையில் ஒப்படைத்திருக்கிறார். இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை; நீ அவருடைய மனைவியாக இருப்பதால் உன்னைத்தவிர வேறோன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை; இப்படியிருக்கும்போது, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்வது எப்படி” என்றான். அவள் தொடர்ந்து யோசேப்போடு இப்படிப் பேசிக்கொண்டு வந்தும், அவன் அவளுடனே உறவுகொள்ளவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை. இப்படியிருக்கும்போது, ஒருநாள் அவன் தன் வேலையைச் செய்கிறதற்கு வீட்டிற்குள் போனான்; வீட்டு மனிதர்களில் ஒருவரும் வீட்டில் இல்லை. அப்பொழுது அவள் அவனுடைய உடையைப் பற்றிப் பிடித்து, “என்னோடு உறவுகொள் என்றாள். அவனோ தன் உடையை அவள் கையிலே விட்டுவிட்டு வெளியே ஓடிப்போனான். அவன் வெளியே ஓடிப்போனதை அவள் கண்டபோது, அவள் தன் வீட்டு மனிதரைக் கூப்பிட்டு: “பாருங்கள், எபிரெய மனிதன் நம்மை பரியாசம்செய்ய, போத்திபார் அவனை நம்மிடத்தில் கொண்டுவந்தார், அவன் என்னோடு உறவுகொள்வதற்கு என்னிடத்தில் வந்தான்; நான் மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டேன். நான் சத்தமிட்டுக் கூப்பிடுகிறதை அவன் கேட்டு, தன் உடையை என்னிடத்தில் விட்டுவிட்டு, வெளியே ஓடிப்போய்விட்டான்” என்று சொன்னாள். அவனுடைய எஜமான் வீட்டிற்கு வரும்வரைக்கும் அவனுடைய உடையைத் தன்னிடத்தில் வைத்திருந்து, அவனை நோக்கி: “நீர் நம்மிடத்தில் கொண்டுவந்த அந்த எபிரெய வேலைக்காரன் தவறான எண்ணத்துடன் என்னிடத்தில் வந்தான். அப்பொழுது நான் சத்தமிட்டுக் கூப்பிட்டேன், அவன் தன் உடையை என்னிடத்தில் விட்டுவிட்டு வெளியே ஓடிப்போனான்” என்றாள். உம்முடைய வேலைக்காரன் எனக்கு இப்படிச் செய்தான் என்று தன் மனைவி தன்னிடம் சொன்ன வார்த்தைகளை அவனுடைய எஜமான் கேட்டபோது, அவன் கோபமடைந்தான். யோசேப்பின் எஜமான் அவனைப்பிடித்து, ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான். அந்தச் சிறைச்சாலையில் அவன் இருந்தான். யெகோவாவோ யோசேப்போடு இருந்து, அவன்மேல் கிருபைவைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கச்செய்தார். சிறைச்சாலைத் தலைவன் சிறைச்சாலையில் வைக்கப்பட்ட அனைவரையும் யோசேப்பின் பொறுப்பிலே ஒப்புவித்தான்; அங்கே அவர்கள் செய்வதெல்லாவற்றிற்கும் யோசேப்பு பொறுப்பாயிருந்தான். யெகோவா அவனோடு இருந்ததினாலும், அவன் எதைச் செய்தானோ அதைக் யெகோவா வாய்க்கச்செய்ததாலும், அவன் வசமாயிருந்த ஒன்றையும் குறித்துச் சிறைச்சாலைத் தலைவன் விசாரிக்கவில்லை.

ஆதியாகமம் 39:6-23 பரிசுத்த பைபிள் (TAERV)

ஆகவே போத்திபார் யோசேப்பிற்கு வீட்டிலுள்ள எல்லா பொறுப்புகளையும் கொடுத்துவிட்டான். அவன் உண்ணும் உணவைத் தவிர வேறு எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. யோசேப்பு கம்பீரமாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் இருந்தான். கொஞ்சக் காலம் ஆனதும், யோசேப்பின் எஜமானனின் மனைவி யோசேப்பு மீது ஆசைப்பட ஆரம்பித்தாள். ஒரு நாள் அவனிடம், “என்னோடு பாலின உறவுகொள்ள வா” என்றாள். ஆனால் யோசேப்பு மறுத்துவிட்டான். “என் எஜமானன் என்னை நம்பி வீட்டிலுள்ள எல்லாவற்றையும் ஒப்படைத்திருக்கிறார். என் எஜமானன் இந்த வீட்டில் ஏறக்குறைய என்னைத் தனக்குச் சமமாக வைத்திருக்கிறார். நான் அவரது மனைவியோடு பாலின உறவுகொள்ளக் கூடாது. இது தவறு, தேவனுக்கு விரோதமான பாவம்” என்று கூறினான். அவள் ஒவ்வொரு நாளும் யோசேப்போடு பேசி அவனை அழைத்தாள். அவனோ அவளோடு பாவத்தில் ஈடுபட மறுத்துவிட்டான். ஒரு நாள் அவன் வீட்டிற்குள் வேலை செய்வதற்காகப் போனான். அப்போது வீட்டில் அவன் மட்டும் தான் இருந்தான். அவனது எஜமானனின் மனைவி அவனது அங்கியை பற்றிப் பிடித்து, “என்னோடு பாலின உறவுகொள்ள வா” என்றாள். எனவே அவன் வேகமாக வீட்டைவிட்டு வெளியே ஓடிவிட்டான். அப்போது அவனது அங்கி அவளது கையில் சிக்கிக்கொண்டது. அவள் அதனைக் கவனித்தாள். நடந்ததைப்பற்றி அவள் பொய்யாகச் சொல்லத் திட்டமிட்டாள். அவள் வீட்டிலுள்ள வேலைக்காரர்களை அழைத்து “பாருங்கள், நம்மை அவமானம் செய்வதற்காக இந்த எபிரெய அடிமை கொண்டு வரப்பட்டுள்ளான். அவன் வந்து என்னோடு படுக்க முயன்றான். நான் சத்தமிட்டதால் அவன் ஓடிப் போய்விட்டான். அவனது அங்கி மட்டும் சிக்கிக்கொண்டது” என்று முறையிட்டாள். அவள் அந்த அங்கியை அவள் புருஷன் வரும் வரை வைத்திருந்து, அவனிடமும் அதே கதையைக் கூறினாள். “நீங்கள் கொண்டுவந்த எபிரெய அடிமை என்னைக் கெடுக்கப் பார்த்தான். அவன் என்னருகில் வந்ததும் நான் சத்தமிட்டேன், அவன் ஓடிவிட்டான். அவனது அங்கி மட்டும் சிக்கிக்கொண்டது” என்றாள். யோசேப்பின் எஜமானன் அவனது மனைவி சொன்னதைக் கேட்டு கோபம் கொண்டான். ராஜாவினுடைய பகைவர்களைப் போடுவதற்கென்றிருந்த சிறையிலே போத்திபார் யோசேப்பைப் போட்டுவிட்டான். யோசேப்பு அங்கேயே தங்கினான். ஆனால் கர்த்தர் யோசேப்போடு இருந்தார். அவர் தொடர்ந்து தனது இரக்கத்தை அவன்மீது காட்டி வந்தார். சிறையதிகாரி யோசேப்பை விரும்ப ஆரம்பித்தான். யோசேப்பை கைதிகளைக் கண்காணிப்பவனாக நியமித்தான். அங்கு நடப்பவற்றுக்கு அவன் பொறுப்பாளியாக்கப்பட்டான். அந்த அதிகாரி அவனை முழுமையாக நம்பினான். கர்த்தர் யோசேப்போடு இருந்ததால் இது இவ்வாறு நடந்தது. அவன் செய்கிற ஒவ்வொரு காரியத்தையும் வெற்றிகரமாக்க கர்த்தர் உதவினார்.

ஆதியாகமம் 39:6-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆகையால், அவன் தனக்கு உண்டானதையெல்லாம் யோசேப்பின் கையிலே ஒப்புக்கொடுத்துவிட்டு, தான் புசிக்கிற போஜனம் தவிர தன்னிடத்திலிருந்த மற்றொன்றைக்குறித்தும் விசாரியாதிருந்தான். யோசேப்பு அழகான ரூபமும் சௌந்தரிய முகமும் உள்ளவனாயிருந்தான். சிலநாள் சென்றபின், அவனுடைய எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் கண்போட்டு, என்னோடே சயனி என்றாள். அவனோ தன் எஜமானுடைய மனைவியின் சொல்லுக்கு இணங்காமல், அவளை நோக்கி: இதோ, வீட்டிலே என்னிடத்தில் இருக்கிறவைகளில் யாதொன்றைக்குறித்தும் என் ஆண்டவன் விசாரியாமல், தமக்கு உண்டான எல்லாவற்றையும் என்கையில் ஒப்பித்திருக்கிறார். இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை; நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத்தவிர வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை; இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான். அவள் நித்தம் நித்தம் யோசேப்போடே இப்படிப் பேசிக்கொண்டு வந்தும், அவன் அவளுடனே சயனிக்கவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை. இப்படியிருக்கும்போது, ஒருநாள் அவன் தன் வேலையைச் செய்கிறதற்கு வீட்டுக்குள் போனான்; வீட்டு மனிதரில் ஒருவரும் வீட்டில் இல்லை. அப்பொழுது அவள் அவனுடைய வஸ்திரத்தைப் பற்றிப் பிடித்து, என்னோடே சயனி என்றாள். அவனோ தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனான். அவன் தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனதை அவள் கண்டபோது, அவள் தன் வீட்டு மனிதரைக் கூப்பிட்டு: பாருங்கள், எபிரெய மனுஷன் நம்மிடத்தில் சரசம்பண்ணும்படிக்கு அவனை நமக்குள் கொண்டுவந்தார், அவன் என்னோடே சயனிக்கும்படிக்கு என்னிடத்தில் வந்தான்; நான் மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டேன். நான் சத்தமிட்டுக் கூப்பிடுகிறதை அவன் கேட்டு, தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு, வெளியே ஓடிப்போய்விட்டான் என்று சொன்னாள். அவனுடைய எஜமான் வீட்டுக்கு வருமளவும் அவனுடைய வஸ்திரத்தைத் தன்னிடத்தில் வைத்திருந்து, அவனை நோக்கி: நீர் நம்மிடத்தில் கொண்டுவந்த அந்த எபிரெய வேலைக்காரன் சரசம்பண்ணும்படிக்கு என்னிடத்தில் வந்தான். அப்பொழுது நான் சத்தமிட்டுக்கூப்பிட்டேன், அவன் தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு வெளியே ஓடிப்போனான் என்றாள். உம்முடைய வேலைக்காரன் எனக்கு இப்படிச் செய்தான் என்று தன் மனைவி தன்னோடே சொன்ன வார்த்தைகளை அவனுடைய எஜமான் கேட்டபோது, அவனுக்குக் கோபம் மூண்டது. யோசேப்பின் எஜமான் அவனைப்பிடித்து, ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான். அந்தச் சிறைச்சாலையில் அவன் இருந்தான். கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபைவைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார். சிறைச்சாலைத் தலைவன் சிறைச்சாலையில் வைக்கப்பட்ட யாவரையும் யோசேப்பின் கையிலே ஒப்புவித்தான்; அங்கே அவர்கள் செய்வதெல்லாவற்றையும் யோசேப்பு செய்வித்தான். கர்த்தர் அவனோடே இருந்தபடியினாலும், அவன் எதைச் செய்தானோ அதைக் கர்த்தர் வாய்க்கப்பண்ணினபடியினாலும், அவன் வசமாயிருந்த யாதொன்றையும் குறித்துச் சிறைச்சாலைத் தலைவன் விசாரிக்கவில்லை.